‘கோட்டை’டா NFTE
வேலூர் மாநில மாநாட்டு செய்தித் தொகுப்பு
இம்மாதம் ஜூலை 20, 21, 22 தேதிகளில் தமிழ் மாநில சங்கத்தின் மாநில மாநாடு மாநிலத் தலைவர் தோழர் லட்சம் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இலட்சிய நோக்கம் கொண்ட தோழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். அனைவருக்கும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை உபசரிப்பை வேலூர் தோழர்கள் கண்ணுறங்காது செய்திருந்தனர். வரவேற்புக்குழு பொதுச் செயலாளர் தோழர்.நெடுமாறன் தலைமையில் மாவட்டச் செயலர் தோழர்.அல்லிராஜா, தோழர் மதி, தோழர்.சென்னகேசவன், வெங்கடேசன் உள்ளிட்ட வேலூர் தோழர் அனைவரும் கருமமே கண்ணாய் கருத்தாய் உழைத்தனர். தோழர்களுக்கு நம் பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகும். அவர்களின் பணிக்கு எடுத்துக்காட்டு மாநாட்டுக்கு முன்புதான் அல்லிராஜாவின் குடும்பத்தில் மிகப் பெரிய சோகம் இழப்பு. அதன் சாயலே இல்லாமல் தோழர் மாநாட்டுப் பணியிலேயே பம்பரமாய் சுழன்றார் எனில், உங்கள் அத்துணை பேரின் உழைப்புக்கு தலை வணங்குகிறோம். இப்படிப் பணியாற்ற பயிற்றுவித்த ஊக்குவித்த NFTE சங்கத்திற்கு செவ்வணக்கம்.
மாநாட்டு நன்கொடையாக கடலூர் மாவட்டத்தின் சார்பில் ரூபாய் 70 ஆயிரம் மட்டுமே வழங்கினோம் என்றாலும் 22 பார்வையாளர்கள் உட்பட நிறைவான சார்பாளர்கள் 191 பேர் கலந்து கொண்டு மாவட்டங்களில் முதன்மை பெற்றோம். உணர்வோடு கலந்து கொண்ட நமது தோழர்களுக்குப் பாராட்டு.
மாநில மாநாட்டின் நிதிச் செலவுகள் அனைத்தையும் வேலூர் தோழர்கள் அனைவரும் தாங்கள் அளித்த சொந்த நன்கொடை மூலமே ஏற்றனர். அது மட்டுமல்ல, உணர்வோடு “சங்க’த்தில் “கூட்டுற”வாய் செயல்பட்டு வெற்றி பெற்றனர். தவறான நோக்கத்தோடு வார்த்தைகளை முன்பின்னாகப் போட்டால் மாறி மாறி தவறான கருத்தே தோன்றும். காரை படிந்தால் இதயம் மட்டுமல்ல இயக்க ஓட்டமும் சீர்கெடும். தோழமையோடு வேண்டுகிறோம் தவறான பிரச்சாரம் தவிர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறோம்
20-ம் தேதி மாலை கூடிய மாநிலச் செயற்குழு இரவு 9 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில மாநாட்டு செயல்பாட்டறிக்கை, வரவு செலவு கணக்கு முன் வைக்கப்பட்டு செழுமையான விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர் தோழர் இஸ்லாம், பொதுச் செயலாளர் தோழர் சந்தேஷ்வர் சிங், தோழர் ஆர்.கே., தோழர் சேது கலந்து கொண்டது சிறப்பு. STR பகுதித் தோழர்களை சார்பாளர்களாக அனுமதிப்பது பற்றி நீண்ட விவாதம் எழுந்தது. அந்தத் தோழர்களை இந்த மாநாட்டில் சார்பாளர்களாகப் பங்கேற்க அனுமதிப்பது என்ற பொதுச் செயலாளர் C.C.சிங் வழிகாட்டுதல் ஏற்கப்பட்டது.
கோலாகலமான மாநாடு துவங்கியது
தோழர் மணி தலைமையில் தர்மபுரித் தோழர்கள் தியாகிகளின் ஜோதியை ஏந்தி வந்தனர். அச் ஜோதியை வேலூர் மாவட்டத் தலைவர் தோழர் வெங்கடேசன் பெற்றுக்கொண்டார்.
லட்சியப் பாதையில் வழிநடத்த தோழர்.லட்சம் மாநாட்டு தலைமையேற்க வரவேற்புக்குழுப் பொதுச் செயலாளர் வேலூர் தோழர் நெடுமாறன் வந்திருந்தோரை வருவிருந்து நோக்கி வாஞ்சையோடு வரவேற்றார். மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் குடந்தைத் தோழர் ஆர்.ஜெயபால் மாநில சங்கத்தின் சார்பில் ஆற்றல் மிக்க சார்பாளத் தோழர்களை சங்கம் ஆற்றிய அளப்பரிய சாதனைகளைச் சொல்லி ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவூட்டி வரவேற்றார்,
கருத்தரங்கின் நோக்கத்தை மாநிலச் செயலர் தோழர் பட்டாபியின் செறிவான, ஆழமான, அறிவார்ந்த கருத்துகள் நிறுவனம் நிலைபெற தொழிற்சங்கங்களின் கவலையை புரிதலை வெளிப்படுத்துவதாக அமைந்தது. நிர்வாகத்தின் நிலைபாடுகளை, இலக்குகளை எட்ட தொழிலாளர்களின் ஒத்துழைப்பின் இன்றியமையாமையை கருத்தரங்கில் உரையாற்றிய முதன்மைப் பொதுமேலாளர் திருமதி என். பூங்குழலி, PGM (நிதி) திரு ரவி மற்றும் பொதுமேலாளர் (HR) திருமதி சுபத்ரா எடுத்துரைத்து BSNL வெல்லும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தினர்.
விடைபெறும் மாநிலச் செயலருக்குப் பாராட்டு
எந்தத் தியாகமும் வீண் போவதில்லை, தியாகங்களை நாம் மறந்து போவதோ, அவைகளை மறந்து நாம் மரத்துப் போவதோ இல்லையென தியாகிகளுக்கு மாநிலத் துணைத் தலைவர் தோழர் வீ.லோகநாதன் அஞ்சலி உரையாற்றினார்.
அவையெல்லாம் வழிமொழிவதே போல சங்கநாதமென முன்னாள் சம்மேளனச் செயலர் தோழர் ஆர்.கே. எழுச்சிமிக்க துவக்க உரையாற்றினார்.
தோழமைச் சங்கத் தலைவர்களின் வாழ்த்துரை
ஒன்று பட்டால் உண்டு வாழ்வெனச் செயல்படும் தொழிலாள வர்க்கத் தலைவர்களான மாநிலச் செயலர்கள் வாழ்த்துரை தந்தனர்.தோழர்கள் .பாபு ராதாகிருஷ்ணன் (BSNLEU), என். பாலகிருஷ்ணன் (PEWA), எஸ்,சிவகுமார் (AIBSNLEA), ஆர்.ராஜசேகர் (SNEA), முத்துக்கிருஷ்ணன்(SEWA), எம்.எஸ். இராதாகிருஷ்ணன் (AIBSNLOA) முதலானோர் தோழமையை வெளிப்படுத்தி மாநாட்டினை நிறைவாய் வாழ்த்தினர்.
BSNL வருவாய் பெருக்கம் சேவைக் கருத்தரங்கம்
ஆண்டறிக்கை, நிதிநிலை அறிக்கை தாக்கல்
கருத்துப் பெட்டகமாக, வரலாற்று ஆவணமாக மிகப் பொறுப்போடு தயாரிக்கப்பட்ட ஆண்டறிக்கையை அறிமுகப்படுத்தி மாநிலச் செயலர் தோழர் பட்டாபி ஆற்றிய உரை அறிக்கையின் பிழிவை, சாராம்சத்தை தெற்றென விளக்கிய அற்புத உரையாக அமைந்தது. அவரது உரையில் மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று நமது கடலூர் மாவட்ட சங்கம் நடத்திய ஒலிக்கதிர் பொன்விழா, அனைத்து சங்கங்களின் கருத்தரங்கம் மற்றும் மாநிலம் தழுவிய மாவட்டச் செயலர்கள் அமர்வு முதலியவற்றை சிறப்பாகக் குறிப்பிட்டார். விழாக்கள் என்றால் அது கடலூர் விழாக்கள்தான் என முத்தாய்ப்பான அவரது சான்றிதழ் நிகழ்வுகளின் வெற்றிக்கு உழைத்த நம் தோழர்களையேச் சாரும். மேலும் சங்க அங்கீகாரத் தேர்தலில் கடலூர் மாவட்டம் ஏழு சதவீதம் கூடுதல் வாக்குகளை இம்முறை குவித்தமைக்குப் பாராட்டு தெரிவித்தது நம் தோழர்களை மேலும் ஊக்கத்தோடு செயல்படத் தூண்டும் என்பது உறுதி.
நிதிநிலை அறிக்கையை மாநிலப் பொருளாளர் தோழர் கே. அசோகராஜன் தாக்கல் செய்து சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளித்தார்.
பொது அரங்கு
மாலையில் நடந்த பொதுஅரங்கில் சகோதரச் சங்கங்களின் அகில இந்தியத் தலைவர்கள் உரையாற்றினர். TMTCLU மாநில பொதுச் செயலர் தோழர் R.செல்வம், TEPU பொதுச்செயலர் தோழர் சுப்புராமன், SEWA அனைத்திந்தியத் தலைவர் தோழர் P.N. பெருமாள், இவர்களோடு தமிழ் மாநில சங்கத்தின் வலிமைக்குக் காரணமான முன்னாள் மாநிலச் செயலர்கள் அருமைத் தோழர்கள் க, முத்தியாலு, ஆர்.கே., எஸ். தமிழ்மணி, எஸ். மாலி, சம்மேளனச்
செயலர்கள் தோழர் S.S கோபாலகிருஷ்ணன் மற்றும் தோழர் G.ஜெயராமன்
ஆகியோர் நெகிழ்வான உரை தந்தனர். மேலும் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி நம்பிக்கை உரை நல்கினார் சென்னை மாநிலச் செயலர் தோழர் C.K.மதிவாணன். நாம் இப்படிக் குறிப்பிடக் காரணம் அழைப்பில், போஸ்டரில் அவர் பெயர் இடம் பெறவில்லை. தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதுதான்.
ஆனாலும் தோழர் சி.கே.எம் வந்து கலந்து கொண்டது நமக்குச் செய்த சிறப்பு. காலம் தோழமையைக் கனியச் செய்திருக்கிறது. எனவே சிறப்பாக அதனைக் குறிப்பிட்டோம். பொது அரங்குக்கு மகுடம் சூட்டியதாக அமைந்தது AITUC
பொதுச் செயலாளர் தோழர் மூர்த்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலர் அருமைத் தோழர் இரா.முத்தரசன் ஆற்றிய உரைகளே.
ஆண்டறிக்கை, அமைப்பு நிலை விவாதம்
இரவு அமைப்பு நிலை விவாதம் தொடங்கியது. ஆண்டறிக்கை மீது சார்பாளர்கள் விவாதித்தனர். நமது மாவட்டத்திலிருந்து தோழர் V.இளங்கோவன் பேசினார். மறுநாள் காலை மாநாடு துவங்கியதும் விவாதம் தொடர்ந்தது. செயல்பாட்டை செழுமையாக்கும் வகையில் விவாதத்தில் முன் வைக்கப்பட்ட கருத்துகளைத் தொகுத்து சிறப்பான தொகுப்புரையை மாநிலச் செயலர் வழங்க ஆண்டறிக்கை ஏற்கப்பட்டது. மாநிலப் பொருளாளர் முன்வைத்த வரவு செலவு அறிக்கை ஏற்கப்பட்டது.
மகளிர் அமர்வும் இளைஞர் அமர்வும்
இளைஞர்கள் கையில் நாடு மட்டுமல்ல, நமது சங்கமும்தான் என்பதை
எடுத்துக்கூறியது இளைஞர்கள் அமர்வு. இளைஞர்களின் சார்பில் நமது மாவட்டத்திலிருந்து தோழர் S.ஆனந்தன் மற்றும் மாவட்டச் செயலர் தோழர் இரா. ஸ்ரீதர் உரைவீச்சு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. மேலும் பொதுத் தளங்களில் மகளிரின் பங்கேற்பு வரவேற்க வேண்டிய
வளர்க்கப்பட வேண்டிய தேவை பெரிதும்
உள்ளது. அதனைச் சிறப்பாக வெளிப்படுத்தியது மகளிர் அமர்வு. கூடுதல் சிறப்பு மாநாட்டில் பெண்களின் பங்கேற்பு இம்முறை கூடியுள்ளது. இதற்கென குடும்பத்தில் அவர்கள் எதிர் கொள்ள வேண்டிய நெருக்கடிகளை நினைந்து பார்த்தால் தோழியர்.லைலாபானு
தலைமையில் பங்கேற்ற தோழியர்கள், அனைவரையும் நன்றியோடு பாராட்டுவது நமது கடமை.விடைபெறும் மாநிலச் செயலருக்குப் பாராட்டு
பணிநிறைவுக்குப் பிறகு பதவியில் தொடரமாட்டேன் என்பதை முன்பே தெளிவாக்கியவர் தோழர்.பட்டாபி. மாநாடே ஒரு சேர வற்புறுத்தினால் மாற்றிக்
கொள்வார் தம் கொள்கைநிலையை என நம்பிய தோழர்கள் பலர். கொள்கையைப் போலவே கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும் கறாரானவர் நமது மாநிலச் செயலர் என அறிந்த பிறகு தன்னெழுச்சியாக மாவட்டங்கள் சார்பில் தனித்தனியே அவருக்கு சிறப்பு செய்ய நன்றி பாராட்ட முன்வந்தனர். மாவட்டத்தின் சார்பில் சிறிய சீரிய நினைவுப் பரிசுகள் அளித்தனர். தோழர் பட்டாபியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் முனைந்தனர். ஒரு பாராட்டு விழா எனத் திட்டமிட்டிருந்தால்கூட இவ்வளவு நெகிழ்வானதாக உணர்வோடு உறவாடுவதாக உயிர்ப்புள்ளதாக அமைந்திருக்காது என்ற வகையில் சிறப்பான பாராட்டுவிழாவாக அமைந்தது. அதனினும் சிறப்பு தோழர் பட்டாபியின் துணைவியார் தோழியர் ஹேமலதா பட்டாபிராமன் ஆற்றிய சுருக்கமான மனதில் என்றும் நிலைத்திருக்கும் ஏற்புரை. வாழ்க தோழரும் தோழியரும் பல்லாண்டு, தொடர்க தொய்விலா வர்க்கப்பணி, எம்மோடு தோழமையும் அறிவார்ந்த உரையாடலோடு பல்லாண்டு என இதயங்கள் ஒன்றுகூடி வாழ்த்துவோம்!
தீர்மானங்கள்
செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்று வெற்றிகரமாக்குவோம் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன (தீர்மானங்கள் தனியே பின்னர்)
புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநாடு அறிவிக்கப்பட்டதிலிருந்து பலரது ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டிய விஷயம். இம்முறையும் சரிபார்ப்புத் தேர்தலில் NFTE சங்கம் முதன்மை பெற்று விட்டதே. கோட்டையிலே வெட்டு குத்து விழாதா என்ற நரித்தனமான நப்பாசை சிலருக்கு. கட்டுரைத் தலைப்பு போலவே “கோட்டைடா NFTE“ என்பதை உலகுக்கு எடுத்துக்கூறும் வகையில் ஒருமனதான ஒன்றுபட்ட நிர்வாகிகள் பட்டியலை மாநாடு தேர்ந்தெடுத்து ஏற்றது. இலவு காத்தக் கிளியாகக் காத்திருந்தவர்களுக்கு சும்மா அதிருதில்ல என்றநிலை.
காலத்தின் தேவை ஒற்றுமை என உணர்ந்து இந்த ஒற்றுமையை ஏற்படுத்த கடுமையாக பாடுபட்டவர்கள் நமது மூத்த தலைவர்கள் ஆர்.கே., சேது, சி.கே. மதிவாணன் ஆகியோர் பெரும் பங்காற்றினர். தொடக்கத்திலிருந்து இந்த ஒற்றுமையை விரும்பிய கடலூர் மாவட்ட சங்கம் மற்றும் மாவட்ட தோழர்கள் தலைவர்களுக்கு நன்றி பாராட்டுகிறது. தோழர் இரா ஸ்ரீதர் முன்மொழிய திருச்சி மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் வழிமொழிந்த புதிய நிர்வாகிகள் பட்டியலை வேலூர் மாநாடு ஒருமனதாக ஏற்றது.
புதிய மாநில சங்க நிர்வாகிகளுக்கு நமது தோழமை வாழ்த்துகள்!
No comments:
Post a Comment