.

Wednesday, November 9, 2016

சம வேலைக்கு சமஊதியம் எப்போது?- ஜி.சம்பத்

   

நிரந்தரப் பணியாளர்களுக்குச் சமமான சம்பளத்தை ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் தர வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம். நல்ல தீர்ப்பு இது. தினக் கூலிகளாகவும் தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்ளுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம் கிடைப்பதில்லை. அதிகாரத்தால் அடிமைப்படுத்திச் சுரண்டுகிற செயல்இது என்கிறது நீதிமன்றம்.

சம வேலைக்குச் சம ஊதியம் என்பது ஒரு கோட்பாடு. அதை நிறைவேற்ற மறுப்பது, மனித கண்ணியத்தைக் குலைக்கும் செயல் என்று விமர்சித்துள்ளது நீதிமன்றம். அரசாங்கத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பற்றித்தான் இந்தத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. அரசுத் துறையும் தனியார் துறையும் நிரந்தரத் தொழிலாளர்களையும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் இரண்டு அடுக்கு சாதிகளைப் போலப் பிரித்து வைத்திருக்கின்றன. இந்த ஏற்றத்தாழ்வான நிர்ணயிப்புகளைத்தான் இந்தத் தீர்ப்பு விமர்சிக்கிறது.

அமலாகுமா தீர்ப்பு?
நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களில் ஒரு சிறுபகுதியினர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். அவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகச் சம்பளமும் உத்தரவாதமான வேலையும் கிடைத்துள்ளன. ஆனால், மிகப்பெருமளவிலான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். எந்தக் காரணமும் சொல்லாமல் எந்த நேரமும் வேலையை விட்டு நீக்கக்கூடிய நிலையில் அவர்கள் உள்ளனர். நிரந்தரத் தொழிலாளர்கள் பெறுகிற சம்பளத்தைவிட மிகவும் குறைவான சம்பளத்தையே இவர்கள் பெறுகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான நஷ்ட ஈட்டை உடனடியாகக் கிடைக்கச் செய்யும் என்று நாம் இயல்பாக எதிர்பார்ப்போம். இது நடக்காது என்பதுதான் துரதிர்ஷ்டம். நிர்வாகத் தோடு பேரம் பேசி, தங்களுக்கானதைச் சாதித்துக்கொள்கிற நிரந்தரத் தொழிலாளர்களைப் போலக் கிடையாது ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலைமை. இருவருக்குமான வேறுபாடு இதுதான்.

சங்கத்தில் சேரும் தகுதி
ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிற ஒருவர், அதன் தொழிற்சங்கத்தில் சேரலாம் என்கிறது தொழிற்சங்கங்களுக்கான சட்டம் - 1926. ஆனால், நடைமுறையில் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கங்களில் உள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆலை உரிமையாளரின் பணியாளர்கள் அல்ல. எனவே, உரிமையாளரோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தொழிற் சங்கத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டிய தில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது.

தொழிற்சாலை சம்பளப் பட்டியலில் ஒருவர் பெயர் இல்லை என்பதால், அவர் தொழிற்சங்கத்தில் சேர்வதற்கான தகுதியை இழந்துவிடுவதில்லை. தொழிற்சங்கத்தோடு தொழில்தகராறு எழுந்துள்ள ஆலை உரிமையாளரால் பணி நிய மனம் வழங்கப்பட்டிருந்தாலும் இல்லையென்றாலும், தொழில் அல்லது வணிகத்தில் பணியாற்றுகிற அனைவரும் தொழிலாளர்கள்தான்என்கிறது தொழிற்சங்கச் சட்டத்தின் பிரிவு 2 (ஜி) என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். தொழிற்சங்கத்தில் யாரெல்லாம் உறுப்பினராகலாம் என்ற கேள்வி சமீபத்தில் சன்பீம் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்துக்கு எதிராக சந்தர் பான் என்பவர் ஹரியாணா மாநிலத்தின் குர்கான் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எழுந்தது. ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிற ஒருவர், சட்டம் நிர்ணயித்துள்ள வரையறைகளுக்குப் பொருந்தினால் அவர் தொழிற்சங்க நடவடிக்கை களில் பங்கேற்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குர்கான் தொழிற்பகுதியில் சன்பீம் சங்கம் மட்டும்தான் 240 நாட்கள் பணி செய்தவர்களைச் சங்க உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்கிறது. நீதிமன்றத்தைத் தலையிட வைத்துதான் சங்கம் இந்த நிலைக்கு உயர்ந்தது. ஆனால், அந்தச் சங்கம்கூட ஒப்பந்தத் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்வதில்லை. நடைமுறையில், எந்த ஒரு தொழிற்சங்கமும் ஒப்பந்தத் தொழிலாளர் களைச் சேர்த்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு வாக்குரிமையும் அளிப்பதில்லை.

கசப்பான உண்மை
இதற்கான காரணங்கள் பல. எந்தவொரு சங்கச் செயல்பாட்டையும் பகைமையோடு பார்க்கிற சூழல் இருக்கிறது. அதனால், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் இணைத்துக்கொள்ளும் தொழிற் சங்கத்தை அமைத்தால் தொழிற்சாலை நிர்வாகம் மேலும் பகைமையோடு மாறும் என்று நம்புகிறார்கள் தொழிலாளர்கள்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் பற்றி தொழிற் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்த ஆலை நிர்வாகங்கள் மறுத்துவிடுகின்றன. நிரந்தரத் தொழிலாளர்களோடு ஒப்பிட்டால், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான வேலை உத்தரவாதம் மிகவும் குறைவு. சங்கத்தில் செயல்படுகிற நிரந்தரத் தொழிலாளர்களைக்கூட கம்பெனிகள் அடிக்கடி வேலையை விட்டு நீக்குகிற காலம் இது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான ஆபத்துகள் மிக அதிகம். அவர்கள் எந்த நேரமும் நிர்வாகங்களால் வேலைநீக்கம் செய்யப்படலாம்.

ஒப்பந்தத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்களில் உள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் விரும்புவதில்லை என்பது கசப்பான உண்மை. 300 நிரந்தரத் தொழிலாளர்களும் 1,200 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றும் ஒரு ஆலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்தவொரு சங்கமும் வாக்குரிமை தருமானால், உடனடியாக நிரந்தரத் தொழிலாளர்களைவிட ஒப்பந்தத் தொழிலாளர் கள் பெரும்பான்மை பெற்றுவிடுவார்கள்.

நிரந்தரத் தொழிலாளர்களுக்கு அதிகமான சம்பளம் தரப்படுவதால் அவர்களின் பொருளாதார நலன்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களைத் தொழிற்சங்கத்தில் சேர்ப்பதற்கு எதிராக உள்ளன. இதனால், உருக்கு, நிலக்கரி, போன்ற சில விதிவிலக்கான பொதுத் துறை நிறுவனங்களைத் தவிர்த்த, பெரும்பாலான நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்படுபவர்களாக, பெரும்பாலும் அவர்களுக்கான தொழிற் சங்கம் இல்லாதவர்களாக இந்தியாவில் உள்ளனர்.

சுரண்டலைக் காக்கும் சட்டம்
ஒப்பந்தமுறைத் தொழிலாளர்கள் முறை (ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒழிப்பு) சட்டம் - 1970 ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க வந்த சட்டம்போலத் தோற்றம் அளித்தது. ஆனால், நடைமுறையில் ஒப்பந்ததாரர்களின் சுரண்டலைப் பாதுகாத்தது.

இந்தச் சட்டம் வருவதற்கு முன்பாக, நிரந்தரத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒரே சங்கத்தில் இருந்தனர். உரிமை களை இணைந்து கோரினார்கள். ஆனால், வேலையளிப்பவர் என்ற நிலையை ரகங்களாகச் சட்டம் பிரித்தது. வேலையளிப்பவர், முதன்மை வேலையளிப்பவர் என்று ஆக்கியது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை பெரியளவில் அதிகரிக்கவே இது உதவியது. ஆரம்பத்தில் தோட்டம், துப்புரவுப் பணி, வீட்டுவேலை ஆகியவற்றில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை இருந்தது. விரைவில் அது உற்பத்தித் துறையிலும் அதிகரித்தது. தொழிலாளர்கள் எதிர்த்ததால், ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் வந்தது. அது உற்பத்தித் துறையில் நிரந்தரப் பணிகளாக உள்ள இடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையைப் புகுத்துவதைத் தடை செய்தது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் குறுக்குவழிகளைக் கண்டுபிடித்தனர். துப்புரவுப் பணிக்கு என்று ஆள் எடுப்பார்கள். அவர் ஆலைக்குள் வந்ததும் உற்பத்திப் பணி செய்வார். துப்புரவுப் பணிக்குப் பதிலாக உற்பத்திப் பணி செய்கிறார் என்று ஆவணங்களில் இருக்காது.

இந்தியத் தொழிலாளர் இயக்கத்தின் முன்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு பழைய கேள்வியை வைக்கிறது. இன்று ஒரு ஆலையிலும் நாளை வேறொரு ஆலையிலும் பணியாற்றக்கூடியவர்களாகவும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடியவர்களாகவும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை எவ்வாறு சங்கங்களில் இணைப்பது என்ற கேள்விதான் அது. தொழிலாளர் இயக்கம் இதற்கான விடையைக் காணாதவரை சட்டங்களாலும் தீர்ப்புகளாலும் தொழிலாளர்களின் நிலையை மாற்ற முடியாது.
நன்றி: தி தமிழ் இந்து ...



No comments:

Post a Comment