.

Monday, October 31, 2016


சம வேலைக்கு சம ஊதியம்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக தற்காலிக, ஒப்பந்த  ஊழியர்களுக்கும் சம்பளம்

சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறை அனைத்து பணி மற்றும் பணியாளர்களுக்குப் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பில் தினசரி ஊதியம், தற்காலிக பணியாளர், ஒப்பந்த ஊழியர் ஆகியோருக்கு நிரந்தர பணி யாளர்களுக்கு அளிக்கப்படும் அதே அளவுக்கு ஊதியம் வழங்கப் பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுவதானது, அடிமைத் தனமாகக் கருதப்படும். அடக்கு முறை, அடக்கி ஆளுதல், சிறுமைப் படுத்தல் ஆகியவை போலத்தான் கருதப்படும். தொழிலாளர் நலன் விரும்பும் மாநிலங்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அனைத்து துறையிலும் கடைப் பிடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில தற்காலிக பணியாளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஊதிய மானது குறைந்தபட்ச ஊதிய விதி யைக் கூட பூர்த்தி செய்யவில்லை என வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மாநில அரசுக்கு சாதகமாக அம்மாநில நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தற்காலிக பணியாளர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.
ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை அளிக்காம லிருக்க பல்வேறு செயற்கையான காரணங்கள் கூறப்படுவதாக தாங்கள் கருதுவதாக நீதிபதிகள் ஜே.எஸ்.காதர், எஸ்.ஏ. போப்டே ஆகியோரடங்கிய அமர்வு தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது. ஒரு பணிக்காக தேர்வு செய்யப் படும் ஊழியருக்கு அதே பணியைச் செய்யும் நிரந்தர பணியாளருக்கு அளிக்கப்படும் அளவுக்கு ஊதியம் வழங்கப்படும். இதில் மாற்று கருத்துகளுக்கு இடமிருக்க முடி யாது. வேலை நிறுத்தம் போராட்டங்கள் மேற்கொள்வதன் முக்கிய காரணமே தாங்கள் கவுரமிக்கவர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்து வதற்காகத்தான் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறைந்த ஊதியத்திற்காக யாருமே பணியாற்ற முன் வருவ தில்லை. ஆனால் அவ்விதம் நிர் பந்திக்கப்படுகின்றனர். அந்த குறைந்தபட்ச ஊதியத்தின் மூலம் தானும் தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளதுதான் நிதர்சனம். இதனாலேயே தங்களது சுயமரி யாதை மற்றும் சுய கவுரவத்தை இழந்து குறைந்த ஊதியத்தில் பணி புரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார உரிமை தொடர்பாக 1966-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதியில் இந்தியாவும் கையெழுத் திட்டுள்ளது. இதன் விதிமுறைகள் ஏப்ரல் 10, 1979 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி சம வேலைக்கு சம ஊதியம் என்ற விதிமுறையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்ட விதிகளில் பல்வேறு விளக் கங்கள் இருந்தாலும் இந்திய அரசி யலமைப்பு விதி 141-ல் சம வேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமே இல்லை. ஊழியர் நிரந்தரப் பணியாளரா அல்லது தற்காலிக பணியாளரா என்ற பேதம் கிடையாது. ஊதியம் அனை வருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                               நன்றி: தி தமிழ் இந்து...

No comments:

Post a Comment