”புன்னகையுடன் சேவை”
Service with A Smile
தமிழ்
மாநில போரம் சார்பில் புதுவை சிறப்புக் கருத்தரங்கம்
அகில
இந்திய சங்கங்களுடைய கூட்டமைப்பின் (போரம்) முடிவின்படி தமிழ்
மாநில அதிகாரிகள்-- ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து புதுச்சேரியில் ஜனவரி 19 ம் தேதி சிறப்பு கருத்தரங்கை நடத்தின.
இது கோரிக்கை மாநாடல்ல, நிர்வாகத்தின் நிர்பந்தத்தால்
நடந்ததும் அல்ல.
நமக்கு
நாமே ஏற்றுக் கொண்ட புத்தாண்டு உறுதிமொழியை –நமது நிறுவனமான BSNL ஐ மீண்டும் லாபமீட்டும்
நிறுவனமாக மாற்றிக்காட்டுவது என்ற – சபதத்தை சல்லிவேராய் பணியாற்றும் தோழர்கள் வரை எடுத்துச் செல்ல-, உணர்வூட்ட, புதிய உத்வேகம்
பெற நடத்தியது. அதனை நிறைவேற்றும்
முதல் வழிமுறையாக புத்தாண்டு முதல் 100 நாள் திட்டம் நமக்கு நாமே வகுத்துக் கொண்டதுதான் Service
with A Smile அதை
உலகறிய முழக்கமிட்டு பிரகடனப்படுத்த நடத்தப்பட்ட கருத்தரங்கம்.
புதுச்சேரி போரம் தோழர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். புதுவை
கம்பன் கலையரங்கம் ஓர் அற்புதமான மண்டபம்.
மண்டபத்தைச்
சுற்றி BSNL-ன் சிறப்புகள், மழை வெள்ளத்தில் மக்களோடு களத்தில் நின்ற மாண்பு, அமலில் உள்ள
டெலிபோன், மொபைல் திட்டங்கள் என கட்டியம் கூறும் எளிமையான தட்டிகள் நம்மை வரவேற்றன. மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 800 தோழர்கள் கலந்துகொண்டனர். நமது மாவட்டத்திலுருந்து 120-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அழைப்பிதழில்
இடம் பெற்ற அனைவரும் வருகை தர கருத்தரங்கம் காலை 10 மணிக்குத் துவங்கியது, புதுவை, கடலூர் குடந்தை கோட்டங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பொதுமேலாளர் திருமதி S.லீலாசங்கரி ITS, தமிழ் மாநில முதன்மைப் பொதுமேலாளர் திருமதி N. பூங்குழலி ITS உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் முழுமையாகக் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில போரம் தலைவரும் NFTE மாநிலச் செயலருமான தோழர் R.பட்டாபி அவர்களின்
சீரிய தலைமையில் கருத்தரங்கம் துவங்கியது. NFTE அகில இந்திய சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும், புதுவை மாவட்டத்தலைவருமான தோழர் P. காமராஜ் வரவேற்புரையாற்றினார். அவர் தமது வரவேற்புரையில் ( ஆண்டாள் நோம்பிற்கு மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் வாய்த்தது எனத் திருப்பாவை துவக்கியது போல) ஜனவரி 19 நாள் நமக்கு பொருத்தமாக அமைந்தது என்றார்,
இந்த
நாள் தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்
ஆகியோர் பொது வேலைநிறுத்தத்தில் உயிர்த்தியாகம்
செய்த நாள். நடைபெறும் இடம்
தொலைபேசிச் சேவைக்காக நோட்டீஸ் வெளியிட்ட புதுவைத் தலைவர்கள் பழிவாங்குதலை நெஞ்சில் ஏற்ற இடம்,
அதுமட்டுமல்ல
தரைவழி தொலைபேசி இணைப்புகள் அதிகம் உள்ளதும் தொடர்ந்து லாபம் ஈட்டும் மாவட்டம்.
இத்தகைய
மாவட்டத்தில் நடைபெறும் கருத்தரங்கிற்கு அனைவரையும் மகிழ்ந்து வரவேற்கிறேன் என்றார்.
வரவேற்புரையைத் தொடர்ந்து, மாநிலச் செயலர்களின்
கருத்துரை இடம்பெற்றது. தோழர்கள் M.S. ராதாகிருஷ்ணன் (AIBSNLOA), S.சிவக்குமார்(AIBSNLEA), R.ராஜசேகர்(SNEA),
P.சென்னகேசவன் (NFTE), A.பாபுராதாகிருஷ்ணன்(BSNLEU) கருத்தரங்கின் நோக்கங்களை எடுத்துரைத்தனர்.
அடுத்து தோழர். பட்டாபி ஆழமான தலைமையுரை யாற்றினார். அவர் தமது தலைமையுரையில், அன்று இதே நாளில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் நோக்கம் பொதுத்துறையைப் பாதுகாப்பது, தேசம் காப்பது .
அதே உயர்ந்த கொள்கையோடு அதனை மேலும் மக்களுக்காக முன்னெடுத்துச் செல்லவேண்டி இக்கருத்தரங்கம். மூன்று பிரதானமான அம்சங்கள்.
ஒன்று, பொதுத்துறைகளைப் பாதுகாப்பது, எனவே பொதுத்துறையான BSNL ஐ பாதுகாப்பது, இரண்டாவது
கடும் போட்டிகளுக்கு மத்தியில் BSNL ஐ வளர்ச்சியுறச் செய்வது—விஸ்தரிப்பது , அதன் மூலம் மக்களின் நலம் மற்றும் மக்களின் பொதுச் சொத்தைப் பாதுகாப்பது. மூன்றாவது, ஜனநாயகப்படுத்துவது. ஜனநாயகப்படுத்துவது
என்றால் அது உள்ளேயும் வெளியேயும் அமல்படுத்தப்பட வேண்டும்.
வாடிக்கையாளர்களின் --
–மக்களின்— சேவை குறித்த அனைத்து அம்சங்களிலும் வெளிப்படைத்தன்மையோடு அது வெளிப்படவேண்டும். அதே
போல ஊழியர் நிர்வாக உறவுகளில் ஜனநாயகத்தன்மையை உத்தரவாதப்படுத்துவது. அந்த
வகையில் நமது இந்த நூறு நாள் முகமலர்ந்த சேவையாற்றுவது என்ற திட்டம் நமக்குப் பெரிதும் உதவும்.
இதயசுத்தியோடு
இதனை நாம் அமல்படுத்துவோம். நிர்வாகம்
ஆக்கபூர்வமாக நம்முடன் ஒன்றிணைந்து செயலாற்றுவது நமக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது என்றார்.
தோழர் S.செல்லப்பா தமிழக போரம் கன்வீனர் அறிமுக உரையாற்றினார். அமெரிக்காவிலும்
கூட வீட்டிற்குள்ளே மொபைல் சிக்னல் வராத நிலைமையைக் கண்டேன்.
அப்போதுதான்
தெரிந்து கொண்டேன் இந்தியாவில் மட்டுமல்ல அந்த நிலைமை என்று.
அடுத்து BSNLEU அகில இந்தியப் பொதுச்செயலாளரும் போரத்தின் அகில இந்திய கன்வீனருமான அருமைத் தோழர்
P. அபிமன்யு
அவர்கள் நீண்ட சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் இன்றைய எதார்த்த நிலைமைகளை எடுத்துக்கூறி நமது கடமைகளை வலியுறுத்தினார். அரசாங்கத்தின்
கருத்து நமக்குத் தெரியாததல்ல, பிரதமர் மோடி பேசுகிறார் the business of the Government is not to
do any business வியாபாரத்தை
நடத்துவது அரசாங்கத்தின் வேலை இல்லை என்று.
நமக்குத்
தெரியும் அது உலக வங்கியின் குரல் என்று. ஆனால் அதையும் மீறி பொதுத்துறையான
BSNL ஐ வளர்ச்சிப் பாதையில் அதிகாரிகளும் ஊழியர்களும் மாற்றிக்காட்டுவோம் என்று உத்வேகமூட்டினார்.
அடுத்து NFTE
அகில இந்தியப் பொதுச்செயலாளரும் போரத்தின் அகில இந்தியத் தலைவருமான அருமைத் தோழர் C.C.சிங் அவர்கள் ஆங்கிலத்தில் சுருக்கமாக கருத்துகளைப் பதிவு செய்தார்.
அவரது
உரை வருமாறு: பாண்டிச்சேரி பல தலைவர்களைத் தந்த மாநிலம்.
சுதந்திரப்
போராட்டத்திற்கு முன்பே இந்தியாவில் 8 மணி நேர வேலைநேரத்திற்காகப் போராடி வெற்றிகரமாக அமல்படுத்திய மாநிலம்.
பலவகையில்
புதுவை முக்கியத்துவம் உடையது. தோழர் அபிமன்யு
உங்களுடைய மொழியில் பேசினார்,
நாம்
ஆற்றும் பணியில் சேவையில் ஓர் அர்ப்பணிப்பு உணர்வை உள்ளீடாக மாற்றுவது, அத்தகையப் பணிக்
கலாச்சாரத்தை கிளை மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும்.
அப்படிச்
செய்தால்தான் நாம் வெற்றி பெற முடியும்.
போரத்தில்
நாம் உருவாக்கியுள்ள ஒற்றுமை அதனைச் சாத்தியப்படுத்தும் என நம்புகிறேன். போரம்
உறுப்பினர்கள் 100 நாள் திட்டத்திற்கு மேலதிகமான முக்கியத்துவம் தருகிறோம். CMD நமது முயற்சியை மனந்திறந்து பாராட்டினார். புன்முறுவலுடன் சேவை என்றால் என்ன? ஊழியர்கள் மன நிறைவோடிருந்தால் வாடிக்கை யாளர்களும் மகிழ்வோடு இருப்பார்கள் என்பதை கூறி ஊழியர்களின் பிரச்சனைகளை அணுக வற்புறுத்துகிறோம். சேவையில்
முன்கை எடுப்பதைப் போன்றே மனிதவள பிரச்சனைகளிலும் நிர்வாகத்துடன் நாம் கடுமையாக போராடி பல பிரச்சனைகளில் தீர்வு கண்டுள்ளோம். நமக்குப் பல பிரச்சனைகள் உண்டு. என்றாலும் BSNL நிறுவனத்தைக் காப்பதை நாம் நமது தலையாய கடமையாகக் கொண்டுள்ளோம். இந்த
கருத்தரங்கின் மூலம், நாம் துவங்கியுள்ள 100
நாள் திட்டத்தின்
மூலம் நாம் நமது தோழர்களை வற்புறுத்திக் கேட்டுக் கொள்வோம் : இன்னும் சற்று கூடுதலாக உழைப்போம், சேவையை புன்னகையுடன்
செய்வோம்,மேலும் மேலும்
வாடிக்கையாளர்களை நமது நிறுவனத்தின் பால் ஈர்ப்போம்.
பழுதுகளை
உடனுக்குடன் சரி செய்வோம். நமது BTS களைப் பழுதின்றிப் பராமரிப்போம்.
நான் உங்களுடன் மகிழ்ச்சியாக ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். CMD பேசும் போது சொன்னார், விமானத்துறை இயக்குநர்
தன்னிடம் வியப்புடன் கூறியதாக. அவர் கூறினார்
சென்னை வெள்ளத்தின்
போது BSNL
ஊழியர் ஒருவர், அப்பட்டமாக உண்மையைக்
கூறுவதென்றால், வெள்ளத்தில் நீந்தி வந்து லீசுடு லைன் சர்க்யூட்டை சரிசெய்து விமான சேவைக்கு உதவினார்.
அதனால்
விமான சேவையை இயக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் மற்ற
தனியார் நிறுவனங்களின் தனியார் சர்க்யூட்கள் பழுது நீக்கப்படவில்லை. விமான
இயக்குநர் கூறினார் விமான நிலையத்தில் எங்கு வேண்டுமோ BSNL
டவர்களை நிர்மாணித்துக் கொள்ளுங்கள் என்று. அந்த ஊழியரின் பணியால் BSNL ஐ மற்றவர்கள் பார்க்கும்
பார்வையே மாறிவிட்டது. எனவே தான் கூறுகிறேன் உங்களால் சாதிக்க முடியும்.
நாம் பெற்றிருக்கும் MRI மருத்துவத்திட்டம்
மற்ற நிறுவனங்களில் இருப்பதை விட மேலானது. அந்த மருத்துவ
உதவியைப் பெறுவது சுலவமாக்கப்பட தொடர்ந்து முயல்கிறோம். அதே போல PLI போனஸ், முன்பு போல நிர்வாகம் சண்டித்தனமாக மறுக்க வில்லை.
அட்ஹாக்
போனஸ் வழங்குவது குறித்து ஒரு நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது. 78,2 DA பெற்றுவிட்டோம் ஆனால் வீட்டு வாடகைப்படி HRA
78,2 அடிப்படையில் தரப்படவில்லை. இந்தப்பிரச்சனையை நாம் தேசியக் குழுவில் எழுப்பஉள்ளோம். இந்த
அடிப்படையில் நமது பிரச்சனைகள் விரைவாக இல்லையென்றாலும் தீர்க்கப்பட்டே வருகின்றன.
இந்தத்
தீர்வுகள் மத்திய மட்டத்தில் இணைந்த செயல்பாட்டால் மட்டுமே எட்டப்பட்டுள்ளன.
ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் வருகிறதே, இனி எப்படி
இணைந்த செயல்பாடு, தீர்வு என்று
சிலர் சந்தேகம் எழுப்புவர். உண்மைதான்
சரிபார்ப்புத் தேர்தலில் போட்டியிடுவோம், ஆனால் அது இணக்கமான முறையில் நட்புரீதியில் நடைபெறும் போட்டியாக இருக்கும், இந்தப் பிரச்சனைத்
தீர்வடையாததற்கு அவர்தான் காரணம் எனக் குற்றம்சாட்டும் போக்கு இராது.
தேர்தல்
போட்டி கடுமையானதாகவே இருக்கட்டும், முடிவுயாதானும் ஆகுக.
ஒன்று
உறுதி தேர்தலுக்குப் பின்னும் நாம் ஒற்றுமையாகவே செயல்படுவோம். வாழ்த்துகள் நன்றி” என்று கூறி
தனது உரையை நிறைவு செய்தார்.
நமது மரியாதைக்குரிய தமிழ்மாநில முதன்மைப் பொதுமேலாளர் திருமதி N. பூங்குழலி, ITS அவர்கள் கருத்தரங்கில்
உரையாற்றினார். முதலில்
அது சம்பிரதாயமான உரை அல்ல. அது மட்டுமல்ல
மற்றவர்கள் பேசும் போது ஆழ்ந்து கவனித்து உடல்மொழியால் எதிர்வினையும் ஆற்றி அவர் முழுமையாக கருத்தரங்கில் பங்கேற்ற விதம் உணர்வுபூரணமானது. நல்ல
தமிழ், கவிதை நடை, விரவிய பாடல்வரி எடுத்துக்காட்டுகள். நாம் நன்றி பாராட்டுகிறோம். எடுத்த
எடுப்பிலேயே அவர் தொடுத்த வினா ”புன்னகையுடன் சேவை 100 நாள்” என்கிறீர்களே with
smile always என்றல்லவா
இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கில் தொலைபேசி நிலையங்கள்
நெடிய உள்கட்டமைப்பு வசதிகள், காலங்காலமான அனுபவம், எவரிடமும் இல்லாத இரண்டு லட்சம் மனிதவளம் இவ்வளவும் இருந்தும் நாம் நஷ்டம் அடைகிறோம்.
ஏன் நஷ்டம்? போனஸ் முதலிய
சலுகைகள் பறிபோகும் நிலைமை. ஒரு இறுக்கமான
சூழ்நிலை நிலவுகிறது என்பது உண்மைதான்.
ஆனாலும்
விருட்ஷத்தைத் தாங்கும் விழுதுகளாக நாம் மாற வேண்டும்.
இந்த
நிறுவனம் தான் நமக்குச் சோறு போட்டது. இதனை லாபம்
ஈட்டச் செய்வது நமது கடமை.
தாய்க்கு
நிகரானது, ஏன் தாய்க்கும்
மேலானது நமது நிறுவனம்.
நாம் நமது டார்கெட்டை அடைந்து வருகிறோம்.
லேண்ட்
லைன் பகுதியில் 62% பிராட்பேண்டில் 65%, GSM ல் 56% எட்டியுள்ளோம். உங்களுடைய ஒத்துழைப்பிற்கு நன்றி. சிம் விற்பனையில்
இன்னும் முன்னேற்றம் வேண்டும். BSNL ல் பணியாற்றுகிறோம் என்ற பெருமை நமக்கு வேண்டும். உழைப்பு – அதிக
உழைப்பு – கூடுதல் உழைப்பு – கடின உழைப்பு அதுவே இன்றைய தேவை. அந்த வகையில்
BSNL
மேப்பில் தமிழகத்திற்கு தலை நிமிர்ந்த இடம் உண்டு.
பழுதற்ற
சேவை ஒன்று மட்டுமே நாளைய நல்ல பொழுதை விடியச் செய்யும்.
நன்றி
வணக்கம்!
அடுத்து PGM
(நிதி) திரு ரவி சார் கடுமையான பணிகளுக்கு மத்தியில் வந்திருந்து வாழ்த்தினார். தமது வாழ்த்துரையில் முதன் முறையாக சென்ற ஆண்டு இயக்குதல் லாபம் (Operating profit) கண்டுள்ளோம். நிகர
நஷ்டம் தொடர்ந்தாலும் வருவாய் கூடிவருவது மகிழ்ச்சி தரும் செய்தி.
ஆண்டுதோறும்
ஓய்வு பெறுபவர்களுக்கு லீவு சேலரி வகையில் 55 % மனிதவளச் செலவு தொடரவே செய்யும். அந்த சதவீதம்
எப்போது குறையுமென்றால் நமது வருவாயைப் பெருக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியம்.
அதனால்
மட்டுமே நஷ்டமும் குறையும்.
கடுமையான
இலக்கு, என்றபோதும் அது
சாத்தியமற்றது அல்ல.
கூடுதலாக
உழைப்போம், உற்சாகத்தோடு, புன்னகையோடும்
என வாழ்த்தினார்.
SNEA
சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர் K. செபாஸ்டின் தமது உரையில் ராஜஸ்தான் மாநில அனுபவத்தைக் கூறினார். அங்கு மதியம் 3 மணி வரை பதிவாகும் தரைவழிப் பழுதுகள் அன்று மாலைக்குள்ளும், மாலை 5 மணி வரை பெறப்படும் பிராட் பேண்ட் பழுதுகளும் அன்றே சரிசெய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் பயன் பெறுகிறார்கள் என்றார்.
திரு P. சந்தோஷம், ITS, (Sr. GM NWP-CFA சென்னை
அவர்களும், திரு P.V. கருணாநிதி ITS
GM NWP - CFA சென்னை
அவர்களும்,
தோழர்
P.
வேணுகோபால் AIBSNLEA
சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும் உரையாற்றினர்.
அடுத்து நமது பகுதி பொதுமேலாளர் திருமதி லீலா சங்கரி அவர்கள் நான் முதலில் பேசி எங்கள் பகுதிக்கு உங்களை எல்லாம் வரவேற்றிருக்க வேண்டும். எனினும் புதுவைக்கு
உங்களை எல்லாம் வரவேற்பதில் மகிழ்ச்சி.
நமக்கு
எங்கே லாபம் வருமானம் வருகிறதோ அதற்கும் இப்போது ஆபத்து.
மாநில
அரசுகள் தமக்கான லீசுடு லைன் பராமரிக்கப்போவது மட்டுமின்றி மாநில அரசுகளே பிராட் பேண்ட் சேவை துவங்க உள்ளதாக செய்திகள் வருவது கவலைக்குரியது என்றார்.
கடைசியாக தோழர் K. ராஜசேகரன் AIBSNLOA
அகில இந்தியத் தலைவர் கருத்துரையாற்ற BSNLEU
புதுவை மாவட்டச் செயலர் தோழர் A சுப்பிரமணியன் நன்றி
கூற கருத்தரங்கம் காலத்தே இனிதே நிறைவேறியது.
நாம் உறுதி ஏற்கும் போது அல்லது ஒரு விரதத்தை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அனுசரிப்போம். நமது 100 நாள் திட்டம் இரண்டு மண்டலமாகும். அப்படி அனுசரிக்கும் போது அதுவே நமக்கு பழக்கமாகி, அது நமது
வழக்கமாக என்றென்றும் எப்போதும் என மாறிப் போகும் என பின்னர் பேசிய தலைவர் குறிப்பிட்டது போல புன்னகையுடன் சேவையை நமது டூல்ஸ் பேக்கில் இணைத்துக் கொள்வோம். கருத்தரங்கின் செய்தியை
கிளைகளுக்கு எடுத்துச் செல்வோம்.
நாம் தனியாகச் செய்யக் கூடியது BSNL
திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருப்பது, அதனை மக்களுக்குப் பயன்படும் வகையில் உதவுவது, சந்தைப்படுத்துவது.
நாம் குழுவாகச் செய்ய வேண்டுபவைகள் குறித்து இணைந்து திட்டமிட்டு செயலாற்றுவது,
( உதாரணம்
மேளாக்களுக்கு ஏற்பாடு செய்வது அவற்றில் பங்கேற்பது முதலியன )
மூன்றாவது, கருவிகள் உதிரிபாகங்கள்
கேபிள் டிராப் ஒயர் தேவைப்படும் இடங்களைக் கண்டறிந்து நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டுவருதல் என பலவாறாக நமது நிறுவனத்தின் வருமானம் உயர்ந்திட பாடுபடுவோம்.
நாம் முடிவு செய்தால் நம்மை வெல்வார் யார் உண்டு? உறுதியோடு களத்தில்
இறங்குவோம் கடுமையான வெள்ளத்தில் நம்மால் சேவையாற்ற முடியுமென்றால், சாதாரண காலத்தில் முடியாதா என்ன?
புன்னகையும் நம்மிடத்தே
கருவியாகட்டும் !
புன்னகையே புதிய
போர்ப் பாட்டு !
புன்னகையே புதுப்
போர்அணிவகுப்பு !
சிம் விற்பனையில்
அட்டையை அல்ல,
புன்னகையோடு புதிய
உறவைத் தொடங்குவோம்!
No comments:
Post a Comment