.

Wednesday, January 11, 2017

கடலூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில்
தோழர் என்.கே. சீனுவாசன்
 (TMTCLU சங்கத்தின் சட்ட ஆலோசகர்) அவர்களின் உரை:
     
(தோழர் என்கேஎஸ்.  கடலூர் NFPTE  சங்கத்தின் E – 3  மாவட்டச் செயலராக பல ஆண்டுகள் தோழர்கள் ரகு, ரங்கநாதன், முதலிய தலைவர்களோடு பணியாற்றியவர். பணிக் காலத்தில் இலாக்கா தேர்வுகள் எழுத தோழர்களுக்கு பாடம் நடத்தி அவர்களைப் பதவி உயர்வு பெற உதவியவர்.  ஓய்வு பெற்ற பின் வழக்கறிஞருக்கானக் கல்வித் தகுதி பெற்று இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக மட்டுமல்லாது நமது சங்கத்தின் சட்ட ஆலோசகராக ஒப்பந்த ஊழியர்களுக்குத் தொண்டாற்றி வருகின்றார். ) அவர் தமது வாழ்த்துரையில் :
          “பொதுச் செயலாளர் செல்வத்தோடு இணைந்து பல முயற்சிகள் எடுத்து வருகின்றேன்.  நிச்சயம் இந்த ஆண்டு அந்த முயற்சிகள் வெற்றியை ஈட்டித்தரும் / பலன்களைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன்.
ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளில் சட்ட விதிகள், உத்தரவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.  சாதாரண ஆங்கிலம் வேறு, கோர்ட்டுகளின் ஆங்கிலம் வேறு.  ஒரு கமா, காற்புள்ளி சட்ட வியாக்யானத்தை நேர் எதிரிடையாகக் காட்டும்.  உதாரணத்திற்கு, உங்களுடைய ஓய்வுநாள் ஊதியம்.  ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றினால் ஒருநாள் ஓய்வு நாள் ஊதியம் என்று இருப்பதைத் தவறாக விளக்கம் தந்து இன்று 26 நாட்கள் தான் சம்பளம். அந்த 26 நாட்களிலேயே ஞாயிறு ஓய்வு தினத்திற்கான ஊதியம் அடங்கியிருக்கிறது என்கிறார்கள்.  அந்த வரியில் ஒரு கமாவைப் போட்டு படித்தால் சரியாகிவிடும்.  ரெகுலர் ஊழியர்களுக்கு மாதச்சம்பளம். அங்கே ஓய்வு தினங்களுக்கான தனியான சம்பளம் இல்லை. 30 / 31 நாட்கள் சம்பளத்திலேயே அது அடங்கி விடும் என்பது அவர்களுக்கு சரியானது.  ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு மாத சம்பளம் இல்லை.  எனவே ஓய்வு நாட்களுக்கான சம்பளம் தனியே வழங்கப்பட வேண்டும். இது பற்றி DLC உடன் நாம் பிரச்சனை எழுப்பி உள்ளோம்.  தொழிற் தகராறு சட்டப்படி சுமுக முடிவு ஏற்படவில்லை என்றால் உயர்நீதி மன்றத்தில் ஆர்டிகல்  படி நாம் வழக்குத் தொடர முடியும். 
          BSNLல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் மற்ற துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.  மற்ற இடங்களில் பணி தொடர்ச்சி இல்லை. ஆனால் BSNL ல் தொடர்ச்சியான பணி இருக்கிறது.  ஒரு வகையில் இங்கு ஒப்பந்த ஊழியர் கான்டிராக்ட் முறையே பொருந்தாது.  இங்கு கான்டிராக்டர்தான் மாறுகிறாரே தவிர பணி செய்யும் ஊழியர்கள் மாறுவதில்லை.  இவர்கள் நிரந்தரமாகும் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் உமாதேவி வழக்கில் வழங்கிய தீர்ப்பு (தொடர்ச்சியாகப் பணிசெய்யும் நமது ஒப்பந்த ஊழியர்கள் விஷயத்தில்) குறுக்கே இடைஞ்சலாக இராது என்பது எனது கருத்து.  அந்தத் தீர்ப்பு என்எல்சி—க்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் பொருந்தாது எனில், நமக்கு மட்டும் எப்படி பொருந்தும்?
          அதே போல  A / B / C என ஊதியத்தை வேறுபடுத்தியதே தவறு.  இங்கே ஒப்பந்த ஊழியர் செய்யும் அதே பணியைத்தான் அங்கேயும் செய்கிறார்கள்.
          தோழர் சுப்புராயன் அவர்கள் கூறியது போல நமது ஒற்றுமையே நமது துயர் ஓட்டும்.  மேலும் தோழர்களே, EPF தொகையைத் திரும்ப எடுக்காதீர்கள்.  இடைத் தரகர்களிடம் ஏமாறாதீர்கள்.  அமைப்பை பலப்படுத்துங்கள்.  சந்தாவை முறைப்படுத்துங்கள்.  சங்கப் பத்திரிகைகளைப் படியுங்கள்.  நன்றி வணக்கம்.”
(கருத்தரங்கம் முடிந்து ஒப்பந்த ஊழியர்களோடு தனியே உரையாடினார்.)
          அதன் பின்னர் நிஜ நாடகத்தில் நடித்த குடந்தைத் தோழர்களுக்கு தோழர் கே, சுப்புராயன் கைத்தறி ஆடை அணிவித்துப் பாராட்டினார்.

தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு கடலூர் TMTCLU கிளைச் செயலாளர் தோழர் R.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி கூற கருத்தரங்கம் இனிதே நிறைவுபெற்றது.  நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றது.   

No comments:

Post a Comment