தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை
18-ஆம் ஆண்டு தமிழ் விழா
தோழர் சிரில் அறக்கட்டளையும் NFTE மாவட்டச் சங்கமும் இணைந்து 18வது ஆண்டு தமிழ் விழாவை கடலூரில் 11.07.2017
நடத்தியது. தோழர் க.சீனிவாசன்அறக்கட்டளை தலைவர் அவர்களின்
இனிய கவித்துவமான தலைமை உரை நிகழ்ச்சியின் வெற்றிக்குக்
கட்டியம் கூறியது. அறக்கட்டளைச்
செயலர் தோழர் வீ. லோகநாதன்,
அனைவரையும் வரவேற்றார். மறைந்த மார்க்ஸிய அறிஞர் NFPTE சம்மேளனத்தின் மேனாள் செகட்டரி ஜெனரல் தோழர் D.ஞானையா
அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிரில் அறக்கட்டளை மேனாள் செயலரும், எழுத்தாளருமான தோழர் எஸ்ஸார்சி உணர்ச்சி
மிக்க அறிமுகவுரையாற்றினார். அவர் தம் உரையில் கடலூர் மண்ணின் பெருமையையும் ஆன்மீக அருளாளர்களின் தமிழின்
பெருமையையும் எடுத்துரைத்தார். மேலும் சிரிலின் பெயரில் நடக்கும் விழாவில் சிரிலின் சீடரானத்
தோழர் ரகு அவர்களின் பவளவிழா மிகவும்
பொருத்தமுடையது. ரகுவின் பெருமையை நாளெல்லாம் தனியாகவே பேச முடியும் எனினும் அவரை
வைத்துக்கொண்டு புகழ்வது சற்று நெருடலானது,
ஆனாலும் உண்மை
அதுதான் என்றார். ஏனெனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடலூர் தோழர்களின்
நெஞ்சில் நிறைந்த தோழர் ரகுதான் நமக்கு சிரில்; ரகுதான்
நமக்கு ஜெகன் என பலத்த கரகோஷத்திற்கிடையே பவளவிழா வாழ்த்துரையையும் அறிமுக உரையையும் நிறைவு செய்தார்.
காலம் கருதி தோழர் ரகு சுருக்கமாக உரையாற்றினார். புகழ்ச்சி தன்னை நெளியச் செய்கிறது, அதைவிட தோழர் ஞானையா மறைந்துள்ள நிலையில் நெருடலாக உள்ளது. ஆனாலும் ஞானையா, சிரில் முதலான தோழர்களால்தான் எனது செயல்பாடு அமைந்தது. தோழர் எஸ்ஸார்சி பேசிய இலக்கியத் தமிழ் தெரியாவிட்டாலும், சங்க நிகழ்வுகளை, பேச்சுக்களை தமிழில்தான் இருக்க வேண்டும் என நம்மை மடைமாற்றியவர் தோழர் சிரில் என்பதை நினைவு கூர்ந்து இயக்கத்தை ஒன்றுமையுடன் நடத்திச் செல்ல வாழ்த்துக் கூறினார்.
10 மற்றும்12
ஆம் வகுப்பில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட முதன்மைப் பொதுமேலாளர் திரு R.
மார்ஷல் ஆண்டனி லியோ, அவர்கள் ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் புத்தகங்களை வழங்கினார்கள். சிறப்பு
விருந்தினர் உரையைக் கேட்க தாமும் ஆவலாக உள்ளதால் வாழ்த்துரையை மிக மிகச் சுருக்கமாக முடித்துக்
கொண்டார். மாணவர்களை
வாழ்த்தும் போது வாழ்க்கையில் உயர மருத்துவராக பொறியாளராக கடினமாக உழையுங்கள், படியுங்கள். ஆனால் எப்போதும் தமிழை மறந்து விடாதீர்கள். எல்லாவற்றிலும் முக்கியமானது சிறந்த மனிதனாக வாழ்வது என வாழ்த்தி மகிழ்ந்தார்.
அடுத்து
தமிழ் விழாவின் முக்கிய நிகழ்வு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கவுன்சில்
உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள்
”வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி” என்ற தலைப்பில் ஆற்றிய இலக்கிய உரை. தமிழ் தெரிந்த சான்றோர் அவை இது. அதிகம் சொல்லத் தேவையில்லை. உங்களுடைய மாவட்டப்
பொதுமேலாளர்தான் குறள் போல குறுகத் தரித்துப் பேசினார்கள் ”மனிதனாக வாழ்”.
உண்மைதான் வள்ளுவத்தின் சாரம் 1330 குறள்களிலும் நம்மை மனிதனாக மாற்றுவது, மனிதனாக
வாழச் செய்வது என்பதுதான் என்று தொடங்கி ஒருமணி நேரம் நம்மை சரித்திரப்
பக்கங்களின் ஊடாக வள்ளுவரோடு பயணம் செய்ய வைத்தார். அந்தப்பயணத்தின் அனுபவம் நம் எதிர்கால
வாழ்க்கைக்குப் பயன்படும். நாம் தான் மறவாது அந்தச் சிந்தனையில் நம்வாழ்வை
அமைத்துக் கொள்ள வேண்டும். தோழர் லோகநாதன்
குறிப்பிட்டதுபோல கடந்த 17 ஆண்டுகளில் பல தமிழ் அறிஞர்கள் உரையாற்றி உள்ளனர். அவற்றிற்கு மகுடம் சூட்டுவதுபோல தோழர் தா பா
அவர்களை அழைத்தது என்று வரவேற்றார்.
உண்மைதான் தா பாவின் உரை அறக்கட்டளைக்குச் சூட்டிய மகுடமாக அமைந்தது.
சிரில் அறக்கட்டளை
உறுப்பினர் தோழர் க.ஜெயச்சந்தர் நன்றி கூற, ஓய்வுபெற்ற தோழர் வேணுகோபால் அவர்கள் மௌத்ஆர்க்கனில்
நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே
நிறைவுற்றது.
தோழர் தா.பா. அவர்களுக்கும் தோழர் ரகு அவர்களுக்கும் பலரும்
சால்வை அணிவித்து மகிழ்ந்தனர். மாநிலச் செயலர் தோழர் K. நடராஜன், தோழர் தா.பா.அவர்களுக்கு சிரில்அறக்கட்டளை சார்பாக நினைவுப்பரிசு வழங்கினார்.மாநிலத்தலைவர் தோழர் P.காமராஜ் புத்தகம் பரிசு வழங்கினார்.மூத்தத் தோழர் K.சேது அவர்கள் கலந்துகொண்டது. சிறப்பம்சமாகும். மாவட்டம் முழுவதுமிருந்து திரளான தோழர்கள்
கலந்துகொண்டனர். கடலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள், கடலூரில்
இயங்கும் பல இலக்கிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள்,
அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பொதுமேலாளர் அலுவலக
வாயிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் பலத்த மழை குறுக்கிட, குறுகிய
நேரத்தில் தொலைபேசி நிலைய மாநாட்டு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழ் விழா
விமரிசையாக நடைபெற்றது. உடனடியாக இடத்தை அளித்த நிர்வாகத்திற்கும், அதற்குரிய
ஏற்பாடுகளைச் செய்திட்ட தோழர் D.குழந்தைநாதன் உள்ளிட்ட தோழர்களுக்கும், உணவு ஏற்பாடுகளை செய்திட்ட தோழர் A.S.குருபிரசாத், S.இராஜேந்திரன், TMTCLU மாவட்டத் தலைவர் M.S.குமார் தலைமையில் கூட்ட
ஏற்பாடுகளை சிறப்பாக செய்திட்ட TMTCLU சங்கத் தோழர்களுக்கும்
மாவட்ட சங்கத்தின் நன்றியும்
பாராட்டுதல்களும்.
முழுமையான விழா புகைப்படங்கள், தோழர் தா.பா அவர்களின் இலக்கியவுரை பின்னர் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment