.

Wednesday, March 16, 2011

கதிர்வீச்சு அதிகரிப்பு: மூடப்பட்டது ஃபுகுஷிமா அணுசக்தி மையம்!

டோக்யோ: ஒன்றன்பின் ஒன்றாக 4 அணு உலைகள் வெடித்ததால், ஏராளமான கதிர்வீச்சை வெளியிட்டு வரும் ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணுசக்தி நிலையத்தை மூடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.


இந்த அணு உலைகளின் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படுவதாகவும், அனைத்து ஊழியர்களும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் ஜப்பான் அரசின் கேபினட் செயலர் யுகியோ இடானோ அறிவித்துள்ளார்.

ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் 3-வது அணு உலை முதலில் சேதமடைந்தது.

அதைத் தொடர்ந்து அந்த அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டது. தற்போது அதில் நீராவி வெளியேறுவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் கதிர்வீச்சின் அளவும் திடீரென புதன்கிழமை மிகவும் அதிகமாக வெளியேறத் தொடங்கியுள்ளது.

அந்த அணுமின் நிலையத்தின் மேலும் 2 அணு உலைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டன. 4-வது அணு உலையில் 2 தீவிபத்துகள் ஏற்பட்டன. 4-வது அணுஉலை கதிரியக்க மூலப் பொருட்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது.
அணுமின் நிலையத்தில் வெடிப்புக்குள்ளான 3 அணுஉலைகளின் கலன்களில் இருந்தும் கசிவு இருப்பது தெரியவந்துள்ளது. இது கதிர்வீச்சுக் கசிவின் அபாயம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

அணு உலைகள் வெடிப்பைத் தொடர்ந்து, 3-வது அணு உலையில் இருந்து நீராவி வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கதிர்வீச்சின் அளவு திடீரென அதிகரித்ததாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து 1000 மில்லிசீவர்ட் வரை கதிர் வீச்சு இருந்ததாகவும், பின்னர் அளவு குறைந்து ஒரு மணிநேரத்துக்கு 600-800 மில்லிசீவர்ட் வரை பதிவானதாகவும் இடானோ தெரிவித்தார்.

ஆனால் இன்று திடீரென மீண்டும் 1000 மில்லிசீவர்டுக்கும் அதிகமாக கதிர்வீச்சு வெளியாக ஆரம்பித்துள்ளது. இது பாதுகாப்பாற்ற நிலை என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் காரணமாக சிறிய பணிகளைக்கூட இப்போது பணியாளர்களால் மேற்கொள்ள முடியவில்லை என இடானோ தெரிவித்தார்.

இந்த அணு மின் நிலையத்தில் 750 பணியாளர்கள் பணியாற்றினர். அனைவரும் நிறுத்தப்பட்டுள்ளனர். அணுமின் நிலையம் இப்போதைக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

=====================================================
நியூயார்க்: அமெரிக்க அணுசக்தித் துறை விரிவாக்கத்தில் இப்போது பெரிய தடையாக உருவெடுத்து நிற்கிறது ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ள 'அணு நெருக்கடி'!


மின்சக்தி உற்பத்திக்கு அமெரிக்கா இன்று பெருமளவு நம்பியிருப்பது தனது அணு உலைகளைத்தான். மாற்று ஆதாரங்களான நிலக்கரி, நீர், காற்று, எரிவாயு உள்ளிட்டவற்றின் மூலம் ஓரளவு மின்சாரம் தயாரிக்கப்பட்டாலும், அணு உலைகளை நம்பியிருப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

ஆனால் இப்போது ஜப்பானின் மிக பாதுகாப்பான, வசதிகள் நிறைந்த, எந்த இயற்கை பேரிடரையும் தாங்கும் வல்லமை கொண்ட அணுசக்தி நிலையம் என்று வர்ணிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சிக்கு நேர்ந்துள்ள கதியைப் பார்த்து ஆடிப்போயுள்ளது அமெரிக்கா.

உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடு அமெரிக்காதான். காரணம், ஜப்பானில் உள்ளதைப் போல பல மடங்கு அதிக அணு உலைகளை தனது கடற்கரை நகரங்களில் உருவாக்கி வைத்துள்ளது அமெரிக்கா.

மியாமியில் தொடங்கி அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டியுள்ள அமெரிக்கக் கடற்கரை முழுவதும் 30க்கும் மேற்பட்ட அணுசக்தி நிலையங்களும் அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு உலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர, மேற்குப் பகுதியில் பசிபிக் கடற்கரை நகரங்களிலும் 10 அணுசக்தி நிலையங்கள் உள்ளன. அமெரிக்காவின் உள்புற மாகாணங்களில் மட்டும் 64 அணுசக்தி நிலையங்கள் உள்ளன.

இன்று ஜப்பானுக்கு நேர்ந்துள்ள இயற்கைப் பேரிடர், அமெரிக்க கடற்கரையோரங்களில் நிகழ்ந்தால்...? இந்தக் கேள்வியே அமெரிக்காவை கதிகலங்க வைத்துள்ளது.

"அணு சக்தி நிலையங்கள் என்பவை பழகிய யானைகள் மாதிரி. சொன்னதை எல்லாம் கேட்டு, நம் இஷ்டப்படி நடக்கும் வரை இந்த யானைகளால் எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த யானைகள் சொந்தமாக யோசிக்கும் அல்லது குழப்பத்துக்குள்ளாகும்... அப்போது வளர்த்தவன், பாகன் என்று யாரையும் அது பார்ப்பதில்லை. முற்றாக அழித்து ஒழிப்பதையே பிரதானமாக செய்யும். அணு உலைகளும் இப்படித்தான்..." என்கிறார் அமெரிக்காவின் சுற்றுச்சூழல் மாறுபாடு திட்ட மேலாளர் எல்லன் வெங்கோ.

இப்போது, தான் நன்றாகப் பழக்கி வைத்துள்ள அணு யானைகளைப் பார்த்து அச்சப்பட ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. இந்த அச்சம் அமெரிக்க அரசுக்கு இப்போதுதான் வந்துள்ளது. ஆனால் அதன் மக்களுக்கு ரொம்ப காலம் முன்பே வந்துவிட்டது. அதானால்தான் புதிய அணுசக்தி மையங்கள் அமைவதை கடுமையாக அவர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, இன்னும் 14 புதிய அணுசக்தி மையங்களையும், ஏற்கென உள்ள மையங்களில் 28 அணு உலைகளையும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது.

ஜப்பானுக்கு நேர்ந்துள்ள துயரத்தைப் பார்த்த பிறகு, அமெரிக்காவில் எங்கெல்லாம் பூகம்பம் வர வாய்ப்புள்ளது? இந்தப் பகுதிகளில் எத்தனை அணு உலைகள் உள்ளன? இவற்றை அடுத்து என்ன செய்யலாம்? என்ற மறு ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அரசு.

இன்னொரு பக்கம், அணுசக்தி நிலையக் கழிகளை என்ன செய்வது என்ற பிரச்சினைக்கு இதுவரை தீர்வே இல்லாமல் உள்ளது. பாலைவனப் பகுதிகளில் கொட்டப்பட்டு வரும் இந்தக் கழிவுகள் மிகப்பெரிய ஆபத்தை தோற்றுவிக்கக் கூடியவையாக உருவெடுத்து நிற்கின்றன. வளரும் நாடுகளின் தலையிலும் இனி இவற்றைக் கட்ட முடியாத நிலை அமெரிக்காவுக்கு.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மாற்று சக்தி ஆதாரங்களை வைத்து மின் சக்தியை உற்பத்தி செய்யுமாறு எதிர்க்கட்சிகள் அமெரிக்காவை வலியுறுத்த ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் இயற்கை எரிவாயு ஆதாரங்கள் மிக அதிகமாக உள்ளன. இந்த எரிவாயுவை அடிப்படையாகக் கொண்டு மின்சக்தி உற்பத்தியில் ஈடுபடலாம் என்றும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லாத மின் உற்பத்தி முறை இதுவே என்றும் வல்லுநர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்க ஆளும் கட்சியோ, "இது ரொம்ப ஓவர். ஜப்பானின் நில அமைப்பு வேறு. அமெரிக்காவின் நிலவியல் தன்மை வேறு. எனவே ஜப்பானுக்கு நேர்ந்த நிலை அமெரிக்காவுக்கு வராது. அனைத்து அணு உலைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுதான் முக்கியம்", என்று வாதிடுகின்றனர்.

No comments:

Post a Comment