.

Saturday, August 25, 2018

பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கம்
               
ஆகஸ்ட் 22ம் தேதி கடலூரில் பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளில் சுமார் 150 தோழர்கள் குழுமி இருந்தனர்.  நிகழ்வு இம்மாதம் பணிநிறைவு பெறும் மாநிலத் தலைவர் தோழர் P. காமராஜ் அவர்களுக்குப் பாராட்டுவிழா.  சம்பிரதாயமான பாராட்டுவிழாவாக அது இல்லாமல், பாராட்டுவிழாவை ஒட்டி ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தது கடலூர் மாவட்டச் சங்கம். தலைப்பு ”வளரும் தொழில் நுட்பமும் எதிர்வரும் ஊதிய மாற்றமும்”
        மாவட்டத் தலைவர் G. கணேசன் தலைமை தாங்க ஆர். பன்னீர் செல்வம் வரவேற்க, E. வினாயகமூர்த்தி அஞ்சலி உரையில் மறைந்த தலைவர்கள் கலைஞர், வாஜ்பாய், சோமநாத் சாட்டர்ஜி மற்றும் கேரளா மழை வெள்ளத் தேசியப் பேரிடரில் உயிரிழந்த மக்களுக்கும் --  கூட்டத்தினரின் இரண்டு நிமிடம் மௌனத்தோடு -- அஞ்சலி செலுத்தினார்.
       
கருத்தரங்கத் துவக்க உரையாற்றிய மாநிலச் செயலர் கே. நடராஜன் தமது உரையில் பண்டிகை விடுமுறை நாளில் திரளாக கூடியிருந்த தோழர்களைப் பாராட்டினார். ஊதிய மாற்றத்திற்காக நமது சங்கம் தகுந்த நேரங்களில் தலையிட்டு, தேவையெனில் தனித்துப் போராடி மாற்றங்களை உறுதியாக கொண்டு வந்ததை வரலாற்று பூர்வமாக விவரித்தார். குறிப்பாக, அனுராதா பாண்டே குழு அமைக்கப்பட்டாலும், Terms and Reference சொல்லப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி DPE வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட NFTE தனித்துப் போராடியது. நிதி ஆயோக்கிடமிருந்து நமது நிறுவனம் பங்கு விற்பனைப் பட்டியலில் இல்லை என்பதற்கான கடிதத்தை வாங்கியது, பிரதமரின் தலையிடு கோரி நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியது என்ற பலவற்றையும் மற்றும் கூட்டுப் போராட்டங்களையும் விவரித்தார்.  தற்போதைய 8வது சுற்றுப் பேச்சுவார்த்தை துவங்கிடும் முன்பே சங்கங்கள் இணைந்து பேசி குழுவிடம் நமது முன்மொழிவுகளை ஒருமனதாகத் தந்துள்ளதைக்கூறி வாழ்த்துக்களைத் தெரிவித்துத் துவக்க உரையை நிறைவு செய்தார்.
        தோழர் பட்டாபி கருத்தரங்கச் சிறப்புரையாற்றினார்.  அவர் 
தமது உரையின் துவக்கத்தில் மாவட்டத் தோழர்களைப் பாராட்டி, மணிவிழா காணும் நமது மாநிலத் தலைவருக்கு வாழ்த்துக் கூறி எந்தநிலையிலும் அவரது பணி தொடரும்.  கடலூரில் நீங்கள் அறிந்த காமராஜ் இன்று பல தலைவர்கள் அலங்கரித்த பொறுப்பை ஏற்று இந்தியா முழுவதும் அறிந்த தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.  அவருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.
        தொழில் நுட்பம் என்றால் வளரத்தான் செய்யும்.  நமது சம்பளம் பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். இன்றைக்கு 4வது தொழில் புரட்சி பற்றி பேசுகிறார்கள்-- Industry FOUR.  முதல் தொழில் புரட்சி விவசாயம், உழவுத் தொழில். திருவள்ளுவர் காலம் தொட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொழில். 18ம் நூற்றாண்டு இறுதியிலும், 19ம் நூற்றாண்டிலும் நிகழ்ந்தது 2 வது ஆலைத் தொழில் புரட்சி –300 நானூறு ஆண்டுகளாக உள்ளது. மூன்றாவது புரட்சி ’விஞ்ஞான தொழில் நுட்பப் புரட்சி’ (Scientific & Technological Revolution) – 90 வருடங்கள் மட்டுமே ஆகிறது. இன்றைக்குப் பேசப்படுவது நான்காவது ’டிஜிடல் இன்டஸ்ட்ரியல் ரெவலுஷன்’ தகவல் தொழில் நுட்பப் புரட்சி.  விளையாட்டாகச் சொல்வதென்றால் ரோபோ இட்லியைத் தயார் செய்து கொண்டு வந்து தரும்.
        காந்திஜி BSNL குறித்துப் பேசியிருக்கிறார். ஆச்சரியமாக இருக்கக் கூடும்.  ஆனால்  மகாத்மா காந்திதான் இந்தக் கேள்வியை முன் வைத்தார் : ’இந்தியாவுக்கு mass production (அதீத உற்பத்தி) வேண்டுமா? அல்லது Production by Mass (பெருந்திரள் மக்கள் கூட்டத்தால் செய்யப்படும் உற்பத்தி) வேண்டுமா?’ இது எப்படி நமக்குப் பொருந்துகிறது என்று பின்னர் பார்க்கலாம்.
        4வது தொழில் நுட்பப் புரட்சி M to M (மெஷினும் மெஷினும்) பேசச் செய்தல். உதாரணத்திற்கு ரிமோட் மூலம் கார் கதவைத் திறப்பது, அலுவலகத்தில் இருந்தபடியே வீட்டைக் கணிணியில் கண்காணிப்பது, கைபேசி மூலம் கழனியில் தண்ணீர் பாய்ச்சுவது – சுருக்கமாக, உற்பத்தியாளரிடமிருந்து நடுவே இடைத்தரகர் ஏஜெண்ட் யாரும் இல்லாமல் செய்து நேரடியாக நுகர்வோருக்குக் கொண்டு செல்லும் முயற்சி எனலாம். இப்போது IoT( Internet of Things ) என்று பேசுகிறார்கள். இதையெல்லாம் செயல்படுத்த 5- G தேவைப்படுகிறது.
        தொலைத்தொடர்புத் துறையில் தனித்தனியாக இருந்த சேவைகளை ஒருங்கிணைப்பு (convergence) செய்யும் முயற்சி 2012ல் துவங்கியது. வாய்ஸ், டேடா, டிவி என அனைத்தும் ஒரே நெட் ஒர்க் கேபிளில் பல சேவைகளையும் ஒன்றாக வழங்குவது. 2018 டிஜிடல் பாலிஸி இதை இன்னும் முன்னோக்கிக் கொண்டு செல்கிறது.
        4G, 5G வாங்க மூலதனம் வேண்டும்.  தனியார் நிறுவனங்கள் பொதுத் துறை வங்கிகளிடம் பெரும் கடன் வாங்கி இதனைச் செய்தார்கள்.  தொகுத்துச் சொல்வதென்றால்  தனியார், ஒரு நூறு ரூபாய் வியாபாரத்தை 123 ரூபாய் கடனில் செய்தார்கள்.  சில ஆயிரம் பேருக்கே வேலைவாய்ப்பு.  தற்போது 2016 அறிக்கையின்படி RBI வங்கிகளிடம் கூறுகிறது, டெலிகாம், ஸ்டீல், பவர் துறைகளுக்கு கடன் தந்து விடாதீர்கள்.  டெலிகாம் துறை இன்று வருமானம் குறைவு, கடன் உச்சத்தில் என்ற நிலையில் உள்ளது.
2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் BSNLல் ரூ100க்கு 2 ரூபாய் மட்டுமே கடன்.  பெருவாரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தந்து நமது சொந்த முதலில் நாம் மார்கெட்  செய்கிறோம்.  தனியார்நிறுவனங்களோ பெரியஅளவிலான உற்பத்தியைக் குறைந்த அளவு வேலைவாய்ப்போடு அதுவும் பொது மக்களின் வங்கிக் கடன் முதலீட்டில் செய்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் காந்தி கூறிய கொள்கையை யார் பின்பற்றுகிறார்கள்?
அடுத்த முக்கிய பிரச்சனை தொழில் நுட்பம் மாறினாலும், வேலைவாய்ப்பு உத்தரவாதம், பணிபாதுகாப்பு வேண்டும் என்பதை நாம் வற்புறுத்துகிறோம். பேருந்தில் பயணிக்கும் போது நடத்துநர் பேசிய பேச்சு எனக்கு ஒரு உண்மையைப் புரிய வைத்தது. கலெக்க்ஷன் இல்லை என்று வருத்தப்பட்ட அவர் நாளை வேலை என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டார்.  முதலாளியின் நலன் பாதுகாக்கப்படும் வரையில்தான் தனியார் துறையில் தொழிலாளிக்குப் பணி பாதுகாப்பு என்ற பேருண்மையை அவர் எனக்கு விளங்க வைத்தார். பணியாற்றும் துறையின் வளர்ச்சியில் தான் பணிப்பாதுகாப்பு உள்ளது என்பதை நம்முடைய தொழிலாளர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

டிஜிடல் பாலிஸியில் BSNL நிர்வாகம்/ DOT என்ன கோரி உள்ளது என்பதை அவர்கள் நமக்குச் சொல்லவில்லை.  TRAI-ன் கடிதம் மூலமாக அது நமக்குத் தெரிய வந்தது. BSNL கோருகிறது: 1. பொதுத்துறையின் சேவையைப் பாராட்டிப் போற்றுங்கள் 2. பொதுத்துறை வழங்கும் சேவைகளை மட்டுமே பயன்படுத்த மத்திய மாநில அரசுகளை வற்புறுத்து 3. பொலிவுறு நகர்கள் அமைப்புத் திட்டத்தில்  தொலைத்தொடர்பு அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை BSNLக்கே வழங்கு 4. கிராமப்புறங்களில் வழங்கிய சேவைக்கான இழப்பீடை வழங்கு 5. பாதுகாப்புத் துறையின் நெட்வொர்க் காரிடார், தீவிரவாத பாதிப்புப் பகுதிகளில் டவர் நிர்மாணம், வடகிழக்குப் பிராந்தியங்களின் கட்டுமானப் பணிகள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன (அந்த இடங்களில் தனியார் பணியாற்றுவார்களா என்ன?)

உலகம் முழுவதும் இன்னும் 5G சேவைக்கான ஒழுங்குமுறை தரக்கட்டுப்பாடே இன்னும் வரவில்லை. ஆனால் சிலர் 5 G விளம்பரம் செய்கிறார்கள்.  ரிலையன்ஸ் ஜியோவால் மற்ற நிறுவனங்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேர்மையற்ற முறையில் predatory pricingல் (மற்றவரைக் கொன்றொழிக்கும் விலைக் கொள்கை) ஈடுபடுகிறது. இலவசமாக தற்போது கொடுத்து மற்ற டெலிகாம் நிறுவனங்களை ஒழித்துக்கட்டும் முயற்சி. எனவே non- predatory pricing பாலிசி உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்திற்கான வருமானம் 49 பைசாவிலிருந்து 19 ஆகக் குறைந்துள்ளது. உலகளாவி ஒரு நபரிடமிருந்து கிடைக்கும் வருமானம் என்பது கனடா 45 டாலர், அமெரிக்கா 38, சீனா 8 ஆனால் இந்தியாவிலோ மிக மிகக் குறைந்த கட்டணம் மற்றும் வருமானம் இரண்டரை டாலராக உள்ளது.

இந்தப் பின்னணியில்தான் நாம் ஊதிய மாற்றம் காணப் போராடுகிறோம். தோழர் நடராஜன் பல செய்திகளைச் சொன்னார். அதிகாரிகளுக்கான 3வது PRC கடந்து வந்த பாதையைப் பார்த்தோம்.  ஆனால் ஊழியர்களுக்காக 8வது சுற்றுப் பேச்சு வார்த்தையைத் துவக்கு எனக் கோரியது NFTE தான்.  ஊதிய மாற்றத்திற்கான இருதரப்பு கூட்டுப் பேச்சு வார்த்தைக்கான குழு அமைக்கக் கோரினோம்.  18 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகைய குழு அமைக்கப்பட்டு நிர்வாகம் மற்றும் ஊழியர் தரப்புப் பிரதிநிதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கு முன் அமைந்தது நிர்வாகத் தரப்பு குழு மட்டுமே.
 
19ம் தேதி குழு அமைக்கப்பட்டு 20ம் தேதி கூடியது. கடிதத்தில் ஊதிய நிலைகளை வடிவமைக்கும் குழு என்ற தவறான பொருள் தரப்பட்டிருந்ததைத் தமிழகத் தோழர்கள் சுட்டிக் காட்ட அதை சரியான முறையில் ’ஊதிய மாற்றம் செய்யும் குழு’ என திருத்தி மாற்றம் பெற்றது.  புதிய ஊதியத்திற்கான நிலைகளை ஒருமனதாக முன்மொழியப்பட்டுள்ளது.  ஊதியத் தேக்கம் வராத வகையில் ஊதியக் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. நம்மைப் பொறுத்தவரை 35 நிலைகள் இருந்தாலே ஊதியத் தேக்கம் ஏற்படாது. ஆனால் ஒற்றுமைக்காக 43 நிலைகள் என்ற ஒன்றுபட்ட கோரிக்கையை நாம் ஏற்றுள்ளோம்.  விவாதங்களின் அடிப்படையில் சிபார்சுகளை BSNL  போர்டு பரிந்துரைக்க வேண்டும்.  பென்ஷன் மாற்றம் குறித்தும் சில விவாதங்களை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.

ஊதிய மாற்றத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த எதிர்கால இயக்கங்களில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அனைவருக்கும் வாழ்த்துக் கூறி நிறைவு செய்கிறேன்.

பின்னர் மாநிலத் தலைவர் தோழர் P. காமராஜ் பணி நிறைவு பாராட்டுவிழா எளிமையாக இனிதே நிறைவேறியது.  குடந்தை விஜய் நல்லதொரு துவக்கம் செய்ய, புதுவை மாவட்டச் செயலர் தண்டபாணி புதுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டுவிழாவிற்கு அனைவரையும் நேரில் அழைக்க, மாநில நிர்வாகிகள் P. சுந்தரமூர்த்தி, V.லோகநாதன், V.இளங்கோ, TMTCLU பொதுச்செயலாளர் ஆர் செல்வம், முன்னாள் கடலூர் மாவட்டச் செயலர்கள் NKS, P.சுப்ரமணியம், கடலூர் தோழர்கள் அழகிரி, மஞ்சினி, குழந்தைநாதன், பகத்சிங், மகாலிங்கம், நாராயணன் எனப் பல தோழர்கள் காமராஜ் உடன் தங்களது நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்த்துரைக்க, தோழர் தமிழ்மணி, இரா ஸ்ரீதர் இவர்களின் பாராட்டுரைக்குப் பின் தோழர் காமராஜ் ஏற்புரையாற்றினார். 
 அப்போது அஞ்சலில் ஆற்றிய Boy சர்வீசை கணக்கில் கொண்டு தோழர் ஜெகன் உதவியுடன் தோழர் P. ஜெயராஜ் பணிநியமனம் பெற்றுத் தந்தது, TSM ஆக இருந்து இறந்தாலும் வாரிசுக்கு வேலை, கேடர் சீரமைப்பில் BE கல்வித் தகுதி உடைய தோழருக்கு நேரடியாக TTA நியமனம், காஷுவல் மஸ்தூர்களைத் திரட்டியது என்பன நிறைவளிக்கக் கூடியது எனக் குறிப்பிட்டு எதிர்வரும் சரிபார்ப்புத் தேர்தலில் நமது சங்கத்தின் ஓட்டுச் சதவீதம் உயர ஒருங்கிணைந்து பயணிப்போம். நமது பயணம் தொடரும் என நன்றியோடு குறிப்பிட்டார். மாவட்டப் பொருளாளர் A. S. குருபிரசாத் JE நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. நிறைவான செய்திகளும் நெகிழ்வான நினைவுகளுமான கூட்டம். 




Thursday, August 16, 2018

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைந்தார்.


கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில்
கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.

Tuesday, August 7, 2018



கடலூர் மாவட்ட சங்கத்தின் அஞ்சலி

கலைஞருக்கு நமது கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்


வருந்துகிறோம்…
கடலூர் FNPTO லைன்ஸ்டாஃப் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலரும், ஓய்வு பெற்ற லைன் இன்ஸ்பெக்டருமான தோழர் V.லஷ்மிபதி அவர்கள் இன்று (07-08-2018) மாலை 4.00 மணியளவில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.