தயாநிதிக்கு ஆதரவாக, முன்னாள் பொது மேலாளர் ஈடுபடுவதாக, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக, சென்னை தொலைபேசி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டில் வழக்கு தொடர, ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி, சென்னை தொலைபேசியின், 323 (ஐ.எஸ்.டி.என்.,) அதிநவீன இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு, இந்த இணைப்புகள் வழங்கிய போது, சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளராக எம்.பி.வேலுசாமி இருந்தார். தற்போது இவர் மீது, ஓய்வுக்குப் பின்னும் தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் நுழைந்தது, தயாநிதிக்கு ஆதரவாக ஆவணங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது உட்பட, பல்வேறு புகார்கள் எழுந்தன.
கண்டன ஆர்ப்பாட்டம் : இந்த நிலையில், முன்னாள் தலைமை பொது மேலாளரின் இந்த செயலை கண்டித்து, கடந்த மாதம் 20ம் தேதி, 100க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேசிய தொலைத் தொடர்பு சம்மேளனத்தின் இணை பொதுச் செயலர் மதிவாணன் தலைமையில் நடந்த, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் முயற்சியில், சென்னை தொலைபேசி நிர்வாகம் ஈடுபட்டது.
ஊழியர்கள் அச்சம் : இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் விளக்கம் கேட்டும்,"நோட்டீஸ்' அனுப்பியது. இதைத் தொடர்ந்து, மத்திய சிவில் சர்வீஸ் விதிகள் (பென்ஷன்) 1972, எப்.ஆர்.17(ஏ)ன் படி, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது."பிரேக் ஆப் சர்வீஸ்' எனப்படும், இப்பிரிவின் மூலம், தங்களின் ஊதியம் மற்றும் பணி பயன்கள் தடைபடலாம் என்ற அச்சம், ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளரின் இந்நடவடிக்கைக்கு, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வழக்கு தொடர முடிவு :
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஒருவர் கூறியதாவது: தேசிய தொலைத் தொடர்பு சம்மேளனம், காரணமின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையில், நிர்வாகம் இறங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளர் சுப்பிரமணியன், இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார். சட்டத்திற்குட்பட்டு எடுக்காத இந்நடவடிக்கையால், தொழில் அமைதி கெடும் வாய்ப்பு ஏற்படும்.சென்னை தொலைபேசி நிர்வாகம் மற்றும் தலைமை பொது மேலாளரின், நடவடிக்கையைக் கண்டித்து, கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி- தினமலர் நாளிதழ்.
No comments:
Post a Comment