.

Thursday, July 8, 2021



தோழர் ஞானையாவின்
 நினைவைப் போற்றுவோம்.
நம்முடைய மேனாள் சம்மேளனப் பொதுச் செயலாளரும், சிறந்த மார்க்சிய அறிஞரும், பல நூறு தோழர்களுக்கு ஆதர்ச வழிகாட்டியாய் வாழ்ந்தவரும் தோழர்களின் பெரும் அன்பிற்குரிய நமது ஞானத்தந்தையின் தோழர் ஞானையா அவர்களின் நினைவு நாள் இன்று. 
கடலூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் ஞானையாவோடு பழகிய மூத்த தோழர் கடலூர் ரகு அவர்கள் ஆற்றிய உரையின் மூலம் தோழர் ஞானையா அவர்களை நினைவு கொள்வோம்.
 ஞானையா இமயம் போன்ற அறிஞர். இவ்வளவு நூல்கள் எழுத அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும்? படித்ததை விரித்துரைத்தார். தமிழ் மாநிலத்திற்குத் தபால் தந்தி அளித்த பெரும் கொடை தோழர் ஞானையா. மேலும் ஞானையா போலவே ஜெகன், பிரேமநாதன் என எத்தனைத் தலைவர்கள் நமக்குக் கிடைத்த பெரும் பேறு. நான் அவர் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லப் போவதில்லை. சில அம்சங்களை விளக்கினாலே போதும்.
 1963ல் நான் பணியில் சேரும்போது நமக்கு 3 நாட்கள் மட்டுமே விடுமுறை. எனவே சொந்தப் பணிகளைச் செய்ய வேண்டி டூட்டி எக்ஜேஞ்ச் செய்யத் தடை இருந்தது. அதைப் போராடி உடைத்தோம். 1947ல் விடுதலை அடைந்த பிறகு நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டது, தொழிலாளர்கள் வாழ்வில் இல்லை. தபால் தந்தியில் 9 சங்கங்கள். அதில் கேடர்களுக்கு இடையேதான் எத்தனை மோதல்கள். மெக்கானிக்களுக்கு 9 மாதம், ஆப்பரேட்டர்களுக்கு 2 மாதம் பயிற்சி. பயிற்சி முடித்த பிறகுதான் இன்கிரிமெண்ட். எனவே மெக்கானிக்குகள் சம்பளவிகிதத்தை மாற்றக் கோரிக்கை. தந்திப்பிரிவில் டெலிகிராபிஸ்ட், தந்தி கிளார்க்குகள் இடையே மோதல். ஆர்எம்எஸ் வாழ்வு அழுக்கு தபால் பைகளோடு முடிந்தது. தோழர் ஞானையா பொறுப்புக்கு வந்தபோது இதுதான் ஊழியர்கள் நிலை. 
 எவ்வளவு தலமட்டப் போராட்டங்கள், விதிப்படி வேலை. ஓவர்சீஸ் சம்பளவிகிதம் கேட்டு டெலிகிராபிஸ்ட்கள் 83 நாட்கள் விதிப்படி வேலை போராட்டம் செய்தனர். சம்மேளனம் அந்தப் பிரச்சனையை அட்வான்ஸ் இன்கிரிமெண்ட் பெற்று முடித்து வைத்தது. இப்படி அனைத்துப் பிரிவினர் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டன. அதனால்தான் தோழர் ஞானையா தனது காலம் விறுவிறுப்பாக இருந்தது என்றும் பொறுப்பிலிருந்து விடுபடும்போது அதில் சோர்வு இல்லை என்றும் கூறினார். 1960ல் ஐந்து நாள் வேலைநிறுத்தம். அதில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிரச்சனைகள் தீர்ந்தன.
 1966ல் கூட்டு ஆலோசனைக் குழு அவருடைய சாதனை. ஜெசிஎம் வந்தபோது ‘போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்படும்’ என சில வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் ஜெசிஎம் வந்த ஒன்னரை ஆண்டுகளில் 1968ல் மத்திய அரசு ஊழியர்களின் மாபெரும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்தியில் ஒரு பாடல் உண்டு, ‘வீணை நரம்பை அதிகம் தளர்த்தாதே, அதிகமாக முறுக்கவும் செய்தாதே’ என்று. அப்போதுதான் நல்ல இசை பிறக்கும், அதுபோலத்தான் போராட்டம். போராட்டம் என்பது போலீஸ் கவாத்து பயிற்சி அல்ல, நாள்தோறும் செய்ய. தோழர் குப்தா ‘ஒருசிலர் தாவிப் பாய்வதல்ல போராட்டம், ஒன்றாய் ஓரடி முன்னே வைப்பது’ என்றார். (அப்படித்தான் விவசாயிகள் 9முறை பேச்சுவார்த்தை வெற்றி அடையா விட்டாலும், 10வது முறையும் பேச்சு வார்த்தையை நிராகரிக்கவில்லை)
 இத்தகைய தலைவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது பெரும் பேறு. அவரிடம் நாம் ஒதுங்கி மரியாதையாகக் கைகட்டி நிற்க வேண்டியதில்லை, அப்படிப்பட்டத் தலைவர்களை இங்கே நான் பார்த்திருக்கிறேன். ஞானையாவிடம் நாம் உரிமை எடுத்துக் கொள்ளலாம், அவ்வளவு தோழமை. தோழர் குப்தாவும் இங்கே பேச வரும்போது சாதாரணத் தோழர்களிடம் தோளில் கைபோட்டு அணைத்துத்தான் பேசுவார். மொழி அவர்களுக்கிடையே உணர்வுப் பரிமாற்றத்திற்குத் தடையாய் இருந்ததில்லை.
 எஸ்சி ஜெயின் போன்ற ஜாம்பவான்கள் கேபினட் செயலராக இருந்தபோது – நேரு இந்திரா போன்ற தலைவர்கள் இருந்தபோதே நாம் போராடி இருக்கிறோம் -- நமது என்எப்டிஇ பேரியக்கத்தை அவர்களால் உடைக்க முடியவில்லை. காரணம் எவ்வளவு பெரும் தலைவர்களை நாம் பெற்றிருந்தோம். இப்படிப்பட்ட தியாகத் தலைவர்களை மறக்காமல் நினைந்து போற்றுகின்ற இயக்கத்தை ஒருவராலும் ஒருபோதும் அழிக்க முடியாது.

No comments:

Post a Comment