.

Monday, December 21, 2015

தொடருகிறது வெள்ள நிவாரணப் பணி.....

விடுபட்டுப்போன வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட செயலர் இரா.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இன்று  (21-12-2015) மாவட்ட சங்க அலுவலகத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. 
நமது பணி  மேலும் தொடரும் 






AITUC அகில இந்திய  மாநாட்டு நன்கொடையாக 
TMTCLU மாநில சங்கத்தின் சார்பில் ரூபாய் ஒருலட்சத்திற்கான காசோலையை  மாநிலத்தலைவரும், மூத்த தலைவருமான ஆர்கே, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் K.சேது மற்றும் சம்மேளன செயலர் தோழர் SSG ஆகியோர் AITUC பொதுச்செயலர் தோழர் T.M.மூர்த்தி, மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவருமான தோழர் K.சுப்புராயன்  அவர்களிடம் இன்று வழங்கினர்.








Sunday, December 20, 2015

இரங்கல் செய்தி
சிதம்பரம் டெலிகாம் மெக்கானிக் தோழர் A.வேல்முருகன் அவர்கள் இன்று 20-12-2015 மாலை 4.00 மணியளவில் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார். அவரது பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கும் அவர்தம் உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சி நாளை 21-12-2015 மாலை 4.00 மணிக்கு அவரது சொந்த ஊரான புதுச்சத்திரம் அருகே உள்ள வில்லியநல்லூர் என்ற ஊரில் நடைபெறும்.   

Thursday, December 17, 2015

தொடரும் நமது பணி........


சமீபத்தில்  கடலூரில் கடுமையாக  பெய்த  மழையினால் மழை நீர் செல்லமுடியாமல் சாக்கடை செல்லும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு அதனால் சாக்கடை கலந்த மழைநீர் சூழப்பட்ட கடலூர் GM அலுவலகப்பகுதி, வருவாய்பிரிவு, வாடிக்கையாளர் சேவைமையம் மற்றும் மெயின் தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில் சிலநாட்களாக தேங்கி நின்ற சாக்கடையினால் அந்த பகுதிகளில் தொற்றுநோய் உருவாகும் அபாயம் இருந்தது. மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கடலூர் நகராட்சி நிர்வாகத்திற்கு நமது அலுவலகப்பகுதிகளில் தெளிப்பதற்கு பிளீச்சிங் பவுடர் தந்து உதவுமாறும், அதனை தாங்களே தெளித்து கொள்கிறோம் என வேண்டி கடிதம் எழுதி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் இன்று அதனை நம்மிடம் அளித்தனர். மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இன்று தோழர்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் பணியை முழு அர்ப்பணிப்புடன் அதனை நமது அலுவலகப் பகுதிகளில் தெளித்தனர்.    அச்சமயம், அவ்வழியே காரில் சென்ற தனியார் விவசாய தொண்டு நிறுவன  ஆராய்ச்சி இயக்குனர் திருமதி ரேவதி அவர்கள் நமது பணியை கண்டு நெகிழ்ந்து காரில் இறங்கி வந்து நம்மை, நமது செயலைப் பாராட்டினார். மேலும் நம்மிடம் இந்த பகுதி வெள்ளத்தில் பாதிப்படைந்த விவாசாய நிலங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.










Wednesday, December 16, 2015

தமிழ்மாநில ஃபோரம் கூட்டமைப்பு கூட்டம்

நேற்று 15-12-2015  சென்னையில் தலைமைப் பொது மேலாளரைச் சந்திக்கும் முன் அனைத்து சங்கத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. போரம் தலைவர் தோழர் P. சென்னகேசவன் தலைமை தாங்கினார்.
விவாதங்களுக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு.

1.     22-12-2௦15 மாவட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம்
 ஓய்வுபெற்ற தோழர்களுக்கு 78.2%  DA இணைப்பு கோரிக்கை இன்னும் நிறைவேறாமல் உள்ளது. இந்த பாதகம் உடனடியாக களையப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி சக்திமிக்க ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பின் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் 22-12-2௦15 செவ்வாய்க்கிழமை அன்று நடத்துவது.

2.     சந்தாதாரர் மகிழ்விப்பு 1௦௦ நாட்கள் திட்டம்.
BSNL சேவையை மேம்படுத்த கூட்டமைப்பு முன்மொழிந்த திட்டமாகும். இதனை ஜனவரி முதல் தேதியிலிருந்து சிறப்பாக நடைமுறைப்படுத்துவது. இது பற்றி மாவட்ட அளவில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். அடிப்படையில் சேவை மேம்பாட்டு பணிகளில் அர்பணிப்புடன் உறுப்பினர்களை ஈடுபடுத்தி  உற்சாகப்படுத்துவது. BSNL-ல் வருவாய் பெருக்க நல்ல சேவையை உறுதிப்படுத்துவதில் முன்கையெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

3.     வெள்ள பாதிப்பு முன்பணம்
தலைமைப் பொது மேலாளரிடம் தரப்பட்ட கடிதத்தின் சாராம்சங்களை சந்திக்கும் போது வலியுறுத்துவது.
     இதன்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ள முன்பணம் ரூபாய் 25௦௦௦/- வழங்கிட டெல்லிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது . சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்.


======================================================================== 


மாநில தலைவர்களுடன் கருத்தாய்வு கூட்டம்

பிற்பகல் 3 மணிக்கு தலைமைப் பொதுமேலாளர் தலைமையில் நடைபெற்றது. NFTE சார்பில் தோழர் P.சென்னகேசவன் (மாநில  பொறுப்புச்செயலர்) சென்னை மாவட்டச் செயலர் தோழர் மனோஜ், நமது மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டனர்.
     பழைய முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. சேவையை மேம்படுத்த ஒவ்வொரு சங்கமும் முன் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு பொறுப்பேற்றன. அதன்படி AIBSNLEA பொறுப்பற்ற குடந்தைக் கோட்டம், SNEA பொறுப்பேற்ற தருமபுரி மாவட்டம் சிறப்பான இடத்தைப் பிடித்தன. இதனால் அந்தத் தோழர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். NFTE வேலூர் மாவட்டத்தையும் BSNLEU விருதுநகர் மாவட்டத்தையும் பொறுப்பேற்றது . அந்த மாவட்டங்கள் இன்னும் தங்கள் இலக்கை முழுமையாக எட்டவில்லை. அதற்கு இடையூறாக வந்த பிரச்சனைகள் பட்டியலிட்டு அவை களைய கூடுதல்  முயற்சிக்கு உறுதியளிக்கப்பட்டது.  வேலூரில் செல் சேவைக்கு நாம் பயன்படுத்தும் இயந்திரத்தின் டெக்னாலஜி மாற்ற வலியுறுத்தப்பட்டது. காரைக்கால் நகரில் டவர் பிரச்சனை சரிசெய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்டம் – CGM வருகை
    நமது மாவட்டச் செயலர் பேசும் போது வெள்ளம் பாதித்த கடலூர், சிதம்பரம் பகுதிகளைப் பார்வையிட தலைமைப் பொது மேலாளர் சமீபத்தில் வருகை தந்தமைக்கு நன்றி தெரிவித்தார். நெய்வேலி நகரிய பகுதி எல்லா கட்டமைப்புகளும் உடைய நகரமாய் இருந்தும் வெள்ளமும் மூன்று நாள் மின்சாரம் துண்டிப்பும் ஆராயப்பட வேண்டிய ஒன்று. CGM அந்த நகருக்கும் விஜயம் செய்திருக்க வேண்டும்  மேலும் அவரின் வருகையின் போது ஊழியர் சந்திப்பு நடந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதனைக் குறிப்பிட்டார்.

சேவை சீரமைப்பு .
     வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேவையை சீர்படுத்த பொருட்கள் தட்டுபாடு ஏதும் இல்லை. தேவைப்படும் பொருள் குறித்து மாவட்டங்களில்  மாநில நிர்வாகத்திற்கு எழுதலாம் என்பது தெரிவிக்கப்பட்டது.

வெள்ள முன்பணம்
     வெள்ள பாதிப்பு அட்வான்ஸ் ரூ25௦௦௦/- வலியுறுத்தப்பட்டது. இது குறித்து டெல்லியிலிருந்து சாதகமான முடிவை விரைவில் பெற ஆவண செய்திட உறுதி கூறப்பட்டது.
மழை வெள்ளத்தில் பணிக்கு வர முடியாத தோழர்களின் நிலைமை பரிவுடன் பரிசீலிக்க ஒப்புக் கொள்ளப்பட்டதற்கு நமது நன்றி.
சேலம் மாவட்டத்தை மேம்படுத்த NFTE சங்கமும்  BSNLEU சங்கமும் கூட்டாக பொறுப்பேற்றுக்கொண்டது.
    
     சென்னை ஃபோரம் கூட்டமும் ஒப்பனியன் லீடர் கூட்டமும் பயனுள்ளதாக அமைந்தது.

Tuesday, December 15, 2015

நெகிழ்வான நிகழ்வு

                        14/12/2015 திங்கள் கிழமை பிற்பகல் 4 மணி அளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலக வளாகத்தில் அனைவரது நெஞ்சத்தையும் நெகிழ வைத்த நிகழ்வு.  அதை நாம் விழா எனச் சொல்ல விரும்பவில்லை.  சங்கக் கொடியில்லை, தோரணங்கள் இல்லை, ஒலி பெருக்கி இல்லை,  இதனால் எல்லாம் அது விழா அல்ல என்று நாம் சொல்ல வரவில்லை.  அங்கே பறந்தது உதவி – ஒப்புரவுக் கொடி,  மாவட்டங்கள் தாண்டி ஓடி வந்த பரிவு தோரணங்களாக, இதயங்களின் ஒலியே ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.

     மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் நம் பங்கு இருக்க வேண்டும் என நன்கொடை வேண்டுகோள் விடுத்திருந்தோம்.  உதவும் கரங்களாக ஓடி வந்த தஞ்சை, சென்னைத் தோழர்கள் எடுத்து வந்தவை (சிதம்பரம் தோழர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் வழிகாட்டுதலின்படி) சிதம்பரம் அருகே உள்ள கிராம மக்களிடம் நேரடியாக வழங்கப்பட்டன.

     குடந்தைத் தோழர்கள் அனுப்பி வைத்த பொருட்கள் நமது மாவட்டத்தில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்குவது என 12—ம் தேதி நடந்த மாவட்ட செயலகக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  அந்த முடிவைச் செயல்படுத்திய நெஞ்சில் பதிந்த நிகழ்வு வருமாறு:

     அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பாதிப்பு பற்றி கேட்டறிவது, அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பது, அவர்கள் எந்தச் சங்கத்தைச் சார்ந்தவராயினும் நிவாரண உதவி பெற அழைப்பது, அழைப்பை ஏற்று வந்த தோழர்களுக்கு உதவிப் பொருளோடு பயணப்படியும் வழங்குவது என்பதை வழிகாட்டுதலாகக் கொண்டோம்..
    
     காரைக்குடிப் பொருட்கள் ஞாயிற்றுக்கிழமையே வந்து விட்டன.  திங்கட்கிழமை உதவிப் பொருட்களோடு குடந்தை,காரைக்கால் தோழர்கள் இருபது பேர் வந்திருந்தனர் என்பது மழையின் ஈரத்தைவிட அவர்களது இதயத்தின் ஈரம் பெரிது என்பதைக் காட்டுகிறது.  ஏனெனில் மழையின் ஈரம் காய்ந்து விட்டது, இதயத்தின் ஈரம் என்றென்றும் நம் நினைவில் பசுமையாய் இருப்பது அல்லவா! நமது நிர்வாகம் அவர்களுக்கு வாகனம் தந்துதவியது என்பது கூடுதல் சிறப்பு.  மழையால் பாதிப்படைந்த சாலையில் அவ்வளவு தொலைவு மூட்டைகளின் மீது அமர்ந்து வந்தனர் என்பதை அறிய நாம் நெகிழ்ந்து போனோம்.  நம்மை அவ்வாறு காலம் காலமாக வளர்த்த நமது இயக்கத் தலைவர்களை நினைந்து நினைந்து போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.

     நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் நமது சம்மேளனச் செயலாளர் தோழர் G.ஜெயராமன் சங்க அலுவலகம் வந்திருந்து குடந்தை, காரைக்கால் தோழர்களோடு கலந்துரையாடினார்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார்.  நமது மாவட்டத் தோழர்களிடம் நன்கொடை வசூல் பட்டியலைப் பார்த்ததும் அவர் செய்த காரியம் தனது பங்காக ரூபாய் இரண்டாயிரத்தை வழங்கியது.

     நிகழ்வுக்கு TMTCLU மாநிலப் பொதுச்செயலாளரும் நமது மாவட்டத் தலைவருமான தோழர் R.செல்வம் தலைமை தாங்கினார்.  சம்மேளனச் செயலாளர் தோழர் ஜெயராமன், குடந்தை மாவட்டச் செயலர் தோழர் விஜய் ஆரோக்கியராஜ், நமது மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மற்றும் நமது அழைப்பை ஏற்று வருகை தந்த துணைப் பொதுமேலாளர் (நிதி) திருமிகு.சாந்தகுமார் அவர்கள் தங்களது வாழ்த்துரைகளைச் சுருக்கமாக வழங்கினர்.

     மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர் தோழர்களுக்கு மேலே குறிப்பிட்ட பெருமக்களும் மாநிலத் துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், மூத்தத்தோழர் தமிழ்மணி, குடந்தைத் தோழர்கள் கணேசன், பாலகுமார், காரைக்கால் தோழர் இருதய சவுரிராஜ் மற்றும் மயிலாடுதுறைத் தோழர்கள் உதவிப் பொருட்களை வழங்கினர்.  அதில் 5 கிலோ அரிசி, பிஸ்கட் பாக்கெட், கீழே விரிப்பாகப் பயன்படுத்தக் கூடிய தார்பாய், போர்வை, துண்டு, எவர்சில்வர் தட்டு, டம்ளர்,  சோப்பு, பிரஷ், பேஸ்ட், முதலிய பொருட்கள் இருந்தன. நமது சங்கம் வழங்குகிறது என்பதால் புறக்கணிக்காது வந்திருந்த தோழர்கள் நம்மைப் பெருமைப்படுத்தியது மட்டுமல்ல, நமது பாதை சரியானது என்பதையும் தமது செயலால் உணர்த்தினர்.  நன்றி தோழர்களே! வந்திருந்த ஒப்பந்த ஊழியர்களுக்குப் பயணப்படி வழங்கப்பட்டது.

மாவட்ட முன்னணித் தோழர்களுக்குப் பாராட்டு :
    
     போன் மெக்கானிக் தோழர் ( மாற்றப்பட்ட கேடர் பெயரின் படி டெலிகாம் டெக்னீஷியன் ) குணசேகரன்.  பரந்த மனதுக்குச் சொந்தக்காரர். இயன்றபோதெல்லாம் உதவிப் பொருட்களைப் பெற்றுத் தருவதில் முன்நிற்பவரே தவிர, பெயர் வாங்க வேண்டும் என முன்நிற்பவர் அல்லர். இம்முறை காரைக்குடித் தோழர்கள் தந்த அரிசியோடு 10 மூட்டைகள் அரிசியை வழங்கினார்.  அதனால் தான் நம்மால் அனைவருக்கும் 5 கிலோ அரிசியாவது தர முடிந்தது.  இல்லை இல்லை, அதனை முடித்து வைக்க TMTCLU  மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர் V.முத்துவேல் தோள் கொடுத்தார். அவர் மீண்டும் இரண்டு மூட்டை அரிசி வாங்கி வந்து தனது சார்பில் கொடுத்தார்.  நன்றி தோழர்களே நமது மற்ற மாவட்டத் தோழர்கள் தந்தார்கள் நாம் நம் கையால் வழங்கினோம் என்பதன்றி நமது பங்கும் இருக்கிறது என்பதை நிலைநாட்டியுள்ளீர்கள். நமது செயல்பாடு இனியும் தொடரும்.  நாளை கடலூர் சேவை இல்லத்திற்கு உதவியோடு செல்ல இருக்கிறோம்.

     குடந்தை தோழர்கள் அளித்த ஒருபகுதியை  அண்ணாகிராமம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாபுகுளம் கிராமமக்களுக்கு  அளிக்க நிவாரணப் பொருட்களை அதன் பஞ்சாயத்துத் தலைவர் திரு.குமார் அவர்களிடம் வழங்கினோம்.

மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டிற்கு உங்களுடைய ஒத்துழைப்பே காரணம்.  நன்றி சொல்ல வார்த்தை இல்லை, வாழ்த்துக்கள் தோழர்களே ! தொடர்ந்து வெற்றிகரமாகப் பயணிப்போம் சமூகப் பொறுப்புணர்வோடு NFTE  மரபுகளை தாங்கிய வண்ணம்! மீண்டும் வாழ்த்துக்கள் !