.

Monday, November 27, 2017

NFPTE பிறந்தது
தொழிற்சங்க வரலாற்றில் புதிய ஒளிக்கீற்று
Translation of Chapter 9 THE HISTORIC REALIGNMENT
in the Book GLIMPSES OF A UNIQUE UNION
written by Comrade D. GNANIAH
(தமிழாக்கம் : வெ. நீலகண்டன், கடலூர்) 
       
சுதந்திரத்திற்குப்பின் அமைந்த தேசிய அரசாங்கத்தின் துவக்கத்தில் முற்போக்கானத் தொழிலாளர் கொள்கைகள் உற்சாகமாக வெளிப்பட்டன. நியாய ஊதியத்திற்கான குழு முதலியன அமைக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக அப்போதைய தகவல் தொடர்பு அமைச்சர் திரு ரபி அகமத் கித்வாய் P&T ல் செயல்பட்டுவந்த பல்வேறு தொழிற் சங்கங்களை மறுஒருங்கமைப்பு (realignment of Unions ) செய்திட முயற்சி மேற்கொண்டார். ஆனால் அது பலனளிக்கவில்லை. 1951 ல் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு முயற்சியும் வெற்றிபெறவில்லை.
        1954 ல் மீண்டும் ஒரு முயற்சிஇது அப்போதைய தகவல் தொடர்பு அமைச்சர் திரு பாபு ஜெகஜீவன் ராம் மேற்கொண்டது. அவர் முன்பு தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவர்பல்வேறு தொழிற்சங்கப் பெருந்தலைவர்கள் மற்றும் வேறுபட்ட அரசியல் கருத்தோட்டம் உடையவர்களோடு பழகிய நிறைந்த அனுபவம் உடையவர். அந்த அனுபவங்களின் வெளிப்பாடாக அவர் உருவாக்கிய திட்டத்தை ஒரு சுற்றறிக்கையாக P&T  நிர்வாகம் 20—02—1954 ல் அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பியது. சிறிய சங்கங்கள் மற்றும் கேடர் சங்கங்கள் ஒன்றுபட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் தாங்கள் மூழ்கடிக்கப்படுவோம் என இயற்கையாகவே அச்சப்பட்டு எதிர்த்தன. ஆனால் அரசின் அங்கீகாரம், சலுகைகள் இல்லாமல் அவை தொடரவும் முடியாது என்பதும் தெரிந்திருந்தது. எனவே வெளிப்படையாக எதிர்க்காமல் திரைமறைவில் சில எதிர்மறை செயல்பாடுகளை மேற்கொள்ளவே செய்தனர்.

குறிப்பிடத்தக்க தன்மைகளை தெளிவாக உடைய நடுத்தரப் பிரிவு சங்கங்கள் சில, அமைய உள்ள 9 சங்கங்களில் தங்களுக்கான உரிய இடத்தைப் பெற முடியும் என நம்பிக்கைக் கொண்டிருந்தன.

திரு  V.G. டால்வி தனது சங்கத்தில் பிளவுபடாத ஆதரவை முழுமையாகப் பெற்ற உயரிய மதிப்புடையத் தலைவராகத் திகழ்ந்தார்ஆனால் ஓன்றுபட்ட அமைப்பு வந்தால், அதனுடைய ஜனநாயக பூர்வ சங்கச்செயல்பாடுகளால், அதுகாறும் தங்கள் பிரிவுசங்கம் அனுபவித்து வந்த வழிவழியான தங்கள் தலைமைக்கு ஆபத்து வரக்கூடும் என பயந்தார்கள்.
(ஆகஸ்ட் 15ல் தேசம் இரண்டாக பிளக்கப்பட்டு சுதந்திரம் அளிக்கப்படுவதற்கு இரண்டு நாள் முன்பு 13—08—1947 ல் P & T ஊழியர்களின் மூன்று பெரும் சங்கங்கள் ஓரமைப்பாக THE UNION OF POST AND TELEGRAPH WORKERS” புதிய பெயரில் (UPTW) அதிசய மலர் மலர்ந்தது). UPTW சங்கமோ பரந்துபட்ட ஜனநாயகத்தன்மை உடையது. அதனால் UPTW சங்கத்தின் உள்ளே  அரசின் திட்டம் குறித்து கடுமையான விவாதங்கள் தொடங்கின.
வலதுசாரித் தலைமை அரசின் திட்டத்தை ஆதரித்தது.  அடிமட்டத் தோழர்களின் பெரும் ஆதரவு பெற்றிந்தாலும் பெரும்பான்மை இல்லாத இடதுசாரித் தலைமை திட்டத்தை எதிர்த்தது. இடதுசாரிகளில் ஒரு பிரிவுநிலப்பிரபுத்துவ பூர்ஷ்வா அரசுஎன அதன் எந்தவொரு ஒருங்கிணைப்புத் திட்டத்தையும் முழுமையாக எதிர்த்தது.
ஆனால் பல சங்கங்கள் எனப் பிரிந்து கிடப்பது கவலைக்குரியது. அதனால், ஒன்றுபட்ட UPTW சங்கத்தால் கூட கோரிக்கைகளின் மீது நேரடிப் போராட்ட இயக்கங்களை நினைத்துப் பார்க்க முடியாத நிலை. யதார்த்தத்தில் ஏதோவொரு வகையில் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருங்கிணைப்பு ஏற்படுவது முடியாது என்பதும் உண்மையாக இருந்தது.
கடைசியில் தோழர் ஓம் பிரகாஷ் குப்தா தலைமையில் செயல்பட்ட இடதுசாரிப் பிரிவு அரசின் திட்டத்தை ஒப்புக் கொள்வதற்கு இரண்டு முன் நிபந்தனைகளை விதித்தது.
ஒன்று, கட்டாய சம்மேளனம் ; சம்மேளனத்தின் இணைப்பு சங்கங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை கிடையாது ; அதேபோல, சம்மேளத் தலைமைக்கும் எந்த சங்கத்தையும் வெளியே அனுப்பும் உரிமையும் கிடையாது.
இரண்டாவது, கிளை முதல் அகில இந்திய சங்கங்கள் வரை மற்றும் சம்மேளனத்தின் செயல்பாடுகள் ஜனநாயக தேர்தல் முறையில் அமைய வேண்டும். ஜனநாயக முறையில் எடுக்கப்படும் முடிவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டும்.
ஆழமான விவாதங்களுக்குப் பிறகு, முக்கியமாக, பேச்சு வார்த்தைகளில் முதன்மைப் பங்கு வகித்தப் பொதுச் செயலாளர் தோழர் K. இராமமூர்த்தி மற்றும் தலைவர் தோழர் A.P. துளசிராம் அவர்களாலும் முன் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
தொடர்ச்சியாக நடைபெற்ற விவாதங்களில் திரு ஜெகஜீவன் ராம் தனது திட்டம் ஏற்கப்பட வேண்டும் என்பததில் உறுதியாக இருந்தவர், நியாயமான இந்த நிபந்தனைகளை ஏற்றார்.
இடதுசாரிப் பிரிவுத் தலைவர்கள் ஏஐடியுசி மத்திய சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் S.A.டாங்கே அவர்களிடம் இது குறித்து வழிகாட்டல் பெற அணுகினர். இருதரப்பு கருத்துக்களையும் கேட்டபின் தலைவர் டாங்கே கூறினார்:
முன் வகைப்படும் எந்தவொரு திட்டமும் கடவுளால் தயாரிக்கப்பட்டதா அல்லது சாத்தானால் தயாரிக்கப்பட்டதா என்பது ஒரு பொருட்டே அல்ல. நாம் இரண்டின் மீதும் நம் நம்பிக்கையை வைப்பவர்கள் அல்லர். எனவே திட்டத்தைத் தாராளமாக ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் அந்தத் திட்டத்தைக் கருவியாகக் கொண்டு, சாதாரண அடிமட்டத் தொழிலாளிகளின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு சக்திமிக்க ஒற்றுமையைக் கட்டி எழுப்புங்கள்! “
இந்த வழிகாட்டல் பிரச்சனையைத் தீர்த்து வைத்தது; செயலூக்கம் பெற்ற இடதுசாரியினர் மறுஒருங்கிணைப்பு REALIGNMENT திட்டத்தில் தங்கள் பங்கை ஆற்றினர். UPTW சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் K. இராமமூர்த்தி அரசாங்கத்தோடும் பிற சங்கங்களோடும் பேச்சு வார்த்தை நடத்துவதில் பெரும் பங்காற்றினார்.
UPTW சங்கம் விதித்த நிபந்தனைகளை கடைசியில் அரசாங்கம் ஏற்றுக் கொண்டு தனது மறுஒருங்கமைப்புத் திட்டத்தை மாற்றி அமைத்தது. டைரக்டர் ஜெனரல் P&T அவர்கள் 02-07-1954-ல் மறுஒருங்கிணைப்புத் திட்டம் இணைக்கப்பட்ட ஒரு சிறப்புச் சுற்றறிக்கையை அனைத்துச் சங்கங்களுக்கும் அனுப்பினார். அதில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத சங்கங்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும்படி தனித்து விடப்படும் என்பதைத் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார்.
அரசின் செய்தித் தொடர்பாளர் திரு C. V. ராஜன் (முதுநிலை துணை டைரக்டர் ஜெனரல் P & T) அவர்கள் 03-07-1954ல் பத்திரிக்கைகளுக்கு ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டார். அதில், ”நாட்டில் தற்போது 21 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றனஇவற்றிடையே கோரிக்கைகள், செயல்பாட்டில் முரண்பாடுகளும், ஒரே பிரிவு ஊழியர் நலன்களில் பல சங்கங்களின் உரிமைகோரல் குறுக்கீடுகளும் இருப்பதால், சுமூகமான செயல்பாடு சாத்தியமில்லாது இருக்கிறதுஎனவே, இவற்றை முறைப்படுத்தவும் தொழிற்சங்கச் செயல்பாடுகளை மேலும் பயனுடை ஆற்றல் மிக்கதாக்கவும் புதுவகையிலான மறுஒருங்கிணைப்பு அமைப்பை ஏற்படுத்த முயல வேண்டியது தேவை என்பது உணரப்பட்டதுஎன அரசின் நோக்கத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
இது உண்மையில் போற்றிக் குறிப்பிடத்தக்க அறிக்கையாகும்ஏனெனில், இந்தப் பிரச்சனையில் அரசாங்கமே ஊழியர்களைப் பணியமர்த்துபவராக (முதலாளியாகவும்) இருக்கிறார்.
ஆனால் வேறொன்றையும் நிச்சயம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது எனில், அமைக்கப்படவுள்ள புதிய அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு வருபவர்களை அரசால் நிச்சயம் சமாளிக்கக் கூடியவர்களாகவே இருப்பார்கள்; புதிய அமைப்பில் (பெரும்பான்மை இன்மையால்) இடதுசாரிப் பிரிவினர் கட்டுப்படுத்தி வைக்கப்படுவார்கள்P & T தொழிலாளர்களிடையே நிலவிவரும் தொழிற்சங்க ஜனநாயகப் பண்பால் (புதிய அமைப்பினால்) அரசுக்கு எந்த அபாயமும் எழ வாய்ப்பில்லை எனக் கருதியது. எனவே, ஆளும் காங்கிரஸ் கட்சி இந்தத் திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டியது.
இதே அரசாங்கம்தான் இதே ஜனநாயகக் கொள்கையை இரயில்வே துறையில் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. காரணம், இரயில்வே தொழிற்சங்கத்தில் கம்யூனிஸ்ட்களும் பிற தீவிர போர்க்குணம் மிக்கவர்களும் தொழிற்சங்கத் தேர்தலில் வென்றுவிடுவார்கள் என எண்ணியதுதான்.
அகில இந்திய மட்டம் வரை ஒன்பது சங்கங்களும், ஒரு கட்டாய சம்மேளனமும் அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்தது. N.F.P.T.E மற்றும் ஒன்பது சங்கங்களுக்கான ஒரு அமைப்புச் சட்ட (constitution) மாதிரி விதிகள் அடங்கிய சுற்றறிக்கையை டைரக்டர் ஜெனரல் P & T சங்கங்களின் பரிசீலனைக்குச் சுற்றுக்கு வெளியிட்டார்.
UPTW அமைப்பின் உயர் மட்ட கவுன்சில் கூட்டம் டெல்லியில் கூடி விவாதித்து திருத்தப்பட்ட மறுஒருங்கிணைப்புத் திட்டத்தை ஒருமனதாக 07..09..1954ல்   ஏற்றுக் கொண்டது. இடதுசாரி அணியினரும் சம்மதித்தனர். ஆனாலும் திட்டம் செயல்படுத்தப்படுவதில் இடர்பாடுகள் இல்லாமல் இல்லை.
எப்போதும் போல தோழர் V.G. டால்வி ஏற்க மறுத்து கையெழுத்திடாமல் இழுத்தடித்தார்.
பாம்பேயின் PMG அவர்களால் டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட டால்வியை ஒரு புன்னகையோடு ஜெகஜீவன் பாபு அவரிடம் அடுத்த அறைக்குச் சென்று கையெழுத்திடுங்கள்; உங்களை மறுஒருங்கமைப்பு மாநாட்டில் சந்திக்கிறேன் என்று கூற டால்வியுடனான பிரச்சனை முடிவுக்கு வந்தது.
பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் உறுதி இல்லாதிருக்கும் பட்சத்தில் இந்த மறு ஒருங்கமைப்புத் திட்டமும் தோல்வியில் முடிந்திருக்கும். எனவேதான் பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள் மறுஒருங்கமைப்புத் திட்டத்தின் தந்தை எனப் புகழப்படுகிறார்.
மாநாடு துவங்கியது
இரண்டரை லட்சம் தபால் தந்தி ஊழியர்களின் பிரதிநிதிகளாக  ஓராயிரத்திற்கும் மேற்பட்ட சார்பாளர்கள் கலந்து கொண்ட சரித்திர நிகழ்வான மறுஒருங்கமைப்பு மாநாடு 1954 நவம்பர் 21 ம் தேதி டெல்லியில் தொடங்கியது. (என்றாலும் எக்ஸ்ட்ரா டிப்பார்ட்மெண்டல் ஊழியர்கள் மற்றும்  P&T இன்டஸ்டிரியல் ஊழியர்கள் இதில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.)
ஒரு பிரிவில் செயல்பட்டு வந்த போட்டிச் சங்கங்களும் தங்கள் பிரிவு சார்பாளர்களுக்கான கூட்டங்களில் கலந்து கொண்டு தங்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்ததுடன், சம்மேளத்திற்கான தங்கள் பிரிவின் சம்மேளனக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தனர். அவற்றில் தேர்தல் போட்டிகளும் இருந்தன.
சிலவற்றில் நடைபெற்ற தேர்தல்களால் N.F.P.T.E சம்மேளனம் வெற்றிகரமாக அமைக்கப்பட முடியுமா என்ற கவலையும் எழுந்தது.
இதில் கடுமையான போட்டி மிகப்பெரிய சங்கமான அகில இந்திய அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தில் நடைபெற்றதாகும். தேர்தலில் இடதுசாரி தோழர் A. பிரேமநாதன் மாநாட்டின் பெரும்பான்மையினரால் தோற்கடிக்கப்பட்டு வலதுசாரி தோழர்  A.S. ராஜன் அவர்களைத் தேர்ந்தெடுத்தது. இந்த முடிவு பிரச்சனையின் கடும் சூழ்நிலையைத் தளர்த்த உதவியது.
ஆனால் ஆச்சர்யம் என்னவெனில் முரண்பாடான தோழர் எனக் கருதப்பட்ட ஓம் பிரகாஷ் குப்தா அவர்கள் இரண்டு அகில இந்திய சங்சங்களின் பொதுச்செயலராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்-- பட்டதுதான்.
1. அகில இந்திய தந்திப்பொறியியல் ஊழியர் சங்கம் 3—ம் பிரிவு
2. அகில இந்திய ஆர்.எம்.எஸ். ஊழியர் சங்கம், மெயில் கார்டு & 4—ம் பிரிவு
அதுமட்டுமல்ல, அகில இந்திய தந்திப்போக்குவரத்து ஊழியர் சங்கம் 4—ம் பிரிவின் அகில இந்தியத் தலைவராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1954 நவம்பர் 24 –ம் நாள் மாலை பாபு ஜெகஜீவன் ராம் அவர்களால் சம்மேளனக்குழுக் கூட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதனால் தேசிய தபால் தந்தித் தொழிலாளர் சம்மேளனம்N.F.P.T.E என்ற புதிய பேரமைப்பு உதித்தது என்ற மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தபால் தந்தித் தொழிலாளர்களுக்கு இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். இந்திய தொழிற்சங்க வரலாற்றில் இதற்கு முன்பும் பின்பும் இல்லாத ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க நிகழ்வாகும் (Unique event).  
 இது ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க நிகழ்வு, ஏனெனில்
·       பணியாளர்களும் பணியமர்த்துபவர் இருவருமே கூட்டாக  இணைந்து ஏற்படுத்திய அமைப்புஇதற்கு முன்மாதிரி வேறு எதுவும் இல்லை.
இது ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க நிகழ்வு, ஏனெனில்
·       ஒவ்வொரு தொழிலகத்திலும் போட்டித் தொழிற்சங்க அமைப்புகளைத் துவக்கி தொழிற்சங்க இயக்கத்தைப் பிரித்தாளுகின்ற கொள்கையையே தொழிலுறவுக் கொள்கையாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் அரசாங்கமே முக்கியமாக முன்நின்று முயன்று ஏற்படுத்திய ஒன்றுபட்ட அமைப்பு.
இது ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க நிகழ்வு, ஏனெனில்
·       அனைத்து அரசியல் கருத்தோட்டம் கொண்ட தொழிற்சங்கப் பிரிவினரும், இடதுசாரிகளும் கூட, காங்கிரஸ் கட்சி அரசோடு அதன் முயற்சிக்கு ஒத்துழைத்தது.
இறுதியாக இது ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க நிகழ்வு, ஏனெனில்
·       இனி ஒரு சங்கங்கத்தை, போட்டி அமைப்பை அங்கீகரிப்பதில்லை என அரசாங்கமே உறுதிமொழியை அளிக்க வைத்துள்ள அமைப்பு.
மறுநாள் நவம்பர் 25-ம் தேதியும் N.F.P.T.E சம்மேளனத்தின் கூட்டம் சம்மேளன அமைப்புச் சட்ட விதிகளை சட்டபூர்வமாக ஏற்று நிறைவேற்றவும் சம்மேளன நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கவும் நடைபெற்றது.
அரசாங்கம் முன் வைத்த மாதிரி அமைப்பு விதிகள் பொருத்தமான வகையில் திருத்தம் செய்யப்பட்டு, வேலை நிறுத்த உரிமை பற்றிய அம்சத்தையும் இணைத்து நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் தேர்வில் கடும் போட்டி நிலவியது.
ஐஎன்டியுசி அமைப்பு சம்மேளன நிர்வாகிகள் தேர்வில் தான் முக்கிய பங்குவகிக்க முடியும் என எண்ணி, தோழர் வீரேந்திரநாத் கோஷ் (Birendranath Gosh) என்பவரை சம்மேளனப் பொதுச் செயலாளர் (Secretary General) பொறுப்புக்கு முன் நிறுத்தியதுஅவர் A.I.P.  & RMS சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.
தோழர்கள் கே, இராமமூர்த்தி மற்றும் தாதா கோஷ் அவர்களும் போட்டியிட்டனர். சம்மேளக்குழு உறுப்பினர்களின் கணிசமான ஆதரவைத் திரட்டிய இடதுசாரி அணியினர் தாதா கோஷ் அவர்களை ஆதரித்தனர்.
தேர்தலின் முடிவில் தோழர் தாதா கோஷ் அவர்கள் 45 வாக்குகள் பெற்று N.F.P.T.E சம்மேளனத்தின் முதல் செக்ரெட்டரி ஜெனரலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் இராமமூர்த்தி 26 வாக்குகளும் விரேந்திரநாத் கோஷ் 19 வாக்குகளும் பெற்றனர்.
சம்மேளனத் தலைவர் பொறுப்புக்கான தேர்விலும் இடதுசாரிகளால் சங்கடம் எழுந்தது. ஆனால் தோழர் S.A. டாங்கே அவர்களின் வழிகாட்டலால் தோழர் V.G. டால்வி சம்மேளனத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறாக ஒர் ஒன்றுபட்ட, சக்திமிக்க, (ஒளிவீசும் வரலாறு படைக்க) ஒப்புயர்வற்ற உயர்தனிச் சிறப்பின் மிக்க தொழிற்சங்க அமைப்பாம் N.F.P.T.E சம்மேளனம் பிறந்தது.
---- மேலே விவரிக்கப்பட்டது GLIMPSES OF A UNIQUE UNION என்ற தோழர் D. ஞானையா அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தின் ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.
  v சம்மேளனத்தின் ஜீவன் ஒற்றுமை மற்றும் ஒற்றுமைக்கான தொடர்ச்சியான போராட்டம்
v அரசாங்கம் தனது வாக்குறுதியை மீறி இன்னொரு சம்மேளனத்தைத் தொடங்கி அங்கீகாரம் அளித்தபோதும், அவர்களையும் இணைத்துக் கொண்டு போராட்டம்
v அடுத்து ஆள வந்த கட்சி தன் கட்சிக்கு ஒரு அமைப்பைத் துவக்கிய போதும் –--
v போராட்டத்தின் வெற்றியை அனைவரோடும் பகிர்ந்து கொண்ட ஒற்றுமை உணர்வு
v என்ன கொடுத்தும் ஒற்றுமை என்பது வெறும் வார்த்தை அல்ல.
v அது NFPTE எமக்களித்த ஜீவ நாதம்.
v உடைத்துக் கொண்டு போகலாம், ஒன்றுபட மறுக்கலாம்… … ஆனால் பிரிந்து போன பின்பும் செயல்பாட்டு ஒற்றுமைக்கு ஒரு மேடையை அமைக்கலாம் என்று யோசனை சொன்னவர் குப்தா.
v இன்று அதுதான் மெய்யாகி இருக்கிறது
ஊழியர்கள் அதிகாரிகள் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கிறது,
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
நன்றி.NFTE TN website

No comments:

Post a Comment