.

Monday, March 18, 2024

 

தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்

              மாவட்டச் சங்கம், கடலூர்

மாவட்ட செயலக கூட்டம்

 

மாவட்ட செயலக கூட்டம் இன்று மாலை மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தோழர் D.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

 கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டது.

 1.  தோழர் P.சுந்தரமூர்த்தி மாநில உதவி செயலாளர் பணி ஓய்வு பாராட்டு விழா 28-03-2024 அன்று கடலூரில் மாவட்ட சங்கத்தின் சார்பாக சிறப்பாக நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது . மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் நன்கொடையாக ரூ 500/- மற்ற தோழர்கள் குறைந்தபட்சம் ரூ. 200/- நன்கொடையாக மிக விரைவாக வழங்க வேண்டும் .

 2.  மாவட்ட நிர்வாகம் தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்காமல் மாற்றல் உத்தரவுகளை அமல்படுத்த முயல்கின்றது.இது ஆரோக்கியமான போக்கு இல்லை என்பதை மாவட்ட செயலக கூட்டம் சுட்டி கட்ட விரும்புகின்றது. மாவட்ட நிர்வாகம் இந்த போக்கை  மாற்றிக் கொள்ளும் என்று மாவட்ட செயலக கூட்டம் கருதுகின்றது .மாற்றமில்லாத சூழலில்  தொழிற்சங்க போராட்டம் நடத்துவதற்கு மாவட்ட செயலக கூட்டம் ஒருமனதாக முடிவு எடுக்கின்றது.

3.   குடந்தை மாவட்ட செயலாளர் தோழர் M.விஜய்ஆரோக்கியராஜ் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம்உடனடியாக மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாநில சங்கத்தை மனதார பாராட்டுகிறது.  உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தஞ்சை மாவட்ட சங்கத்திற்கும் பாராட்டுதலை பதிவு செய்கின்றது.

மேலும் தாக்குதல் நடத்திய நபர் மீது தஞ்சை மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட சங்கம் வலியுறுத்துகின்றது..

4.  கடலூர்  தொலைத்தொடர்பு மாவட்டத்தின் வருவாய் பெருக்கத்திற்கு , தொடர்ந்து நமது பங்கினை முழுமையாக செலுத்திட நமது ஊழியர்களை பணிக்கின்றது.நிர்வாகத்தின் தொடரும் எதிர்மறை போக்கினால், மாவட்ட நிர்வாகத்தின்  தல மட்டத்தில் நடைபெறும் கலந்த ஆலோசனை கூட்டத்தில் நமது தோழர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றதுஎப்படி நமக்கு மாற்றல் உத்தரவுகளை  WhatsApp மூலம் அறிந்து கொள்வது போல் , நிர்வாகம் எடுக்கின்ற முடிவுகளை WhatsApp மூலம் தெரிந்து கொண்டு செயல்படுவோம்.

5 விழுப்புரம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் உணவு இடைவேளை கூட செல்ல முடியாமல் பணி புரிகின்ற  போக்கினை உடனடியாக மாற்றிட வேண்டும். அதே நேரத்தில் பொது மேலாளர் அவர்கள் நேரடியாக தலையிட்டு விழுப்புரம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை கலைந்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.

6.  கடலூர் மாவட்டத்தில்  அனைத்து தொலைபேசி மற்றும் அலுவலகத்தில் துப்புரவு பணி புரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியங்கள் இல்லாததாலும், அந்த மோசமான ஊதியத்தையும் காலத்தே முறையாக தராத போக்கினாலும் கழிவறை சுகாதார பணியாளர்கள் தங்களது பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது, என்பதை மிக கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்மேலும் மாவட்ட நிர்வாகம் சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதையும்  வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்த போக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

 இதன் அடிப்படையில்   நமது பொது மேலாளர்   அலுவலகத்தின்  கீழ்த்தளம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருக்கின்ற கழிவறைகளை நமக்கு நாமே திட்டத்தில்  சுத்தம் செய்வது என்று  NFTE-BSNL மாவட்ட செயலக கூட்டம் முடிவு எடுத்துள்ளது..

 

ஆகவே தோழர்கள் ரூபாய் 5/-  சுகாதார மேம்பாட்டு பணிக்கு  உடனடியாக வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

 

                                                         தோழமையுடன்

                                                                          D.குழந்தைநாதன்

                                                        மாவட்ட செயலர் – NFTE-BSNL

                                                        கடலூர்-01.

18.03.2024

                                                                                         

 




 


Friday, March 8, 2024





















 

சர்வதேசப் பெண்கள் தினம் – வரலாறு மற்றும் இன்றைய நிலை

            இந்த ஆண்டு மார்ச் 8ல் உலகம் மீண்டும் சர்வதேசப் பெண்கள் நாளைக் கொண்டாடும் போது, அதன் ஆதிமூலத் தொடக்கத்தையும், உருவாகி வளர்ந்த கதையையும் நாம் திரும்பப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இன்றைய நிலையில் நிதிமூலதனமும் பன்னாட்டு பகாஸ்சுரக் கம்பெனிகளும் தங்கள் அதீத லாப நோக்கங்களுக்காக அதன் வரலாற்றைத் தவறாகப் பயன்படுத்தியும் சிதைக்கவும் செய்கின்றன. அவ்வளவு ஏன், ‘புரட்சி’ என்ற வார்த்தையையே விளம்பரங்களில் பயன்படுத்தத் துணிவதுடன், ரோசா லக்சம்பர்க், கிளாரா ஜெட்கின் மற்றும் புதிய பாதை அமைக்கப் பாடுபட்ட பிற முன்னோடித் தலைவர்களின் பெயர்களை அழிக்கவும் செய்கின்றன. நாம் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சில தவறான புரிதல்கள் வருமாறு:

பிப்ரவரி மற்றும் மார்ச்

            மக்கள் மனதில் பொதுவாகப் பதிந்ததற்கு மாறாக, மார்ச் 8 என்ற தேதி 1910ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது அகிலத்தின் கோபன்ஹேகன் மாநாட்டிலோ அல்லது வேறு எந்த அமைப்பாலோ அந்த நாள் சர்வதேசப் பெண்கள் தினமாக நிச்சயிக்கப்படவில்லை. 1917ல் ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளிலிருந்து வெறும் தற்செயல் விபத்தாக அந்தத் தேதி எழுந்தது என்பதை இங்கு நாம் காணலாம். முன்பு பிப்ரவரி மாதத்தை அப்படி அனுசரிப்பது வழங்கமாக இருந்தது.

பின்னணி

            தொழிற் புரட்சி எந்த அளவு பழமையானதோ அது போல, பெண்கள் ஆலைத் தொழிலாளர்களாகவும், கல்வியில் சிறந்த அறிஞர்களாகவும் உருவானபோது, சமூகத்தில் தங்களுக்கான நியாயமான இடத்திற்காகப் பெண்கள் நடத்திய போராட்டங்களின் வரலாறும் அத்துணை பழமையானது. அலுவலகங்களும் பல்கலைக் கழகங்களும் பரவ, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும் பரவியது. பல பெண் எழுத்தாளர்கள் தாங்கள் அந்த நாளை எப்படிப் பார்த்தார்களோ அப்படி அவற்றை விவரித்து எழுதியுள்ளனர். பிரெஞ்ச் புரட்சியின்போது பெண்கள் முதன்முறையாக வாக்களிக்கும் உரிமை கோரி வெர்சாய் அரண்மனை நோக்கிச் “சுதந்திரம், சமாதானம், சகோதரத்துவம்” என்ற கோரிக்கை முழங்கிப் பேரணியாகச் சென்றனர். டெக்ஸ்டைல் ஆலைகள் பரவ, உழைப்புச் சக்தியில் பெண்கள் முன்னே வந்தார்கள், சுதந்திரமான தொழிற்சங்களை –முதலாவதாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் –அமைக்கவும் செய்தனர்.

            தொழிற்புரட்சி, புதிய வடிவிலான சுரண்டல்களை ஏற்படுத்தும்போது, பொருளாதார ரீதியாகப் பெண்களை மேலும் சுதந்திரமானவர்களாகவும் ஆக்கியது. இதனால் அவர்கள் தங்கள் குரலை உயர்த்தவும் முடிந்தது. 1790களில் மேரி வூல்ஸ்டோன் கிராஃப்ட் மற்றும் 19ம் நூற்றாண்டில் அன்னா வீலர் உள்ளிட்ட பிறர், அடிமைத் தளையில் பூட்டப்பட்டதிலிருந்து பெண்களை விழிப்புணர்வு பெறப் போராடினர்.

            1815 –1835 காலகட்டத்தின் பெண்கள் மத்தியில் முதலாவது சுதந்திரத் தொழிற்சங்க நடவடிக்கைகள் பிறந்தது. இங்கிலாந்தின் மேற்கு ரிட்டிங் பகுதியில்  அட்டை அடுக்க் கூடிய பணியைச் செய்யும் (card-setters) 15ஆயிரம் பெண் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பெண்கள் சீர்திருத்த அமைப்புகள் ஏற்படலாயின ஓவனிட் மற்றும் கார்லைல் (Owenite and Carlyle) வட்டங்களில் 18 –19ம் நூற்றாண்டுகளில் பெண் தொழிலாளர்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது மட்டுமல்ல, சிறைக்கும்கூடச் சென்றனர்.

            நன்கு ஒருங்கு திரட்டிக் கட்டமைத்துப் பெண்களால் முதன் முறையாக நடத்தப்பட்ட நேரடி நடவடிக்கை உலகில் எங்கும் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அது 1857 மார்ச் 8ம் நாள் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆயத்த ஆடை மற்றும் டெக்ஸ்டைல் ஆலைகளில் பணியாற்றிய பலநூறு பெண்கள் அந்த ஆலைகளில் நிலவிய குறைந்தகூலி, நீண்ட பணிநேரம், போதுமானதாக இல்லாத ஊதியம், மனிதத் தன்மையற்ற பணிச் சூழல் மற்றும் வாக்களிக்கும் உரிமை மறுப்பைக் கண்டித்து வேலையை நிறுத்தினர்.

            அதே வழியில் கல்கத்தா டெக்ஸ்டைல் ஆலைகளில் பணியாற்றிய இளம் பெண் தொழிலாளர்களும்கூட 1840கள் மற்றும் 1850களில் எதிர்த்துப் போராடினர்.

            இன்டர்நேஷனல் தொழிலாளர்கள் அசோஸியேஷனின் முதலாவது மாநாடு, பெண்களின் திறன்சார்ந்த (ப்ரோபஷனல்) பணி மீதும், இல்லங்களில் பெண்கள் நிலை குறித்து நிலவிய (பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்யவே பிறந்தவர் என்பது போன்ற) கருத்துகளைச் சவால் விட்டு மறுத்தும் தீர்மானம் நிறைவேற்றியது.

அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம்

            1886 மே மாதம் (சிக்காகோ) நிகழ்வுகள் நடப்பதற்கு வெகு முன்னதாகவே, 1830 –80 காலகட்டத்திலேயே அமெரிக்காவில் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் வெளியே வந்து தொழிலாளர்களின் விழா கொண்டாட்டங்களில் இணைந்து கொண்டு, பேரணிகள், வேலைநிறுத்தங்கள், கூட்டங்களில் சிகப்பு ரிப்பன்களை அணிந்து கொண்டும் செங்கொடியை உயர்த்தியும் கலந்து கொண்டனர்.

            1884 தொடங்கியே எட்டு மணிநேர வேலை கோரி நடத்தப்பட்ட முதலாவது அமெரிக்க ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் பெண் தொழிலாளர்கள் முன்னணியில் முன் நின்றனர். அந்தப் பெண் தொழிலாளர்கள், அமெரிக்காவில் இயங்கிய AFL-CIO (அமெரிக்க ஃபெடரேஷன் ஆப் லேபர்) மற்றும் IWW (தி இன்டஸ்ட்ரியல் ஒர்க்கர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட்) போன்ற அமைப்புகள் மற்றும் பிற தேசிய, சர்வதேசிய தொழிற்சங்க அமைப்புக்களுக்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமாகப் பங்கு பெற்றார்கள். 1870ம் ஆண்டு தொடங்கியே அமெரிக்காவில் பெண்கள் சுதந்திரத் தொழிற்சங்கங்களை அமைத்தனர். 1881ல் அவர்கள், (Order of Knights of Labour) தி ஆர்டர் ஆப் நைட்ஸ் ஆப் லேபர் என்ற அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் அமைப்பில் இணைப்புப் பெற்றனர்.

            மீண்டும் பெண்கள் போராட்டக் களத்தில் முன்னே நின்றனர். அது 1886 மே மாதம் அமெரிக்காவில் எட்டுமணி நேர உழைப்பு நாள் கோரி, நாடு முழுவதும் நடத்தப்பட்ட முதலாவது ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம். அந்த இயக்கத்தின் மே 3 மற்றும் 4ம் தேதிகளில் சிக்காகோ நகரின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பெண்கள் தீவிர ஆர்வமுடன் பங்கேற்றனர். அந்தக் கூட்டங்கள், அதில் நடத்தப்பட்ட போலீல் அடக்குமுறை தாக்குதல்கள் உலகம் முழுவதும் மே தினம் பிறக்கக் காரணமானது.

டைப் ரைட்டர், அலுவலகம் மற்றும் பெண்கள்

            19ம் நூற்றாண்டின் இறுதியில் புதிய கண்டுபிடிப்புகள் கூடுதலாகப் பெண்களை வீடுகளிலிலிருந்து வெளியே வரச் செய்தது. அந்தக் கண்டுபிடிப்புகளான டைப்ரைட்டரும், தொலைபேசிகளும், நவீன அலுவலங்கள் மற்றும் அதி உயரமான கட்டடங்களை ஏற்படுத்த, ஏராளமான எண்ணிக்கையில் அந்த அலுவலகங்களில் பெண்கள் சேர்வதைப் பார்த்தது. அவை அவர்களின் புதிய ஆயுதமாயிற்று, அவர்களின் வான் எல்லை விரிந்தது. அவர்கள் (இங்கிலாந்தில் பேன்குர்ஸ்ட் குடும்பத்தினர் தொடங்கிய) தேர்தல்களில் பெண்களுக்கு வாக்குரிமையை வலியுறுத்திய இயக்கங்களில் முக்கிய பங்கை வகித்தனர்.

சோஷலிச இன்டர்நேஷனல் (1889 –1914)

            இரண்டாவது அகிலம் என்று அறியப்படும் சோஷலிச இன்டர்நேஷனல், முக்கியமாக ஃபெடரிக் ஏங்கல்ஸ் அமைத்தது, மார்க்சியத் தத்துவத்தை உலகில் பரவலாக பரவச் செய்தது, பெண்களுக்குக் கருத்தியல் ரீதியில் போராட்ட ஆயுதத்தைத் தரிக்க உதவியது. ஏங்கல்ஸ் 1895ல் காலமானார், ஆனால் தனக்குப் பின்னே அவர் மார்க்ஸிய, சமூக ஜனநாயகத் தலைவர்களின் பெரும் படையை, உதாரணத்திற்குக் கார்ல் லைப்னிஸ்ட் (Karl Liebknecht), ரோசா லக்ஸம்பர்க், கிளாரா ஜெட்கின், சில்வியா பேன்குர்ஸ்ட், நாடஸ்தா க்ரூப்ஸ்கயா, பிளகானவ், காவுட்ஸ்கி, பிளாட்டன் மற்றும் சொல்லத் தேவையில்லை லெனின் போன்ற தலைவர்களை விட்டுச் சென்றார்.  ரோசா லக்ஸம்பர்க் மற்றும் லெனின் ஏகாதிபத்தியத்தை அம்பலப்படுத்தினர். பெண்களின் சமூக மற்றும் அரசியல் சங்கம் (WSPU) அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்ட சில்வியா, வாக்குரிமை மற்றும் சமத்துவத்திற்காகப் பாடுபட்டு, பல முறை சிறைக்கும் சென்றார்.

            ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் (SDP) கிளாரா ஜெட்கின் பாரீஸில் நடைபெற்ற இரண்டாவது அகிலத்தின் அமைப்பு மாநாட்டில் வேலை உரிமை, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, தேசிய மற்றும் சர்வதேசிய நிகழ்வுகளின் பெண்களின் பங்கேற்பு போன்ற பெண்களின் பிரச்சனைகளை ஆதரித்துத் தனது முதலாவது உரையை ஆற்றினார்.

            நெதர்லாண்டின் தி ஹேக் நகரில் போருக்கு எதிரான பெண்களின் மாநாடு, போர் எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்கப் புள்ளியை அடையாளப்படுத்தியது.

            முதலாவது “பெண்கள் தினம்” அமெரிக்கப் பெண் சோஷலிஸ்ட்களால் அரசியல் உரிமை கோரி நியூயார்க்கில் 1907, பிப்ரவரி 28 அன்று அமைத்து நடத்தப்பட்டது. பெண்கள் தினங்கள் மார்ச் மாதத்தில் அல்ல, பிப்ரவரியில்தான் கொண்டாடப்பட்டன. பொருளாதார, அரசியல் உரிமை கோரிக்கைகள் மீது மான்ட்ரியல், சிக்காகோ, பிலடெல்பியா மற்றும் நியூயார்க்கில் ஆயிரக் கணக்கான பெண்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.  அமெரிக்காவில் சோஷலிஸ்ட் பெண்கள் 1908ல் பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையைப் “பெண்கள் வாக்குரிமை”க்கான இயக்க நடவடிக்கை தினமாகப் பிரத்யேகமாக ஒதுக்கி பிரகடனம் செய்ய தங்கள் கட்சியைச் சம்மதிக்கச் செய்தனர்.

            1896ல் சோஷலிஸ்ட் பெண் பிரதிநிதிகள் 30பேர் லண்டன் இன்டர்நேஷனல் காங்கிரஸ் அமர்வில் தங்களின் முதலாவதான மாநாட்டை நடத்தினர்.

பெண்களின் வாக்குரிமை

            ஜனநாயகம் குறித்துப் பெருமை பேசினாலும், மேற்கத்திய நாடுகள் வயதுவந்த  பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதில் மெல்லவே நடந்தன, அப்படி உரிமை வழங்குவதற்கு அவை பலபல பத்தாண்டுகள் ஏன் ஒரு நூற்றாண்டைக்கூட அதற்கு எடுத்துக் கொண்டன. (சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தல்களிலேயே பெண்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர் என்பது குறித்து நாம் பெருமிதம் கொள்ளலாம்)

            (’கார்களின் தலைநகரம்’/’மகிழுந்துகளின் தொட்டில்’ எனப் புகழப்படும் ஜெர்மனியின்) ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்ற இன்டர்நேஷனல் காங்கிரஸ் மாநாட்டில் (1907) பெண்களுக்கு வாக்குரிமை குறித்துக் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் கிளாரா ஜெட்கின் முன்னெடுக்க, மாநாடு ‘பெண்கள் அனைவருக்கும் உலகம் தழுவி வாக்குரிமை அடையப் பாடுபடுவது’ அனைத்துச் சோஷலிஸ்ட் கட்சிகளின் கடமை என வலியுறுத்தும் ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றியது. இம்மாநாட்டில்தான் மேடம் காமா விடுதலையின் அடையாளமாக இந்திய மூவர்ணக் கொடியை உயர்த்தினார். அவரை லெனின் ஆதரித்தார்.

            19, 20ம் நூற்றாண்டுகளில் வாக்குரிமை கோரும் இயக்கம் பிரம்மாண்டமாக நடந்தன. அவை, கட்டம் கட்டமாக இங்கிலாந்து, பிற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமையைப் பெற்று சாதிக்க உதவின.

‘டிரையாங்கிள்’ துயரம்

            நியூயார்க் ‘டிரையாங்கிள் ஷர்ட் வைஸ்ட் கம்பெனி’யில் (’ஆயத்த ஆடைகளின் அரசன்’ என்று புகழ்பெற்ற உள்ளாடைகள் உள்ளிட்ட ஆயத்த ஆடைகள், ஷர்ட் தயாரிப்பு நிறுவனம்) பதின் வயதுகளில் இருந்த கிளாரா லெம்லிச் என்ற பெண் தொழிலாளி, முன்பு ஒரு மறியல் போராட்டத்தின்போது, மோசமாக அடிக்கப்பட்டார். அதற்காக நடந்த உணர்ச்சி மயமான கூட்டத்தில் வேலை நிறுத்தம் நடத்தும் தீர்மானம் ஓட்டெடுப்பில் முடிவெடுக்கப்பட்டது. 20ஆயிரம் தொழிலாளர்கள் வெளியே வந்து குவிந்தனர். சில நாள்களுக்குப் பிறகு 1911 மார்ச் 25ல் கிழிந்த துணி மூட்டைகளிலிருந்து பெரும் தீ, கட்டடத்தின் 8வது முதல் 10வது தளம் வரை மளமளவென்று பற்றிப் பரவியது. அங்கேதான் நியூயார்க் நகரின் 5 லட்சம் தொழிலாளர்களில் பாதி பேர் தினமும் சுமார் 12 மணி நேரம் கழிப்பார்கள். ஏணிகள் கொண்டு 7வது தளம் வரைதான் ஏற முடிந்தது. அங்கே தொழிலாளர்களைக் கண்காணிப்பதற்காகக் கதவுகள் வெளிப்புறம் தாழிட்டு உட்புறமாக மட்டுமே திறக்கக் கூடியதாக அமைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு உள்ளே அகப்பட்டுக் கொண்டதில் 146 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி மரணமடைந்தனர். நியூயார்க் வரலாற்றில் மிக மோசமான தீ விபத்து, இதனைக் கண்டித்து ஒரு லட்சம் தொழிலாளர்கள் வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

            பெண்கள் தினம் உறுதியாக நிறுவப்பட்டது. சர்வதேசப் பெண்கள் ஆயத்த ஆடை தொழிலாளர்களின் தொழிற்சங்கம், வலிமை மிக்க அமைப்பானது.

“சர்வதேசப் பெண்கள் தினம்” கருக்கொண்ட தொடக்கங்கள், 1910

            முதலாவது சர்வதேசப் பெண்கள் மாநாடு ஸ்டுட்கார்ட்டில் (Stuttgart) 1907ல் நடைபெற்றது. அது கிளாரா ஜெட்கின் தலைமையில் சர்வதேசச் சோஷலிஸ்ட் பெண்கள் பீரோ என்ற அமைப்பை நிறுவியது. “நமது இலட்சியம் பெண்களை மட்டும் விடுதலை செய்வதல்ல, நம் இலட்சியம் மனிதகுலத்தைச் சுதந்திரமாக்குவது” என்றார் அவர். பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண் உறுப்பினர்கள் ஜெட்கினின் யோசனையை வாழ்த்தி வரவேற்றனர்.

            1910 ஆகஸ்ட்டில் கோபன்ஹேகனில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேசப் பெண்கள் மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து சுமார் 100 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்த மாநாடு  1911 மார்ச் 19ம் நாள் (கவனிக்க, மார்ச் 8 அல்ல) அனைத்து நாடுகளிலும் பெண்களின் வாக்குரிமைக்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்தது. அடுத்தடுத்து வந்த ஆண்டுகளில் பல்வேறு தேதிகளில், ஆனால் மார்ச் மாதத்தில், அது அனுசரிக்கப்பட்டது.

            முன்பு “தேசியப் பெண்கள் தினம்” என்று அமெரிக்கச் சோஷலிஸ்ட் கட்சியால் 1909 பிப்ரவரி 28ல் நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது. 1913ம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று தேசியப் பெண்கள் தினத்தைத் தொடர்ந்து பெண்கள் கொண்டாடினர்.

            இதனால் உற்சாகமடைந்த ஜெர்மன் பிரதிநிதிகள் 1910 மாநாட்டில் “சிறப்பான பெண்கள் நாள்” ஒன்றை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்தனர். எந்தத் தேதி என்று நிச்சயிக்கப்படவில்லை.

            அடுத்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் சர்வதேசப் பெண்கள் தினத்தின் முதலாவது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கொண்டாட்ட விழாக்களைக் கண்டது. 1911ல் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் ஒப்புக்கொண்ட முடிவைத் தொடர்ந்து, சர்வதேசப் பெண்கள் தினம் என்பதை அங்கீகரிக்கும் வகையில் முதன் முறையாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளில் மார்ச் 19ல் அந்த நாள் கொண்டாடப்பட்டது. பெண்களின் வேலை உரிமை, வாக்குரிமை மற்றும் பொது அதிகார அமைப்புகளில் பொறுப்பேற்கும் உரிமை என்பனவற்றிற்காக நடத்தப்பட்ட சர்வதேசப் பெண்கள் தினப் பேரணியில் ஆண்களும் பெண்களுமாகப் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

பெண்களின் ‘பிரட் அண்ட் ரோஸஸ்’ பிரச்சார இயக்கம், 1911

          கிளாரா ஜெட்கின் அவர்களோ அல்லது வேறு எவருமோ மார்ச் 8ம் தேதியைச் சர்வதேசப் பெண்கள் தினமாக முன்மொழியவில்லை.

          ஷ்யப் புரட்சி (1917) ஜார் அரசன் ஆட்சியைத் தூக்கி எறிந்தது, ‘மார்ச் 8’ பிறந்தது.

            லண்டனில் பெண்கள் வாக்குரிமையை வலியுறுத்தி டிரஃபால்கர் சதுக்கத்திற்கு ஒரு பேரணி 1914 மார்ச் 8ம் நாள் நடைபெற்றது. அதில் ச்சாரிங் கிராஸ் ஸ்டேஷனுக்கு முன்பு சில்வியா பேன்குர்ஸ்ட் கைது செய்யப்பட்டார்.

            முதலாவது உலகப் போர்(1914) தொடங்குவதற்குச் சற்று முன்பு, சமாதானத்திற்காகப் பிரச்சார இயக்கம் மேற்கொண்ட ரஷ்யப் பெண்கள் பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிறான ரஷ்யக் காலண்டரில் பிப்ரவரி23 (அதாவது மார்ச் 8ல்) அன்று சர்வதேசப் பெண்கள் தினத்தை அனுசரித்தனர். கலந்துரையாடல்களைத் தொடர்ந்து சர்வதேசிய இயக்கத்தில் மார்ச் 8 மீது ஓர் உடன்பாடு நோக்கி நகர்ந்தது. முதல் உலகப் போர் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லொண்ணா துன்பங்களைக் கொண்டு வந்தது. இராணுவ வீரர்கள் மற்றும் ஆண் தொழிலாளர்களுடன் இணைந்து சோவியத்துகள் ஜார் மன்னனுக்கு எதிராக எழுந்தனர். அவரைப் பதவி விலக் கோரும் கோரிக்கை வலிமையுடன் வளர்ந்தது.

            போரில் 20 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் மடிந்ததன் எதிரொலியாக, 1917ம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று ரஷ்யப் பெண்கள் “ரொட்டி மற்றும் அமைதி”க்காக வேலைநிறுத்தம் செய்தனர். இது பொதுவான கிளர்ச்சித் தீயைத் தூண்டிவிட, ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து பல நாள்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர். சோவியத்கள் பேரெழுச்சியாய் எழுந்து ஜாரைப் பதவி விலக நிர்பந்தித்தனர். அதில் வெற்றி பெற்று இடைக்கால அரசையும் (புரொவிஷனல் கவர்ன்மெண்ட்) அமைத்தனர். இவ்வாறு பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.  சோவியத்களின் ஆதரவு பெற்ற இந்த அரசுதான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.            

இங்கே மற்றொரு செய்தியைச் சொல்ல வேண்டுமானால், அது பிரிட்டனில் பெண்கள் வாக்குரிமை பெற்றது 1920ம் ஆண்டில் மட்டுமேயாகும்.

அப்போது ரஷ்யாவில் நடைமுறையில் இருந்த ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி மாதம் 23ம் தேதி பெண்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது. அந்த நாள் கிரிகோரியன் (சர்வதேச) நாட்காட்டியில் மார்ச் 8ம் தேதியாகும். அப்படித்தான் மார்ச் 8 சர்வதேசப் பெண்கள் தினமாக ஆனது.  

இந்தியாவில் பெண்கள் தினம்

          பெண் தொழிலாளர்களும் தேசிய இயக்கப் பெண் தலைவர்களும் முக்கிய பங்கை வகித்தனர். கிர்ணி காம்கர் யூனியன் (GKU), அதன் தலைவர் உஷாதாய் டாங்கே அவரது பெண்கள் அணியினருடனும் மற்றும் பிறரும் நன்கு அறியப்பட்டனர். அனைத்திந்தியப் பெண்கள் காங்கிரஸ் (AIWC), இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் (NFIW) சிபிஐ, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (சிஎஸ்பி), காங்கிரஸ் மற்றும் சுதந்திரமான பிற அமைப்புகளின் பால்வீதி போன்ற பெண்தலைவர்களின் பெரும்படைவரிசையை இந்தியா உருவாக்கியது. பாம்பே, கல்கத்தா மற்றும் பிற இடங்களின் டெக்ஸ்டைல் ஆலைகளின் பெண் தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்க இயக்கத்தில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தினர்.

            இந்தியாவில் சர்வதேசப் பெண்கள் தினத்தை முதலில் கொண்டாடத் தொடங்கியது கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த பெண்களாவர். அப்படி முதலில் கொண்டாடத் தொடங்கியவர்கள் விமல் ரணதிவே, குசும் ரணதிவே மற்றும் அன்னபூர்ணா பண்டார்கர் தலைமையிலான பாம்பே பரல் மகிளா சங்; மற்றும் மெட்ராஸில் பொன்மலை நாடார் சங்கம் (தாய்மார்கள் அமைப்பு); மற்றும்1943ல் வங்கத்தில் அமைக்கப்பட்ட மகிளா ஆத்ம ரக்ஷா சமிதி (MARS) முதலியன அந்த நாளை முதலில் கொண்டாடின. இத்தகைய நாட்கள் 1943 –45 காலகட்டத்தில் பரவலாகக் கொண்டாடப்பட்டன.

            பெண்கள் சர்வதேச ஜனநாயகச் சம்மேளனம் (WIDF) பாரீஸில் 1945 டிசம்பர் 10ம் நாள் பிறந்தது. அதில் வித்யா கனூங்கோ மற்றும் இளா ரெய்டு இந்தியப் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர். பின்னர் ரேணு சக்ரவர்த்தி இந்தியாவில் சர்வதேசப் பெண்கள் தினத்தைப் பரப்புவதில் பிரதானமான பங்கை ஆற்றினார்.

ஜப்பானியர்களின் குண்டு வீச்சும் பெண்களின் எதிர்ப்பும், 1943

            இரண்டாவது உலகப் போரில் கல்கத்தா மற்றும் பிற இடங்களின் மீது ஜப்பான் குண்டு வீசியபோது எழுந்த எதிர்ப்பின் முக்கிய விளைவாகவே மகிளா ஆத்ம ரக்ஷா சமிதி பிறந்தது. இந்தியா வழியாகச் சென்ற இராணுவ வீரர்களும், வடகிழக்கு எல்லையில் முன்னேறி வந்த ஜப்பானியப் படைகளும் தங்கள் மீது நடத்திய அட்டூழியங்களைப் பெண்கள் கடுமையாக எதிர்த்தனர். இரண்டாம் உலகப் போரின் மார்ச், ஏப்ரல் மற்றும் பிற மாதங்களில் சோவியத் மற்றும் பிற பெண்களின் அளப்பரிய சர்வதேச வீரம் நினைவு கூரப்பட்டது. ஸ்டாலின்கிராடு யுத்தமும் அதில் சோவியத்தின் வெற்றியும் இந்தியப் பெண்களை எழுந்து நிற்கச் செய்தது. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் பெண்கள் ஆற்றிய பங்கு குறித்து இளா ரெய்டு, ரேணு சக்ரவர்த்தி மற்றும் பிறரும் விரிவாக அறிக்கைகள் தந்து எடுத்துக் கூறியுள்ளனர்.

1954ல் NFIW நிறுவப்பட்டதும், சர்வதேசியமும்

            கோபன்ஹேகனில் 1953 ஜூன் 5முதல் 12ம் தேதிவரை நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில் இந்தியப் பெண்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர். அதிலிருந்து தொடங்கி மார்ச் 8 தினத்தின் செய்தி இந்தியப் பெண்கள் இயக்கத்தில் மேலும் பரவியது. 1954ல் இந்திய மாதர் தேசியச் சம்மேளனம் அமைக்கப்பட்டது, சர்சதேச நடவடிக்கைகளைப் புதிய மட்டங்களுக்கு உயர்த்தியதுடன், மார்ச் 8ல் பெண்கள் தினம் அனுசரிக்கப்படுவதை இந்தியாவில் முறையான வழக்கமாக்கியது.

சர்வதேசப் பெண்கள் பத்தாண்டு (1975 –85)

பெண்கள் மத்தியில் கல்வி அறிவைப் பரப்பியதில் NFIW ஆற்றிய அளப்பரிய பிரம்மாண்ட பணிகள் யுனெஸ்கோ அமைப்பால் 1973ல் அங்கீகரிக்கபட்டது. அந்த ஆங்கீகாரத்தின் அடையாளமாக யுனெஸ்கோ அமைப்பிடமிருந்து ‘நடேஷ்டா க்ரூப்ஸ்கயா எழுத்தறிவு விருது’ NFIW பெற்றபோது அது, “ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கல்வி எழுத்தறிவித்தலுக்கு ஆதரவான நிலைத்த நீடித்த நடவடிக்கை”களுக்கானது அல்லவா.

சர்வதேசப் பெண்கள் பத்தாண்டுகளான 1975 –85 காலத்தின்போது மாதர் சம்மேளனம் வயது வந்த 2 லட்சம் பெண்களை எழுத்தறிவு பெறச் செய்தது என ஐக்கிய நாடுகள் (ஐநா) அமைப்பால் பிரகடனம் செய்யப்பட்டது. பரவலான எழுத்தறிவு கல்விப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது

சர்வதேசப் பெண்கள் ஆண்டு, 1975

            ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டதன் 30வது ஆண்டு மற்றும் பெண்களின் சர்வதேச ஜனநாயகச் சம்மேளனம் (WIDF) பிறந்த தருணத்தின்போது 1975ல் மெக்ஸிகோவில் ஐநா மன்றத்தின் முதலாவது பெண்களின் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் NFIW துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பார்வதி கிருஷ்ணன் உள்ளிட்ட 10 உறுப்பினர் இந்தியப் பிரதிநிதிகள் குழு பங்கேற்றது. அம்மாநாடு அடுத்த பதின் ஆண்டுகள் பெண்களின் பத்தாண்டுளாகக் கொண்டாடப்படும் எனப் பிரகடனம் செய்ய முடிவெடுத்தது. தாரா ரெட்டி மற்றும் பிரமிளா லூம்பா இருவரும் 1980 கோபன்ஹேகன் ஐநா மாநாட்டில் பங்கேற்றனர். அந்தப் பத்தாண்டுகள் கொண்டாட்டத்தின் நிறைவைக் குறிக்கும் நைரோபி மாநாட்டிற்கு மாதர் சம்மேளனம் 7 உறுப்பினர் பிரதிநிதிகள் குழுவை அனுப்பியது.

சர்வதேசப் பெண்கள் தினம் இன்று

            இந்தியப் பெண்களும் மாதர் சம்மேளனமும் தேசிய, சர்வதேசிய நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றது. இருப்பினும் வரலாற்றைச் சிதைக்கும் முயற்சிகளுக்கு எதிராகச் சர்வ தேசப் பெண்கள் தினத்தை முன்னிறுத்த வேண்டியது முக்கியமானது. ஜனநாயகமும் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. உலகில் நமது அரசியலமைப்புச் சட்டம் ஒன்று மட்டுமே ஒரே நேரத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கிய சட்டமாகும். அதனைப் பாதுகாக்கவேண்டிய நம் கடமை.

            எலெக்ட்ரானிக் சாதனங்கள், கம்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி புதிய தலைமுறை உழைக்கும் பெண்களை உருவாக்கியுள்ளது. அவற்றால் அதிகாரமளிக்கப்பட்ட அவர்கள் இன்னும் தத்துவக் கருத்தியல் மற்றும் வரலாறு குறித்து விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். பெண்கள் தினம் கொண்டாடப்படுவது உள்ளிட்ட விஷயங்களில் நிதிமூலதன மற்றும் பன்னாட்டுப் பிரச்சாரங்களுக்கு அவர்கள் பலியாகி விடுவதை அனுமதிக்கக் கூடாது. தற்போதுள்ள ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதிலும், மேலும் அவற்றைச் சமூக ஜனநாயக மாற்றத்தின் ஒரு பகுதியாக விரிவுபடுத்துவதிலும் அவர்களுக்கு உள்ள பொறுப்பினைக் குறித்து விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும்.

            இந்தக் கடமைகளை நிறைவேற்றவும், பெண்களுக்கு எதிராக நீடிக்கும் ஆணாதிக்கச் சமூகத்தின் அவலங்கள் துடைத்தெறியப்படவும் நம் பிரச்சாரப் போராட்ட இயக்கங்களை  மேலும் தீவிரப்படுத்த சபதம் ஏற்போம்! உலக அளவில் பெண்களுக்கு வாக்குரிமைகோரி போராடிப் பெற்ற வாக்குரிமையை, மக்கள் தொகையில் செம்பாதியாக உள்ள பெண்களாகிய நாம் எதிர்வரும் தேர்தலில் அந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவோம்! சமூக மாற்றம் காண்போம்! அனைவருக்கும் சர்வதேச உழைக்கும் பெண்கள் தின புரட்சிகர வாழ்த்துகள்!

--நன்றி : நியூஏஜ் (பிப். 25 – மார்ச் 2)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்