.

Thursday, June 7, 2018


        தோழர் ஜெகன்
12-வது நினைவேந்தல் கூட்டம்
        கடலூரில் ஜூன் 7.ம் தேதி காலை நிகழ்ந்த தோழர் ஜெகன் அவர்களின் 12-வது நினைவேந்தல் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் G. கணேசன் தலைமை வகித்தார். தோழர் ஜெகன் அவர்களின் திருவுருவப் படத்திற்குத் தோழர்கள் மலர் அஞ்சலி செலுத்திய பின் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் மூத்த தோழர் S. தமிழ்மணி முன்னாள் மாவட்டத் தலைவர் R. செல்வம், மாநிலச் சிறப்பு அழைப்பாளர் V. இளங்கோவன்,  மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் D.குழந்தைநாதன், M. மஞ்சினி, R. பன்னீர்செல்வம், தோழர் சிரில் நினைவு அறக்கட்டளைத் தலைவர் தோழர் K. சீனுவாசன் மற்றும் திரளான தோழர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களோடு மாவட்டச் செயலர் இரா.ஸ்ரீதர் அவர்களும் கலந்து கொண்டனர்.

        மாவட்ட அலுவலகக் கிளைத் தோழர் A. சகாயசெல்வன் வரவேற்றார்மாவட்டத் தலைவர் G. கணேசன் தமது தலைமை உரையில் ஜெகனின் சிறப்புக்களை ஒரு கவிதையில் எடுத்துரைத்து எங்கள் ஜெகனே நீ மீண்டும் பிறந்து வாராயோ என்று முத்தாய்ப்பு செய்தார்.

        மாநில உதவிச் செயலாளர் P. சுந்தரமூர்த்தி தமது நினைவேந்தல் உரையில் நாம் பேசிக்கொண்டிருக்கின்ற ஒலிபெருக்கி தோழர் ஜெகனின் 6-வது நினைவு நாள் கூட்டத்தில் நெய்வேலியில் மாவட்டச் சங்கத்திற்கு வழங்கப்பட்டது என்பதை நினைவூட்டி அதனால் பின்னர் நிகழ்ந்த சங்கக் கூட்டங்களில் மைக் செலவு பெருமளவு மிச்சமானது என்றார்மேலும் கடலூர் மாவட்ட மாநாட்டில் SNEA தோழரின் வாழ்த்துரையில் தங்கள் கூட்டங்களுக்குக் கேட்டபோதெல்லாம்  NFTE மைக் தந்துள்ளது எனக் குறிப்பிட்டதைக் கூறி தோழர் ஜெகன் போலவே இந்த ஒலிபெருக்கியும் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது என்றார்.

        அடுத்து BSNLEU சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் K.T.சம்பந்தம் இயக்கம் ஒன்றாய் இருந்த காலத்தில் தோழர் ஜெகனுடன் தனக்கிருந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்அவர் தமது உரையில் :

        “மூன்றெழுத்தில் தொலைத்தொடர்பு தோழர்களின் ஜீவன் இருக்கிறது. அந்த மூன்றெழுத்து தோழர் ஜெகன்நமது மாவட்டத் தொழிற்சங்கப் பிதாமகன் எனப் புகழப்படும் தோழர் சிரில் அவர்களை ஜெகன் சந்திந்த பிறகு அவருக்கு ஞானஸ்தானம் கிடைத்தது என்பார்கள்தோழர் சிரில் அவர்களின் பெயரால் NFTE மாவட்டச் சங்கம் அறக்கட்டளை நிறுவி அதனைச் சிறப்பாக நடத்தியும் வருகிறது. தோழர் ஜெகன் திருத்துறை பூண்டிக்கு அருகே ஒரு கிராமத்தில் மேட்டுக்குடியான பிராமண குடியில் பிறந்தவர்அவரது தந்தை ஒரு புகழ்மிக்க வக்கீல். ’ஒரு குர்தா ஜிப்பாவுடன் ஒரு ராஜகுமாரனாக அவர் கடலூரில்தான் முதன் முதலில் பணியில் சேர்ந்தார்எனத் தோழர் ரகு உணர்ச்சியோடு கூறக் கேட்டிருக்கிறோம்அந்த ராஜகுமாரனை நாம் பார்க்கவில்லை. ஆனால் ஒரு மகானைப் பார்த்திருக்கிறோம்.

        சாதி இல்லை மதமில்லை என்றெல்லாம் நாம் கோஷம் போடுகிறோம்ஆனால் அந்தத் தத்துவங்களின்படி நாம் வாழ்கிறோமா என்றால் கேள்விக்குறிஆனால் ஜெகன் தத்துவத்தின்படி வாழ்ந்து காட்டியவர்தன்னுடைய மகள்களின் காதலை மனதார ஏற்றவர்பெரிய மகள் கைபிடித்தது ஒரு தெலுங்கு மொழிக்காரரைஅவருக்கு மொழி பேதம் இல்லைசிறிய மகளின் திருமணம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதுஅவர் காதலித்தது ஒரு தலித் சமூக இளைஞரைமற்றவர்களும் இத்தகைய திருமணங்களுக்குச் சம்மதித்திருக்கக் கூடும்ஆனால் ஒரு கட்டாயத்தின் பெயரில்தோழர் ஜெகனோ மிக சந்தோஷமாக மனப்பூர்வமாக அந்தத் திருமணத்தை நடத்தினார்அதுவும் எப்படி? ஒரு பெண்ணின் தலைமையில்அந்தப் பெண்ணோ கணவரை இழந்தவர், முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர்தோழியர் அல்மாஸ் பேகம் தலைமையில் திருமணம் தத்துவமே வாழ்க்கையாக வாழ்ந்தவர் அல்லவா ஜெகன்.

        அவரது பெயரை உச்சரிக்கக் கூட நமக்கு அருகதை உண்டா என்பது எனக்குத் தெரியவில்லைதோழர் ஜெகன் மற்றவர்களை, ஒன்று பெயர் சொல்லி அழைப்பார் அல்லது வாங்க போங்க என வயதில் இளையவர்களிடமும் மரியாதை கொடுத்துப் பேசும் பண்பாளர்அவரிடம் எந்தத் தோழரும், யாரும் ஒரு தகப்பனிடம் குழந்தை செல்வதைப் போல உரிமையுடன் செல்ல முடியும்.

        நெய்வேலியில் சோ. தியாகராஜன் என்பவர் இருந்தார், சோதி என்போம்தீவிரமான ஜெகன் பக்தர் என்றே சொல்லி விடலாம். நாங்கள் கூட்டம் போட்டு ஜெகனுக்கு ஒரு மோதிரத்தைக் கட்டாயப்படுத்தி பரிசளித்தோம்அதுகுறித்து பின்னர் அவர் மீது அவதூறெல்லாம் பரப்பப்பட்டதுஆனால் செல்லும் போது அந்த மோதிரத்தை எங்களிடமே அளித்து விட்டுச் சென்றார்அவ்வளவு பரிசுத்தமான தலைவர்ஒரு சிறந்த சோஷலிஸ்டாக / கம்யூனிஸ்டாக வாழ்ந்த தோழர்மைசூர் மாநாடு வரை நான் அவரோடு தொடர்பில் இருந்தேன்அதன்பிறகு அவரோடு தொடர்பற்றதற்கு நான் இப்போது வருத்தப்படுகிறேன்.  2006 ல் அவர் மறைந்த போது நெய்வேலியிலிருந்து ஒரு வேனில் சென்று அஞ்சலி செலுத்தினோம்.

        ஒன்றரை லட்சம் மஸ்தூர்கள் நிரந்தரம் சாத்தியமானதற்கு அடித்தளமிட்டது தஞ்சையில் தோழர் ஜெகன் நடத்திய ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம்அவர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டிய உண்மை  ’மஸ்தூர் என்பவன் முதலில் மனிதன்’. 

        பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர். மாற்றுக் கருத்துகளுக்கு இடம் அளிப்பவர். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஆம்பூர் மற்றும் திருச்சி கூட்டங்களில் நடந்தவைகளைச் சொல்லலாம்உக்ரமான ஜெகனை ஆம்பூரில் கண்டோம்திருச்சியில் கல்லும் ட்யூப் லைட்டும் பறந்தபோது, ’ முதலில் என்னை அடிஎன்று சிங்கம் போன்று நின்று அமைதியை ஏற்படுத்தியவர்உங்களுடைய மாவட்ட மாநாட்டில் பேசும்போது தோழர் பட்டாபியைத் தோழர் ஜெகனின் வாரிசு என நான் மனதார பாராட்டினேன். இருவருக்கும் அத்தகைய அறிவு கூர்மைஅப்படியொரு மாமனிதன் இனி பிறக்கப் போவதில்லைஅவருடைய வழிகாட்டல்படி நாம் பத்து சதவீதம் நடந்தாலே அது நாம் அவருக்குச் செலுத்தும் அஞ்சலிஅடித்தட்டு மக்களுக்காகத் தவ வாழ்க்கை வாழ்ந்தவர்.

        அவரது அடிச்சுவட்டில் அவர் காட்டிய சிந்தாந்தபடி நாம் வாழ்வதென்றால் 2019 மக்களவைத் தேர்தலுக்கு நாம் உழைப்பாளி மக்களைத் திரட்ட வேண்டும்மஸ்தூர்களை நிரந்தரப்படுத்தியதுபோல ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதுஅதை செயல்படுத்தும் அரசை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்அதற்கு BSNL நிறுவனத்தைப் பாதுகாப்பதும், அதை லாபம் ஈட்டும் நிறுவனமாக முன்னெடுத்துச் செல்வதும் முக்கியம். அதற்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும்சக தொழிலாளியைச் சக மனிதனாக எண்ணி நடத்தினாலே அதுவே தோழர் ஜெகனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

        வாய்ப்பளித்த உங்கள் மாவட்டச் சங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி.”

        இறுதியாக, மாநிலத் துணைத் தலைவர் V. லோகநாதன் நினைவேந்தல் சிறப்புரை யாற்றினார்அவரது உரையில் தோழர் ஜெகன் போல பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், தாகூரின் கீதாஞ்சலி என இலக்கியத் தெறிப்புகள் மிகப் பொருத்தமாக உணர்ச்சிப்பெருக்கோடு வெளிப்பட்டனஅவர் தமது உரையில் :

        “12வது நினைவஞ்சலி செலுத்தக் கூடி உள்ளோம்.  ”நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,/ பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்என பாரதியார் கூறியதுபோல இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்?

        திருத்துறைப்பூண்டிவேதாரண்யம் மார்க்கத்தில் பிராத்தியாங்கரை என்ற சிற்றூரில் பிறந்தார்தந்தை ஒரு வழக்கறிஞர் அவரது வீட்டில் சுதந்திரப் போராட்டக் காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் நிகழுமாம். மனிதனுக்குத் தேவையான எல்லா நல்ல குணங்களும் பொருந்தியவர்பொதுஉடைமைத் தத்துவத்தை மார்க்ஸிடமிருந்தும், அகிம்சை, அன்பை காந்தியத்திலிருந்தும், ஒடுக்கப்பட்டச் சமூகம் உயர்வு பெறப் போராடும் குணத்தை அண்ணல் அம்பேத்காரிடமிருந்தும், சுயமரியாதை உணர்வை தந்தை பெரியாரிடமும் பெற்றார். 1952 ல் பயிற்சி முடித்து தொலைபேசி இயக்குநராகப் பணியில் சேர்ந்தது கடலூரில்.
        கடலூரில் ஒரு உள்ளரங்க அரசியல் கூட்டம்சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியா பேசுகிறார். (அவர் இன்றைய .பி. முலாயம்சிங் யாதவ், பிகார் லல்லு பிரஸாத் யாதவ் முதலியோருக்கெல்லாம் தலைவர்) அவரது உரையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் நம்முடைய ஜெகன்அதற்கு அன்றைக்கு அவருக்கு இன்கிரிமெண்ட் கட் தண்டனைஇதே பணியைத் தான் நம்முடைய அகில இந்திய மாநாடுகளில் கடைசிவரை செய்து வந்தார்மாநாட்டு நிகழ்முறைகளை, தலைவர்களின் உரைகளைத் தமிழகத்திலிருந்து சென்ற லைன் ஸ்டாப் மற்றும் 4-ம் பிரிவுத் தோழர்களுக்குத் தமிழில் மொழிபெயர்த்து எடுத்துரைப்பார்.

        இங்கே நம்முடைய தோழர் தமிழ்மணி வந்திருக்கிறார்அவர் சென்ற கூட்டத்தில் பேசும்போது கூறியிருக்கிறார், ’தனக்குத் தோழர் ஜெகன் அறிமுகமானது ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி மூலம்என்றுஇந்தக் கடலூரில் தான். அப்படி அடிமட்டத் தோழர்களிடம்கூட மிக பிரபலமாக விளங்கியவர் ஜெகன்.   தோழர் ஜெகனை மாநாடுகளில் பெரும் பொழுது மேடையில் அல்ல, கூட்டத்தினரிடையே தோழர்களோடு அமர்ந்திருப்பார்.   தோழர்களோடு அவ்வளவு நெருக்கம்.

        தோழியர் சின்னம்மாள், தர்மபுரியில் ஒரு சாதாரண தோழியர்அவர் தமக்குச் சொந்தமான மனையைஇன்றைய தேதியில் பல லட்சம் / கோடி ரூபாய் மதிப்பு உடையதுதோழர் ஜெகன் பெயரில் சங்கத்திற்குத்தான் எழுதி வைப்பேன் என்று அடம் பிடித்தார்அந்தச் சாதாரண தோழியரிடம் ஜெகனின் மறுப்பு எடுபடவில்லைகடைசியில் தோழியர் சின்னம்மாள் அவர்கள் தான் கூறியபடியே செய்தார், அது இன்றைக்கு ஒரு அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறதுஅந்த அளவு தோழர் ஜெகன் மீது தோழர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர், பக்தி என்றும் சொல்லலாம்.

        ’கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் / வேட்ப மொழிவதாம் சொல்என்பாரே வள்ளுவர் அத்தகைய சொல்லாற்றல் மிக்க உரை அவர் கூட்டத்தில் ஆற்றும் உரைகள்அவரிடம் ஒருமுறை பேட்டியில் கேட்டார்கள் : தொலைத்தொடர்பில் உங்களைக் கவர்ந்த தலைவர் யார்? தொலைத்தொடர்புக்கு வெளியே உங்களைக் கவர்ந்தவர் யார்? முதல் கேள்விக்கு ஜெகன் D. ஞானையா என்றும் இரண்டாவதற்கு தோழர் முருகேசன், (நாகை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்) என்றார். ஞானத் தந்தை தோழர் ஞானையாவை நமக்குத் தெரியும்தோழர் முருகேசன் தமிழ்த்தென்றல் திரு.வி.. மூலம் AITUC சங்கத்திற்கு வந்தவர். இலக்கியத்தையும் தொழிற்சங்கத்தையும் சமமாகக் கருதுவது எப்படி என்ற கேள்விக்கு ஜெகன் சொன்ன பதில்: வால்டேரும் ரூசோவும் இல்லை என்றால் (1791 )பிரஞ்ச் புரட்சி இல்லை. சிந்தனையாளர் வால்டேர் வழங்கிய மூல மந்திரம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்எழுத்தாளர் ரூசோவின் முக்கியமான புத்தகம்சமுதாய ஒப்பந்தம்’ (Social Contract).  இந்த இரண்டு இலக்கியவாதி களாலும்தான் பிரஞ்ச் புரட்சி மூண்டு எழுந்தது என்றார் ஜெகன். (மன்னனுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்க வேண்டும் என்று விவரித்தவர் ரூசோ.) அதே போல தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்ற செயல்பாடுகளால்தோழர்கள் ஜீவா, தா.பா. முதலியோராலும் ஜெகனின் இலக்கிய ஈடுபாடு தொழிற்சங்கத்தில் வெளிப்பட்டது

        அவருடைய போராட்டங்கள் நமது பகுதியோடு நிற்கவில்லை. கடலூரில் நமது மாநில மாநாடு நடைபெறுகின்ற போது கல்லூரி ஆசிரியர்கள் போராட்டப் பேரணியை ஜெகன் தலைமையில் வாழ்த்தினோம். அந்தப் போராட்டத்தில் சென்னையில் கைது செய்யப்பட்ட 57 தோழர்களில் தொலைபேசித் தோழர்கள் 48 அவர்களில் 7 பேர் பெண்கள்.

        நமது பகுதி கருவேப்பிலங்குறிச்சி மாற்றல் பிரச்சனையில் தோழர் கேசவனோடு எனக்கு ஜெகனுடன் நேரடி அனுபவம் உண்டுஅந்தப் பிரச்சனையில் இரண்டு சங்கங்களுக்கும் வெற்றி வெற்றி என்று முடித்து வைத்தவர் ஜெகன்ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்.  ’ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் / உயிரினும் ஓம்பப் படும்என்ற திருக்குறளுக்கு இலக்கணம் அவர்.

        தோழியர் ATR என்று அழைக்கப்படும் தோழியர் AT ருக்மணி ஒரு அனுபவம்அன்றைய நாட்களில் பணியாற்றும் இடங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த வகையில் அவர் சோர்வுற்றபோது அவருக்குத் தோழர் ஜெகன் ஒரு கடிதம் எழுதினார்கடிதம் இப்படித் துவங்கியது: ‘ அன்புள்ள தங்கைக்கு’.  அதில் பாரதியின் கவிதை வரிகளை எடுத்துக் காட்டியிருந்தார், ’தேம்பி அழும் குழந்தை நொண்டி; நீ திடம் கொண்டு போராடு பாப்பா’.  அதன் பிறகு தோழியர் ATR மற்றைய தோழியர்களைத் திரட்டும் தலைவியாக, போராளியாக வலம் வந்தது தனி வரலாறுஜெகனின் வார்த்தைக்கு அத்தனை சக்தி.

        ’அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு! மனிதரில் நீயும் ஓர் மனிதன், மண்ணன்றுஎன்ற பாரதிதாசன் கூற்றுக்கிணங்கவும், ’ அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் / உள்ளழிக்கல் ஆகா அரண்என்ற குறளுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஜெகன். (இந்தக் குறட்பா டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்தத் திருக்குறள்). 

        நம்முடைய மாநிலச் சங்கக் கட்டிடத்திற்குள் நுழையும் முன் அவரது திருவுருவச் சிலையைப் பார்த்துவிட்டுத்தான் நுழைய வேண்டும்நாமும் அவரது நினைவைச் சுமந்து பாட்டாளி வர்க்கக் கடமையைச் செய்வோம்!

        தோழர் சம்பந்தம் 2019 தேர்தலைக் குறித்துக் குறிப்பிட்டார்இடைக்கால பாரளுமன்ற / சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் கட்சி இரண்டு மக்களவை இடங்களில்உண்மையில் பார்க்கப்போனால் ஒரு இடத்தில் தான்அவர்கள் வென்றிருக்கிறார்கள்.  ஆக எதுவும் வெல்ல முடியாதது அல்ல என்பதை அது எடுத்துக் காட்டும்.

        தோழர் ஜெகன் தனது பேச்சுக்களில் பாரதியார், பாரதிதாசன், தாகூரின் கீதாஞ்சலி மேற்கோள்களை எடுத்துக் கூறாமல் பேசமாட்டார்நோபல் பரிசு வென்ற கீதாஞ்சலியில் தாகூர் கூறுவார், ’இருட்டறையில் தியானத்தில் இறைவனைக் காண முடியாது, கொதிக்கும் தார்சாலை போடும் தொழிலாளியின் வியர்வையில் காணலாம்’.  அத்தகைய தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை தோழர் ஜெகனின் நினைவோடும் அவரின் உரையோடும் மேலெடுத்துச் செல்வோம்நன்றி வணக்கம்

        இறுதியாக வெளிப்புறக் கிளைச் செலாளர் தோழர் E. விநாயக மூர்த்தி, உண்மையில் நன்றி கூற நான் விரும்பவில்லைநினைவஞ்சலி செலுத்துவது நமது கடமைஅப்படிக் கடமையாற்றிய உங்களுக்குப்  பாராட்டு என்று கூறி நன்றி கூறினார்.

மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துக் கிளைகளிலும் தோழர் ஜெகன் 12 வது நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.   





   









No comments:

Post a Comment