அனைத்து மதங்களின் சாரம்.....
‘மதம்' என்பது இப்போது கெட்ட
வார்த்தை ஆகிவிட்டது. அதை அப்படி ஆக்கியவர்கள் வேறு யாருமல்லர், மதவாதிகளே.
மதங்களுக்கு நதிகளை உவமையாகச் சொல்லுவார்கள்.
எங்கே உதித்தாலும், எந்தத் திசை நோக்கி ஓடினாலும் எல்லா நதிகளும்
இறுதியில் கடலையே அடைகின்றன.
அது போன்றே மதங்களும் இறுதியில் ஒரே இலட்சியத்தையே அடைகின்றன.
உதிக்கும் இடத்தில் எல்லா நதிகளும் தூய்மை யாகவே இருக்கின்றன.
தோன்றிய காலத்தில் எல்லா மதங்களும் தூய்மையாகவே இருந்தன.
ஆனால் ஓடும் வழியில் வந்து கலந்த சாக்கடை களால் நதிகள் தூய்மை
இழந்ததைப் போன்றே இடையில் வந்து கலந்த இருண்ட கருத்துகளால் மதங்களும் தூய்மை
இழந்துவிட்டன.
அழுக்கு நீரை அருந்தி, அதிலேயே குளிக்கும் மக்கள் நோய்களுக்கு ஆளாவதைப்
போன்றே கெட்டுப்போன மதங்களைப் பின்பற்றுவோர் இருண்ட கருத்துகளால் மன நோய்களுக்கு
ஆளாகி வருகின்றனர்.
மதம் என்பது இப்போது வெறும் ‘லேபி’ளாக
மட்டுமே இருக்கிறது. புட்டிகளின் மேலே ‘மருந்து’ என்ற லேபிள் ஒட்டப்பட்டிருக்கிறது. உள்ளேயோ நஞ்சு
நிரப்பப்பட்டிருக்கிறது.
மதம் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் போதைப் பொருள் என்றார் காரல்
மார்க்ஸ். இந்தக் கருத்தை மதங்களின் இன்றைய நிலையைப் பற்றிய விமர்சனமாகத்தான் கருத
முடியும்.
உண்மையில் மதங்கள் அறியாமை மயக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களைத்
தட்டி எழுப்பவே தோன்றின.
புத்தரும், மகாவீரரும், இயேசு
பெருமானும், வேத முனிவர்களும், முஹம்மது
நபியும் மக்களுக்கு உதவுவதற்காகவே மதங்களை உண்டாக்கினர். அவர்களை ஏமாற்றுவதற்கல்ல.
பிற்காலத்தில் ஆதிக்க சக்திகளும், மதத் தலைவர்களும் தங்கள்
சுயநலத்திற்காக மதங் களைப் போதைப் பொருளாக்கி மக்களைச் சுரண்டினர்.
பாலம் கட்டப் பயன்பட வேண்டிய கற்களால் சுவர்கள் எழுப்பப்பட்டன.
வெளிச்சம் தருவதற்காக ஏற்றப்பட்ட விளக்குகளால் வீடுகள் எரிக்கப்பட்டன.
ஆலிவ் இலையை அலகில் ஏந்தி வந்த வெள்ளைப் புறா வல்லூறு ஆகிவிட்டது.
அதன் அலகில் மனிதச் சதை.
பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதம் காலப்போக்கில் ஆலகாலமாகிவிட்டது.
எல்லா மதங்களுக்கும் எது அடிப்படையோ அது மறக்கப்பட்டது.
எல்லா மதங்களையும் எது இணைக்கிறதோ அது மறைக்கப்பட்டது.
உயிர் நேயம் என்ற உயர்ந்த போதம் கற்பிக்க வந்த மதங்கள் பேதம்
கற்பித்தன.
எல்லா மதங்களின் கைகளிலும் இரத்தக் கறை!
யூதன் ஒருவன் யூத குரு ஒருவரிடம் சென் றான். ‘‘ஐயா!
நான் பாமரன். நம் வேதம் ‘தோரா’வோ
மிகப் பெரியதாய் இருக்கிறது. அதை முழுதும் படிக்க என்னால் முடியாது. நான் ஒரு
காலைத் தூக்கிக் கொண்டு நிற்பேன். வலியெடுத்து நான் கால் மாற்றுவதற்குள் நம்
வேதத்தின் கருத்துகளைச் சுருக்கமாகக் கூற முடியுமா?” என்று
கேட்டான்.
குருவுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘எனக்கு வயது 84. நான் 15 வயதிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கே தோரா புரிய வில்லை. நீ கால் மாற்றுவதற்குள் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமோ?
போடா மூடா!’’ என்று திட்டி அனுப்பிவிட்டார்.
பாவம் அவன். பல குருமார்களைச் சந்தித்துக் கேட்டான். எல்லோரும்
திட்டி அனுப்பி விட்டனர்.
இறுதியில் ஞானி ஒருவரிடம் சென்று கேட்டான். அவர் ‘‘நீ கால்
மாற்றும் வரை காத்திருக்க வேண்டாம். நீ காலைத் தூக்கும் நேரத்தில் சொல்லிவிட
முடியும்” என்றார்.
அவன் வியப்புடன், ‘‘சொல்லுங்கள்’’ என்றான்.
‘‘உனக்கு எது வெறுப்பானதோ, அதை நீ உன் சக
மனிதருக்குச் செய்யாதே’’
(தால்முத் சப்பாத் 3/ஏ) என்றார் அந்த ஞானி.
‘‘இவ்வளவுதானா? வண்டி வண்டியாய் எழுதப்பட்டிருக்கிறதே.
அவையெல்லாம் என்ன?’’ என்று அவன் கேட்டான்.
‘‘நான் சொன்னதுதான் வேதத்தின் சாரம். மற்றவையெல்லாம் அதன் விளக்கவுரைகள்’’
என்றார் அந்த ஞானி.
இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென் றால் அந்த ஞானி சொன்னது யூத
மதத்தின் சாரம் மட்டுமல்ல; எல்லா மதங்களின் சாரமும் அதுதான்.
இந்த வாசகம் இடம்பெறாத சமய நூல்களே இல்லை. அதில் சொல் வேறுபாடு
இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்து ஒன்றே.
தாவோயிஸத்தின் தாய் ஷாங்கான் இங்பியன் கூறுகிறது:
‘உன் அண்டை வீட்டானின் லாபத்தை உன் லாபமாக நினை.
அவனுடைய நஷ்டத்தை உன் நஷ்டமாக நினை’.
கன்ஃபுஷிய மத நூலான அனபெட்ஸ் (15.33) கூறுகிறது:
‘பிறர் உனக்குச் செய்யக்கூடாது என்று நினைப்பவற்றை நீ பிறருக்குச் செய்யாதே’.
ஹிந்து மத தர்மங்களையெல்லாம் தொகுத்துத் தரும் மஹாபாரதம் (5.1317) கூறுகிறது:
‘பிறர் உனக்கு எதைச் செய்தால் வேதனை என்று நினைக்கிறாயோ, அதை நீ பிறருக்குச் செய்யாதே’.
புத்த மதத்தின் ‘உடன் ஸ்வர்க்’ (5.18) கூறுகிறது:
‘எது உன்னைப் புண்படுத்தும் என்று நினைக் கிறாயோ, அதை
நீ பிறருக்குச் செய்யாதே’.
கிறித்துவ மத நூலான புதிய ஏற்பாட்டில் (மத்தேயு 7.12) இயேசு
பெருமான் கூறுகிறார்:
மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறார்களோ, அவை களை
நீங்களும் அவர் களுக்குச் செய்யுங்கள்’.
இஸ்லாமியச் சமய நூலான ஹதீஸில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)
கூறுகிறார்:
‘உங்களில் எவரும் தாம் விரும்புவதைத் தமது சகோ தரனுக்கும் விரும்பாதவரை
அவர் இறை நம்பிக்கையாள ராக மாட்டார்’.
திருவள்ளுவர் (குறள் 326) கூறுகிறார்:
‘இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.’
மதவாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர், தத்தம்
மத நூல்களில் கூறப் பட்டிருக்கும் இந்த ஓர் அறத்தை மட்டும் கடைப்பிடித்திருந்தால்
உலகில் போரும் பூசலும் ஏற்பட்டிருக்குமா?
மதவாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோராலேயே பெரும்பாலும் போரும்
பூசலும் ஏற்படுகின்றன. இதிலிருந்தே இவர்கள் தத்தம் மத நூல்களில்
கூறப்பட்டிருக்கும் இந்த அறிவுரையை அறியாதிருக்கின்றனர் என்பது விளங்குகிறது. எனவே
இவர்கள் மதவாதிகள் அல்லர்; இவர்கள் சமூக விரோதிகள்.
இங்கே மதம் படித்தவர்கள் மிகக் குறைவு. மதம் பிடித்தவர்களே அதிகம்.
மதத் தலைவர்களும் மனித நேயத்தை வற்புறுத் தும் இத்தகைய உயர்ந்த
அறத்தைத் தம் மத மக்களுக்குப் போதிக்காமல் பேத உணர்வை உண்டாக்கும் புறச்
சின்னங்களுக்கும் போலிச் சடங்குகளுக்குமே முக்கியத்துவம் தருகின்றனர்.
சக மனிதனை நேசிக்காத எவனும் தன்னை மதவாதி என்று கூறிக் கொள்ள
முடியாது.
இவர்கள் உண்மையில் மத விரோதிகள்; மானுட விரோதிகள்; எனவே மகேசனுக்கும் விரோதிகள்.
இவர்களை நாத்திகர்கள் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் நாத்திகரான
பெரியாரும் எல்லா மதங்களும் கூறிய அதே அறத்தையே மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய ‘உயர்ந்த
ஒழுக்கம்’ என்கிறார்.
‘ஒருவன் மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று
விரும்புகிறானோ, அதைப் போன்றே அவனும் மற்றவனிடம்
நடந்துகொள்வதுதான் ஒழுக்கமாகும்.’
(பெரியாரின் சிந்தனைகள், தொகுதி 2, பக். 1084).
சரி, நாத்திகர்களாவது இதைக் கடைப் பிடிக்கிறார்களா
என்றால் இல்லை; அவர்கள் ஆத்திகர்களை இழிவாக ஏசுவதே அவர்கள்
ஒழுக்கமாக இருக்கிறது.
ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் ஒன்றில் மட்டும் ஒற்றுமை
இருக்கிறது. தங்கள் தலைவர்கள் சொன்னதைக் கடைப்பிடிக்காமல் இருப்பதில்.
----கவிக்கோ அப்துல் ரகுமான்
நன்றி: தி இந்து (10.10.2015 இதழ்)
No comments:
Post a Comment