வள்ளலார் வழியில் வாழ்ந்து, காந்திய
நெறியில் நடந்து, தமிழுக்குப் பெருமை சேர்த்த
"அருட்செல்வர்' நா.
மகாலிங்கம்
அவர்களுக்கு நமது அஞ்சலி
முற்பிறவியில் தவம்
செய்தவர்களுக்கும்,
இந்தப் பிறவியில் ஞானம் பெற்றவர்களுக்கும்தான் அநாயாசமான மரணம்
(அனாயாசேன மரணம்) நிகழும் என்பார்கள். 49 ஆண்டுகளாகத் தான்
தொடர்ந்து நடத்திவரும் அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி விழா நிகழ்ச்சி
நடக்கும் அரங்கத்தில், தனது 92-ஆவது
வயதில், சிரமமே இல்லாத அமைதியான மரணம் ஒருவருக்கு
நேருமேயானால், அவர் நிஜமாகவே அருட்செல்வராகத்தான் இருக்க
முடியும்.தனது
வாழ்க்கையில் லட்சிய புருஷராக வரித்துக்கொண்ட அண்ணல் காந்தி அடிகளின் பிறந்த
நாளன்று நா. மகாலிங்கம் ஜோதியில் கலந்து விட்டிருப்பதை என்னென்பது? இதற்கு
முன்னால் காந்தியடிகளைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்ட ஜே.சி. குமரப்பா அவரது
நினைவு நாளான ஜனவரி 30-ஆம் தேதியிலும், காமராஜர், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ஆம் தேதியிலும் இயற்கை எய்தியதைப்போல, இப்போது
காந்தியத்தைத் தாங்கிப் பிடித்து, காந்திய நெறிகளுடன்
வாழ்ந்து காட்டிய நா. மகாலிங்கமும் காந்தி ஜெயந்தி தினத்தில் மறைந்திருப்பது,
அவர்கள் எந்த அளவுக்கு காந்தியத்தில் ஒன்றிப் போயிருந்தனர் என்பதன்
வெளிப்பாடல்லாமல் வேறென்ன?
காந்தியத்திற்காக
நா. மகாலிங்கம் ஆற்றியிருக்கும் பங்களிப்பு அளப்பரியது. காந்தியடிகளின் அத்தனை
கட்டுரைகளையும்,
தமிழ்நாட்டில் காந்தி உள்ளிட்ட புத்தகங்களையும் 20 தொகுதிகளாகத் தொகுத்து வெளியிட்டதைச் சொல்வதா? பியாரிலாலும்,
சுசீலா நய்யாரும் எழுதிய "மகாத்மா காந்தி' என்கிற ஆங்கிலப் புத்தகத்தை (10 தொகுதிகள்) தனது
செலவில் மறுபதிப்புச் செய்ததைச் சொல்வதா? மதுரை காந்தி
அருங்காட்சியகத்தின் தலைவராக இருந்து அதை வழிநடத்தியதைச் சொல்வதா? பல்லாயிரம் டன்கள் கரும்பு அரைக்கும் சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தக்காரர்,
"சக்தி சுகர்ஸ்' அதிபர் நா. மகாலிங்கம்.
ஆனால், ஏனைய சர்க்கரை ஆலை அதிபர்களைப்போல, கரும்புச் சக்கையிலிருந்து மது தயாரித்துப் பல கோடி ரூபாய் லாபம் ஈட்ட
மறுத்து விட்டவர். அண்ணல் காந்தியடிகளின் "அறங்காவலர் விதி' கொள்கைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த, விரல்விட்டு
எண்ணக்கூடிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் அவர்.
மகாலிங்கத்தின்
அரசியல் பங்களிப்புக்கு எள்ளளவும் குறைந்ததல்ல அவரது ஆன்மிகப் பங்களிப்பு.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரால் வள்ளலார் இயக்கத்திற்குத் தனது வாரிசாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவர். "சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' இன்று
தமிழகத்தின் கிராமங்களில் எல்லாம் கிளை பரப்பி வேரூன்றி இருக்கிறது என்றால்,
அந்தப் பெருமை நா. மகாலிங்கத்தைத்தான் சாரும். திருவருட்பாவின் ஆறு
திருமுறைகளையும், வள்ளலாரின் உரைநடைகளையும் மூன்று
தொகுதியாகப் பதிப்பித்து சன்மார்க்க நெறியைப் பரப்பியதால்தான் அவர்
"அருட்செல்வர்'.
"நாத்திகப் புயல் தமிழகத்தில் பேயென வீசியபோது, ஆன்மிக
அகல்விளக்கு அணைந்து விடாமல் பாதுகாத்தவர்' என்று காஞ்சி
மகான் பரமாச்சாரியரே நா. மகாலிங்கத்தைப் பாராட்டினார் என்றால், அவரது ஆன்மிகப் பங்களிப்பு பற்றி மேலும் சொல்வதற்கோ எழுதவதற்கோ வேறென்ன
இருக்கிறது?
அரசியலுக்கும்
ஆன்மிகத்துக்கும் மட்டுமல்ல,
அவரது தமிழ்ப்பற்றும், தமிழ் வளர்ச்சிகான
பங்களிப்பும் சாதாரணமானதா? ஏட்டுச் சுவடியாக இருந்த
சிலப்பதிகாரத்தின் பஞ்ச மரபைப் புத்தகமாக்கிய பெருமை; திருமந்திரத்தின்
ஆங்கில மொழி பெயர்ப்பை வெளியிட்ட பெருமை; திருக்குறளை
ஆங்கிலம், இந்தி, ஒரியா, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்க வைத்து வெளியிட்ட பெருமை என்று
தமிழுக்காக அவர் ஆற்றிய தொண்டுக்கு நிகரேது?
"கி.மு. 7000ஆவது ஆண்டில் தொல்காப்பியம்
தோன்றியிருக்கலாம். அதே காலகட்டத்தில்தான் வட இந்தியாவில் வேதங்களும்
தோன்றியிருக்க வேண்டும்' என்பது தொல்காப்பியத்தின் தொன்மை
பற்றிய அவரது ஆய்வின் முடிவு.
அரசியல், ஆன்மிகம்,
இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகவியல் என்று எல்லாவற்றைப் பற்றியும் ஆழமான புரிந்துணர்வும்,
தெளிவான கருத்துகளும் அவருக்கு இருந்தன. அவரது கட்டுரைகள் 30
புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இந்தியாவை வழிநடத்த அதைவிடச் சிறந்த
செயல்திட்டங்கள் இருக்க முடியாது. மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக அவர்
தேர்ந்தெடுக்கப்பட்டும், அவரை அமைச்சரவையில் சேர்த்து,அவரது திறமையை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டது காங்கிரஸ் கட்சி செய்த
மிகப் பெரிய தவறு.
வள்ளலார்
வழியில் வாழ்ந்து,
காந்திய நெறியில் நடந்து, தமிழுக்குப் பெருமை
சேர்த்த "அருட்செல்வர்' நா. மகாலிங்கம் இறந்தும்
வாழ்வார். அருட்பெருஞ் ஜோதி! தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ்
ஜோதி!
நன்றி: தினமணி
No comments:
Post a Comment