.

Friday, April 30, 2021

மே தினக்கொடியெற்றம்

நிகழ்ச்சி நிரல்

    நாளை 1.5.2021 காலை 08.00 மணியளவில் நமது பொது மேலாளர் அலுவலகத்திலும், மெயின் தொலைபேசி நிலையத்திலும் மே தின கொடியேற்ற நிகழ்வு நடைபெறும். மாநில, மாவட்ட, கிளைச் சங்க, முன்னனி தோழர்கள், மற்றும் ஓய்வு பெற்ற தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    அதே போன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் மே தின கொடியேற்ற நிகழ்ச்சியினை சிறப்பாகவும், சமூக இடைவெளியுடன் , முககவசம் அனிந்து கொண்டாடிட அன்புடனும் தோழமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.

தோழமையுடன்

 D.குழந்தை நாதன்

 மாவட்ட செயலர்,கடலூர்.

Monday, April 19, 2021

வாழ்த்தி அனுப்புவோம்

                                                             பாசமிகு நீலகண்டன் சென்னை செல்கிறார். வெ.நீலகண்டன் கவிஞர்சிறந்த மொழி பெயர்ப்பாளர் தொழிற்சங்கம் கட்டுவதில் அதன் வழி இயக்கம் கட்டுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.

          முந்தைய தஞ்சை ஜில்லாவின் சீர்காழி இவரின் சொந்த ஊர்.  இந் நகரின் சீர்காழி பெருமைமிகு முதலியார் உயர் நிலைப்பள்ளியிலும் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்திலும் பயின்று தொலைத் பேசித்துறையில் கடலூர் நகரில் நாற்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

தமிழகம் அறிந்த  தொலைபேசி தொழிற்சங்க ஆசான் ஜகன் அவர்களுக்கு மிகநெருக்கமானவர் அண்மையில் மறைந்த  தொலைபேசி ஊழியர் தலைவர் கடலூர் ரகு நாதன்.அவர்களோடு மாவட்டச்ங்கத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றிய பெருமை இவருக்குண்டு..

          தொழிற்சங்க இயக்கங்களில்  புதிய கோஷங்களை படைப்பதிலும், அதனை உணர்ச்சிப்பெருக்கோடு வெளிப்படுத்துவதிலும் தனித்திறம் பெற்றவர். மாநாட்டு அமர்வின்போது தீர்மானங்களை வடிவமைப்பதில், ஆண்டறிக்கையை செழுமைப்படுத்துவதில் முத்திரை பதித்தவர்.

கடலூர் மாவட்ட கலை இலக்கியப்பெருமன்றம் சிறப்பாக செயல்பட்ட ஒரு பத்தாண்டுகளில் பல முக்கிய பொறுப்புகளை எடுத்துச்செயலாற்றியவர். கடலூர் சிரில் நினைவு அறக்கட்டளை  ஆண்டுதோறும் நிகழ்த்தும்  தமிழ் விழாக்களில் முன்வரிசையில்  நின்று பணியாற்றுபவர்.

கடலூர் மாவட்ட தொலைபேசி ஊழியர் சங்க இதழான தொலைபேசித் தோழனின் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தவர். கடலூர்  தொலைபேசி மாவட்ட சங்கத்து அனைத்து  எழுத்துப் பணிகளுக்கும்  தோழர் நீலகண்டனின் பங்களிப்பு மகத்தானது.

கடலூர் நகரில் இயங்குகின்ற பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்புக்களிலும் நெருக்கமான தொடர்புடையவர்.  தினமணியிலும் ஜன சக்தியிலும் கருத்தாழமிக்க கட்டுரைகளை த்தமிழில் மொழிபெயர்த்து மொழிப்பணியும் ஆற்றிவருகிறார் என்பதனைப் பெருமையோடு குறிப்பிடவேண்டும்.

தோழர் நீலகண்டன். தோழரின் துணைவியார் பானுமதி தமிழாசிரியை. அரசுப்பள்ளியிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்றவர். இலக்கிய ஈடுபாட்டோடு தமிழ்ப்பற்றும் மிக்கவர். இத்தம்பதியினரின்  மகளார் பாரதி வாலண்டினா மருத்துவ முதுகலை (MS) சென்னையில் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் பயில்கிறார். மகளாருக்கு துணையாக உதவும்பொருட்டுத் தோழர் நீலகண்டன் கடலூரிலிருந்து சென்னைக்கு த்தன் குடும்பத்தை மாற்றுகிறார்.

இதுகாரும் கடலூர் தொலைபேசி மாவட்டச்சங்கத்துக்குப் பணி ஓய்வுக்குப்பின்னரும் அவர் ஆற்றிய சேவைகள்  எத்தனை எத்தனையோ. அவற்றைப்பெருமையோடு எண்ணி எண்ணி மகிழ்கிறோம். அவருக்கு பாசத்தோடு  வாழ்த்துச் சொல்லி விடைகொடுத்து அனுப்பி வைக்கிறோம். சென்னையிலிருந்துமே அவர் எங்கள்  தொழிற்சங்கப்பணி சிறக்க  என்றும் உதவுவார் என்பதில் நிறைவு.

தோழர் நீலகண்டன் என்றென்றும் கடலூர் மாவட்டத்தொலைபேசி ஊழியர்சங்கத்தின் தோழமை உறவே.

வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் சிறக்கட்டும் உமது பணி.

-கடலூர் NFTE-BSNL மாவட்டச்சங்கம்


Sunday, April 18, 2021

தோழர் ரகு நினைவேந்தல், படத்திறப்பு

        2021 ஏப்ரல் 3 சனிக்கிழமை மாலை தோழர் ரகுநாதன்


அஞ்சலிக் கூட்டம் கடலூரில் தோழர் இரா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் திரளான தோழர்கள் மற்றும் அனைத்துச் சங்கங்களின் தலைவர்கள் தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

                   தோழர் ரகுநாதனின் திருவுருவப் படத்தைத் தோழர் P.ஜெயராமன் (மாவட்டத் தலைவர், AIBSNLPWA ஓய்வூதிய நலச் சங்கம்) திறந்து வைத்தார். தனக்கென வாழாத ரகுவின் வாழ்க்கைச் சம்பவங்களையும் அவரோடு பழகிய தனது அனுபவங்களையும் எடுத்துரைத்தார். குறிப்பாக ஏழைக் குழந்தைகளுக்கு உதவியது, அவருடைய மருத்துவ உதவிக்காக அளித்த பணத்தோடு தனது பங்கையும் சேர்த்துத் தஞ்சை சாலியமங்கலத்தில் தாழ்த்தப்பட்ட பெண்கள் பயன்பாட்டிற்காகப் பொதுக் கழிப்பறை கட்டிக் கொடுத்தது எனப் பல சம்பவங்களைக் கூறினார். கடலூர் மாவட்டச் சங்கத்தைக் கட்டியெழுப்பிய தோழர் ரகுவுடன் தோளோடு தோள் நின்ற உற்ற நண்பர் தோழர் பி ஜெயராமன் அவரது படத்தைத் திறந்து வைத்தது மிகவும் பொருத்தமானது என அடுத்து உரையாற்றிய பலரும் குறிப்பிட்டனர்.

        தோழர் தமிழ்மணி தனது உரையில் அன்றைய லைன்ஸ்டாப் நிலைமைகளைக் கூறி அன்று தனித்தனியாக இருந்த -3, -4 என்ற பிரிவினையை ஒழித்தது தோழர் ரகுவின் முயற்சியில் கடலூர் மாவட்டச் சங்கம். தோழர் ரகுவின் வழி ஒற்றுமை என்றார்.

               அடுத்து மேனாள் சம்மேளனச் செயலர் ஜி ஜெயராமன், ரகு ஒரு வரலாறு, அவரே இயக்கம்; அவரே ஒரு தத்துவம், அமைப்புக் கோட்பாடுகளைக் கறாராகப் பின்பற்றியவர். பேசிக் கொண்டே இருந்த அவரை நாம் இனி பேசிக்கொண்டே இருக்கலாம் என்றார்.

        மூத்த தோழர் சேது பேசியபோது, அறுபது ஆண்டுகள் பணியாற்றியவர், ஏற்ற லட்சியத்திற்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்த சிரிலின் வார்ப்பு. நகைச்சுவை உணர்வுடன் பேசி எதையும் சரியாகச் செய்பவர் அவர். உடல்நலமில்லாத போதும் செங்கொடியுடன் சென்னை கூட்டத்தில் நின்றிருந்தார். மஸ்தூர் வழக்குக்கு நிதியளிக்க வேண்டுமென நம் பொறுப்பை உணர்த்திய அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி, இயக்கத்தில் உறுதியாக நின்று போராடுவதே.

        திருக்குறளோடு அஞ்சலியைத் தொடங்கிய லோகநாதன், நேருவின் சோஷலிசப் பாதைக்கு எதிரான ராஜாஜியின் சுதந்திரா கட்சி அபிமானியாக இலாக்காவில் சேர்ந்த ரகுவைப் பொது உடைமைப் பாதைக்கு மாற்றியவர் சிரில். முத்திரிக் காட்டில் முப்பதாய் முகிழ்த்ததை ஆயிரமாய் வளர்த்த, கேட்டார் பிணிக்கும் பேச்சாற்றல் மிக்க ரகுவுக்கு லால் சலாம், ரெட் சல்யூட்செவ்வணக்கம்.

        TMTCLU பொதுச் செயலாளர் செல்வம், மாநில உதவிச் செயலாளர் சுந்தரமூர்த்தி, சிறப்பு அழைப்பாளர் இளங்கோ, ஒப்பந்த ஊழியர் தலைவர் எம்எஸ் குமார், விருதாஜலம் மோகன்ராஜ், சிதம்பரம் ரவிச்சந்திரன், உளுந்தூர் பேட்டை அம்பாயிரம், கல்லை அழகிரி, FNTO கணேசன் அஞ்சலி உரையாற்றினர்.

        குடந்தை மாவட்டச் செயலாளர் விஜய் ஆரோக்கிய ராஜ்: பேரிடர் காலத்தின் உணவுப் பொட்டலம் போல கடலூர் மாவட்டச் செயல்பாட்டின் முத்திரை ரகு. அவரது களப்பணி பற்றி தோழர் ஜெயபால் எங்களிடம் கூறியிருக்கிறார். கடலூர் மாவட்டப் பதிவுகளிலிருந்து நான் தெரிந்து கொண்டேன் திரைப்படத்தில் வரும் சங்கத் தலைவர்கள் அல்ல ரகுவும் ரங்கநாதனும். அவர்கள் மரித்திருக்கலாம். ஆனால் சமூகத்திற்கு இன்னும் ரகுகள் ரங்கநாதன்கள் தேவை. போராட்ட உருவம் மாறுமே தவிர போராட்டத் தேவை மாறாது. தோழர் ரகு பாதாளத்தில் வேர்விட்டு வானில் கிளை பரப்பி சங்கச் செயல்பாடுகளில் என்றும் மறக்க முடியாது நிறைந்திருக்கிறார்.

        சிவில் கான்டிராக்டர் மணி வாய்ப்பு கேட்டு உரையாற்றினார். நிர்வாகத்தோடு தனது பேமெண்டில் ஏற்பட்ட பிரச்சனைகளைச் சரி செய்தவர். எனக்கு இரத்தம் தேவைப்பட்டபோது மாப்பிள்ளையாக கல்யாணத்தில் இருந்த தோழர் இளங்கோவை இரத்தம் கொடுக்கச் செய்து உயிரைக் காப்பாற்றியவர். பொதுவில் என்னை மனிதனாக்கியவர் ரகு என்றார்.

        BSNLEU மாவட்டச் செயலாளர் கே டி சம்பந்தம்: இன்று அவர் இல்லை எனினும் அவர் புகழ் நிலைத்திருக்கும். அவரைத் தவிர்த்துவிட்டு வரலாறு எழுத முடியாது. கல்வியறிவு குறைந்த என்னை மனிதனாக்கியவர் ரகு. முழுமையாக வாழ்வை இயக்கத்திற்கு ஒப்படைத்து, இறுதி வரை இடதுசாரி சிந்தனையோடு வாழ வழிகாட்டியவர்.

        AIGTOA சார்பில் தோழர் டி அன்புதேவன் அற்புதமான கவிதாஞ்சலி செய்தார்.

        AIBSNLEA மாவட்டச் செயலாளர் சக்திவேல் பேசும்போது, மாமனிதர் ரகுநாதன் என்பதே சரி, அவரைப் பற்றி கூறக் கேட்டிருக்கிறேன். இயக்கத்தை இராணுவம் போல உருவாக்கியவர். இந்தி விழாவில் ரகு மிகச் சுவையாக வினாடிவினா நிகழ்வை நடத்துவார். அதில் மகாராணி குந்திக்கு எவ்வளவு மகன்கள் என்ற கேள்விக்கு எப்படி ஐந்து என்பது சரியான விடை, ஏன் கர்ணன் சேர்க்கப்படவில்லை என அவர் விளக்கியது நினைவில் உள்ளது என்றார்.

        ஓய்வூதியர் நலச்சங்க மாவட்டச் செயலாளர் ஆர் அசோகன் உரையாற்றுகையில் 81லிருந்து 40 ஆண்டுகள் பழக்கம், ஊழியர்களுக்கு மட்டுமின்றி அதிகாரிகள் வழக்குகளிலும் வாதாடி இருக்கிறார். அடிமட்டத் தோழர்களின் குடும்ப நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், சூன்னியமான நிலையிலும் பலரைக் கைதூக்கி விட்டிருக்கிறார். அவர் போராட்டக் குணத்தை நாம் விட்டுவிடக் கூடாது, அதை வெற்றிடமாக்க விடக்கூடாது என்றார்.

        SEWA சுதாகர்ராஜ் தனது சொந்த அனுபவத்தைக் கூறி எப்படி ரகு தனக்கு உதவினார் என எடுத்துரைத்தார். வழக்கில் வாதாடி பிரச்சனையைத் துடைத்தார். தெருவில் பார்த்தாலும் அவர் காலில் விழுந்து விடுவேன், என் நன்றியை வேறுவழியில் தெரிவிக்கத் தெரியவில்லை. நன்றாக வருவாய் என வாழ்த்தினார். நான் நன்றாய் இருக்கிறேன்.

        TMTCLU மாவட்டச் செயலாளர் குருபிரசாத் பேசும்போது காமராஜர் படத்தில் (காமராஜர்) யார் எனக் கேட்ட மகனுக்குஅவர் பெரிய தலைவர்என ஓர் ஐஏஎஸ் அதிகாரி கூறிய பதில்போல எனது தந்தை ரகுவைப் பற்றி சிறுவனான தனக்குக் கூறியதை நினைவு கூர்ந்தார். தனக்கென வாழாது அடித்தட்டு மக்களுக்காக வாழ்ந்து நம்மையே குடும்பமாக எண்ணிய தலைவர் அவர்.

        SNEA மாவட்டச் செயலாளர் சிவசங்கரன்: ஸ்வீட் சாப்பிட்டு அனுபவப்பட்டது போல நீங்கள் ரகுவோடு பழகி இருக்கிறீர்கள், நாங்கள் ஸ்வீட் இனிப்பாய் இருக்குமெனக் கேட்டுதான் இருக்கிறோம்நேரடிப் பழக்கம் இல்லாத போதும் உரிமையோடு பழகுபவர். நல்லக்கண்ணு, கக்கன் போல நம்முடன் அப்படி இருந்த ஒருவர். அவரது முகநூல் பதிவுகளை ஆர்வமுடன் படித்து வந்தேன். எளிமையாக இருப்பதே அவருக்கான அஞ்சலி.

        தோழர் முத்துகுமரசாமி AIBDPA : அவர் நடமாடும் பல்கலைக்கழகம். நான் பணியில் சேரும்போதே பிரச்சனை. என்னை யாரென்று தெரியாமலேயே பணியில் சேர உதவினார். எந்தப் பிரச்சனையானாலும் அவரது முதல் சொல் டோண்ட் ஒர்ரி. இன்றைய இந்தியப் பொருளாதாரம் மற்றும் ஆட்சியாளர்கள் சூழ்நிலையில் தோழர் ரகு பின்பற்றிய லட்சியத்திற்காக நாம் உழைக்க வேண்டும்.

        திண்டிவனம் தோழர் நடராஜன் எஸ்டிஇ, புதுவை தங்கமணி அஞ்சலி உரைக்குப் பின் மாநிலத் தலைவர் காமராஜ் தமது உரையில்: கறுப்புக் கண்ணாடியோடு இருக்கும் ரகுவின் படம் ஓர் அடையாளம், ஐகான். அவரோடு சண்டையிட்டு, முரண்பட்டு, இணங்கி பணி செய்திருக்கிறேன். இலாக்கா வழக்குகளில் ஆஜராகி வாதாட அவரிடம்தான் கற்றுக் கொண்டேன். இன்று நம் நிறுவனம் இந்த நிதியாண்டில் லாபம் அடைந்துள்ளது நல்ல செய்தி.

        மாநிலச் செயலாளர் நடராஜன் பேசுகையில், மாநிலச் செயற்குழுவில் ஞானையா குறித்த தோழர் ரகுவின் உரையை ஒலிக்கதிரில் வெளியிட்டோம். நாமும் சிலருக்கு உதவுகிறோம். ஆனால் தோழர் ரகு ஜன சமூகத்தை நேசித்த, அவர்களுக்கு உதவிய தலைவர். அவரைப்போல சக மனிதனை நேசிக்கவும் பாராட்டவும் கற்றுக் கொள்வோம். தோழர் ஸ்ரீதர் மாமியார் மறைந்த போதும் இன்றைய நிகழ்வு நிச்சயம் நிகழும் என்றார். அது தோழர் ரகுவிடம் அவர் பயின்ற பாடம்.

        இறுதியாக தோழர் பட்டாபி ஆற்றிய அஞ்சலிப் பேருரையில்: நம்மைப் போல பிறந்து, நம்மைப் போல பணிசெய்தாலும், சூழலின் தன்மையை மாற்ற சிலர் சேவையாற்றி மேலே எழுகிறார்கள். உலகிற்கு மார்க்ஸ், நம் நாட்டிற்கு காந்தி, நேரு; தமிழகத்தில் காமராஜ், பெரியார் தொழிற்சங்கத்தில் குப்தா; மனித மாண்புகளின் சகல லட்சணங்களில் ஜெகன். அவருக்கு முன் மஜீத், பிறகு முத்தியாலு. இவர்களையெல்லாம் கிண்ணத்தில் உள்ள பழங்களின் கலவை, சேலட் இன் பௌல் என்போம். 1970 அமிதா பச்சன் போல அதிகாரத்திற்கு எதிராக ஆர்கே போன்ற மாநில மையத் தலைவர்களுக்கு ஈடாக மாவட்டங்களில் பல தலைவர்கள், கடலூரில் தோழர்கள் ரகு, ரங்கநாதன். கழுத்தில் கர்ச்சிப் இருந்தால் அது ரகு. இன்று தோழர் ஜெயராமன் பென்ஷனர் சங்கத்தில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். இது ஒரு கல்ச்சர். தலைவர்களின் கையைப் பிடித்துக் கொண்டே வருவதல்ல. ஒரு தருணத்தில் கையை உதறி தனியே நடைபோட. இளைஞர்களாக நாங்கள் வினவியபோது தலைவர்கள் எங்களை மூடர்கள் என்றதும், நாங்கள் அவர்களை நோக்கிநீங்கள் கற்க வேண்டியது உள்ளதுஎன பதில் கூறியதும் முரண்பாடுகள் அல்ல. வளர்ச்சியின் போக்கு. கேட்கும் பொறுமை, சக்தி தலைவர்களுக்கு இருந்தது. பல அற்புதங்கள் நடந்தது. இயக்கம் செம்மாந்து நடந்தது.

இன்று விஆர்எஸ் பென்ஷனில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. எந்த இசமும் தெளிவு பெற வேண்டுமானால் அது கேள்விக்கு உட்படுத்த வேண்டும்அது குழப்புவதாகாது. மோடி அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு கிராண்ட் ஏற்படுத்தி இருக்கிறது. அவ்வாறெனில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பென்ஷன் என்னவாகும் என்பதே என் கேள்வி. (பட்டாபி ரைட்ஸ் இணையதளத்தில் முழு கட்டுரை உள்ளது).  நமது வாழ்வு, முன்னேற்றம் குறித்து எந்தக் கூட்டத்திலும் நாம் பேசுவோம். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு வாழ்த்துகள். மறைந்த ரகுவுக்கு அஞ்சலி என உரையை நிறைவு செய்தார்.

        மாவட்டச் செயலாளர் தோழர் டி குழந்தைநாதன் நன்றி கூற நினைவேந்தல், படத்திறப்பு விழா நிறைவுற்றது, நெஞ்சில் நிறைந்து.

--நிகழ்ச்சி உரை தொகுப்பு :

                                                                  நீலகண்டன், கடலூர்