.

Friday, August 5, 2016

சம்மேளனச் செயலர் தோழர் ஜி. ஜெயராமன் அவர்களின்
இலாக்காப் பணிநிறைவு பாராட்டுவிழா நடத்திட
கடலூர் மாவட்டச் சங்கம்
எடுத்த முன் முயற்சிகள் குறித்த சில விவரங்கள்

 06-06-2016 அன்று கடலூர் மாவட்டச் செயலகக் கூட்டத்தில் தோழர் ஜி. ஜெ. அவர்கள் 31-07-2016 ல் ஓய்வு பெற இருப்பதையொட்டி அவருக்கு மாவட்டம் தழுவிய அளவில் மிகச் சிறப்பாகப் பணிநிறைவு பாராட்டுவிழா மாவட்ட சங்கம் சார்பில் நடத்துவது குறித்து முன்மொழியப்பட்டது. கூட்டத்தில் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். இறுதியாக செயலகக் கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்து உறுப்பினர்களிடமும் ரூபாய் 200/= (ரூபாய் இருநூறு குறைந்த பட்சமாக) நன்கொடை பெறுவது, விழாவை மாவட்டச் செயலர் மற்றும் மாநிலச் செயலர் இவர்களின் பங்கேற்புடன் தோழர் ஜி.ஜெ. விரும்புகின்ற தலைவர்களை அழைத்து மிக விமர்சையாக பாராட்டு விழாவினை நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. (இதனை மாவட்டச் சங்கத்தின் வலைப்பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டது.)

 செயலகக் கூட்டத்தின் இந்த முடிவினை மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மற்றும் மாவட்ட அலுவலகக்கிளை மூத்த தோழர் பி. ஜெயராஜ் அவர்களும் நேரிடையாக சம்மேளனச் செயலர் தோழர் ஜி.ஜெ. அவர்களைச் சந்தித்து தெரிவித்தனர்.  அது போழ்து தோழர் ஜி.ஜெ. பல ஐயப்பாடுகளை வினாக்களை எழுப்பினார்.  அது குறித்து விளக்கங்கள் தரப்பட்டன.  

குறிப்பாக மாவட்ட சங்க விழாவை எளிமையாக அலுவலக வாயிலில் நடத்தப்பட வேண்டும் என்ற அவரது யோசனை ஏற்கப்பட்டது. அவர் விருப்பத்திற்கேற்ப தமிழ் மாநில சங்க நிர்வாகிகளை அழைப்பதற்கும் ஒப்புதல் தரப்பட்டது.  இறுதியாக இது பற்றிய முடிவை தோழர் பி, சுந்தரமூர்த்தி உங்களை வந்து சந்தித்து தெரிவிப்பார் என்பதை ஏற்று நாமும் நம்பிக்கையாகச் சென்றோம்.

 பலமுறை தொடர்பு கொண்ட பிறகு ஒருநாள் காலை மாவட்ட சங்க அலுவலகத்தில் தோழர் பி, சுந்தரமூர்த்தி மாவட்டச் செயலரை சந்தித்தார்.  நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக தோழரின் அணுகுமுறை எதிர்மறையாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. மாவட்ட சங்கம் கூறிய பாராட்டுவிழாவுக்கு தங்களுக்கு விருப்பம் இல்லை சம்மதமில்லை என்று இறுக்கமாகத் தெரிவித்தார்.

 அன்றைய தினம் உடனே ஒற்றுமைக்கு முயலும் ஒருங்கிணைப்பாளரான அப்போதைய தமிழ் மாநிலப் பொருளாளர் தோழர் கே. அசோகராஜன் அவர்களைத் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தோம். அப்படிப்பட்ட முடிவேதும் இல்லை, நான் தோழர்களுடன் கலந்தாலோசித்து விட்டு நல்லதொரு சூழல் உருவாக முயற்சித்து நல்ல முடிவைத் தெரிவிக்கிறேன் என்று தோழர் கே. அசோகராஜன் தெரிவித்தார்.  நாமும் காத்திருந்தோம்.

 பல நாட்களுக்குப் பிறகு மாவட்ட சங்க பாராட்டு விழாவை ஏற்பது என்பது சாத்தியமில்லை, தங்களது முடிவில் மாற்றமில்லை என்ற முடிவைத் தெரிவித்தார்.

 மாவட்ட சங்க விழாவை மறுத்து தனிக் குழுவின் சார்பாக சம்மேளனச் செயலர் தோழர் ஜி.ஜெயராமன் அவர்களுக்குப் பாராட்டுவிழா நடத்துவது ஆரோக்கியமான போக்கில்லை, நல்ல மரபும் இல்லை என்பதை தோழர் கே. அசோகராஜனிடம் கூறியபோது மிகச் சிறப்பாக நடைபெற்ற நம்முடைய தொழிற்சங்க முன்னோடி தலைவர் தோழர் டி, ரகுநாதன் அவர்களுக்கு நடத்திய பாராட்டு விழாவைச் சுட்டிக்காட்டினோம். மாவட்ட சங்கத்தின் சார்பில் தோழர் டி,ஆர். பணி ஓய்வு பாராட்டுவிழா நடத்தியபோதும் மாவட்டச் செயலராக இருந்தவரும் இன்றைய மாவட்டச் செயலாளர் தோழர் இரா. ஸ்ரீதர்தான்.  அனைத்து கலைநிகழ்வுகள் மற்றும் தலைவர்களின் பாராட்டு உரை இடம் பெற்ற அந்த விழாவில் இந்திய கம்யூனிட் கட்சியின் அன்றைய தமிழ் மாநிலச் செயலர் தோழர் இரா நல்லகண்ணு அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்.  அதே போல நடத்தலாம் என்பதும் சுட்டிக் காட்டிய பின்னரும் தனிக் குழுப் போக்கு தொடர்வது வருத்தத்திற்குரியது.

 வேறு எந்த அமைப்பின் சார்பாக வேறு எந்த விழாக்களுமே நடத்தக் கூடாது என்பது நமது நிலைபாடல்ல.  ஆயிரம் பூக்கள் மலரட்டும். சம்மேளனச் செயலர் தோழர் ஜி.ஜெயராமன் அவர்களின் பல்திறப்பட்ட திறமைகளுக்கு ஏற்ப கலை அமைப்புகள், வர்க்க அரசியல் அமைப்புகள் என எத்தனை விழாக்கள் வேண்டுமானாலும் நடத்துவது சரியே.  ஆனால், சிறப்பானது தாய்வீட்டு சீதனம் போல தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனமாம் NFTE பேரியக்கத்தின் மாவட்ட சங்கம் முன்னின்று நடத்தும் விழாதான். அது மறுக்கப்படுவது என்பது வேதனைக்குரியது.  அந்தச் சூழ்நிலையில் வேறு எந்த குழுவின் பாராட்டுவிழாவோடும் மாவட்ட சங்கம் உடன்படுவது என்பது தோழர் ஜி.ஜெயராமன் அடிக்கடி வற்புறுத்திவரும் ஸ்தாபனக் கோட்பாடுகளுக்கு மாறானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

 நான்கு நாட்கள் கழித்து ஒரு ஞாயிற்றுக் கிழமை. மாவட்ட சங்க அலுவலகத்தில் அனைத்துக் கிளைச் செயலர்கள் கலந்து கொண்ட டெலிகாம் மெக்கானிக் சுழல் மாற்றல் குறித்து நிர்வாகம் வழங்கிய பட்டியல் மீது ஆய்வுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.  அப்போது தோழர் பி. சுந்தரமூர்த்தி தொலைபேசியில் மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் தோழர் வீ. லோகநாதனிடம் பேசினார். தங்கள் தனிக் குழுவின் சார்பாக ஆகஸ்ட் மாதம் சம்மேளனச் செயலர் தோழர் ஜி.ஜெயராமன் அவர்களுக்கு நடத்தும் பாராட்டுவிழா அழைப்பிதழில் மாவட்டச் செயலர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பெயரைப் போடுவதற்கு ஒப்புதல் கேட்டார்.  அதற்கு இருவரும் தனிக் குழு பாராட்டு விழாவில் தங்களுக்குச் சம்மதமில்லை எனவே தங்கள் பெயரைப் போட வேண்டாம் எனத் தெளிவாக தெரிவித்து விட்டனர்.

 இதையும் மீறி அழைப்பிதழில் தோழர் இரா. ஸ்ரீதர் மாவட்டச் செயலர் பெயரோ அல்லது தோழர் வீ. லோகநாதன் மாநில துணைத் தலைவர் பெயரோ இடம் பெறுமென்றால் அது அவர்கள் ஒப்புதலை மீறி போடப்பட்டதே. அப்படி அவர்கள் பெயர் பயன்படுத்தப்படுமானால் அது தோழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்றே நோக்கத்தோடு செய்யப்படுவதேயாகும்.

எனவே, தனிக்குழுவின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவிற்கும்  NFTE  கடலூர் மாவட்ட சங்கத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  மாவட்ட சங்கம் அத்தகைய தனிக்குழு விழாவில் பங்கேற்காது என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

 எவ்வாறாயினும் சம்மேளனச் செயலர் தோழர் ஜி.ஜெயராமன் அவர்களுக்குப் பாராட்டுவிழா நடத்திட கடலூர் மாவட்டச் சங்கம் தோழர் ஜி.ஜெ. அவர்களின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.  நதியின் பயணத்தில் எத்தனையோ நெளிவு வளைவு சுளிவுகள், சுழல்கள். நதியின் ஓட்டம் எங்கேயும் தேங்கி நின்று விடுவதில்லை. மதுரையோடு காலம் உறைந்து போவதும் இல்லை, வேலூரும் காலத்தைச் சிறைப்பிடிக்கும் கோட்டையுமல்ல. காலம் அனைவருக்கும் பாடம் சொல்லித் தரும் அற்புத ஆசான்.  
இன்னும் காலமிருக்கிறது காத்திருப்போம்.  
கடலூர் மாவட்ட சங்கம்…...


   

   

No comments:

Post a Comment