.

Monday, March 30, 2020

**31. 3.2020 பணி ஓய்வு பெறும்* 
திரு V.S. ரவி DE விஜிலன்ஸ் கடலூர்
திரு M.துரைராஜன் SDE சேல்ஸ்& மார்க்கெட்டிங் கடலூர்
தோழியர் R.மேனகா OS திண்டிவனம்
தோழர் S. மணி TT செஞ்சி
தோழர் K.ராஜகுமாரன்  TT செஞ்சி
தோழர் A.ராஜேந்திரன் TT கடலூர்
தோழர் T.மனோகரன் TT சேல்ஸ் விழுப்புரம்
ஆகியோரது பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய கடலூர் *மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்*
 *தோழமையுடன்* 
D. குழந்தை நாதன்
 *மாவட்ட செயலர்* கடலூர்.

*குறிப்பு:* இவர்களது பணி ஓய்வு பாராட்டு  நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு முன்னிட்டு நாளை நடைபெறாது. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ரிட்டயர்மென்ட் உத்தரவு அவர்களது DE/AGM  மூலம் வழங்கப்படும். அவர்களுக்குரிய சான்றிதழ், நினைவு பரிசு  பின்னர் ஒரு நாளில் வழங்கப்படும்.

Friday, March 27, 2020

இரங்கல் செய்தி....

*கடலூர் மாவட்ட சங்கத்தின் முன்னோடித்  தோழரும், கடலூர் லைன்ஸ்டாப் சங்கத்தின் மாவட்ட தலைவராக இருந்த  தோழர் P.K.ராஜகோபால் (லைன் இன்ஸ்பெக்டர்) வயது மூப்பின் காரணமாக அவரது ஊரான சேலத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த  வருத்தத்துடன் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.*  

*கடலூர் nfte-bsnl மாவட்ட சங்கம்*

Friday, March 20, 2020


தேசியத்தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டச் சங்கம்
விருப்ப ஓய்வு பெற்ற தோழர்களுக்கு
மாவட்டச் சங்கம் எடுத்த மாபெரும் விழா

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
        வணக்கம்.
        சென்ற ஆண்டின் இறுதியில் ஒரே பரபரப்பு. நூற்றாண்டு காலத் தொலைத்தொடர்பு வரலாற்றில் முதன் முறையாக பல நூறு தோழர்கள் விஆர்எஸ்-ல் செல்ல விருப்பம் தெரிவித்த நிலை. BSNL விஆர்எஸ் திட்டம் 2019ன் கீழ் என்ன பலன்கள் கிடைக்கும் / கிடைக்காது என்ற விவாதங்கள். எதிர்காலம் என்னவென்று நிச்சயமில்லாத செய்திகள் குவிந்து சூழ்ந்தன. நமது மாவட்டத்தில் அதிகாரிகளும் ஊழியர்களுமாக 285 தோழர்கள் ஜனவரி 31, 2020ல் விருப்ப ஓய்வில் சென்றனர்.
        மாவட்டத்தின் பலபகுதிகளிலிருந்தும் ஓய்வு பெறும் தோழர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடத்துவதை நமது சங்கம் மரபாகப் பின்பற்றி வருகிறது. ஒரே மாதத்தில் இவ்வளவு தோழர்கள் என்னும்போது அங்கங்கே விழா நடத்தினால் கலந்து கொள்வது சிரமமாகிவிடும் என்பன போன்ற காரணங்களால் மாவட்டத் தலைநகரில் மாவட்டச் சங்கமே ஒரே விழாவாக ஒருங்கிணைத்து நடத்துவது என்ற முடிவெடுத்தோம். வாய்ப்புக்கு ஏற்ப அந்தந்தக் கிளைகளில் நடத்துவது தனி. நமது மாவட்டச் சங்கம் முடிவெடுத்து விட்டதென்றால் அடுத்து விழா எப்படி நடத்துவது என்பதை மட்டுமே கேட்க வேண்டும்.
        ஜனவரி மாதத்திற்குள்ளாகவே நடத்துதல் சிறப்பு, தள்ளிப் போட வேண்டாம்.
        ஓய்வில் செல்லும் தோழர்களிடம் நன்கொடை கேட்பதில்லை. பணியில் நீடிக்கும் தோழர்களே அந்தச் செலவை ஏற்பது.
        ஜனவரி 25 மாலை கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் மாலை நேர விழாவாக நடத்துவது.
        பணி ஓய்வுபெறும் தோழர்களை நன்கு அறிந்த தோழர்கள் ரகு, தமிழ்மணி,           G. ஜெயராமன், P.ஜெயராமன் முதலிய தலைவர்களை அழைப்பது என்று முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.


        இந்த இயக்கம் இவ்வளவு வலிமையோடும் தோழர்கள் சமூக உணர்வோடும் இருப்பதற்குத் தளகர்த்தர்களாகிய குப்தா, ஜெகன் திருஉருவங்கள் பிரம்மாண்ட மேடையின் பின்புலமாக விளங்க அந்த பேனரில் அண்ணாச்சி D. ரங்கநாதன் மற்றும் சிரில் புகைப்படங்களும் இடம் பெற்று வண்ணமயமான இருக்கைகளோடு சனிக்கிழமை மாலை 2020 ஜனவரி 25 திறந்தவெளி அரங்கம் சிறப்புற அமைக்கப்பட்டது.
       


மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (திண்டிவனம் நீங்கலாக) தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஓய்வு பெறும் தோழர்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தது போற்றுதலுக்கும் நம் பாராட்டுதல்களுக்கும் உரியது.

       
மாவட்டத் தலைவர் G.கணேசன் தலைமையேற்க, மாவட்டப் பொருளாளர் A.S.குருபிரசாத் வரவேற்புரையாற்றினார். மாநிலத் தலைவரும், அகில இந்தியச் செயலருமாகிய தோழர் P.காமராஜ் துவக்க உரையாற்றினார். அன்றைய நிலையில் விஆர்எஸ் குறித்து வந்த உத்தரவுகள் மற்றும் நமது மத்திய சங்கம் எடுத்த முன்முயற்சிகளை விளக்கி, என்றைக்கும் நமது சங்கம் பணி ஓய்வில் செல்லும் தோழர்களின் நலனையும் பாதுகாத்து நிற்கும் என்று கூறி மாவட்டத் தோழர்களோடு தனக்குள்ள அனுபவங்களையும் கூறி வாழ்த்தினார்.
       

அடுத்து நமது தலைவர் தோழர் T.ரகுநாதன் நெகிழ்ச்சி உரையாற்றினார். தழுதழுத்த அவரது உரையில், ”நம் மாவட்ட மாநாடுகளைவிடச் சிறப்பாக உள்ளது, நம் வீடுகளிலிருந்தும் வந்துள்ளீர்கள். உங்களை எல்லாம் சேர்த்துப் பார்த்து எவ்வளவு ஆண்டுகளாயிற்று.  கடலூர் ஜிஎம் அலுவலகத்தின் முன் சாலை பிரிப்பு தடுப்புச் சுவர் தற்போது கட்டப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் இதனைக் கட்ட வேண்டும் என நாம் சாலை மறியல் செய்துள்ளோம். அதற்குக் காரணம் தோழர் தண்டபாணியின் மகள் சாலை விபத்தில் பலியானது. நான் பணியில் சேர்ந்த போது நம்பர் ப்ளீஸ் எக்ஸ்ஜேஞ். சங்கக் கொடிமரம் ஸ்தாபிக்க விஸ்வநாத சிங், சீனுவாசன் மஸ்தூர் சவுக்கு மரத்தைச் சுமந்து வந்தது. பின்னர் அதனை எடுத்து விட்டு இரும்புக் கம்பம் நாட்ட நினைத்த போது குருவுடைய அப்பா சுந்தரமூர்த்தி மாவட்டச் செயலர். கம்பம் நட போலீஸ் அனுமதி இல்லை என்ற போது, நடுவதைத் தடுத்தால் ஸ்டிரைக் வரும் என்று முழங்கியது… இன்றைக்கு இவ்வளவு பெரிய டிஜிடல் பேனர். அப்போது தட்டிகளைப் பேப்பரில் ஒட்டி வண்ணங்களைக் குழைத்து எழுதுவார்கள்.

        மஜ்கர், அவர் தம்பிதான் சாதிக் AO. எத்தனை எத்தனைத் தோழர்கள் சங்கத்திற்காக உழைத்திருக்கிறார்கள். அய்யர் கிருஷ்ணமூர்த்தி, குமார், இளங்கோ, தட்சிணாமூர்த்தி இப்படி எத்தனை எத்தனைத் தோழர்கள் மஸ்தூராக இருந்தபோதே பழிவாங்குதல்களைச் சந்தித்திருக்கிறார்கள். இன்று அவர்கள் JE ஆக ஓய்வு பெறுகிறார்கள் என்றால் காரணம் நமது சங்கம். பழைய தலைவர்கள் சேலம் மாலி, கிருஷ்ணாராவ், நம்பீசன். நம்பீசன் மனைவி சாகக் கிடக்கையில் அவர் மாநாட்டு வேலையில். ஜெகன் உண்ணாவிரதம் இருந்தபோது நானும் ரங்கநாதனும் சென்னையில் CGM UDN ராவ் ஐ  கைப்பிடித்து நிறுத்தினோம். எங்களால் முடியுமா, தெரியாது ஆனால் செய்தோம். அதற்குப் பின்னால் இருந்தது சங்கம்.
        இன்றைக்கு நாம் நல்ல நிலையில் இருப்பதற்கும், நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவிற்கும் சங்கத்திற்குக் கடமைப் பட்டவர்கள். வேலூர் சென்ன கேசவன், நெய்வேலி சர்தார் கான் போன்றோர் இன்று JTOவாகவும், SDEயாகவும் பணி நிறைவு பெற்றிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம் இளமை முழுவதையும் சிறையில் கழித்தவர். நம் நாட்டின் மூன்று அறிவாளிகள் அம்பேத்கார், நேரு, ராகுல சாங்கிருத்தியான். நாட்டிற்கும் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படி நாம் செய்ய முன்வந்தால் நிச்சயம் நம் வீட்டுப் பெண்களும் உடன் இருப்பார்கள்.
        உங்களை எல்லாம் மீண்டும் இப்படிச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி”


அடுத்து தோழர் எஸ்.தமிழ்மணி தமது உரையில் குப்தா கொண்டு வந்த பதவி உயர்வுத் திட்டம், பத்து ஆண்டுகள் சேவை செய்தாலே பென்ஷன் என்ற மாறுதல், பிரேக் மஸ்தூர் பிரச்சனையில் ஒருநாள் வேலை செய்தாலே ஓராண்டாக தொடர்ச்சியாகக் கருதச் செய்து பணி நிரந்தரம். ஒரு நாளில் என்ன பெரிய வித்தியாசம் என்று புறக்கணிக்காது, 2000 அக்டோபர் முதல் தேதிக்கு பதிலாக 30-09-2000ல் பணி நியமனம் பெற்றுத் தந்து பென்ஷனை உறுதிப்படுத்தியது என குப்தாவின் பல சாதனைகளை விளக்கினார்.

TMTCLU மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஆர்.செல்வம் இந்திரா காந்தி ஆட்சியில் ஆளெடுப்புத் தடைச்சட்டத்தை உடைத்து 1 லட்சம் மஸ்தூர்கள் நிரந்தரம் செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார்.மாநிலத் துணைச் செயலாளர் P. சுந்தரமூர்த்தி பேசும்போது மாவட்டச் செயலராக தோழர் D.குழந்தைநாதன் நடத்தும் பாராட்டு விழாவைப் பெரிதும் புகழ்ந்துரைத்து, விஆர்எஸ்-க்குப் பிறகும் மாநிலச் சங்கம் தோழர்களின் பின் உறுதியாக நிற்கும் என்று உறுதி கூறினார்.


ஓய்வூதிய நலச்சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் அருமைத் தோழர் P.ஜெயராமன் அவர்கள் வாழ்த்தும்போது, ”நானும் தோழர் ரகுபோல 1963ல் பணிக்குச் சேர்ந்தவன். ஆனால் நான் நீங்கள் வந்துசேர உள்ள அமைப்பின் புதிய கதையைக் கூறப் போகிறேன். இரண்டு ஆண்டாக சம்பள உயர்வில்லை. ஆறு ஆண்டாக சலுகைகள் இல்லை. இன்றைக்கு நமக்கு இருப்பது பென்ஷன் மட்டும்தான். ஊழியர்களுக்கு சம்பளம் வரும் முன் பென்ஷன் வந்து விடுகிறது. இன்றைக்கு 60:40 பிரச்சனையும் தீர்க்கப்பட்டு விட்டது. வயதானால் மருத்துவச் செலவு அதிகரிக்கிறது. முன்பு BSNL மருத்துவத் திட்டம் சிறப்பாக இருந்தது. தற்போது மோசமாகி உள்ளது. CGHSS மருத்துவ வசதி நமக்கும் பொருந்தும். நீங்கள் வந்து சேரஉள்ள ஓய்வூதியர் அமைப்பு சிறு பிரச்சனைகளையும் தொடர்ச்சியாக விடாது போராடி தீர்த்துள்ளது. நேற்றுதான் ஒரு கோர்ட் தீர்ப்பு வந்து நமது மாவட்டத்தில் 12 தோழர்கள் பலன் பெற்றிருக்கிறார்கள். அதில் நம்முடைய அண்ணாச்சி D.ரங்கநாதனின் பென்ஷன் தொகையும் உயர்த்தப்பட உள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் வெற்றி அடைந்திருக்கிறோம். முழுமையான நலச்சங்கம் உங்களை வரவேற்கிறது.”

அடுத்து ஓய்வூதிய நலச்சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் ஆர்.அசோகன் வாழ்த்துரைத்தார். அப்போது, ”சுதந்திரத்திற்குப் பிறகு நமது துறையை முன்னேற்றி இருக்கிறோம். JIO வந்த பிறகுதான் பிரச்சனை. நான் இலாக்காவிற்கு வந்த பிறகு ஒப்புக்கொள்ளும் முதல் மனிதர் தோழர் ரகு. சம்பள பில்லில் என்ன சம்பளம் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதும் என்ற அளவு உங்கள் சங்கம் உங்களை எல்லாம் சுகமாக வைத்திருந்தது. இதற்குக் குப்தாவிற்கும் பிற தலைவர்களுக்கும் நன்றி கூற வேண்டும். நமது சங்கத்தில் பல ஜாம்பவான்கள். தோழர் PJ பிதாமகர். ஓய்வூதிய நலச்சங்கத்தில் இணைந்த பிறகு உங்கள் கொள்கைகளை நீங்கள் நிச்சயம் பின்பற்றலாம். இந்த அமைப்பை வலுவாக வைத்திருப்போம். ஓர் ஆலோசனை உங்கள் வங்கிக் கணக்கு எண், பின் எண் போன்ற விவரங்களை யாரிடமும் சொல்லாமல் கவனமாக இருங்கள்.”
இந்த பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்த கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் D.குழந்தைநாதன் பெருமிதத்தோடு பேசினார். ”விஆர்எஸ் சுனாமியாக வந்துள்ளது. ஆனால் சுனாமிக்குப் பிறகும் எழுந்து நிற்போம். இந்தச் சாதனைகளுக்கெல்லாம் காரணம் குப்தா. அவர் வழியில் நமது மாநிலச் சங்கம் ஒரு தோழர் கூட TSM பணிக்காலம் சேர்க்கப்படாமல் ஓய்வூதிய நிர்ணயம் செய்யப்பட மாட்டார்கள் என உறுதிகூறி அவ்வாறே சாதித்தும் காட்டியது. அவர்களுக்கு நன்றி. மேலும் ஓய்வூதிய மனுக்களைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய உதவிய கடலூர் நந்தகுமார், எம்.எஸ்.குமார், பண்ருட்டி ஜி.ரங்கராஜு, சிதம்பரம் தோழர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் நன்றி. இனியும் தோழர்கள் மகிழ்ச்சியாகவே ஓய்வு பெறுவார்கள். மாவட்டச் சங்கம் பணியில் உடன் நிற்கும்” என்று உறுதி கூறினார்.
அடுத்து முன்னாள் அனைத்திந்தியச் செயலாளர் தோழர் G.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இரண்டு மாத காலங்களுக்கு மேல் ஓய்வில் இருந்த பிறகு அவர் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி நம்முடைய மாவட்டச் சங்கத்தின் பணிநிறைவு பாராட்டு விழா. இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை உணர முடிந்தது. அவர் வந்திருந்து வாழ்த்தியது மாவட்டச் சங்கத்திற்கு பெரும் உற்சாகம். தோழருக்கு நமது நன்றி. அவர் தமதுரையில்,
”இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது இந்த இயக்கத்திற்காக நீங்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்பதை 10,20 நாட்கள் கூட சொல்லிக் கொண்டே இருக்கலாம். காணற்கரிய பெருங் கூட்டம். அரசியல், சாதி மதவாதிகளின் கூட்டமல்ல, தங்களுக்காகவன்றி செயல் ஆற்றிய கூட்டம். உங்களிடம் எவ்வளவு வேலைகள் வாங்கி இருப்போம். அங்கே ஆர்பாட்டம், பேரணி, தர்ணா, கூட்டம். ஆனால் சோர்வடையால் அர்ப்பணிப்போடு இயங்கிய உங்களுக்கு நன்றி. இப்படி எல்லாம் வந்தீர்களே, கடைசி நாளும் வரனுமா? யார் கேட்கவில்லை. வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் சிரில், ஜெகன் எனத் தொடங்கி இன்று தோழர் குழந்தைநாதன் வரை வந்து இருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும். பூதத்தாழ்வார் தொழிலாளிகளைப் பாராட்டுகிறார், உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்று வள்ளுவரும், பிரம்மதேவன் கலை என்று பாரதியும் பாடினார்கள். ஆனால் திரட்டப்பட்ட தொழிலாளர்களை ஒழிக்க நினைக்கிறது அரசு. யார் யாராக இருந்தாலும் தொழிலாளி அம்சம் அப்படியேதான் இருக்கும். மார்க்ஸ்தான் வர்க்கமென்று எடுத்துரைத்தார். ரகு காலத்தில் பாதுகாப்பாக இருந்தது போல, P.ஜெயராமன் காலம் போல வடிவத்தில் தொழிலாளர் அமைப்பு  இல்லாதிருக்கலாம். ஆனால் தனித்தனியாக அன்றி கூட்டமாக, வர்க்கமாக இயங்கும் தொழிலாளர்களின் மகிமைப் புகழ் அப்படியே இருக்கும்.” 

அடுத்து நீரோட்டமாக மாவட்டச் சங்கத் தோழர்களை ஒருங்கிணைத்து இயக்கும் முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா
ஸ்ரீதர் பேசும்போது, ”வரும்போது எவ்வளவோ சமூகத் தடங்கல்கள். ஆனால் அந்தச் சமூகத்தையே நமக்குக் காட்டிய சங்கம் நமது NFTE. அரசியல் தலைவரின் ஆங்கில உரையை மொழிபெயர்த்ததற்காக நமது தலைவர் ஜெகன் தண்டனை பெற்றார். இந்தச் சங்கம் மற்ற சங்கங்கள் போல இல்லை. 2004 சரிபார்ப்புத் தேர்தலில் நாம் செய்த தவறு, 2014 பொதுத் தேர்தலில் செய்தது போல. ஆனாலும் 243 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நமது நிறுவனம் மட்டுமே அரசு பென்ஷனை உறுதி செய்துள்ளது. அதிகாரிகள் அல்லாத ஊழியர் சங்கங்களை மட்டுமே திரட்டிப் போராடி பென்ஷனைப் பாதுகாத்தவர் தோழர் குப்தா. பலர் கிடைக்காது என்றபோதும் பெற்று சாதித்தவர். ப்ரோ ரேட்டா பென்ஷனை குப்தா நிராகரித்தார்.
நமது கடலூர் மாவட்டச் சங்கம் பணமில்லாத போதும் ஜனவரி 31ல் பணி ஓய்வு பாராட்டுவிழா நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. நிச்சயம் உங்களுக்குச் சேரவேண்டிய பலன்கள் வந்து சேரும். அதற்கு இந்த இயக்கமும் நிறுவனமும் முக்கியம். நீங்கள் ஒவ்வொருவரும் அதன் தூதுவர்கள் ஆக வேண்டும். நமதருகே ஒரு தொழிலாளி எட்டு மாத காலமாக ஊதியமின்றி இருக்கிறான் என்பது பற்றிய அக்கறையும் வேண்டும்.”
இறுதியாக மாநிலச் சங்க உதவிச் செயலாளர் தோழர் G.S முரளிதரன் நிறைவுரையாற்றினார். அவர் தமது உரையில் பென்ஷன் உரிமையோடு பொதுத்துறையான வரலாற்றை, பிரதமர் வாஜ்பேயி வெளிநாட்டில் இருந்தபோதே நாம் நடத்திய 72 மணிநேர அகில இந்திய வேலைநிறுத்தத்தையும், ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க உடன்பாட்டையும் நினைவு கூர்ந்தார். நிறுவனத்தின் இன்றைய நிதி நிலைமையையும் விஆர்எஸ் பின்னணியையும், அரசின் எதிர்பார்ப்பையும் எடுத்துரைத்தார். நிறுவனத்தை மூடக்கூடாது என்பதற்காக விஆர்எஸ் திட்டம் கொண்டு வரப்பட்டதையும், பணி ஒப்பந்தங்கள் மூலம் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதையும், எந்தச் சூழ்நிலையிலும் சங்கம் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்து நிற்கும் எனச் சூளுரைத்தார்.
ஓய்வு பெற்ற தோழர்கள் கடலூர் ராஜு, இளங்கோவன், விநாயகமூர்த்தி, பண்ருட்டி ரங்கராஜூ, விழுப்புரம் நடராஜன், செஞ்சி ஜெயராமன், கள்ளக்குறிச்சி மணி, ராஜேந்திரன், செல்லமுத்து ஆகியோர் ஏற்புரையாற்றினர். நன்றியுரை தோழர் சகாயசெல்வன் வழங்கினார்.

பணி ஓய்வு பெறும் தோழர்களுக்குக் கைத்தறி ஆடை அணிவித்ததுடன், என்றென்றும் அவர்கள் நினைவில் நிற்கும் வகையில் ஓர் நினைவுப் பரிசையும் வழங்க எண்ணியது. எந்த நிலையிலும் நாம் வணங்கும் தெய்வமாக இருப்பவர்கள் அல்லவா தோழர் குப்தாவும் ஜெகனும். அவர்கள் நம் வாழ்வின் மூச்சும் பேச்சும் ஜீவனுமாக நம்முள் ஒன்று கலந்தவர்களாயிற்றே. அவர்கள் இருவரின் திருவுருவத்தை ஒரு ஷீல்டாக மாவட்டச் சங்கத்தின் சார்பில் அளித்தோம்.  அதில் பொறிக்கப்பட்ட வாசகம் நம் இதயத்தில் எழுதியது அல்லவா!
“எங்கள் மூச்சும் பேச்சும் …
 எங்கள் வாழ்வும் வளமும் …
 வாழி எம்மான்!”
 வந்திருந்தோர் அனைவருக்கும் இரவு உணவு வழங்கி மகிழ்ந்தோம். விழா சிறக்க அல்லும் பகலும் உழைத்த அனைவருக்கும் நன்றி. கடமையாக ஏற்று விழாவில் கலந்து கொண்ட ஓய்வு பெறும் தோழர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு நன்றி. தோழர்களோடு இணைந்து பணியாற்றியது நம் நினைவில் நீங்காது இருப்பது போல இவ்விழாவும் அவர்தம் நினைவில் நிற்கும் என நம்புகிறோம்.
இனி நம் கடமை பெரிது! BSNL நிறுவனம் சிறக்க கூடுதல் உற்சாகத்தோடு உழைப்போம்! வாழ்த்துகளுடன்,

தோழமையுள்ள,
 D குழந்தைநாதன் மாவட்டச் செயலாளர்

Tuesday, March 17, 2020


நல்லதோர் குடும்பம், நல்லதோர் பெருவிழா
கடலூர் நகர் அரங்கில் விஆர்எஸ்  
பணிஓய்வு பாராட்டு விழா

தொலைத்தொடர்பில் இது நமக்குப் புது அனுபவம், நெருக்கடியும் பதற்றமும் கூடிய அனுபவமும் கூட. ஒரே மாதத்தில் பல தோழர்கள் 13, 15 தோழர்கள் பணி ஓய்வு பெற்று அனைவருக்கும் இலாக்கா சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா நடத்தியிருக்கிறோம். பேசும்போது இனி கான்ஃப்ரன்ஸ் ஹால் போதாது கல்யாண மண்டபம்தான் பார்க்க வேண்டும் என்றுகூட சொல்லியிருக்கிறார்கள். அது உண்மையாகி விட்டது, BSNL விஆர்எஸ் 2019 திட்டத்தின் கீழ் நமது கடலூர் மாவட்டத்தில் அதிகாரிகளும் ஊழியர்களுமாக 293 தோழர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர். 2020 புதுவருடத்தின் ஜனவரி 31ம் நாள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்றார்கள்.
        அதற்கு முன் இரண்டு மாதங்கள் ஊதியம் வழங்கப்படாது தாமதமாகி வந்த நிலை. நிறுவனமும் நிதி நெருக்கடியில். இந்தச் சூழ்நிலையில் இவ்வளவு ஆண்டுகள் கடுமையாகப் பணியாற்றிய தோழர்கள் விருப்ப ஓய்வு என்ற ஒரே காரணத்திற்காகக் ’குழைக்கின்ற கவரி இன்றி, கொற்ற வெண்குடையும் இன்றி…இழைக்கின்றவிதிமுன் செல்ல… ஒருதமியன் சென்றான்’ என்று இராமன் சென்றதுபோல பணிநிறைவு சிறப்புகள் ஏதுமின்றி செல்ல வேண்டியதுதானா என்ற கலக்கம் ஒவ்வொருவர் மனதிலும் நிழலாடியது.
        தனியே ஒரு திருமணம் என்றாலும், கட்சி மேடைகளில் நடப்பதுபோல பல ஜோடிகளுக்குத் திருமணம் என்றாலும் விழாவில் குறை வைக்க முடியுமா? எப்போதும் போல, இல்லை இன்னும் சிறப்பாகக் கடலூர் தலைமையகத்தில் அனைவருக்கும் ஒரேநாளில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என நமது மாவட்டச் சங்கம் விரும்பியது. தோழமைச் சங்கங்களும் ஆக்கபூர்வமாக ஆலோசனைகள் வழங்கிட அதற்கான திட்டத்தை வகுத்தனர். நிர்வாகமும் நமது யோசனைக்கு நேர்மறையாக ஆதரவளித்தது.
       
ஜனவரி 31 அன்று கடலூர் நகர அரங்கில் முற்பகல் பிற்பகல் என இரு அமர்வாகப் பாராட்டு விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் விருப்ப ஓய்வு பெற்ற 285 தோழர்களுக்கும் ஜனவரிமாதம் பணிநிறைவு செய்யும் 8 தோழர்களும் கடலூர், விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள் என இரண்டு பகுதிகளாகப் பட்டியலிடப்பட்டனர்.  அது சரியான முடிவு என்பதை ஒவ்வொரு அமர்விலும் கடலூர் நகர அரங்கம் நிறைந்த காட்சி எடுத்துக்காட்டியது.
        தோழர் சிரில்தான் கூறுவாராம், ’உலை இரண்டு தேவையில்லை, இலை இரண்டு போதும்’ என்று. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவனல்லவா தொழிலாளி. ஆனாலும் விழாவை நடத்த நிர்வாகத்திடம் இருப்பொன்றும் இல்லை, இதயம் இருந்தது.  மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது நிரூபிக்கப்பட்டது. காசில்லை என்றாலும் பெற்ற பெண்ணின் திருமணத்தில் குறை வைக்க முடியாதல்லவா?
       
ஜனவரி 31, 2020. கடலூர் நகர அரங்கத்தின் முகப்பில் கையில் தொலைபேசி ரிசிவரை வைத்துப் பேசும் காந்தியடிகளின் பொக்கைவாய் சிரிப்புடன் பேனர் வரவேற்றது. ஜனவரி தியாகிகள் தினம் கொண்டாடப்படும் மாதமல்லவா. வாயிலில் இனிப்பு சந்தனம் மலர் தந்து ஓய்வு பெறுவோர் அவர்தம் குடும்பத்தார் வாழ்த்த வருகைதந்தோர் அனைவரும் வரவேற்கப்பட்டனர்.
       
மேடையின் பின்புலத்தில் சுதேசியை ஆதரிக்கும் வகையில் காந்தியின் சித்திரம், தொலைத்தொடர்பு கோபுரம், தொலைபேசி வளர்ச்சியைக் காட்டும் வகையில் காலந்தோறும் உருமாறி வந்த தொலைபேசி கருவிகளின் படத்தோடு பணிஓய்வு பாராட்டு நிகழ்வு இடம் பெற்றிருந்தது.        
            மிகவும் மகிழ்ச்சிக்குரியது அரங்கம் நிரம்பிய தோழர்களின் வருகை. 293 தோழர்களில் ஒரிருவர் தவிர அனைவரும் பெரும்பாலும் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
        ஓய்வு பெறும் ஒவ்வொரு தோழரும் மேடைக்கு அழைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் சந்தன மாலை, சிறப்பு மரியாதை பொன்னாடை, பரிசுப் பொருள், அவரைப்பற்றிய பாராட்டு மடல் மற்றும் இழுவை பயணப் பெட்டி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
        ஒவ்வொருவருக்கும் DGMகள் பொன்னாடையும் மாலையும் அணிவிக்க, நமது மாவட்டப் பொதுமேலாளர் அவருக்கான பாராட்டுச் சான்றிதழை வழங்கிப் பாராட்டினார். ஒவ்வொரு தோழருக்கும் விழா நிகழ்வின் நிகழ்வாக இரண்டு புகைப்படங்கள் எடுத்து பின்னர் வழங்கப்பட்டது.
       
முன்னதாக AGM நிர்வாகம் வரவேற்புரை வழங்க, அனைத்துச் சங்கப் பிரதிநிதிகள் (NFTE, BSNLEU, FNTO, SNEA, AIBSNLEA,SEWA-BSNL மற்றும் ஓய்வூதியர்களின் AIBSNLPWA, AIBDPA ) வாழ்த்துரையும் வழங்கினர். DGM(A),DGM(CM) இவர்களோடு இறுதியாக நமது மாவட்டப் பொதுமேலாளரும் வாழ்த்துரை வழங்கினர். முற்பகல், பிற்பகல் இரு அமர்வுகளிலும் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துரையும் பாராட்டுரையும் வழங்கினர்.
        நம்பிக்கையை மட்டுமே முதலாகக் கொண்டு பணிநிறைவு பாராட்டு விழாவை மிகச் சிறப்பாக பிரம்மாண்டமாகத் தமிழகத்திலேயே நமது மாவட்டம் மட்டுமே நடத்தியது என்பதில் நமக்குப் பெருமை. வந்திருந்த அனைவருக்கும் டீ, பிஸ்கெட் வழங்கி உபசரித்தோம். நிர்வாகத்தின் ஆக்கபூர்வமானச் செயல்பாடும் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. எதிலும் குறை வைக்கவில்லை என்பதில் நமக்கு நிறைவு. நிறைவான சேவைக்கு நிறைவான பாராட்டு.
        தொடர்ந்து மாநிலச் சங்கத்தின் முயற்சியின் காரணமாக, குறிப்பாக மாநில உதவிச்செயலர் தோழர் G.S முரளிதரன் முயற்சியால் 293 தோழர்களுக்கும் உரிய தலா ரூ1250/--(for retirement Gift) தொகை டெம்ப்ரவரி அட்வான்சாக மாநில நிர்வாகத்தால் விரைவாக அனுமதிக்கப்பட்டதற்கு நமது நன்றி. கடனுக்கு கிஃப்ட் பொருள்களை வழங்கிய வணிக நிறுவனத்தாருக்கும் நன்றி. மேலும் அதுபோல welfare தொகையும் கடலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. ரூபாய் ஒன்பது லட்சம் அளவில் கடனுக்கு இழுவை பயண சூட்கேஸ்கள்(trolly suitcase) வழங்கிய நிறுவனம் நம் மீது வைத்த நம்பிக்கை BSNL நிறுவனத்தின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒப்பானது.
       
நெருக்கடியான நேரத்தில் நெஞ்சம் நிறையும் வகையில் விழா நடத்தியதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைத்த பாடுபட்ட அனைவருக்கும் தனித்தனியே நமது மாவட்டப் பொதுமேலாளர் தனிப்பட்ட முறையில் பாராட்டுச் சான்றிதழ் அளித்துப் பாராட்டினார். பிப்ரவரி மாத பணிஓய்வு விழாவின்போதே அந்தச் சான்றிதழும் அளித்து நிர்வாகம் பணியில் தொடரும் ஊழியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
        நாம் இன்று எண்ணிக்கையில் குறைந்திருக்கலாம், நம் திறனில், உழைப்பில், நாம் கொண்ட நம்பிக்கையில் குறையொன்றுமில்லை. இதில் நமது மாவட்டச் சங்கத்தின் பணி மகத்தானது. நம் மாவட்டச் சங்கத்தின் பணிக்குப்பின்னால் தோழர்கள் R.நந்தக்குமார், A.C.முகுந்தன், M.S.குமார் ஆகியோரின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக ஒப்பந்த ஊழியர் M.S.குமார் பேனர் கட்டுவதிலும், சான்றிதழ் தயாரிப்பிலும், விழா அரங்கு ஏற்பாடுகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்தார். அத்தோழரின் மகத்தானப் பணியினை மனதாரப் பாராட்டுகிறோம்.
BSNLஐ உயர்த்திப் பிடித்து தொடர்ந்து முன் செல்வோம். விஆர்எஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற நம் தோழர்கள் அப்படித்தான் உழைத்து வழிகாட்டி உள்ளனர். அவர்கள் அனைவரும் நலமே திகழ வாழ்த்துவோம்!
NFTE-BSNL கடலூர் மாவட்டச் சங்கம்


.



























Sunday, March 15, 2020


வருந்துகிறோம்....




நமது bsnl இல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோழரும் முன்னாள் fnto மாவட்ட சங்க முன்னோடித் தலைவர்களில் ஒருவரான தோழர் C.A.தாஸ் அவர்கள் நேற்று இரவு சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோழரது  பிரிவில் வருந் தும் உற்றார், உறவினர்களுக்கும் கடலூர் nfte-bsnl மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று மாலை கடலூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
தோழமையுடன்
 D.குழந்தை நாதன்
மாவட்ட செயலாளர் கடலூர்