நல்லதோர் குடும்பம், நல்லதோர் பெருவிழா
கடலூர் நகர் அரங்கில் விஆர்எஸ்
பணிஓய்வு பாராட்டு விழா
அதற்கு
முன் இரண்டு மாதங்கள் ஊதியம் வழங்கப்படாது தாமதமாகி வந்த நிலை. நிறுவனமும் நிதி நெருக்கடியில்.
இந்தச் சூழ்நிலையில் இவ்வளவு ஆண்டுகள் கடுமையாகப் பணியாற்றிய தோழர்கள் விருப்ப ஓய்வு
என்ற ஒரே காரணத்திற்காகக் ’குழைக்கின்ற கவரி இன்றி, கொற்ற வெண்குடையும் இன்றி…இழைக்கின்றவிதிமுன்
செல்ல… ஒருதமியன் சென்றான்’ என்று இராமன் சென்றதுபோல பணிநிறைவு சிறப்புகள்
ஏதுமின்றி செல்ல வேண்டியதுதானா என்ற கலக்கம் ஒவ்வொருவர் மனதிலும் நிழலாடியது.
தனியே
ஒரு திருமணம் என்றாலும், கட்சி மேடைகளில் நடப்பதுபோல பல ஜோடிகளுக்குத் திருமணம் என்றாலும்
விழாவில் குறை வைக்க முடியுமா? எப்போதும் போல, இல்லை இன்னும் சிறப்பாகக் கடலூர் தலைமையகத்தில்
அனைவருக்கும் ஒரேநாளில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என நமது மாவட்டச் சங்கம் விரும்பியது.
தோழமைச் சங்கங்களும் ஆக்கபூர்வமாக ஆலோசனைகள் வழங்கிட அதற்கான திட்டத்தை வகுத்தனர்.
நிர்வாகமும் நமது யோசனைக்கு நேர்மறையாக ஆதரவளித்தது.
ஜனவரி 31 அன்று கடலூர் நகர அரங்கில் முற்பகல் பிற்பகல் என இரு அமர்வாகப் பாராட்டு விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் விருப்ப ஓய்வு பெற்ற 285 தோழர்களுக்கும் ஜனவரிமாதம் பணிநிறைவு செய்யும் 8 தோழர்களும் கடலூர், விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள் என இரண்டு பகுதிகளாகப் பட்டியலிடப்பட்டனர். அது சரியான முடிவு என்பதை ஒவ்வொரு அமர்விலும் கடலூர் நகர அரங்கம் நிறைந்த காட்சி எடுத்துக்காட்டியது.
தோழர்
சிரில்தான் கூறுவாராம், ’உலை இரண்டு தேவையில்லை, இலை இரண்டு போதும்’ என்று. இருப்பதைக்
கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவனல்லவா தொழிலாளி. ஆனாலும் விழாவை நடத்த நிர்வாகத்திடம்
இருப்பொன்றும் இல்லை, இதயம் இருந்தது. மனமிருந்தால்
மார்க்கமுண்டு என்பது நிரூபிக்கப்பட்டது. காசில்லை என்றாலும் பெற்ற பெண்ணின் திருமணத்தில்
குறை வைக்க முடியாதல்லவா?
ஜனவரி 31, 2020. கடலூர் நகர அரங்கத்தின் முகப்பில் கையில் தொலைபேசி ரிசிவரை வைத்துப் பேசும் காந்தியடிகளின் பொக்கைவாய் சிரிப்புடன் பேனர் வரவேற்றது. ஜனவரி தியாகிகள் தினம் கொண்டாடப்படும் மாதமல்லவா. வாயிலில் இனிப்பு சந்தனம் மலர் தந்து ஓய்வு பெறுவோர் அவர்தம் குடும்பத்தார் வாழ்த்த வருகைதந்தோர் அனைவரும் வரவேற்கப்பட்டனர்.
மேடையின் பின்புலத்தில் சுதேசியை ஆதரிக்கும் வகையில் காந்தியின் சித்திரம், தொலைத்தொடர்பு கோபுரம், தொலைபேசி வளர்ச்சியைக் காட்டும் வகையில் காலந்தோறும் உருமாறி வந்த தொலைபேசி கருவிகளின் படத்தோடு பணிஓய்வு பாராட்டு நிகழ்வு இடம் பெற்றிருந்தது.
ஓய்வு
பெறும் ஒவ்வொரு தோழரும் மேடைக்கு அழைக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் சந்தன மாலை, சிறப்பு
மரியாதை பொன்னாடை, பரிசுப் பொருள், அவரைப்பற்றிய பாராட்டு மடல் மற்றும் இழுவை பயணப்
பெட்டி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஒவ்வொருவருக்கும்
DGMகள் பொன்னாடையும் மாலையும் அணிவிக்க, நமது மாவட்டப் பொதுமேலாளர் அவருக்கான பாராட்டுச்
சான்றிதழை வழங்கிப் பாராட்டினார். ஒவ்வொரு தோழருக்கும் விழா நிகழ்வின் நிகழ்வாக இரண்டு
புகைப்படங்கள் எடுத்து பின்னர் வழங்கப்பட்டது.
முன்னதாக AGM நிர்வாகம் வரவேற்புரை வழங்க, அனைத்துச் சங்கப் பிரதிநிதிகள் (NFTE, BSNLEU, FNTO, SNEA, AIBSNLEA,SEWA-BSNL மற்றும் ஓய்வூதியர்களின் AIBSNLPWA, AIBDPA ) வாழ்த்துரையும் வழங்கினர். DGM(A),DGM(CM) இவர்களோடு இறுதியாக நமது மாவட்டப் பொதுமேலாளரும் வாழ்த்துரை வழங்கினர். முற்பகல், பிற்பகல் இரு அமர்வுகளிலும் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துரையும் பாராட்டுரையும் வழங்கினர்.
நம்பிக்கையை
மட்டுமே முதலாகக் கொண்டு பணிநிறைவு பாராட்டு விழாவை மிகச் சிறப்பாக பிரம்மாண்டமாகத்
தமிழகத்திலேயே நமது மாவட்டம் மட்டுமே நடத்தியது
என்பதில் நமக்குப் பெருமை. வந்திருந்த அனைவருக்கும் டீ, பிஸ்கெட் வழங்கி உபசரித்தோம்.
நிர்வாகத்தின் ஆக்கபூர்வமானச் செயல்பாடும் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. எதிலும்
குறை வைக்கவில்லை என்பதில் நமக்கு நிறைவு. நிறைவான சேவைக்கு நிறைவான பாராட்டு.
தொடர்ந்து
மாநிலச் சங்கத்தின் முயற்சியின் காரணமாக, குறிப்பாக மாநில உதவிச்செயலர் தோழர் G.S முரளிதரன்
முயற்சியால் 293 தோழர்களுக்கும் உரிய தலா ரூ1250/--(for retirement Gift) தொகை டெம்ப்ரவரி அட்வான்சாக மாநில நிர்வாகத்தால் விரைவாக அனுமதிக்கப்பட்டதற்கு
நமது நன்றி. கடனுக்கு கிஃப்ட் பொருள்களை வழங்கிய வணிக நிறுவனத்தாருக்கும் நன்றி. மேலும்
அதுபோல welfare தொகையும் கடலூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. ரூபாய் ஒன்பது
லட்சம் அளவில் கடனுக்கு இழுவை பயண சூட்கேஸ்கள்(trolly suitcase) வழங்கிய நிறுவனம் நம் மீது வைத்த நம்பிக்கை BSNL நிறுவனத்தின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒப்பானது.
நெருக்கடியான நேரத்தில் நெஞ்சம் நிறையும் வகையில் விழா நடத்தியதற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைத்த பாடுபட்ட அனைவருக்கும் தனித்தனியே நமது மாவட்டப் பொதுமேலாளர் தனிப்பட்ட முறையில் பாராட்டுச் சான்றிதழ் அளித்துப் பாராட்டினார். பிப்ரவரி மாத பணிஓய்வு விழாவின்போதே அந்தச் சான்றிதழும் அளித்து நிர்வாகம் பணியில் தொடரும் ஊழியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நாம்
இன்று எண்ணிக்கையில் குறைந்திருக்கலாம், நம் திறனில், உழைப்பில், நாம் கொண்ட நம்பிக்கையில்
குறையொன்றுமில்லை. இதில் நமது மாவட்டச் சங்கத்தின் பணி மகத்தானது. நம் மாவட்டச் சங்கத்தின்
பணிக்குப்பின்னால் தோழர்கள் R.நந்தக்குமார், A.C.முகுந்தன், M.S.குமார் ஆகியோரின் பணி
மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக ஒப்பந்த ஊழியர் M.S.குமார் பேனர் கட்டுவதிலும், சான்றிதழ் தயாரிப்பிலும், விழா அரங்கு ஏற்பாடுகளிலும்
சிறப்பாகப் பணிபுரிந்தார். அத்தோழரின் மகத்தானப் பணியினை மனதாரப் பாராட்டுகிறோம்.
BSNLஐ உயர்த்திப் பிடித்து
தொடர்ந்து முன் செல்வோம். விஆர்எஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற நம் தோழர்கள் அப்படித்தான்
உழைத்து வழிகாட்டி உள்ளனர். அவர்கள் அனைவரும் நலமே திகழ வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment