கடலூர் தமிழ் விழா
கடலூர் மாவட்டச் சங்கம் நிறுவிய தோழர் சிரில் நினைவு அறக்கட்டளையின்சார்பில் 19வது ஆண்டாக BSNL குடும்ப மாணாவர்களுக்குப் பரிசு வழங்கும் தமிழ்விழா மிகச் சிறப்பாக 6-7-18 மாலை நடைபெற்றது.
அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒருவிழா என்றால் மிகை யில்லை. 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முதல், இரண்டாம் இடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.2000/= மற்றும் ரூ 1500/= ரொக்கப்பரிசும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் புத்தகங்களும் பரிசளிக்கப்படுகின்றன. அறக்கட்டளையின் சிறப்பே பரிசளிப்பதில் சங்க வித்தியாசம், அதிகாரி தொழிலாளி வித்தியாசம் பார்ப்பதில்லை. அதிலும் இவ்வாண்டு முதல் பரிசு பெற்ற மாணவரின் தந்தை ஓர் ஒப்பந்தத் தொழிலாளி என்பது கூடுதல் சிறப்பு.
தோழர் எஸ்ஸார்சி அறிமுக உரையில் NFTE
சங்கம் சமூகப் பொறுப்புணர்வோடும்மொழி உணர்வோடும் எல்லோரும் பேசும் வகையில் இவ்விழாவை 19 ஆண்டுகளாகச் சிறப்பாக நடத்தி வருவதைப் பாராட்டினார். கடலூர் மண்ணில் தோன்றிய பெருமக்கள், விடுதலைப் போராளி அஞ்சலை அம்மாள் அவர் தம் குடும்பம், ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தன், நமனை அஞ்சாத அப்பர் என கடலூரின் சிறப்பைக் கூறி சிரிலின் அரவணைப்பில் வளர்ந்த நம் தலைவர்கள், அவர்கள் தொண்டாலும் தமிழாலும் நம்மைக் கட்டிப்போட்ட மண்ணில் இளைஞர் சமஸ் அவர்கள் ஆற்ற உள்ள உரை நம்மை மேலும் உற்சாகப்படுத்தட்டும் என்றார்.
பொது மேலாளர் மாணவர்களுக்குப் பரிசளித்தபோது ஒரு நெகிழ்ச்சி. செஞ்சி ஒப்பந்த ஊழியர் தோழர் சி. வெங்கடேசன் தம் மனைவியோடும் மகள் செல்வி கவியரசியோடும் 10ம் வகுப்புக்கான முதல் பரிசைப் பெற்றார். அது நம் சங்கம் செம்மாந்து நின்ற தருணம். காஷுவல் மஸ்தூர்கள் உள்ளே நுழைய முடியாத ஒரு இடத்தை எப்படி மாற்றிக் காட்டியிருக்கிறோம் என்ற பெருமை. இந்த மாற்றத்தைக் காண நம் தலைவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது.
பொதுமேலாளர் தமது சுருக்கமான பேச்சிலும் பாரதி, பாரதிதாசன் கவிதை வரிகளைக் குறிப்பிட்டார். சங்கம் வளர்த்தத் தமிழின் தனிச் சிறப்பைப் பாராட்டினார்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர். எனினும் பிற மொழிகளைக் கற்றுத் தேர்வது, படிப்பது தவறில்லை என்று சொல்லி தமிழில் வாழ்த்துவதில் மகிழ்வதாகக் குறிப்பிட்டார்.
அடுத்து சிறப்பு விருந்தினர் தோழர் சமஸ் அவர்கள் ’’சொல் புதிது, பொருள் புதிது” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். துவங்கும் போதே கூறினார், உங்கள் தலைவர்கள் போல நான் முழக்கமிட்டுப் பேசி பழக்கமில்லாதவன்.
கலந்துரையாடுவதிலேயே விருப்பம் அதிகம் கொண்டனவன். எனவே உரையின் பிற்பகுதியில் பாதி கேள்வி பதிலாக வைத்துக் கொள்ளலாம் என்றார். அவர் கூறியபடியே கடலூர் தமிழ் ஆர்வலர்கள் வினா எழுப்ப அற்புதமான விளக்கமளித்தார். உண்மையில் தனது உரையில் அவர் புதுமை செய்தார். இன்றைய ஏழையின் தாத்தா ஏழையாக இருந்தபோதும், அப்போது ஏழை என்பதன் வாழ்வியல் நிலைமை வேறு பொருள் வேறு. இன்றைய வாழ்வியல் நிலைமைக்கு ஏற்ப பொருளும் மாறுகிறது. ஆனாலும் வார்த்தை அதே ஏழைதான். சுற்றுச் சூழல், அரசியல் அமைப்பு, மொழிப்போர், தாய்மொழி, மக்கள் உரிமை, மக்கள் போராட்டம் என அவரது உரை ஆர்பாட்டமில்லாது விரிந்து சென்றது, எல்லோரையும் சிந்திக்கத் தூண்டுவதாய் அமைந்தது. இவ்வாண்டு தமிழ்விழா ஒரு மைல்கல் என்பதில் ஐயமில்லை.
விழாவின் இறுதியில் தோழர் க. ஜெயச்சந்திரன் நன்றிகூற வேணுகோபால் இசையில் நாட்டுப்பண்னோடு விழா நிறைவு பெற்றது. நெஞ்சம் நிறைந்தது. எளிய இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பான பிளக்ஸ் விளம்பர ஏற்பாடுகளை ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் M.S. குமார் செய்திருந்தது, அழைப்பு விடுபட்ட தமிழ் ஆர்வலர்களையும் தாமே முன்வந்து கலந்து கொள்ளச் செய்தது. அறக்கட்டளைக்கு மேலும் உறுப்பினர்கள் பரவலாக இணைக்கப்பட்டது விழாவின் வெற்றிக்கு மேலும் உதவியது. விழாவின் வெற்றியோ முன்னர் பிரச்சனையாகப் பேசப்பட்ட அறக்கட்டளை நிதியை வங்கியில் முறையாக பெயர் மாற்றம் செய்வதில் நிறைவேறி கடலூர் மாவட்டச் சங்கச் செயல்பாட்டு ஒற்றுமைக்கு வித்திட்டுள்ளது பாராட்டிற்குரியது.
No comments:
Post a Comment