.

Saturday, February 28, 2015

TMTCLU மாவட்ட செயற்குழு
தமிழ்மாநில தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் (TMTCLU) மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர்.M.S.குமார் தலைமையில் மாவட்ட சங்க அலுவலகத்தில் 27-02-2015 அன்று மாலை நடைபெற்றது
TMTCLU மாவட்ட அமைப்பு செயலர்

தோழர்.V.முத்துவேல் வரவேற்புரை நிகழ்த்த, தோழர்.V. கிருஷ்ணகுமார் அஞ்சலியுரை நிகழ்த்தினார். அமைப்பு நிலை,நிதிநிலை, தோழர்.பாலசுப்ரமணியன் குடும்பநல நிதி,
பிரச்சனைகளின் தீர்வும், போராட்ட திட்டமும் ஆய்படுபொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. ஒப்பந்த தொழிலாளத் தோழர்கள் பலர் கிளை வாரியாக தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

NFTE மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் அவர்கள் ஆற்றிய துவக்கவுரையில்அமைப்பை பலமாக கட்டியிருக்கின்றோம். குறிப்பாக உளுந்தூர்பேட்டையும், பண்ருட்டி கிளைகளும் பாராட்டுக்குரியவைஎன்றார்.
TMTCLU மாவட்டசெயலர் தோழர்.ரங்கராஜ் தன்னுடைய அறிமுக உரையில் மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விளக்கினார். TMTCLU மாநில இணைப்பொதுச்செயலர் தோழர்.S.தமிழ்மணி தன்னுடைய அனுபவத்தை
பகிர்ந்துகொண்டு செயற்குழுவை வாழ்த்தினார். NFTE மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன், TMTCLU மாநில உதவிச்செயலர் தோழர்.A.சுப்ரமணியன்
வாழ்த்துரை வழங்கினர்.
மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.P.காமராஜ் கலந்து கொண்டு செயற்குழுவை வாழ்த்தினார்.
AITUC மாநிலக்குழு உறுப்பினரும், NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலருமான தோழர். K.வெங்கடேசன் NLC-யில் இது காறும் நடைபெற்ற
போராட்டங்கள், அதில் AITUC-யின் பங்கு, ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றம், இன்று பணி நிரந்தரத்தின் துவக்கம், ஆகியவற்றினை எடுத்துரைத்தார்.
TMTCLU-யின் மாநிலப் பொதுச் செயலர் தோழர். R.செல்வம் அவர்கள் தமிழ் மாநிலத்தின்  ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை வாழ்த்தியும், மாவட்டசங்கத்திற்கு நன்றியையும் தன்னுடைய உரையில் வெளிப்படுத்தினார்.
மாவட்டத்தலைவர் தோழர்.M.S.குமார் அவர்களின் பணியை பாராட்டி பண்ருட்டி தோழர்கள் கைப்பேசி ஒன்றை பரிசளித்து சிறப்பு செய்தனர்

மாவட்டப்பொருளர்தோழர். S.அண்ணாதுரை நன்றியுரையுடன் செயற்குழு நிறைவுபெற்றது




Thursday, February 26, 2015

SSG பணி ஓய்வு பாராட்டுக்கள்
   
 SSG என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தோழர்.S.S.கோபாலகிருஷ்ணன் 23/12/1976-ல் குன்னூரில் தொலைபேசி இயக்குனராக பணியில் சேர்ந்தார். கல்லூரி வாழ்க்கை முடித்து பல கற்பனைகளுடன் சராசரி மனிதனா தொலைபேசி இயக்குனராகத் தன் பணியினை தொடர்ந்தார். பல தலைவர்களை உருவாக்கிய குன்னூர் மண்ணில் அவருக்கு ஆதர்சமாக தோழர்.ராமலிங்கம், தோழர்.சுந்தரம் அப்போது அவரின் முன்னோடிகள். அவர் கலந்து கொண்ட முதல் மாநாடு மயிலாடுதுறை மாநாடு அப்போது தான் தோழர்.ஜெகன், தோழர்.குப்தா போன்ற தலைவர்களை சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றார். அவரிடத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது. பொள்ளாச்சிக்கு மாற்றலாகி தொழிற்சங்கப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது சிறப்பான செயல்பாட்டால் பல இடதுசாரி தலைவர்களின் பரிச்சயம் ஏற்படுகிறது. MLA கருப்பையா போன்ற தலைவர்கள் அவரின் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர். மத்திய, மாநில அரசு ஊழியர், வங்கி ஆகிய சங்கங்களின் கூட்டமைப்புக்கு தலைவராக பணியாற்றி உள்ளார்.
                கோவைக்கு மாற்றலாகி மாவட்ட செயலராக பொறுப்பேற்ற போது தமிழகமே வியக்கும் வண்ணம் பல நிகழ்வுகள் கோவையில் நடந்தது. சங்கத்தில் எதிரும் புதிருமாக இருத்த பல தலைவர்களை NFTE சங்கத்தில் இணைத்த பெருமை SSG-யை சாரும். தோழர்கள் VRC,சந்தானராஜ், முருகேஷ் ஆகியோரை மட்டுமில்லாது 200க்கும் மேற்பட்ட தோழர்களை சங்கத்தில் இணைத்த பெருமை தோழர்.SSG யை சாரும். அவர் மாவட்ட செயலராகவும் தோழர். ராபர்ட்ஸ் மாவட்டப் பொருளாளராகவும் இருந்த போது மத்திய சங்கத்திற்கு கம்யூட்டர் வழங்கப்பட்டது. இன்று கூட கோவையிலிருந்து அனுப்பப்பட்ட கம்யூட்டர் தான் மத்திய சங்க அலுவலகத்தில் செயல்படுகிறது. கோவையில் நடைபெற்ற மாநில மாநாட்டின் போது மாநில நிர்வாகியாக தேர்வு செய்ய வேண்டுமென்று பலர் நினைத்த போது கோவையில் பொறுப்பிலிருந்த ஒரு சிலர் அவருக்கு பொறுப்பு அளிக்க கூடாது என்று உறுதியாக எதிர்த்த போது 2007  சவுரான்பூரில் நடந்த மாநாட்டில் அகில இந்திய அமைப்பு செயலராக  தேர்வு செய்யப்பட்டார்.
2014 ம் ஆண்டு ஜபல்பூரில் அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். மத்திய செயற்குழு கூட்டங்களில் தமது கருத்தை நன்கு பதிவு செய்து கூட்ட முடிவுகளை செழுமைப்படுத்துவதாக அவரது பேச்சு அமையும்.பொறுப்புக்கேற்ற அவரின் செயல்பாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வது, அகில இந்திய சங்கத்திற்கு உறுதுணையாக இருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம்.

 சங்க அங்கீகாரத் தேர்தலுக்காக கடலூர் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அகில இந்திய தலைவர் தோழர். இஸ்லாம் வந்த போதும், கடலூரில் ஒலிக்கதிர் பொன்விழா நடந்த போதும், மீபத்தில் கடலூரில் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்த போது நமது பொதுச் செயலர் தோழர். C.C.சிங் அவர்களோடு வந்திருந்து தலைவர்களை உபசரிக்கும் பணியை வரவேற்புக் குழுவுக்கு எளிமையாக்குவதில் தோழர்.SSG பங்கு பிரதானமாகும். அதற்காகவே  நமது மாவட்ட சங்கம் அவருக்கு நன்றியை தெரிவிக்கிறது.
குறிப்பாக இரண்டு விஷயங்கள் சொல்லவேண்டும். ஒருமுறை கோவையில் TM போஸ்ட்டிங்  போடும் போது  GM அவர்கள் அனைத்து சங்க தலைவர்களையும் அழைத்து எந்த எந்த இடங்களுக்கு ஆட்கள் தேவை என்று justification செய்து அனைத்து சங்க தலைவர்களின் ஒப்புதல் பெற்று உத்தரவு வெளியிட தயாராகியது. அந்நேரத்தில் தோழர்.SSG கலந்து கொள்ளமுடியாத சூழலில் அவர் வந்தவுடன் நடந்தவற்றை மற்றவர்கள் எடுத்து சொல்ல அவர், ”அதை ஏற்கமுடியாது அதிகமான TM தோழர்களை வெளியூருக்கு மாற்றக்கூடாது” என GM-இடம் வலியுறுத்தினார். இதனால் பல தோழர்களின் வெளியூர் மாற்றல் தவிர்க்கப்பட்டது.
            மற்றொரு சமயம் TM மாற்றல் செய்வது ம்பந்தமா  தோழர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது கேரளாவில் இருந்த SSG-யின் சகோதரி இறந்த செய்தி கேட்டு நீங்கள் போராட்டம் நட்த்துங்கள் என்று சொல்லி அவசரமாக கேரளாவுக்கு விட்டு சென்றார். அன்று மாலையே யாரும் எதிர்பாராத விதமாக சிதைக்கு தீ மூட்டிவிட்டு உண்ணாவிரத பந்தலுக்கு வந்து போராட்த்தை ஊக்கப்படுத்தி பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட செய்தார். இன்றும் ஊழியர் மத்தியில் உயர்வாக நிற்பதற்கு அனைத்து அதிகாரிகள் , ழியர்கள் சங்க வித்தியாசமின்றி அனைவரிடத்திலும் பழக கூடிய உயர்ந்த பண்பாளராக திகழ்கின்ற SSG அவர்கள் பல இளம் தோழர்களுக்கு முன்னோடியாவார் . அவர் பணி நிறைவு நாளில் (28-02-2015) நமது மாவட்டத்தின் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
தொடரட்டும் SSGயின் பணி!

மாவட்டச் சங்கம். கடலூர்.

Tuesday, February 24, 2015

நாங்கள் தபோல்கர்கள், நாங்கள் பன்சாரேக்கள்!
எஸ்.வி. வேணுகோபாலன் 


தும்ச்சா தபோல்கர் காரு’ (நரேந்திர தபோல்கருக்கு நேர்ந்த அதே கதிதான் உனக்கும்!) என்று அச்சுறுத்தல் கடிதம் அனுப்பியவாறே, கோவிந்த பன்சாரேவின் உயிரையும் பறித்துவிட்டன பாசிச மதவெறி சக்திகள். மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் நகரைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே (82) கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். மூடநம்பிக்கைகளுக்கும் மதவாதத்துக்கும் எதிரான மகத்தான போராளியான பன்சாரே, தனது மனைவி உமாவுடன் கடந்த திங்கட்கிழமை காலை நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைய இருந்த நேரத்தில், இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம ஆசாமிகள் இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். பன்சாரேவின் உடலுக்குள் மூன்று குண்டுகள் பாய்ந்தன. அவரது மனைவியின் தலையின் இடது பக்கத்தைத் துளைத்தது மற்றொரு குண்டு. அக்கம்பக்கத்து வீட்டார்கள்தான் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்தார்கள். மருத்துவர்களின் இடைவிடாத சிகிச்சை முயற்சிகளையும் மீறி பன்சாரேவின் உயிர் வெள்ளியன்று பிரிந்துவிட்டது. உமா சிகிச்சையில் இருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே போன்ற முறையில்தான் இந்துத்துவ வெறியர்கள் புணேவில் நரேந்திர தபோல்கரின் உயிரைப் பறித்தார்கள். பன்சாரே போன்றே தபோல்கரும் மக்களுக்காகப் போராடிய எளிய மனிதர். தபோல்கர் போன்றே பன்சாரேவும் லட்சியத்தில் உறுதிகொண்டிருந்தவர். இருவருமே மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். மக்களை விழிப்படைய வைத்து அவர்களின் சமூக, பொருளாதார விடுதலைக்காகப் போராட இடைவிடாது ஊக்குவித்துக்கொண்டிருந்த களப் போராளிகள்தான் இருவருமே.
தபோல்கரும் பன்சாரேவும்
பிள்ளையார் பால் குடித்ததாக 20 ஆண்டுகளுக்குமுன் அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகள் நாடு முழுவதும் பரப்பப்பட்டபோது, அறிவியல் செயல்விளக்கத்தின் மூலம் எளிமையான முறையில் மறுத்து, மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார் தபோல்கர். அதேபோல், வீர சிவாஜியை இஸ்லாமிய எதிர்ப்பாளராக உருவகப்படுத்தி, அவரது பிம்பத்தை வைத்துத் தங்கள் தத்துவங்களை நியாயப்படுத்தி, இளைஞர்களுக்கு ஆவேசப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும் சிவசேனா-ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளை வரலாற்றுரீதியாகக் கேள்விக்கு உட்படுத்தியவர் கோவிந்த பன்சாரே. உண்மையாக, சிவாஜி யார்?’ (சிவாஜி கோன் ஹோட்டா?) என்ற அவரது புத்தகம், சாதி-மத உணர்வுகளுக்கு அப்பால் ஏழை எளிய மக்களின் நலன்களை நேசித்தவர், போராடியவர் சிவாஜி என்ற அடையாளத்தை எடுத்து வைத்தது. இது சங் பரிவாரத்துக்கு எரிச்சல் ஊட்டியது.
காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று இந்துத்துவ சக்திகள் அண்மையில் குரல்கொடுக்கத் தொடங்கியதும், பன்சாரே மிகவும் அதிர்ச்சியடைந்து அதைக் கண்டிக்கத் தொடங்கினார். கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகக் கூட்டம் ஒன்றில் இத்தகைய முயற்சிகளை வெளிப்படையாக விமர்சித்தார் பன்சாரே. அந்தக் கூட்டத்திலேயே அதற்கு எதிராகக் குரல்கொடுத்த பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பன்சாரே வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகக் குற்றம்சாட்டினார். வகுப்புவாத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டுவரும் சில இந்துத்துவ அமைப்புகள்மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பன்சாரே கோரியதும், தொடர்புள்ள ஆட்கள் அவர்மீது அவதூறு வழக்கைத் தொடுத்தார்கள்.
நரேந்திர தபோல்கர் வெறும் அறிவியல் பிரச்சாரப் பணிகளை மட்டிலும் செய்துகொண்டிருக்கவில்லை. சாதாரண மக்கள் நலனுக்காகத் தம்மால் இயன்ற வழிகளில் உதவியும், அவர்களைத் திரட்டிப் போராடியும் வந்தார். அவரைப் போன்றே அடித்தட்டு மக்களுக்காகத் துடித்த கோவிந்த பன்சாரேவின் இதயத்தைத்தான் வகுப்புவாத வெறியர்கள் தற்போது செயலிழக்க வைத்துவிட்டார்கள்.
அண்ணாஅண்ணா!
ஆகஸ்ட் 2013-ல் நரேந்திர தபோல்கர் மறைவை அடுத்து, சதாரா வீதிகள் துயரத்தைச் சுமக்க முடியாமல் தத்தளித்தன. மூங்கில் கழியின் துணையோடு மெல்ல நடந்து வந்த - எண்பதுகளில் இருந்த முதிய மனிதர் பாபன் ராவ் உத்தாலே தன்னிடம் கபடி விளையாட்டு பயின்ற தனது அன்புக்குரிய தபோல்கரின் முகம் வெறியர்களது குண்டுகளால் சிதைக்கப்பட்டிருந்ததை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சனிக்கிழமையன்று கோலாப்பூரின் பீடித் தொழிலாளர்களும், வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளும், துப்புரவுத் தொழிலாளர்களும் கோவிந்த பன்சாரே உடலின் அருகே திரண்டு நின்று அண்ணா... அண்ணாஎன்று கதறிக்கொண்டிருந்தார்கள்.
மக்கள் நலனுக்காக உழைக்கும் போராளிகளை மதவெறியர்கள் ஏன் குறிவைக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் அரசியல் மிகவும் நுட்பமானது. அது மக்களுக்கு எதிரானது. தங்கள் தத்துவத்தை எதிர்ப்பவர்களைப் பாசிச சக்திகள் மன்னிப்பதில்லை. ஆனால், மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொள்பவர்கள் ஒருபோதும் இந்தப் போராட்டத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை.
தபோல்கரின் பாதையில்
தனது சொந்தத் துயரத்தைவிடவும், மறைந்த தனது கணவர் தபோல்கர் படைக்க விரும்பிய சமூகத்துக்கான லட்சியம் முக்கியமானது என்ற முடிவை தபோல்கரின் மனைவி ஷைலா அப்போதே எடுத்தார். அவரது மகன் ஹமீத் மனநல மருத்துவராக இருக்கிறார். அவரும் தனது பணியையெல்லாம் விட்டுவிட்டு, தனது தந்தையின் அடிச்சுவட்டில் சென்றுகொண்டிருக்கிறார். தபோல்கரின் மனைவி, மகன் மட்டுமல்ல அவரது மருமகள், மகள் உட்பட மொத்தக் குடும்பமும் கடந்த மாதங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூட நேரமின்றி ஊர் ஊராகப் பயணம் செய்து, தபோல்கர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது நினைவுநாள் அன்று மட்டுமே குடும்பம் ஒன்றுகூடுகிறது. தனது மருத்துவத் தொழிலைவிடவும் தந்தையின் லட்சியமே முன்னுரிமை என்கிறார் ஹமீத்.
கோவிந்த பன்சாரே இறுதி நிகழ்ச்சியில் குழுமிய பெருங்கூட்டத்தில் உரத்த முழக்கங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன: நாங்கள் நரேந்திர தபோல்கர்கள், நாங்கள் கோவிந்த பன்சாரேக்கள்.அதன் பொருள், இந்த இரு மனிதர்களுக்குமே மரணம் கிடையாது என்பதுதான்.
வகுப்புவாத வெறி என்பது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமைக்கு எதிராகப் பூதாகரமான சவாலாக வளர்ந்து நிற்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதைச் சந்திக்கும் துணிவுடைய மக்கள் சக்தி, அதைவிடப் பிரம்மாண்டமாக வளரவே செய்கிறது என்பதுதான் மகத்தான உண்மை. ஜனநாயகம் நீடித்து நிலைக்க வேறெதுவும் வேண்டாம். மிகமிகச் சாதாரண, அடித்தட்டு மக்களிடமிருந்து எழுந்துவரும் இந்தக் குரல்கள் அளிக்கும் நம்பிக்கை ஒன்றே போதும்!
நன்றி: தமிழ் இந்து



விருத்தாசலம் கிளைப் பொதுக்குழு கூட்டம்
23-02-2015
விருத்தாசலம் கிளைப் பொதுக்குழு கூட்டம் 23-02-2015 அன்று தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள், கிளைத்தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்டச்செயலர் தோழர்.இரா,ஸ்ரீதர் கலந்துகொண்டு சிறப்பித்தார். உடன் கடலூர் தோழர்.V.முத்துவேலு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன.
v  BSNLழியர்/அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மார்ச்-17 முதல் நடக்கவிருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமாக்குவது எனவும்,
v  விருத்தாசலம் கிளை மாநாட்டை மார்ச்-10 செவ்வாய் அன்று நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
உலகமயம் பெற்றெடுத்த  பிசாசு மீத்தேன்



உலகமயம் 
பெற்றெடுத்த  பிசாசு

மீத்தேன்  திட்டம்
உழவு  நடக்கும் நிலங்களில்
எளவு நடக்க இயற்றிய திட்டம்

அளவு கடந்த ஆசையால் வான்மூலம்
உளவு பார்த்த செல்வத்தை  அந்நியர்
களவு கொள்ளை கைகாட்டும் திட்டம்

களையெடுக்கும் உழவர்கள்
தலையெடுக்க விடாத திட்டம்

இயற்கை தாயின் இதயம் கிழித்து
மண் மாதாவின் மார்பகம் அறுத்து
திருமகளான நிலமகள் மேலே
திராவகம் வீசும் திட்டம்

நஞ்சை புஞ்சை விளையும் மண்ணில்
நஞ்சை புகுத்தும்  வஞ்சக திட்டம்

நிலத்திலிருந்து  வெளியேற்ற போவது
மீத்தேன்  வாயுவை மட்டுமா ?
விவசாயிகள் வாழ்வையும்தான் !

உலகமயம் தாராளமயம் பெற்றெடுத்த
இன்னொரு பிசாசு - இந்த
அழிவு திட்டம் அமுலுக்கு வந்தால்
கழிவு நீர் தேக்கமாய் கடைமடை மாறும்

காவிரி நீர் ஆகியது கானல்நீர் - இனி
நிலத்தடி நீருக்கும் நேர்ந்திடும் ஆபத்து !
குடி நீரும் இனி குதிரை கொம்புதான் !

உற்று பாருங்கள்
காவிரி படுகையை - அதன்
நெற்றியில் காணலாம்
ஒற்றை நாணயம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் அல்ல
கொள்ளை லாப அரிப்புக்கு - இது
சொரிந்துணர்வு ஒப்பந்தம்

காவிரி படுகை
ஆயிரங்கால பயிர்களின் அடையாளம்
அன்னையை நேசிக்கும் அபிமானம்  இது
அடகு போவது அவமானம்

பன்னூறு ஆண்டுகளாய்
பாசனம் செய்ததை
பன்னாட்டு முதலைக்கு
சாசனம் செய்வதோ ?

பூத்தேன் பொங்கும்
பொன்னி நதிப் படுகையை
காத்தேன் என்று களம் காணவிட்டால்
மீத்தேன் திட்டம் நம்மை
மாய்த்தேன்  என மார்தட்டும்
தீர்த்தேன் எனத் தோள்தட்டும்
எடுத்தேன் கவிழ்த்தேன் என்பவரை
தடுத்தேன் தகர்த்தேன்
என்றால்தான் கொம்புத்தேன் போலத்
தழைத்தேன்  நிலைதேன்
என வாழ்த்தும்

விஷம் பாய்ச்ச வருகிறது
பேரழிவு மீதேன் திட்டம்
விசுவரூபம் எடுக்கட்டும்
இனி நமது போராட்டம் !


வல்லம் தாஜ்பால் -  தஞ்சை 
( 17.2.2015
அன்று குடந்தையில் NFTE தமிழ் மாநில சங்கம் நடத்திய மீத்தேன்  திட்ட எதிர்ப்பு தொடர் முழக்க போராட்டத்தில் வாசித்தது - ஜனசக்தி யில் 22.2.2015 பிரசுரிக்கப்பட்டுள்ளது   )