.

Tuesday, January 7, 2014

வார்த்தையாலே நன்றி சொல்வோம்!

அன்புள்ள தோழர்களே, தோழியர்களே, 
                    
              கடலூர் மாவட்ட சங்கம் பெருமிதத்தால் பூரித்து, உச்சியில் நின்றாடும் செங்கொடியாய் பறக்கிறது. நினைக்க நினைக்க நெஞ்சம் நிறைக்கும் நிகழ்வு,  யாருக்கும் கிட்டாத பேறு -ஒலிக்கதிர் பொன்விழா, கடலூரில் நடத்திட.  ஆண்டுவிழா ஆண்டுதோறும் வரும் ; பொன்விழா அப்படியா? பெரும் பொறுப்பு -நமக்களித்த மாநில சங்கத்திற்கு நன்றி.

                   




                 பொன்விழா, அதுவும் தோழர் O P குப்தாவின் முதல் நினைவு நாளில். பிரிந்து கிடந்த தபால் தந்தி சங்கங்களை ஒன்றாக்கும் ஒரே கொள்கையில் வந்து, சாதித்த பெரும் தலைவன். ஒற்றுமை உணர்வு நமக்குள் தானே வந்தது .
          
             ஒலிக்கதிர் என்றால் ஜெகன். ஜெகன் என்றால் ஒலிக்கதிர். பிறகு நமது உற்சாகத்திற்கு எது தடையாக முடியும்?  ஒரே சிந்தனைதான்  நம் அனைவருக்கும், பொன்விழா சிறக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்பதே.

வெல்லும் இப்படை என்றே 
செய்து முடித்தனர் தோழர்,
சிரம் தாழ்ந்து வணங்குகிறோம்.
   
                செய்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என்பதால் அன்று , நன்றி சொல்ல நூறு அகராதியிலும் வார்த்தை இல்லை  என்பதாலும் அன்று. " நன்றி காட்டா  விட்டால் நன்றியே சாகும்" என நான்மணிக்கடிகையும் நல்ல தமிழ் நூல்களும் சொன்ன தமிழ் மரபில் இப்போதைக்கு வார்த்தையாலே நன்றி சொல்வோம்.




              தமிழகம் முழுவதிலிமிருந்து ஆயிரமாய் திரண்டு வந்த திருக்கூட்டம், விமானம் ரத்து செய்யப்பட, கடுங்குளிரிலும் டெல்லி விமான நிலையத்திலேயே தங்கி அடுத்த நாள் காலை விமானத்திலாவது வந்தே தீருவோம் என்ற நம் அகில இந்திய தலைவர், அகில இந்திய செயலர். அந்த மூத்த  தலைவர்களின் சிரமம் பொறுத்த தியாகத்திற்கு நன்றி .

           ஒலிக்கதிருக்கு பொன்விழா என்றதும் நூற்றுக்கணக்கான ஓய்வு பெற்ற நம் தோழர்களுக்கு எப்படித்தான் இளமை திரும்பியதோ? அவர்களை கண்டதும், நாம் செய்யும் பணி குறைவு என்ற நாணம் மீதூர நன்றி சொல்வோம்.

            கொள்கையில் மாறுபாடு- இருக்கட்டுமே அத்தனைக்கும் இடம்தந்த ஏடு  தானே ஒலிக்கதிர் என்றே வாழ்த்தினர் அத்தனை சங்கத் தலைவர்களும் .

            தலைமை பொது மேலாளர், முதுநிலை பொது மேலாளர், அதிகாரிகள் என வந்து விழாவிற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி.

              ஒன்றாய் மண்டபம் நிறைந்திருந்தது வானவில்லின் வர்ணக் கோலமாய்.  ஒவ்வொரு குழுவிற்கும் உறுப்பினர்களுக்கும் பெயர் சொல்லி பாராட்டும் முன்பு பொதுவாய் மனம் நிறைய, கண் கசிய நன்றி, தோழர்களே.
                              "புரட்சியின் போது வாழ்ந்தது பேரின்ப பேறு 
இளைஞனாய் பங்கேற்பு   சொர்க்கம் அதுவென்று  கூறு "
(Bliss was that day to live; Heaven to be young)
       என்ற பிரஞ்சு புரட்சியின் கவிதை வரிகளாய் 
"இருந்தேன் இன்ப பொன்விழா நிகழ்வில் 
உழைத்தேன் அதற்கு சொர்க்கமது என் வாழ்வில் "
 என்று காணும் போதும் காணும் போதும் நன்றி சொல்வோம்!

பெருமகிழ்வோடு 
தோழமையுடன் 
இரா ஸ்ரீதர் 
மாவட்ட செயலாளர்& 
பொன்விழா விழாக்குழு பொதுச்செயலாளர் 

No comments:

Post a Comment