.

Saturday, October 29, 2011

உண்மையா?

வேலியே பயிரை மேய்ந்தால்... : பி.எஸ்.என்.எல்., உடான் குழுவின்   
                                                                "உடான்ஸ்'
-------------------------------------------------------------------------------------------------------------------------




பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளுடன், "உடான் குழு'வினரும் சேர்ந்து, தரமற்ற சீனத் தயாரிப்பு, "மோடம்' மற்றும் தொலைபேசி கருவிகளை விற்பனை செய்வதாக, தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும், பி.எஸ்.என்.எல்., சேவை மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்க, கடந்த 2009 ஆகஸ்டில், "உடான் குழு' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பி.எஸ்.என்.எல்., ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இத் திட்டம், வாடிக்கையாளர்கள் தேவை மற்றும் குறைகளை உடனே நிவர்த்தி செய்வதற்காக கொண்டு வரப்பட்டது.

தனி வியாபாரம் : சென்னை தொலைபேசி வட்டத்தில், துணை கோட்ட பொறியாளர், ஜூனியர் டெலிகாம் ஆபீசர் உட்பட, 50 பேருடன், உடான் குழு செயல்படுகிறது. ஏற்கனவே, "மோடம்' மற்றும் தொலைபேசி கருவிகள் பற்றாக்குறையால், அக்கருவிகளை வாடிக்கையாளருக்கு வழங்குவதை, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் குறைத்துள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளுடன், உடான் குழுவினர் கைகோர்த்து, சீனத் தயாரிப்பு, "மோடம்' மற்றும் தொலை பேசி கருவிகளை, வெளிச்சந்தையில் வாங்கி, வாடிக்கை யாளர்களிடம் கூடுதல் விலைக்கு விற்று, தனி வியாபாரம் பார்த்து வருகின்றனர். 

இதனால், பி.எஸ்.என்.எல்., சேவைகள் மீதான நம்பகத் தன்மையை, வாடிக்கையாளர்கள் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது: "உடான்' குழுவை கண்காணிக்கும் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள், அக்குழுவினருடன் சேர்ந்து முறைகேடு களில் ஈடுபடுகின்றனர். புதிய இணைப்பு கோரும் வாடிக்கை யாளர்களிடம், "எங்களிடம் கருவிகள் இல்லை; வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள்' எனச் சொல்லி, "உடான் குழுவினரை அணுகினால், தேவையான கருவிகள் கிடைக்கும்' எனவும் கூறுகின்றனர்.

தரமற்ற சீனத் தயாரிப்பு கருவிகளை, ரசீது இல்லாமல் வினியோ கிக்கின்றனர். விவரம் அறியாத வாடிக்கையாளர்கள் சிலர், பி.எஸ்.என்.எல்., வழங்கும் கருவிகள் என நினைத்து, இவற்றை வாங்குகின்றனர். சென்னை தொலைபேசி உயரதிகாரிகள் இதை உடனே தடுக்காவிட்டால், பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கையை, மக்கள் இழந்து விடுவர். இவ்வாறு அவர் கூறினார்.
புகாருக்கு பலன் இல்லை : தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் சத்தியபாலன் கூறியதாவது: காலடிப்பேட்டை உள்ளிட்ட, சில வாடிக்கையாளர் சேவை மையங்களில், இது போன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடக்கின்றன. இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., விஜிலென்சுக்கு ஏற்கனவே புகார் அளித்திருக்கிறேன்; ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. பி.எஸ்.என்.எல்., நஷ்டத்திற்கு, இது போன்ற ஊழியர்களும், அதிகாரிகளுமே காரணம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, சட்ட ரீதியாகவும் அவர்களை தண்டிக்க வேண்டும். இவ்வாறு சத்தியபாலன் கூறினார்.

                                  செய்தி : தினமலர் 29/10/11

No comments:

Post a Comment