.

Tuesday, February 24, 2015

உலகமயம் பெற்றெடுத்த  பிசாசு மீத்தேன்



உலகமயம் 
பெற்றெடுத்த  பிசாசு

மீத்தேன்  திட்டம்
உழவு  நடக்கும் நிலங்களில்
எளவு நடக்க இயற்றிய திட்டம்

அளவு கடந்த ஆசையால் வான்மூலம்
உளவு பார்த்த செல்வத்தை  அந்நியர்
களவு கொள்ளை கைகாட்டும் திட்டம்

களையெடுக்கும் உழவர்கள்
தலையெடுக்க விடாத திட்டம்

இயற்கை தாயின் இதயம் கிழித்து
மண் மாதாவின் மார்பகம் அறுத்து
திருமகளான நிலமகள் மேலே
திராவகம் வீசும் திட்டம்

நஞ்சை புஞ்சை விளையும் மண்ணில்
நஞ்சை புகுத்தும்  வஞ்சக திட்டம்

நிலத்திலிருந்து  வெளியேற்ற போவது
மீத்தேன்  வாயுவை மட்டுமா ?
விவசாயிகள் வாழ்வையும்தான் !

உலகமயம் தாராளமயம் பெற்றெடுத்த
இன்னொரு பிசாசு - இந்த
அழிவு திட்டம் அமுலுக்கு வந்தால்
கழிவு நீர் தேக்கமாய் கடைமடை மாறும்

காவிரி நீர் ஆகியது கானல்நீர் - இனி
நிலத்தடி நீருக்கும் நேர்ந்திடும் ஆபத்து !
குடி நீரும் இனி குதிரை கொம்புதான் !

உற்று பாருங்கள்
காவிரி படுகையை - அதன்
நெற்றியில் காணலாம்
ஒற்றை நாணயம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் அல்ல
கொள்ளை லாப அரிப்புக்கு - இது
சொரிந்துணர்வு ஒப்பந்தம்

காவிரி படுகை
ஆயிரங்கால பயிர்களின் அடையாளம்
அன்னையை நேசிக்கும் அபிமானம்  இது
அடகு போவது அவமானம்

பன்னூறு ஆண்டுகளாய்
பாசனம் செய்ததை
பன்னாட்டு முதலைக்கு
சாசனம் செய்வதோ ?

பூத்தேன் பொங்கும்
பொன்னி நதிப் படுகையை
காத்தேன் என்று களம் காணவிட்டால்
மீத்தேன் திட்டம் நம்மை
மாய்த்தேன்  என மார்தட்டும்
தீர்த்தேன் எனத் தோள்தட்டும்
எடுத்தேன் கவிழ்த்தேன் என்பவரை
தடுத்தேன் தகர்த்தேன்
என்றால்தான் கொம்புத்தேன் போலத்
தழைத்தேன்  நிலைதேன்
என வாழ்த்தும்

விஷம் பாய்ச்ச வருகிறது
பேரழிவு மீதேன் திட்டம்
விசுவரூபம் எடுக்கட்டும்
இனி நமது போராட்டம் !


வல்லம் தாஜ்பால் -  தஞ்சை 
( 17.2.2015
அன்று குடந்தையில் NFTE தமிழ் மாநில சங்கம் நடத்திய மீத்தேன்  திட்ட எதிர்ப்பு தொடர் முழக்க போராட்டத்தில் வாசித்தது - ஜனசக்தி யில் 22.2.2015 பிரசுரிக்கப்பட்டுள்ளது   )


No comments:

Post a Comment