.

Tuesday, October 15, 2019


மக்கள் சேவையில் 4-G தரத்துடன் மீண்டும் BSNL

-புத்தாக்கக் கருத்தரங்கம்-



அன்புடையீர்,
        வணக்கம். புது உற்சாகத்துடன் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  கைத்தொலைபேசி சாதாரண மக்களுக்கு ஒரு கனவாக இருந்ததை மாற்றி, அனைவர் கையிலும் செல்பேசி –உலகத்தரத்தில், கட்டுப்படியாகும் கட்டணத்தில்—என்று மாற்றி அமைத்ததில் பெரும் பங்கு அரசுத் தொலைபேசித் துறையாய் இருந்து பொதுத்துறை BSNL என்றான எங்களுக்கு உண்டு.  தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை – ஹலோ சொன்னதும் முதல் யூனிட் 16 ரூ, இன்கமிங் காலுக்கும் கட்டணம் என்ற அத்தனையும் – ஒழித்து, ஒரு வினாடிக்கு ஒரு பைசா, அரை பைசா என்றெல்லாம் தொலைத்தொடர்பில் புரட்சிக்கு வித்திட்டது BSNL எனில் மிகையில்லை.
        சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறோம். தரைவழி தொலைபேசி மட்டுமே அளித்த அரசுத் துறை, அரசின் புதிய பொருளாதார தொலைத்தொடர்பு கொள்கையால், பொதுத்துறையாக  2000 ஆண்டு அக்டோபர் முதல் தேதி புதிய பிறப்பெடுத்தது. கடந்து விட்ட இந்த 20 ஆண்டுகளில் எவ்வளவு நிகழ்வுகள். துவக்கப்பட்ட நிலையில் புதிய BSNL நிறுவனத்தின் நிகர கையிருப்பு 40 ஆயிரம் கோடி, பல லட்சம் மதிப்புடைய நிலம், கட்டடம் என அசையா சொத்துகள், சுமார் 3 லட்சம் ஊழியர்கள்.
        ஆனாலும், செல் சேவை வழங்கத் தனியாருக்கு அனுமதியளித்த அரசு எங்களுக்கு அனுமதி தரவில்லை; ஊழியர்கள் போராடித்தான் செல் சேவையில் தாமதமாக நுழைந்தோம். அதற்குள் செல் சந்தையைப் பிடித்த தனியார் நிறுவனங்களின் அத்தனை கட்டணக் கொள்ளைகளும் அரங்கேறின. செல் வியாபாரமல்ல, மக்கள் சேவை என்றாக்கியது BSNL. அரசு உதவாதது மட்டுமல்ல, -- சமமான விளையாட்டுக் களத்தை உறுதி செய்யாது – பாரபட்சமாக நடந்து கொண்டபோதும், தனியாரோடு கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாங்கள் கடமை ஆற்றுகிறோம்.  
3-G அலைக்கற்றை பெற ரொக்கமாக அரசுக்கு BSNL 18ஆயிரம் கோடி அளித்தது; தனியார் நிறுவனங்களோ பொதுத்துறை வங்கிகளின் கேரண்டி மற்றும் வங்கிக் கடன் பல்லாயிரம் கோடியில் தங்கள் வியாபாரத்தை நடத்தினர். இன்று அந்த நிறுவனங்களில் பல கடையைக் கட்டி ஓடிவிட்டனர், கடன் சுமையை வாராக்கடனாகப் பொதுத்துறை வங்கிகள் சுமக்கும்படி– அதாவது பொதுமக்களாகிய நம் தலையில் தான் – ஏற்றிவிட்டன.  லாபம் குறைந்ததும் ஓடி விட்டவர்கள், நிறுவனத்தை நடத்தும் போதும் கிராமங்களை எட்டிப் பார்க்கவில்லை, காஷ்மீரமோ, வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களோ மலைப் பிரதேசமோ அங்கெல்லாம் செல் கோபுரம் அமைக்கவில்லை, புயல் மழை வெள்ளம் நிலச்சரிவுஎன்ற இயற்கைச் சீற்றத்தின் போதும் பொதுமக்களோடு நிற்கவில்லை.  அப்போதெல்லாம் உற்றதுணையாய் உடன்நின்றது எங்கள் பொதுத்துறையான  BSNL மட்டுமே.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை, நீதித்துறை போன்றவற்றின் டிஜிட்டல் மயமாக்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்துவது BSNL. மேலும் மத்திய அரசின் ”டிஜிட்டல் இந்தியா” மக்கள் சேவையைப் பாரதத்தின் பல இலட்சம் கிராமப்புறங்களுக்கும் கொண்டு சேர்ப்பது BSNL பொதுத்துறையே.
        இன்று தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. பேசுவதற்கு மட்டும் போன் என்ற காலம் போய், டேட்டா இல்லை எனில் உயிரோட்டச் செயல்பாடு ஏதுமில்லை என்றாகி விட்டது. அதற்கு அடுத்த தலைமுறை அலைக்கற்றை 4G – 5G வேண்டும். இன்றைய அரசோ திட்டமிட்டு சொந்த நிறுவனமான BSNL ஐ புறக்கணிக்கிறது, இவ்வளவு இலட்சம் சொத்து மதிப்புடைய நிறுவனத்திற்கு வெறும் ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற ஒப்புதலோ 4G அலைக்கற்றையோ வழங்க மறுத்து ஒரு வருட காலமாக –100 நாள் திட்ட இலக்குடைய அரசு – BSNL புத்தாக்கம் மறுசீரமைப்பு பற்றி பேசுவதற்கே தாமதிக்கிறது. நோக்கம் அனைவருக்கும் தெரிந்த ரகசியமே. இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது மக்கள் சேவையே.
        பெருமுதலாளிகள் நிறுவனங்களின் கைகளில் உள்ள பத்திரிக்கை முதலிய ஊடகங்கள் வாயிலாக பொதுத்துறையான BSNL நிறுவனம் பற்றிய பொய்யான கட்டுக்கதைகள் – விரைவில் மூடப் போகிறார்கள், இன்று ஒன்னரை லட்சம் உள்ள ஊழியர்களே அதிகம், விருப்ப ஓய்வு தர வேண்டும் என்றெல்லாம் – மக்களை நம்ப வைக்க முட்டாள் ஆக்க முயற்சி நடக்கிறது.
        இதற்கெல்லாம் எங்களின் ஒரே பதில் – வீழ்வேன் என்று நினைத்தாயோ?  என்பது தான். அதற்குத் திட்டமிடவே கடலூரில் எதிர்வரும் நவம்பர் 6ம் தேதி BSNL புத்தாக்கத் திட்டமிடல் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்கில் வங்கி, எல்ஐசி, இரயில்வே, பாதுகாப்புத் துறை, ஏர் இந்தியா என பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் மக்கள் விரோத, பிற்போக்குக் கொள்கையை முறியடிக்க –
பொதுத்துறையைக் காக்க இந்திய உழைக்கும் வர்க்கமும், பொதுமக்களும் ஒன்று திரளவேண்டிய  அவசியத்தை வலியுறுத்தவும் –
இந்த தேசபக்த கோரிக்கையை – தேசத்தின் அரசியல் கோரிக்கையாக -- பாராளுமன்றத்தில் உறுதியாக ஆதரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கருத்தரங்கில் பற்கேற்க உள்ளார்கள். நிர்வாகத் தரப்பு அதிகாரிகளும் பங்கேற்பர்.
        அவர்களோடு சமீபத்தில் நடந்து முடிந்த ஊழியர் சரிபார்ப்புத் தேர்தலில் தமிழக அளவில் 50 சத வாக்குகளுக்கு மேல் பெற்று முதன்மை இடத்தையும் அகில இந்திய அளவில் அதிக வாக்குகளோடு இரண்டாமிடம் பெற்ற NFTE சங்க வெற்றிக்கு உழைத்த தோழர்களைப் பாராட்டிடவும் அகில இந்தியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், தோழமைச் சங்கத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
·       தேச விடுதலை என்ற ஒரே கோரிக்கையை வென்று இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் மகாத்மா காந்தியடிகள் கொண்டாட்டங்களில் இல்லை,
·       புரட்சி வெற்றியடைந்த இரவில் மாமேதை லெனின் நடுநிசி கடந்த நேரத்தில் சோவியத்தின் திட்டங்களை வரைந்து கொண்டிருந்தார்,  
·       அண்ணல் அம்பேத்கார் இரவில் விழித்துக் கொண்டிருந்த காரணம் கேட்டபோது – மற்ற தலைவர்கள் உறங்கச் சென்ற நிலையில் –’எனது மக்களின் விடியலுக்காக விழித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியது போல,
        NFTE பேரியக்கத்தின் வெற்றி -- கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், நன்றி அறிவிப்பு என்றெல்லாம் ஆரவாரமாகக் கூற மாட்டோம் – மக்கள் சேவைக்காக, BSNL நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்ய, அதற்காகத் திட்டமிட, சங்கங்களிடையே ஒற்றுமையை மேலும் வலிமையாகக் கட்ட கருத்தரங்கில் கூடுவோம்!
        கருத்தரங்கத்தின் வெற்றிக்கு ஏனைய மாவட்டச் சங்கங்கள் நன்கொடையோடு கடலூர் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலச் சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் தலா ரூபாய் 2000/= வழங்க முடிவு செய்துள்ளனர்.  ஓய்வு பெற்ற நமது முன்னாள் தோழர்களும் நண்பர்களும் எப்போதும் போல் நமக்கு உதவுவர். கடலூர் மாவட்டத் தோழர்கள் தங்களால் இயன்ற, விரும்பிய அளவு – தினைத் துணையாயினும், பனைத்துணையாகக் கொள்வோம் – நன்கொடை அளிக்க வேண்டும்.  அதனினும் முக்கியம் நீங்கள் அனைவரும் அவசியம் கருத்தரங்கில் பங்கேற்கத் தோழமையுடன் அழைக்கிறோம்.
அன்புடன் அழைக்கும்,

G.கணேசன்                 A.S.குருபிரசாத்                D.குழந்தைநாதன்
மாவட்டத் தலைவர்                  மாவட்டப் பொருளர்                         மாவட்டச் செயலர்
    
     இரா.ஸ்ரீதர்
   ஒருங்கிணைப்பாளர்

No comments:

Post a Comment