பத்து மாதங்களில் 66 கோடி கி.மீ. தொலைவு பயணம் செய்த மங்கள்யான் ஆய்வுக்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக வலம்வரத் தொடங்கி, செவ்வாயைப் புகைப்படம் எடுத்து அனுப்பவும் தொடங்கிவிட்டது.
செவ்வாய்க்கு ஆய்வுக்கலத்தை அனுப்பும் முயற்சியில் தோற்ற நாடுகள் பல இருக்க, முதல்முறையிலேயே அந்தக் கலத்தை செவ்வாயின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகச் சேர்த்திருக்கிறார்கள் நம் நாட்டின் விஞ்ஞானிகள்.
சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்புவதைவிட, செவ்வாய்க்கு அனுப்புவது துணிச்சலும் சவால்களும் நிறைந்தது. பூமியின் ஈர்ப்புவிசையிலிருந்து ஆய்வுக்கலம் விடுபட்டுச் செல்வதற்கான ஏற்பாடுகள் சிக்கல்களும் சவால்களும் நிறைந்தவை. அதற்கு ஏராளமான கணக்குகளைப் போட்டு விண்கலத்தின் வேகம், திசை போன்றவற்றில் மாறுதல் செய்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பதைத்தான் மகத்தான வெற்றியாக உலகமே பாராட்டுகிறது. சுற்றுப்பாதையில் சேர்ந்து செயல்படத் தொடங்குவதற்கு முன்னால், சிறிது நேரம் புவியிலிருந்து கட்டளைகளைப் பெற முடியாத நிலையில் விண்கலம் தானாகவே செயல்பட வேண்டியிருந்தது. அந்த நேரம்தான் உண்மையிலேயே சோதனையான கட்டம். அதையும் கடந்து ஆய்வுக்கலம் இந்தியாவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்குச் சமிக்ஞைகளை அனுப்பியிருப்பதுதான் இந்த முயற்சியில் நமக்குக் கிடைத்துள்ள வெற்றிக்கு அடையாளம். சுமார் 300 நாட்களாக இயங்காமல் இருந்த விண்கல இன்ஜின் மீண்டும் சரளமாக இயங்கியது, விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அதைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகிய மூன்று மட்டுமே இதற்கு முன் இந்த ஆய்வில் - சில முயற்சிகளுக்குப் பிறகே - வெற்றி பெற்றன. விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகக் களம் இறங்கிய இந்தியா, சுய முயற்சியில் தொடர்ந்து சாதிக்க இந்த வெற்றி, நல்ல ஊக்குவிப்பாகத் திகழும். இந்தியாவின் மங்கள்யான், அமெரிக்காவின் 2 ரோவர் கலங்கள், ‘மாவென்’ கலம் என்று நான்கு ஆய்வுக்கலங்கள் இப்போது செவ்வாயைச் சுற்றிவருகின்றன. செவ்வாய் ஆய்வை இணைந்து மேலும் பயனுள்ள வகையில் எப்படி மேற்கொள்ளலாம் என்று இந்திய, அமெரிக்க விண்வெளி முகமைகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. செவ்வாய் ஆய்வுக்கு இப்போது அனுப்பிய ஆய்வுக்கலத்தைவிட அதிக எடையுள்ள விண்கலத்தை இனி அனுப்புவது என்று முடிவெடுத்தால், அதற்கும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தயாரித்து வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்த கிரையோஜெனிக் இன்ஜினுடன் நாம் தயாராகவே இருக்கிறோம். ஆக, விண்வெளி நம் வசப்படுகிறது.
தேசம் முழுவதும் கொண்டாடப்படும் இத்தகைய சூழல்கள்தான், நம்முடைய இளைய தலைமுறையிடம் அறிவியல் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கச் சரியான தருணம். பிரதமர் மோடி சொன்னதுபோல, பள்ளிக்கூடங்கள் நம் குழந்தைகளிடம் இந்த வெற்றிச் செய்தியைத் தொடர் கொண்டாட்டமாகக் கொண்டுசெல்ல வேண்டும்; அந்தக் கொண்டாட்டங்கள் கனவு விதைகளாக உருமாற்றப்பட்டு, குழந்தைகளிடம் விதைக்கப்பட வேண்டும்.
நன்றி தி ஹிந்து தமிழ்
No comments:
Post a Comment