.

Tuesday, October 30, 2018


நிறைவான பணி !
நெஞ்சம் நிறை பாராட்டுகள் !!
       
தோழர் கந்தசாமி யார் என உடனே ஒருவர் தெரிந்து கொள்ள காம்ரேட் B.K. என்று சொன்னால் போதும், நமது தோழர்கள் அனைவரும் தெரிந்து கொள்வர்.  அவர் நம் அனைவராலும் அப்படித்தான் அன்போடு அழைக்கப்படுகிறார், அறியப்படுகிறார்.  தொலைபேசி இயக்குநராக இலாக்கா பணியைத் துவக்கி இன்று BSNL உட்கோட்ட அதிகாரியாகக் கடலூரில் தனது 39 ஆண்டுகால நீண்ட சேவையை நிறைவு செய்கிறார்.  வாழ்த்துவோம்!

        1979-ல் இளைஞராக வரும்போது நமது மாவட்டத்தின் கடைக்கோடியான கள்ளக்குறிச்சியில்தான் பணியமர்த்தப்படுவார்கள்.  அந்தவகையில் கள்ளக்குறிச்சியில் இவர்கள் தங்கி இருந்த மேன்ஷன்கூட இளைஞர்களின் பாசறையாகவே இருந்தது.  காம்ரேட் BK கல்லை உலைக்கலத்தில் தயாரான படைக்கலன்!   தொழிற்சங்கமும் அந்த இளைஞர்களுக்கு நல்ல சமூகப் பயிற்சிப் பள்ளியாக இருந்தது;  படித்த அந்த இளைஞர்களும் சமூகத்தை அறிவதிலும் அதற்கு உழைப்பதற்கும் உற்சாகமாக முன்வந்தார்கள்.

        படைக்கலம் உலைக்கலத்திலேயே இருந்துவிட முடியாதல்லவா.   இயக்குநராக கல்லையிலிருந்து சொந்த ஊரான பண்ருட்டிக்கு மாற்றலில் வந்தார்;  தொழிற்சங்க ஈடுபாடு போராட்டம் காரணமாகக் குறிஞ்சிப்பாடிக்கு மாற்றல் செய்யப்பட்டார்.  ஜோடிக்கப்பட்ட ரூல்-14 வழக்கிலிருந்து போராடி, குற்றச்சாட்டுகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.  தலைமையகமான கடலூருக்கு மாற்றல் பெற்று வந்தார்.

        இந்தக் காலங்களில் பல தொலைபேசியகங்களில் பணியாற்றிய அனுபவங்களினால் சிறந்த இலாக்கா பணியாளராக மட்டுமல்ல, NFTE இயக்கத்தின் தொழிற்சங்கத் தலைவராகவும் வளர்ந்து வந்தார்.

        சிறந்த பேச்சாளர்.  கருத்தாழம் மிக்க உரைகளால் கவரக் கூடியவர்.  தொழிற்சங்கப் பொறுப்புக்களை ஏற்று செயல்பட்டார்.  கூட்டு ஆலோசனைக் குழுவான ஜெசிஎம் அமைப்பில் நமது சங்கத்தின் செயலாளராக இருந்தபோது, இலாக்கா நடத்தும் பணி நிறைவு கூட்டங்களில் சங்கத்தின் பங்காகப் பணிநிறைவுபெறும் ஊழியருக்கு மாலை அணிவிக்கும் வழக்கத்தை முதன் முதல் ஏற்படுத்தியவர் அவரே.

        பேசுவதைப்போல எழுத்தாற்றல் மிக்கவரும் கூடதமிழ், ஆங்கிலம் இரண்டிலும். ஜெசிஎம் அமைப்பில் பிரச்சனைகளை விவாதிக்க சங்கம் முன் வைக்கும் கோரிக்கைகளை விளக்கி அழகான ஆங்கிலத்தில் தெளிவாக கடிதங்கள் எழுதுவதிலும், ஆண்டறிக்கை, சுற்றறிக்கைகள், “தொலைபேசித் தோழன்கடலூர் மாவட்டத் தொழிற்சங்க இயக்க இதழில் அனைவரையும் கவரும் தலைப்புக்களோடு கட்டுரைகள் வரைவதிலும் தனது ஆற்றலைப் பயன் படுத்தியதை நமது இயக்கத் தோழர்கள் மறக்க முடியாது.  இதழ் வடிவமைப்பில் பெரும் பங்காற்றினார்.  அவருடைய இந்தத் திறமை மற்றும் அனுபவம் அவர் அதிகாரியாக விற்பனை, வணிக வளர்ச்சிப் பிரிவில் பெரிதும் பயன்பட்டது – BSNL விளம்பரப் பதாகைகள், விற்பனை முகவர்களுக்கான கையேடுகள், புதிய திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் துண்டறிக்கை முதலியவற்றில் வெளிப்பட்டது; நிறுவனத்திற்கு பெரிதும் பயன்பட்டது.

        போராட்ட காலங்களில் இவர் எழுப்பும் முழக்கங்கள்கோஷங்கள்தனித்துவமானவை. நச்சுன்னு கவிதைத் தெறிப்பாய் ஓங்கி ஒலிக்கும்;  தோழர்களைத் தட்டி எழுப்பும், வீறுகொண்டு போராட!  கோஷங்களில் அவர் அமைத்த பாதைதான் அடுத்த தலைமுறையின் வழிகாட்டி, முன்மாதிரி.

        நமது இயக்கதில் மாவட்ட நிர்வாகியிலிருந்து இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு இவரால் பொலிந்திருக்க வேண்டியது.  ஆனால் அந்த வாய்ப்பை அதிகாரிகள் சங்கமே பெற்றது.  அதன் மாவட்டத் தலைவராக இன்றுவரை சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். அதற்குமுன் JTO ஆன உடன் JTO அமைப்பின் மாவட்டச் செயலராகப் பணியாற்றியுள்ளார்.

        தொழிற்சங்கச் செயல்பாடுகளில் மட்டுமல்ல, இலாக்கா மற்றும் நிறுவனப் பணிகளிலும் முற்போக்குச் சமூக உணர்வுடன் கடமையாற்றி உள்ளார். விற்பனைப் பிரிவில் திருவிழாக் காலகங்களில் BSNL மேளாக்களைச் சிறப்பாக நடத்தியது இவருடைய ஒருங்கிணைக்கும் திட்டச் செயல்பாட்டுத் திறனைக்காட்டுவதாகும்.  He is a very good organizer and a team leader!

        பொறுப்பேற்ற ஒவ்வொரு தளத்திலும் தனது முத்திரையைதனித் தன்மையைபதித்துள்ளார்.  டெலிகாம் அக்கௌண்ட்ஸ் பிரிவில் இருந்தபோது GFF கணக்கை வட்டியுடன் கணக்கிட்டுகணிப்பொறி பயன்பாடு வருவதற்கு முன்பேஅனைவருக்கும் GPF நிகர இருப்பு கணக்குப் பட்டியலை அனைவருக்கும் ஏப்ரல் முதல் தேதி அன்றே வழங்கத் துவங்கியது முதன் முதலில் இவரே என்பது சிறப்பு.

        முற்போக்குச் சமூக உணர்வும் அந்த வளர்ப்புமே இவரை பாதைகளற்ற கல்வராயன் மலைப் பகுதி கிராமங்களில் நடந்து சென்று சர்வே செய்ய, BTS பராமரிப்பு செய்ய, RF சர்வே பணிகளைதமது குழு உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்திஅர்ப்பணிப்புடன் பணியாற்ற உத்வேகம் தந்தது எனலாம்.  IMPCS பிரிவில் கிராமப் பங்சாயத்துக்களிலும் இத்தகைய பயணங்களை மேற்கொண்டு சர்வே எடுத்தார்.

        ஊழியர்களோடும் அதிகாரிகளோடும் தோழமையோடு பழகியது அனைவரிடத்தும் நீண்டதோர் நினைவுப்பதிவை ஆழமாக பதித்துள்ளது.  காம்ரேட் B.K. உடனான நமது தொடர்பு என்றென்றும் நீடிக்கும் என்பதற்கு அடிப்படை ஆதாரம் தோழமை என்றொரு சொல் அன்றோ!

நல்ல மனிதருக்குப் பல்கலைக் கழகமாய் நல்லதோர் குடும்பம்!
குடும்பத்தினரோடு இனி மகிழ்க காம்ரேட்!
உங்கள் ஆற்றல், உழைப்பு சமூகத்திற்கும் பயன்படட்டும்!  

No comments:

Post a Comment