.

Friday, November 10, 2017

”சட்டப்படியான குறைந்த பட்ச ஊதியம் வழங்காத
எந்தத் தொழிற்சாலையும் தொடர்ந்து
 இயங்க உரிமை இல்லை”
– டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு-

தொழிற்சாலைகள் தனது ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத போக்கை மிகக் கடுமையாகச் சாடி, ’ ஆலையைத் தொடர்ந்து நடத்தும் உரிமை உங்களுக்கு இல்லை’ என சமீபத்தில் கூறியுள்ளது டெல்லி உயர்நீதி மன்றம்.

நீதியரசர் திரு சி, ஹரி சங்கர் இப்படி விளக்குகிறார், ” எந்த வகையில் பார்த்தாலும் ’வியர்வை சொட்டும் உழைப்பாளி’ ஒரு நாகரீக சமூகத்தில் சாபக்கேடாக இருக்க முடியாது. (அப்படிக் கருதுவது ) ரோம ராஜியத்தில் அடிமைகளை மோதவிட்டு சண்டையிடச் செய்து வேடிக்கை பார்த்து ரசித்த செல்வச் சீமான்களின் காலத்தின் கொத்தடிமை உழைப்பு முறையையே நினைவூட்டுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் மேன்மை ( கூலித் தொழிலாளிகள் எனச் சிலர் அழைக்க நினைக்கலாம் ) தொடர்ந்து தளர்வின்றி காக்கப்பட வேண்டும்; என்ன விலை கொடுத்தேனும் பாதுகாத்தல் வேண்டும்;  ஏனெனில், மற்ற அனைத்துப் பிரிவினரும் வர்க்கத்தினரும் வாழ்வதும் தாக்குப்பிடித்து ஜீவிப்பதும் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பால்தான். “
        மாண்பமை நீதிமன்றம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மேலும் பின்வருமாறு கருத்தைப் பதிந்தது, ” குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது மனிதகுலத் தன்மையை எடுத்துக்காட்டும் காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ஒரு தொழிலாளியின் உழைப்பை உறிஞ்சிவிட்டு அவனுக்குக் குறைந்த பட்ச ஊதியமும் வழங்க மறுப்பது என்பது மனிதத்தன்மையற்ற செயல்……….. ஒரு உழைப்பாளிக்கு (சட்டம் அவனுக்கு வழங்கிய ) குறைந்தபட்ச ஊதியத்தைக் கொடுக்காதது  மனசாட்சியை மறுத்த தீமையும் சட்டத்தின் முன் மன்னிக்கவே முடியாத குற்றமும் ஆகும். அத்தகைய செயல், அரசியலமைப்பு சட்டப்படி அமைந்த நமது சமூக அமைப்பின் ஆணி வேரையே பாதிப்பது ; மிகுந்த நம்பிக்கையுடன் நாகரீக சமூகத்தின் உயர் விருப்பங்களை வெளிப்படுத்தும் அரசியலமைப்பின் முகஉரையையே பொய்யாக்குவதுமாகும். “  

        அற்புதமான தீர்ப்பை வழங்கக் காரணமான வழக்கின் பின்னணி இது

திரு கீதம் சிங் என்றத் தொழிலாளிக்கு மூன்றாண்டுகள் ஊதியம் வழங்க மத்திய செயலக கிளப் Central Secretariat Club அமைப்பிற்கு லேபர் கோர்ட் ஜூலை 2004 ல் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கே இது. 

தோழர் கீதம் சிங், 1948 குறைந்த பட்ச ஊதிய சட்டம் குறிப்பிட்டதை விட குறைவாகத் தனக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தனக்கு உரிய ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என்ற claim கோரிக்கையைத் தொழிற் தகராறு சட்டத்தின் கீழ் எழுப்பினார். கிளப்பின் நிர்வாகம் தங்களது கிளப் அந்தச் சட்டத்தின்படி ஒரு தொழில் நிறுவனம் அல்ல எனவும், தொழிலாளி தாமதமாக இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார் எனவும் தங்கள் தரப்பு மறுப்பு வாதத்தை முன் வைத்தது.  
வாதப் பிரதி வாதங்களைக் கேட்ட பிறகு திரு சிங்கின் வாதத்தை ஏற்று உத்தரவிட்ட நீதி மன்றம், லேபர் கோர்ட் மூன்றாண்டுகளுக்கு மட்டும் குறைந்த பட்ச ஊதியம் என்று வரையறுத்ததை நியாயமற்றது என்று  நிராகரித்து சட்டத்தில் அத்தகைய எந்த கால நிர்ணயமும் செய்யப்படவில்லை என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டது.

எனவே மாண்பமை உயர்நீதி மன்றம் லேபர் கோர்ட் வழங்கிய தீர்ப்பைத் திருத்தி முழுமையான ஆறு ஆண்டுகளுக்கு ஊதியத்தை வழங்க கிளப்பை பணித்துள்ளது. தனது தீர்ப்பில், உழைப்பாளியிடம் உழைப்பை வாங்கிக் கொண்ட பிறகு அவருக்குக்  குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க மறுக்கும் அமைப்பு எனது பார்வையில் சேவை அமைப்பு எனக் கூறிக்கொள்ளும் தகுதி அற்றது என்றார்.
லேபர் கோர்ட் மூன்றாண்டுகள் என வரையறுத்தது நியாயமற்றது, அவர் பணியாற்றிய 01---09—1989 முதல் செப்டம்பர் 1995 வரை ஊதியம் வழங்க உத்தரவிடுகிறேன். மனச்சான்று உறுத்தலற்ற குற்ற நடவடிக்கையான (குறைந்த பட்ச ஊதியம் மறுத்த) கிளப்பின் நடவடிக்கைக்கு தனது (மூன்றாண்டுகள் மட்டுமே ஊதியம் என்ற) தீர்ப்பின் மூலம் லேபர் கோர்ட் துணை போயிருக்கக் கூடாது. என்றும் நீதியரசர் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

        தோழர்களே,
        நியாயமான நமது கோரிக்கைகளை வென்றடைய நீதிமன்றங்களின் மூலமும் நாம் போராடுவோம். நமது  சம வேலைக்குச் சம சம்பளம் என்ற கோரிக்கையில் நாம் வெல்வோம் என்ற நம்பிக்கையை நமக்கு அளித்துள்ள தீர்ப்பு இது.

         

No comments:

Post a Comment