Wednesday, October 29, 2014

மாநில கவுன்சில் உறுப்பினராக

 நமது மாவட்ட செயலர் 

இரா ஸ்ரீதர்  

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

மாநில சங்கத்திற்கு நன்றி

திண்டிவனம் முப்பெரும் விழா

திண்டிவனம் முப்பெரும் விழா 29-10-2014 அன்று   நடைபெற்றது. தோழர். A.சுப்ரமணியன் பணி ஒய்வு  பாராட்டு விழாவில் திண்டிவனம் கோட்டப்பொறியாளர் திரு.அன்பழகன், உட்கோட்டப் பொறியாளர் திரு.நடராஜன், BSNLEU செயலர் புண்ணியக்கோடி, ஓய்வூதியர் சங்கத்தலைவர். துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர். A.சுப்ரமணியன் சிறப்பான மதிய உணவு விருந்தளித்தார். உணவு இடைவெளிக்குப்பின் திண்டிவனம் கிளைமாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாநிலத் துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார். AIBSNLEA மாநில துணைத்தலைவர் தோழர்.நடராஜன், புதுவைத் தோழர்கள் செல்வரங்கம், நீலமேகம், செஞ்சி ஹாரூன்பாஷா, கடலூர்  V.இளங்கோவன், TMTCLU  சார்பில் V.முத்துவேல்  வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத்தலைவர் தோழர் R..செல்வம், மாவட்டச்செயலர். தோழர். இரா.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர். P.காமராஜ் சிறப்புரையாற்றினார்.மாநாட்டில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் :           தோழர்.  G.ஜெயசந்தர். TTA
உதவி தலைவர்கள்:   தோழர்கள்     A. அரிகிருஷ்ணன், sss
                                     D. திருவிக்ரமன், TM
                                     S. குமார், TM
                                     V. அசோகன், TM
செயலர்                   தோழர்.   M. செல்வக்குமார், Sr.TOA
உதவிச்செயலர்கள்   தோழர்கள்       E. நீதி, TM
                                      A. சுரேஷ், TTA
                                      C. கிருஷ்ணமூர்த்தி, TM
                                      B. ராமமூர்த்தி, TSO
                                      T.ஆரோக்கியதாஸ், TM
பொருளர்.                 தோழர்.  A. முருகானநந்தம், TTA
உதவிப் பொருளர்          தோழர்.    R. சேகர், TM
அமைப்பு செயலர்கள்:      தோழியர். K.மேனகா, SSS
                         தோழர்.     K. கோவிந்தன், TM
    தோழர்.     K. கருணாகரன், TM
தணிக்கையாளர்:         தோழர்.       S. நேமிதாஸ், STS

திண்டிவனம் பகுதியில் புதிதாக TMTCLU கிளை துவங்கப்பட்டது. தலைவர்,செயலர், பொருளராக தோழர்கள். தர்மன்-CL , கணேசமூர்த்தி-TM, சுனந்தாதேவி-CL ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். TMTCLU கிளைச்செயலர் தோழர்.கணேசமூர்த்தி-TM நன்றி கூற மாநாடு இனிதே முடிவுற்றது. மாநாட்டை சிறப்பாக நடத்திய திண்டிவனம் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள். விழாவிற்கான அரங்கை இலவசமாக அளித்த ஓய்வுபெற்ற மூத்த தோழர். செல்வராஜ் STS அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள்!
புதிய நிர்வாகிகளுக்கு நமது வீரவாழ்த்துக்கள்! 

இரங்கல்

NFTE மாவட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர்  தோழர்   திரு M  மஞ்சினி  TM /CDL  அவர்களின் தந்தையார்    இன்று (29-10-2014)    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் புதுவை பெரிய காலாப்பட்டு அருகில் மாத்தூர் கிராமத்தில்     நாளை  (30-10-2014) மாலை   நடைபெறும்

Tuesday, October 28, 2014


தொழிற்சங்க இயக்கம் கண்ட தோழர்!மதுரைக்கு அருகிலுள்ள திருமங்கலத்தில், செல்வச் செழிப்பான குடும்பத்தில் 19.5.1914-இல் தங்கமணி பிறந்தார்.


மேல்நாடு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று, கேரள காந்தி என்று அழைக்கப்பட்ட கே.பி. கேசவன் மேனன் மூலம் வழக்குரைஞராக பதிவு செய்யப்பட்டு, சிங்கப்பூரில் அவருடன் பணியாற்றியவர். இரண்டாம் உலகப் போர் காரணமாக தாயகம் திரும்பி, மதுரை நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டார்.

வாழ்க்கையில் நல்லவராகவும், வழக்குகளில் வல்லவராகவும் பேரெடுத்தவரை, பாதிக்கப்பட்டோர் பெருமளவில் அணுகினர். வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் பெற்றுத் தந்தார்.

1942இல், "வெள்ளையனே வெளியேறு' இயக்கம், நாடெங்கிலும் பரவியது. தீப்பிழம்பாக செயல்பட்டவர்கள் கடுமையான தண்டனைகளை பெற்று, கொடுமைபடுத்தப்பட்டனர்.

அவர்களுள் இளம் வயதிலிருந்தே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தியாகி சிவஞானத்தை கொன்றுவிட, சிறை அதிகாரிகள் முடிவு எடுத்து அவரை வழக்கு மன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது, தப்பிக்க முயன்றார் என்ற காரணத்தைக் காட்டி சுட்டு கொன்று, உடலை அப்புறப்படுத்தினர்.

இதனை தங்கமணிக்கு தெரிந்த உயர் காவலர் ராமையா கூறக் கேட்டு துடித்த தங்கமணி, இப்படிப்பட்ட இழிசெயலை செய்த அரக்கமனமுடைய சிறை அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தார். தண்டனை பெற்றுத் தந்தார். போராட்டத்தில் பங்கு கொண்ட பலர் விடுதலை பெறவும் வழிவகுத்தார்.

தொழிலாளர்களின் அழைப்பை ஏற்று மதுரை வந்திருந்த திரு.வி. கல்யாணசுந்தரனாரை, தங்கமணி சந்தித்தார்.

திரு.வி.க. தங்கமணியிடம், தொழிலாளர்களுக்காக சங்கங்கள் அமைக்க உதவிடுமாறும் அவர்களுக்கு தக்க வழிகளில் வழிகாட்டியாகவும் இருக்க கோரினார். தங்கமணி அதனை ஏற்று, சிதறி கிடக்கும் தொழிலாளர்கள் உழைக்கும் தொழிற்சாலைகளில் சங்கங்கள் நிறுவி அவர்களுக்கு பாடமும், பயிற்சியும் அளித்து, தன்னம்பிக்கையை விதைத்தார்.

மதுரை மாநகரில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட பெரிய நிறுவனமான எஸ்.ஆர்.வி.எஸ்.இல் தொழிலாளர்களின் உழைக்கும் நேரம் வரம்பின்றி நீடிக்கப்பட்டதை அவர்கள் நடத்தும் விதத்தையும், குறைந்த ஊதியமும், நிரந்தரமற்ற பணியும், மாற்ற, தங்கமணி பேச்சுவார்த்தை வாயிலாக விரும்பியும், நிர்வாகம் ஏற்க மறுத்த பின், காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை முறைப்படி துவக்கினார்.

தொழிலாளர்களின் எழுச்சி நிர்வாகத்தை மருளச் செய்ததால், அரசின் உதவியுடன் "தீர்ப்பாயம்' அமைத்தது.

அடுத்து டி.வி.எஸ்.ஸில் நடந்த போராட்டத்தில், குடும்பத்தோடு, தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டு சிறை சென்றனர். தங்கமணி, நிர்வாகத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார்.

தொழிற்சங்க இயக்க வரலாற்றில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தனியாக சட்டம் இயற்றச் செய்தவர் தங்கமணி. அந்த சட்டத்தின் பெயர் "மோட்டார் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் ஆக்ட், 1961.

பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி தலைவராக இருந்த "சோவியத் யூனியன் நண்பர்கள்' சங்கத்தில் சேர்ந்து, அதன்மூலம் பொதுவுடமை தத்துவத்தில் ஈடுபட்டு, கட்சியின் முழுநேர ஊழியரானார்.

1957-இல் மதுரை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனாவில் நடைபெற்ற "உலக தொழிலாளர் யூனியன் காங்கிரஸ்' மாநாட்டிற்கு நாடாளுமன்ற குழுவில் சென்றார்.

அம் மாநாட்டை துவக்கி வைத்த சீன அதிபர் மா சே துங் எதிரில் அமர்ந்திருந்த தங்கமணியை கண்டதும் பாதுகாப்பு விதிகளை மீறி அவரை கட்டியணைத்து கை குலுக்கினார்.

ஓய்வு நேரங்களில் நாடாளுமன்ற நூல் நிலையத்திலுள்ள நூல்களை படித்தார். தேசிய பிரச்னைகளில் பங்கு கொண்டு தெளிவாக பேசினார். கடமை உணர்வும், கட்டுப்பாடும் கொண்டவர்.

1971-இல் மதுரையிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் பெண்கள் கல்லூரிக்கு மீனாட்சி பெண்கள் கல்லூரி என்று பெயரிட்டார்.

அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் தமிழகப் பிரிவுக்கு பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் இருந்தவர், பொதுவுடமை கட்சி பிளவுபட்டபோது, தாய் ஸ்தாபனத்தில் தொடர்ந்தார்.

அடுத்து, அதன் பாதிப்பினால், தொழிற்சங்கம் பிரிந்தபோது, மனம் வெதும்பினார். தங்கமணி மக்களின் மேம்பாட்டுக்காகவும், தொழிலாளர் வாழ்வு மேம்படவும், ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் சிறையிலிருந்தார்.

இவரது வாழ்க்கை துணைவி வள்ளியம்மா பிரபல தொழிலதிபர் ராமசாமி நாடாரின் தவப்புதல்வி. முற்றும் துறந்தவர்களை பற்றி படித்திருக்கிறோம். ஆனால் பார்த்ததில்லை. இவ்விருவரும் இப்படிப்பட்ட தவ வாழ்க்கையை மனம் உவந்து, வலிந்து ஏற்றவர்கள்.

எல்லா சுகங்களையும் உதறி எறிந்து, எளிய வாழ்வில், இறுதி வரை எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் கட்சி அலுவலகமான சென்னை தியாகராயநகர் பாலன் இல்லத்தில், ஓர் அறையில் தங்கியதை தொண்டர்களே கண்டு வியந்தனர்.

கே.டி.கே. என்று தோழர்களால் அழைக்கப்பட்ட கே.டி.கே. தங்கமணி, 2001-இல் மறைந்தார்.

இவ்வாண்டு அவரது நூற்றாண்டு.


நன்றி: தினமணி 

Monday, October 27, 2014

வெள்ள நிவாரண நிதி

ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்காக இந்த மாத சம்பளத்தில் ஒரு நாள் அடிப்படை சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.

ERP

நமது தமிழ் நாடு தொலைதொடர்பு வட்டத்தில் ERP அமல்படுத்தப்பட உள்ளதால் தோழர்... தோழியர்...அனைவரும் அவரவர்  HRMS மற்றும் PAY PARTICULAR  தகவல்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


ERP குறித்து மாநில சங்கங்களின் கடிதம் தர்ணா போராட்டம்

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்கப்படாததை  கண்டித்து, தீபாவளி பண்டிகை முதல் நாளான     21-10-2014 செவ்வாய்கிழமை BSNLEU,NFTE மாவட்ட செயலர்கள் இணைந்து அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துணைப் பொதுமேலாளர்  (நிர்வாகம்) உண்ணாவிரத பந்தலுக்கு நேரில் வந்து தீபாவளி மறுநாளுக்குள் (24-10-2014) அனைத்து பகுதிகளிலும் சம்பள பட்டுவாடா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என  அளித்த உறுதிமொழி அளித்தார். ஆனால், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் இன்று வரை வழங்கப்படவில்லை. ஆகவே, ஒப்பந்தக்காரர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உடனடியாக சம்பள பட்டுவாடா நடத்தகோரியும் இன்று (27-10-2014 திங்கள் கிழமை) மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெறும்.
போராட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரும் கலந்து கொள்வோம்!

Saturday, October 25, 2014

இரங்கல்

நம்முடன் பணிபுரியும்   தோழர்   S ரங்கநாதன்  TM /CDL    அவர்களின் தந்தையார்  இன்று (25-10-2014)    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் கடலூரில்  நாளை (26-10-2014)   நடைபெறும் .

திண்டிவனம் கிளை முப்பெரும் விழா 28-10-2014
Thursday, October 23, 2014

அஞ்சலி

பழம்பெரும் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ராஜம் கிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது (89).

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் திங்கள்கிழமை இரவு பிரிந்தது.திருச்சி மாவட்டம் முசிறியில், சாத்திர சம்பிரதாயங்களில் பிடிப்பு மிக்க குடும்பத்தில் 1925ம் ஆண்டு பிறந்தவரான ராஜம், பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்துவைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, தமது 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டார். தொடர்ந்து பள்ளி சென்று படிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

ஆயினும் ராஜத்தின் வாசிப்பு தாகத்தைப் புரிந்துகொண்டு அங்கீகரித்த மின் பொறியாளரான கிருஷ்ணன் கதைப் புத்தகங்கள் வாங்கித்தருவது, எழுதுவதற்கு ஊக்குவிப்பது என்று ஒத்துழைத்தார். அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ராஜம், 16வது வயதிலேயே எழுதத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுகதை, நாவல், கட்டுரை என மூவகை எழுத்திலும் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை வளர்த்துக்கொண்டார் ராஜம் கிருஷ்ணன். பள்ளி சென்று முறையாகப் படித்திராத அவரது படைப்புகள் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளத் தக்கவையாக அமைந்திருந்தன. நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் கடைசிக் கட்டத்தில் வளர்ந்து, விடுதலை பெற்ற இந்தியாவின் வளர்ச்சிப் போக்குகளோடு இணைந்து பயணித்த அவர், தம் சம காலத்தின் அரசியல், சமுதாய நிலைமைகளை உற்றுக் கவனித்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் தம் எழுத்துகளில் பதிவு செய்தார்.

குறிப்பாகப் பெண்ணடிமைத் தனத்திற்கும், உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான ஆவேசம் அவரது எழுத்துகளில் உயிர்ப்புடன் வெளிப்பட்டது. படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு வாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான

முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர் ராஜம். எழுத்தோடு நின்றுவிடாமல் பலரது உரிமைப் போராட்டங்களுக்கும் தோள் கொடுத்தவர்.

சாகித்திய அகாதமி விருது, நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் சர்வதேச விருது, கலைமகள் விருது, சோவியத் லாண்ட் நேரு விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்தன.

ஒரு விபத்தைத் தொடர்ந்து உடல் நிலையிலும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளானார். எனினும் மக்கள் மீதான அவரது நேசமும் சமுதாய மாற்றத்திற்கான தாகமும் கொஞ்சமும் மங்கியதில்லை. கலை இலக்கியம் மக்களுக்காகவே என்ற கோட்பாட்டை உயர்த்திப் பிடித்து அதற்குத் தம்மையே ஒரு எடுத்துக்காட்டாகவும் வைத்துக்கொண்ட ராஜம் கிருஷ்ணன், சமத்துவ சமுதாய இலக்கை நோக்கி நடைபோடும் படைப்பாளிகளுக்கும் களப்போராளிகளுக்கும் ஒரு உந்துசக்தியாக என்றென்றும் திகழ்ந்திருப்பார்

நன்றி தி ஹிந்து தமிழ் 


மேலும் நமது இயக்கத்தின் மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறோம். 


Tuesday, October 21, 2014

 தோழர்களே! தோழியர்களே!
கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்தமாத சம்பளம் இன்று வரை  வழங்காமை கண்டித்து கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன் இன்று (21-10-2014) உண்ணாநோன்பு போராட்டம்  நடைபெற்றது.
NFTE மாவட்டத்தலைவர்  தோழர்.R.செல்வம்,
BSNLEU மாவட்டத்தலைவர்  தோழர்.A அண்ணாமலை
கூட்டுத்தலைமை ஏற்றனர்.
NFTE மாநிலதுணைத்தலைவர்தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார்.
NFTE மாவட்டச்செயலர் தோழர். இரா.ஸ்ரீதர், BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.K.T.சம்பந்தம், உண்ணாவிரதம் இருந்து போராட்டத்தை விளக்கிப்பேசினர்.
NFTE சார்பில்தோழர்கள்.S.தமிழ்மணி, V.இளங்கோவன், D.ரவிச்சந்திரன்,  TMTCLU மாவட்டத்தலைவர்   M.S.குமார், TMTCLU மாவட்டச்செயலர் G.ரங்கராஜ், V.முத்துவேலு, 
BSNLEU சார்பில் தோழர்கள்.N.சுந்தரம், P​.சேகர், E.பாலு, மூர்த்தி,  TNTCWU மாவட்டசெயலர் M.பாரதிதாசன், முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பண்டிகைக்காலம் என்பதையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும்  தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
துணைப் பொதுமேலாளர் (நிர்வாகம்) பந்தலுக்கு நேரடியாக வந்து இச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து இதுபோன்ற நிகழ்வு பிற்காலங்களில் நடைபெறாது எனவும்  உத்திரவாதம் அளித்தார். மேலும் வரும் 23-10-2014 வியாழன் அன்று உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் என இருபகுதிகளாக பிரித்து  சுற்றியுள்ள ஊர்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தார். அவருடன் AGM(CFA), DE (VIG)  உடனிருந்தனர். அந்த அடிப்டையில் உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
NFTE மத்தியசங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். P.காமராஜ் அவர்கள் தோழர்களுக்கு பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி இப்பிரச்சனையை முதன்மை போதுமேலாளரிடம் கொண்டு சென்று இதனை முடித்து வைக்க பேருதவியாக இருந்தார்.                                                                                                                                      Monday, October 20, 2014

உண்ணாவிரதம் 
கடலூர் மாவட்டத்தில்   பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் இன்று வரை பட்டுவாடா செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. ஆகவே, ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள பட்டுவாடா செய்திடக்கோரி,
 21-10-2014 செவ்வாய் காலை 9.00 மணியளவில்
கடலூர் GM அலுவலக வாயிலில்
உண்ணாவிரதம்  நடைபெறும்

பங்குபெறுவோர்:

NFTE மாவட்டச்செயலர்
தோழர்.இரா.ஸ்ரீதர்

BSNLEU மாவட்டச்செயலர்
தோழர்.K.T.சம்பந்தம்

TMTCLU மாவட்டச்செயலர்
தோழர். G .ரங்கராஜ் 

TNTCWU மாவட்டச்செயலர்
தோழர்.M.பாரதிதாசன்
உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோம்!
மாவட்ட, கிளைச்  சங்க நிர்வாகிகள் தவறாது கலந்து  கொள்ளவேண்டுகிறோம்
(மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு  உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோம்!)

Sunday, October 19, 2014

GPF பட்டுவாடா

10-10-2014 வரை விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு GPF பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளித்தவர்கள் தங்களது வங்கி கணக்கில் சரிபார்த்துகொள்ளவும்.

Saturday, October 18, 2014

 தோழர்களே! தோழியர்களே!
இன்று (18-10-2014)  நெய்வேலி NLC  ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம்
கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்
NFTE மாவட்டத்தலைவர்  தோழர்.R.செல்வம்,
TMTCLU மாவட்டத்தலைவர் தோழர்.M.S.குமார் 
அவர்களின் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது.
NFTE
மாவட்டச்செயலர் தோழர். இரா.ஸ்ரீதர்,
மாநிலத் துணைத் தலைவர் தோழர்.V.லோகநாதன், 
TMTCLU  மாநில இணைப் பொதுச்செயலாளர்
தோழர். S.தமிழ்மணி
ஆகியோர் கண்டன உரையாற்றினர். கண்டன உரையில் 
NLC ஒப்பந்ததொழிலாளர் வேலைநிறுத்த 
ஆறு அம்ச கோரிக்கையை விளக்கியும், 
னைத்து சங்க ஒற்றுமையை வலியுறுத்தியும் விளக்கிப் பேசினர்.
 TMTCLU மாவட்டச் செயலர் தோழர். G.ரங்கராஜ்  நன்றியுரையாற்றினார்.
 ஆர்பாட்டத்தில் பல்வேறு கிளைகளிலிருந்து கடும் மழையையும் பொருட்படுத்தாது தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


Thursday, October 16, 2014

ஜபல்பூர் அகில இந்திய மாநாடு
மாநாட்டை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி!!!... அதனினும்      சுமார் 1500 கி.மீ பயணத்தை  பேருந்தில் மேற்கொள்ள நேர்ந்த போதும் ( பெரும் சிரமத்தை பொருட்படுத்தாமல்) கடலூர் தோழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தொழிற்சங்க வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

நெஞ்சு நிறை நன்றி தோழர்களே......


கடலூர் மாவட்டம் சார்பாக 76 சார்பாளர்கள் 32 பார்வையாளர்கள்
கலந்து கொண்டனர்.

ஒருமனதான நிர்வாகிகள் பட்டியலில் சம்மேளன செயலர்களாக  இடம் பெற்ற நமது மாவட்டதைச் சார்ந்த தோழர் G.ஜெயராமன் , கோவை தோழர் S.S.கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நமது வாழ்த்துகள்..... புதுவை மாவட்டச் செயலர் தோழர் P. காமராஜ்  சிறப்பு அழைப்பாளராகத்  தேர்வு பெற்றுள்ளார். தோழரின் பணி சிறக்க வாழ்த்துகள்.....

மாநாட்டில் நமது மாநிலச் செயலர் தோழர் பட்டாபி அவர்களின் உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாநாட்டு  நிகழ்வுகளை தினமும் தமிழக சார்பாளர்களுக்கு தமிழில் விளக்கவுரை ஆற்றியது தோழர்களுக்கு உதவியாக இருந்தது...


தோழியர் K.ஜோதி, (வருவாய் பிரிவு) P.கமலா  TM /CDL  M.வைரம் ஸ்ரீமுஷ்ணம், ஆகிய கடலூர் மாவட்ட பெண் சார்பாளர்களுக்கு நமது சிறப்பு வாழ்த்துகள்! . TMTCLU  மாவட்டத் தலைவர் தோழர் M.S.குமார் அவர்களும், TMTCLU மாநில உதவிச் செயலர்  A.சுப்ரமணியன் விழுப்புரம் அவர்களும் பங்கேற்றது குறித்து மாவட்ட சங்கம் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறது...

அகில இந்திய மாநாடு அமைதியான முறையில் நிறைவடைந்தாலும் சில கடலூர் தோழர்கள் நிதானமற்ற முறையில் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது 

                                                                                                    
மாநாட்டு நிகழ்வுகள், நிர்வாகிகள் பட்டியலை மாநில சங்க அறிக்கையில் காண்க.


                                                                                                  தோழமையுடன் 
                                                                                        இரா.ஸ்ரீதர்
                                                                                         NFTE-BSNL,CDL
Sunday, October 5, 2014

வள்ளலார் வழியில் வாழ்ந்து, காந்திய நெறியில் நடந்து, தமிழுக்குப் பெருமை சேர்த்த
"அருட்செல்வர்' நா. மகாலிங்கம்
அவர்களுக்கு நமது அஞ்சலி


முற்பிறவியில் தவம் செய்தவர்களுக்கும், இந்தப் பிறவியில் ஞானம் பெற்றவர்களுக்கும்தான் அநாயாசமான மரணம் (அனாயாசேன மரணம்) நிகழும் என்பார்கள். 49 ஆண்டுகளாகத் தான் தொடர்ந்து நடத்திவரும் அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி விழா நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தில், தனது 92-ஆவது வயதில், சிரமமே இல்லாத அமைதியான மரணம் ஒருவருக்கு நேருமேயானால், அவர் நிஜமாகவே அருட்செல்வராகத்தான் இருக்க முடியும்.தனது வாழ்க்கையில் லட்சிய புருஷராக வரித்துக்கொண்ட அண்ணல் காந்தி அடிகளின் பிறந்த நாளன்று நா. மகாலிங்கம் ஜோதியில் கலந்து விட்டிருப்பதை என்னென்பது? இதற்கு முன்னால் காந்தியடிகளைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்ட ஜே.சி. குமரப்பா அவரது நினைவு நாளான ஜனவரி 30-ஆம் தேதியிலும், காமராஜர், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ஆம் தேதியிலும் இயற்கை எய்தியதைப்போல, இப்போது காந்தியத்தைத் தாங்கிப் பிடித்து, காந்திய நெறிகளுடன் வாழ்ந்து காட்டிய நா. மகாலிங்கமும் காந்தி ஜெயந்தி தினத்தில் மறைந்திருப்பது, அவர்கள் எந்த அளவுக்கு காந்தியத்தில் ஒன்றிப் போயிருந்தனர் என்பதன் வெளிப்பாடல்லாமல் வேறென்ன?
காந்தியத்திற்காக நா. மகாலிங்கம் ஆற்றியிருக்கும் பங்களிப்பு அளப்பரியது. காந்தியடிகளின் அத்தனை கட்டுரைகளையும், தமிழ்நாட்டில் காந்தி உள்ளிட்ட புத்தகங்களையும் 20 தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டதைச் சொல்வதா? பியாரிலாலும், சுசீலா நய்யாரும் எழுதிய "மகாத்மா காந்தி' என்கிற ஆங்கிலப் புத்தகத்தை (10 தொகுதிகள்) தனது செலவில் மறுபதிப்புச் செய்ததைச் சொல்வதா? மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் தலைவராக இருந்து அதை வழிநடத்தியதைச் சொல்வதா? பல்லாயிரம் டன்கள் கரும்பு அரைக்கும் சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தக்காரர், "சக்தி சுகர்ஸ்' அதிபர் நா. மகாலிங்கம். ஆனால், ஏனைய சர்க்கரை ஆலை அதிபர்களைப்போல, கரும்புச் சக்கையிலிருந்து மது தயாரித்துப் பல கோடி ரூபாய் லாபம் ஈட்ட மறுத்து விட்டவர். அண்ணல் காந்தியடிகளின் "அறங்காவலர் விதி' கொள்கைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் அவர்.
மகாலிங்கத்தின் அரசியல் பங்களிப்புக்கு எள்ளளவும் குறைந்ததல்ல அவரது ஆன்மிகப் பங்களிப்பு. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரால் வள்ளலார் இயக்கத்திற்குத் தனது வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். "சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' இன்று தமிழகத்தின் கிராமங்களில் எல்லாம் கிளை பரப்பி வேரூன்றி இருக்கிறது என்றால், அந்தப் பெருமை நா. மகாலிங்கத்தைத்தான் சாரும். திருவருட்பாவின் ஆறு திருமுறைகளையும், வள்ளலாரின் உரைநடைகளையும் மூன்று தொகுதியாகப் பதிப்பித்து சன்மார்க்க நெறியைப் பரப்பியதால்தான் அவர் "அருட்செல்வர்'.
"நாத்திகப் புயல் தமிழகத்தில் பேயென வீசியபோது, ஆன்மிக அகல்விளக்கு அணைந்து விடாமல் பாதுகாத்தவர்' என்று காஞ்சி மகான் பரமாச்சாரியரே நா. மகாலிங்கத்தைப் பாராட்டினார் என்றால், அவரது ஆன்மிகப் பங்களிப்பு பற்றி மேலும் சொல்வதற்கோ எழுதவதற்கோ வேறென்ன இருக்கிறது?
அரசியலுக்கும் ஆன்மிகத்துக்கும் மட்டுமல்ல, அவரது தமிழ்ப்பற்றும், தமிழ் வளர்ச்சிகான பங்களிப்பும் சாதாரணமானதா? ஏட்டுச் சுவடியாக இருந்த சிலப்பதிகாரத்தின் பஞ்ச மரபைப் புத்தகமாக்கிய பெருமை; திருமந்திரத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பை வெளியிட்ட பெருமை; திருக்குறளை ஆங்கிலம், இந்தி, ஒரியா, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்க வைத்து வெளியிட்ட பெருமை என்று தமிழுக்காக அவர் ஆற்றிய தொண்டுக்கு நிகரேது?
"கி.மு. 7000ஆவது ஆண்டில் தொல்காப்பியம் தோன்றியிருக்கலாம். அதே காலகட்டத்தில்தான் வட இந்தியாவில் வேதங்களும் தோன்றியிருக்க வேண்டும்' என்பது தொல்காப்பியத்தின் தொன்மை பற்றிய அவரது ஆய்வின் முடிவு.
அரசியல், ஆன்மிகம், இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகவியல் என்று எல்லாவற்றைப் பற்றியும் ஆழமான புரிந்துணர்வும், தெளிவான கருத்துகளும் அவருக்கு இருந்தன. அவரது கட்டுரைகள் 30 புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இந்தியாவை வழிநடத்த அதைவிடச் சிறந்த செயல்திட்டங்கள் இருக்க முடியாது. மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டும், அவரை அமைச்சரவையில் சேர்த்து,அவரது திறமையை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டது காங்கிரஸ் கட்சி செய்த மிகப் பெரிய தவறு.
வள்ளலார் வழியில் வாழ்ந்து, காந்திய நெறியில் நடந்து, தமிழுக்குப் பெருமை சேர்த்த "அருட்செல்வர்' நா. மகாலிங்கம் இறந்தும் வாழ்வார். அருட்பெருஞ் ஜோதி! தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!

நன்றி: தினமணி