கருத்தால் சந்திப்போம்..... கல்லால் அல்ல....
அனாமதேயங்களின் அல்ப ஆனந்தம்
அன்பார்ந்த தோழர்களே!
வணக்கம்! அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் !
’மரம் அமைதியாக இருக்க விரும்பினாலும், காற்று அமைதியாக இருக்க விடுவதில்லை’ என்பார்கள்!......
அப்படித்தான், நாம் ஆக்கபூர்வமாக, அமைதியாகச் செயல்பட விரும்பினாலும் –நமது மாவட்டச் சங்கத்தின் தொடர்ச்சியான செயல்பாடு காரணமாகச் சிலர் வயிற்றெரிச்சல் படுகிறார்கள். அந்த எரிச்சலில் புழுதிவாரி இறைப்பது மட்டுமல்ல, நமது மாவட்டச் செயலரைக் கல்லாலும், சொல்லாலும் தாக்கத் துணிந்து விட்டார்கள்.
எனவே, சில சம்பவங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருவது மாவட்டச் சங்கத்தின் கடமை எனக் கருதுகிறோம். மாவட்டச் செயலர் இதனை ஒதுக்கித் தள்ளவே நினைத்தார். பிறகு தொடரும் சம்பவங்களால் நாம் வற்புறுத்த தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.
முதலில்,
நமது மாவட்டச் சங்கத்தின் துடிப்பு மிக்கச் செயல்பாட்டிற்கு அடிப்படை ஆதாரம் நமது மாவட்டச் செயலாளர்; எனவே, மாவட்டச் செயலாளரைக் குறிவைத்துத் தாக்குதல்கள் தொடங்கின. இது சலசலப்புக்கு அஞ்சாத பெரும் படை என்பதை உணராத அவர்களுக்கு அதில் ஓர் அல்ப ’ஆனந்தம்’.
சமீபத்தில் சென்னையில் தொழிற்சங்கப் பணி முடித்து விடியற்காலை 3 மணிக்குச் சிதம்பரம் திரும்பியவர் எப்போதும் போல தனது வண்டியில் வீடு திரும்பும்போது கல்லால் தாக்கப்படுகிறார். தலைக்கவசம் அணிந்திருந்தபோதும் கண்ணில் காயம் பட்டது. தலைக்கவசம் இல்லை என்றிருந்தால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடும். விடியலில், வீதியில் யாரும் இல்லா நேரத்தில் நடந்தது என்பதால் மாவட்டச் செயலர் இதனைச் சாதாரணமாகக் கருதினார். ஆனால் மறுநாள் விபரம் அறிந்த தோழர்கள் அப்படிக் கருதவில்லை. யாரோ தூண்டிவிட்டு நடந்தது என்றே கருதினர்.
மற்றொரு செய்தி –நமது மாவட்டச் சங்கத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களோடு உள்ள தொடர்பு. இதைக் காரணம் காட்டி அந்த அற்பர்கள் மாவட்டச் செயலருக்குத் துறை ரீதியாகத் தொந்தரவு தர முடியுமா என்று அலைகிறார்கள்.
முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடலாம். நமது சங்கம் பாரம்பரியமாக இடதுசாரி கருத்தோட்டத்தோடு ஒத்த கருத்துடையது. நமது மாநாடுகளின் பொது அரங்குகள்,
கருத்தரங்கங்களில் இடதுசாரித் தலைவர்கள், மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள், ஏனைய கட்சித் தலைவர்கள் எனப் பலரையும் அழைத்து உள்ளோம். இந்த நடைமுறை இன்றைய மாவட்டச் செயலாளர் வந்த பிறகு நடைபெறும் ஒன்றல்ல:
இது காலங்காலமாக வெளிப்படையாக நாம் கடைபிடிக்கும் மரபே யாகும்.
அவ்வளவு ஏன், நமது கோரிக்கைகளான டவர் கார்பரேஷன் எதிர்ப்புக் குறித்து அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி இருக்கிறோம்.
இதற்கு முன்பே நம்முடைய தலைவரும், வழிகாட்டியுமான மூத்த தோழர் T.ரகு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு நாம் அழைத்தது, நாடு போற்றும் நல்லவர், சுதந்திரப் போராட்ட தியாகச் செம்மல், பொதுவுடமை போராளி, அகவையில் மூத்த தோழர் R. நல்லக்கண்ணு அவர்கள். அவரைப் பார்க்கும் தோறும் நமக்கு நினைவுக்கு வருவது அவரது தியாகமே. அவர் நமது மாவட்டத்திற்கு வரும்போதெல்லாம் அவரை சந்திப்பதற்கே நாம் தவறியதில்லை. அப்படித்தான் சமீபத்தில் நெய்வேலியில் வந்திருந்த போதும் தோழர்களோடு நமது மாவட்ட செயலர் வரவேற்றார். இது நாம் பெருமை படும் தருணம். ஆனால் இந்த நிகழ்வோ காமாலைக்காரர்களுக்குக் கசக்கிறது.
இன்றைய மாவட்டச் செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் தா.
பாண்டியன் அவர்களைச் சிரில் அறக்கட்டளைத் தமிழ் விழாவுக்கு அழைத்துப் பேசச் செய்திருக்கிறார். அதே விழாவில் அந்தத் தலைவரோடு நமது மாவட்டப் பொது மேலாளரும் கலந்து கொண்டிருக்கிறார். (அவர் மட்டுமா,
வைணவ அறிஞர் திரு இரகுவீர பட்டாசாரியார், சைவ அறிஞரும், கல்லூரி முதல்வருமான திரு அகரமுதல்வன், புதுவை மாநில நீதிபதி, கல்லூரிப் பேராசிரியர், பள்ளி முதல்வர், மற்றும் இந்து தமிழ் திசை நடுப்பக்கக் கட்டுரை ஆசிரியர் திரு சமஸ் எனப் பல்துறை அறிஞர்களும் நமது சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் செய்து நமது சங்கம் பெருமை தேடிக் கொண்டிருக்கிறது.)
இப்படி அறிமுகமுள்ள பிரமுகர்கள் கடலூர் வரும்போது
, நமது மாவட்டச் சங்க அலுவலகத்திற்கு அவர்களை அழைப்பது;
அவர்கள் வரும் நேரத்தைப் பொருத்து அவர்களுக்கு உணவு உபசரிப்பது நமது பண்பாடு. அதைப் பெருமையாக நமது சங்க இணைய தளத்திலும், முக நூலிலும் வெளிப்படையாகப் படத்துடன் செய்தி வெளியிடுகிறோம்.
ஒருமுறை,
’இங்கு எல்லா தலைவர்களின் படங்களும் உள்ளன, ஆனால் பொதுத் துறைகள் மூலம் நவீன இந்தியாவைக் கட்டமைத்த பண்டித நேரு அவர்களின் படம் இல்லையே’ எனச் சுட்டிக் காட்டினார் ஒருவர். அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியாவின் முதலாவது தாய்த் தொழிற்சங்கமான ஏஐடியுசி சங்கத்தின் தமிழ் மாநிலத் தலைவருமான தோழர் கே. சுப்புராயன். அதன் பிறகே நேரு படத் திறப்பு விழாவை நாம் நடத்தினோம். இப்படி அவர்களின் வருகையால் நமது சங்கம் மேலும் செழுமைப்பட்டுள்ளது.
அப்போதெல்லாம், யாரும் இதைத் தவறெனச் சித்தரித்துப் பெரிதுபடுத்த நினைத்ததில்லை – குழிப்பறித்துக் குப்புறத் தள்ளிவிட நினைத்ததுமில்லை. ஆனால் இப்போது என்ன நேர்ந்தது?
மாவட்டச் சங்கத்தின் செயல்பாடுகளால் மாவட்டச் செயலருக்குப் பெருமை கூடுவதாக நினைத்துக் கொண்டு, வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள் – கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிகிறார்கள். தாங்கள் கல்லா கட்டுவது தடைப்படுகிறதே எனக் கலங்குகிறார்கள்.
மற்றொன்றையும் நாம் தெளிவு படுத்த விரும்புகிறோம்: எந்த நிலையிலும் நாம் ’லெட்சுமணன் கோட்டை’த் தாண்டுவதில்லை. தலைவர்களோடு நமக்குள்ள தொடர்பு மாவட்டப் பொதுப் பிரச்சனை
– தொழிற்சங்கக் கோரிக்கைகளோடு மட்டும் நிற்குமே தவிர, ஒருபோதும் அரசியல் என அத்துமீறியதில்லை. இடதுசாரி சிந்தனையோடு தொழிற்சங்க அரங்கம் நமது செயல்பாட்டிற்கான களம் –- அரசியல், அது அரசியல் கட்சிக்காரர்களின் தளம். இதில் நமக்குக் குழப்பம் ஏதுமில்லை. வெளி அரங்கில் இத்தகைய வேறுபாடு அறியாமல் நமது சங்கப் பொறுப்பாளர்களின் பெயர்களைக் கட்சிப் போராட்ட நிகழ்வு துண்டறிக்கைகளில் பயன்படுத்திய போது அவர்களை நாம் திருத்தியது மட்டுமல்ல, அத்தகைய நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டதுமில்லை. ஆனால் இதனைப் பயன்படுத்தி, குட்டையைக் குழப்பி, குழம்பிய குட்டையில் ஆதாய மீன் பிடித்துவிடலாமா என ஆலாய்ப் பறக்கிறார்கள், பாவம்.
சரி, இந்தச் சுற்றறிக்கைக்குக் காரணம் – தன்னை மிகப் பெரிய்ய்ய மா..மா..நி…லச் செயலாளர் எனத் தலைகால் புரியாமல் தடுமாறுபவர், சில ஓடுகாலி உதரிக் கட்சிக்காரர்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் நமது மாவட்டச் சங்கத்தின் செயல்பாட்டைத் தடம் புரளச் செய்யவும் , வேகத்தைத் தடை செய்துவிடலாம் எனவும் நப்பாசைப்படுவதைத் தங்கள் பார்வைக்குக் கொண்டு வருவதுதான். இன்றைய அவர்களின் கண் உறுத்தலுக்குக் காரணம் என்ன?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள் நமது மாவட்டச் சங்க அலுவலகத்திற்கு வந்தது. சரித்திரத்தில் , இந்த வீட்டிற்கு மகாத்மா காந்தி வந்திருந்தார் எனப் பெருமைப்படுவதில்லையா, அது போல – நாம் அவரது வருகையைப் பதிவு செய்தோம். அவருக்குக் காலைச் சிற்றுண்டி அளித்து மகிழ்ந்தோம்.
வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்ததாக நினைத்துக் கொண்டு, நாக்கில் ரத்தம் வர கடித்துக் குதறிக் கொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். அது சரி, ஆனால் இந்த நல் வாய்ப்பு நமக்கு எப்படிக் கிட்டியது?
நமது ஒப்பந்த ஊழியர் சங்கமான
TMTCLU சங்கம் மத்திய
AITUC சங்கத்தின் இணைப்புச் சங்கமாகும். அதன் மாநிலத் தலைவரும்,
NFTE பேரியக்கத்தின் மேனாள் சம்மேளச் செயலருமாகிய தோழர் ஆர்.கே. அவர்கள் காரில் தஞ்சை மாவட்ட நிகழ்ச்சிக்காகச் செல்லும் வழியில் காலை 8 மணிக்கு கடலூர் மாவட்டச் சங்க அலுவலகத்திற்கு வந்தார். அவரோடு காரில் தோழர் முத்தரசனும் வந்திருந்தார். தோழர் ஆர். கே. செல்வது தஞ்சையில் நமது தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த கஜா புயல் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி. ’தானே’ புயலின் போது நமக்கு உதவிய தஞ்சைப் பகுதி மக்களுக்குக் கஜா புயல் கடும் பாதிப்பு களைய நமது மாவட்டச் சங்கமும் தனது சிறிய பங்கைச் செலுத்தியது. தோழர் முத்தரசன் சென்றது கஜா புயல் நிவாரணம் வழங்க அரசை வற்புறுத்தும் தர்ணா போராட்டத்திற்காக. வந்திருந்த தலைவர்களை நாம் உபசரித்தோம் – நிகழ்வைப் பதிவு செய்தோம். ஒன்பது மணிஅளவில் அவர்களும் தங்கள் கடமையாற்றப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
ஆனால், சந்து முனையில் சிந்து பாடும் சில வேலையற்றதுகள் – மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்றன. கடலூர் மாவட்டச் செயலாளர், அலுவலகப் பணியை விட்டு விட்டு, கட்சி வேலை செய்கிறார் என மத்திய மத்திரிக்குப் புகார் அனுப்பியதாக தனது முக நூலில் பதிவு செய்கிறார், ஒரு உதிரி ஓடுகாலி, அனாமதேயம். அட முண்டங்களே, அலுவலகத்திற்கு அலுவலக வேலை நேரம் உண்டு; பணியாற்றுபவர்களுக்கு உணவு இடைவேளை உண்டு ; அலுவலக விடுமுறை நாட்கள் உண்டு என்பது கூடவா தெரியாது?
அதே போல, கடலூர் மாவட்ட மக்களின் அடிப்படை ஜீவாதாரமான கோரிக்கையான ’குடிநீர் வழங்குவதைத் தனியார் கம்பெனிக்குத் தாரை வார்க்காதே – நிலத்தடி நீருக்குக் கட்டணம் விதிக்காதே ’ என்ற கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டது. மற்ற பொது நல அமைப்புகளோடு நமது சங்கத் தோழர்களுடன் மாவட்டச் செயலர் மதிய உணவு இடைவேளையில் போராட்டத்தில் கலந்து கொண்டார். அந்தப் படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி தெரிகிறதாம்,,, எனவே ஐயோ, ஐயோவெனப் புகாரும் பேனாவுமாகப் புறப்பட்டு விட்டனர் காகிதப் புலிகள்.
இதில் வரலாறு யாதெனில்,
நமது சங்கம் அனைத்துக் கருத்தோட்டங்களையும் கொண்ட வானவில் வண்ணக் கலவையான சங்கம் எனக் கூறிய நமது தொழிற்சங்கப் பிதாமகர் தோழர் குப்தா நிலை நாட்டிய உண்மைதான். அனைத்து பிரதமர்களையும் எதிர்த்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய பெருமைக்குரிய குப்தா, ’பிரதமர் பதவி விலக வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் நமது சம்மேளனம் கலந்து கொள்ளாது என மறுத்தவர். அதனால் அவர் மீது விமர்சனம் வந்த போதும் கவலைப்படாது உறுதியாக நின்றவர். ஏனெனில், தொழிற்சங்க அரசியல் கோரிக்கை வேறு – கட்சி அரசியல் கோரிக்கை வேறு என்ற தெளிவு. அவரிடம் பாடம் பயின்றவர்கள் நாம்.
இந்த ஆண்டு ஜனவரி 8, 9 இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில் நாம் கலந்து கொண்டோம். வேலைநிறுத்தத் தயாரிப்புக் கூட்டங்களை நடத்தினோம். ஆனால் பெரிய்ய்ய்ய மா..மா..நிலச் செயலாளர் என மார்தட்டி ஆனந்தப் படுபவர் கலந்து கொள்ளாமல் ஓரம் கட்டி விட்டாரே. சாதாரண காலங்களில் சரியான நேரத்திற்குப் பணிக்கு வராதவர் -- வேலைநிறுத்தம் நடைபெற்றபோது தான் கலந்து கொள்ளாதது மட்டுமல்ல, ஏனைய தோழர்களையும் குழப்ப நினைத்ததற்கு என்ன பெயர்? வரலாறு எட்டப்பர்களை காரியே உமிழ்ந்திருக்கிறது.
மல்லாந்து படுத்து மேலே உமிழ்வது போல நகைப்பிற்குரிய அவர்களின் மற்றொரு எரிச்சல் -- அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் நமது அலுவலகத்திற்கு எதிரே உயர்ந்து நிற்கும் அண்ணல் அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு அவரது நினைவு நாளில் நமது தோழர்கள் மாலை அணிவித்தது. அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பல அமைப்பினரும் மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார்கள். காமாலைக்காரர்கள் உண்மையான சிகப்பைக் கண்டால் மிரள்கிறார்கள். அப்போது அங்கே ஒரு புறத்தில் அடுத்து மரியாதை செய்ய பாரதிய ஜனதா கட்சியினரும் நின்றிருந்தனர்.
அவர்கள் முயற்சி வெற்றியடையப் போவதில்லை.
ஆனாலும் குரைக்காதே என்று சொல்ல முடியுமா – அதுக்கு அது ஆனந்தம். ஆனால் நம்முடைய வருத்தமெல்லாம் தொழிலாளர் வர்க்கக் கோரிக்கையின் பேரில் நடைபெறும் வேலை நிறுத்தத்திலேயே கலந்து கொள்ளாமல் நடையைக் கட்டுபவர்கள், எப்படி ஒப்பந்த ஊழியர் நலனுக்காகப் போராடப் போகிறார்கள்? பாவம், இந்த அப்பாவி ஒப்பந்த உழைப்பாளிகள் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்களே என்பதுதான்.
ஆனால் அதிலும் மாற்றம் வருகிறது. தோழர்கள் உண்மையை உணர்ந்து ஜெகன் போன்ற உன்னதத் தலைவர்கள் நிறுவிய அமைப்பிற்குத் திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கூடாரம் கலைகிறது. கலகலக்கிறது. செலாவணியாகாதச் செல்லாக் காசென்பது வெட்ட வெளிச்சமாகிறது. ’சிலரைச் சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது’
என்பதனால் அவர்களின் சில்லரைத்தனமும் எரிச்சலும் உச்சம் தொடுகிறது.
மேலே சேறு படுமெனில், சற்று விலகியே செம்மாந்து நடக்கும் யானை. நமது இயக்கமும் அப்படித்தான். கொள்கை வழி நடக்கிறது – நமது தலைவர்கள் காட்டிய வழி தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்துவது. அதற்கு உதவுமென்றால் ஆகக் கூடுதலாகப் பொறுமை காப்பது. ஆத்திரம் மூட்டும் துரோகிகளின் முயற்சிக்கு இரையாகாமல் இருப்பது. இந்த முயற்சியில் தலைவர்கள் காயம் படலாம் -- ஆனால் இயக்கம் காயம்பட அனுமதிக்க முடியாது.
எதிர் வரும் நாளில் ஒப்பந்த ஊழியர்கள் ஒன்றுபடுகின்றனர். எல்லா தொழிற்சங்கச் செயல்பாடுகளுக்கும் –அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் -- தாயின் மடியாய் இடமளிக்கும் நமது மாநிலச் சங்க அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் வியாபாரத்தில், அடிமடியில் கை வைத்ததாய் கலங்கி, தாக்குதல்களைத் தொடங்குகிறார்கள். அதன் சிறு வெளிப்பாடே மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள நிகழ்வுகள். இந்த இயக்கம் இப்படி எத்தனையோ துரோகங்களை அனந்த காலமாகச் சந்தித்தே வளர்ந்துள்ளது.
இதையும் சந்திப்போம்! அவர்களைப் போல ஒருபோதும் கல்லால் அல்ல! கருத்தால் சந்திக்கும் திராணி உடைய நம் இயக்கம் எதையும் சந்திக்கும்! இனியும் வளரும்!
நாம் ஆற்றுவதற்கு ஆயிரம் வேலைகள் காத்துக் கிடக்கு – விட்டுத் தள்ளு என நம் பயணம் தொடர்வோம்!
NFTE ஜிந்தாபாத்! இன்குலாப் ஜிந்தாபாத்!
வாழ்த்துக்களுடன்,
No comments:
Post a Comment