தேசியத்தொலைத்தொடர்பு
ஊழியர் சம்மேளனம்
கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டச் சங்கம்
விருப்ப ஓய்வு பெற்ற தோழர்களுக்கு
மாவட்டச் சங்கம் எடுத்த மாபெரும் விழா
அன்பார்ந்த
தோழர்களே! தோழியர்களே!
வணக்கம்.
மாவட்டத்தின் பலபகுதிகளிலிருந்தும் ஓய்வு பெறும்
தோழர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடத்துவதை நமது சங்கம் மரபாகப் பின்பற்றி வருகிறது.
ஒரே மாதத்தில் இவ்வளவு தோழர்கள் என்னும்போது அங்கங்கே விழா நடத்தினால் கலந்து கொள்வது
சிரமமாகிவிடும் என்பன போன்ற காரணங்களால் மாவட்டத் தலைநகரில் மாவட்டச் சங்கமே ஒரே விழாவாக
ஒருங்கிணைத்து நடத்துவது என்ற முடிவெடுத்தோம். வாய்ப்புக்கு ஏற்ப அந்தந்தக் கிளைகளில்
நடத்துவது தனி. நமது மாவட்டச் சங்கம் முடிவெடுத்து விட்டதென்றால் அடுத்து விழா எப்படி
நடத்துவது என்பதை மட்டுமே கேட்க வேண்டும்.
ஜனவரி மாதத்திற்குள்ளாகவே நடத்துதல் சிறப்பு,
தள்ளிப் போட வேண்டாம்.
ஓய்வில் செல்லும் தோழர்களிடம் நன்கொடை கேட்பதில்லை.
பணியில் நீடிக்கும் தோழர்களே அந்தச் செலவை ஏற்பது.
ஜனவரி 25 மாலை கடலூர் மெயின் தொலைபேசி நிலையத்தில்
மாலை நேர விழாவாக நடத்துவது.
பணி ஓய்வுபெறும் தோழர்களை நன்கு அறிந்த தோழர்கள்
ரகு, தமிழ்மணி, G. ஜெயராமன், P.ஜெயராமன்
முதலிய தலைவர்களை அழைப்பது என்று முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த இயக்கம் இவ்வளவு வலிமையோடும் தோழர்கள்
சமூக உணர்வோடும் இருப்பதற்குத் தளகர்த்தர்களாகிய குப்தா, ஜெகன் திருஉருவங்கள் பிரம்மாண்ட
மேடையின் பின்புலமாக விளங்க அந்த பேனரில் அண்ணாச்சி D. ரங்கநாதன் மற்றும் சிரில் புகைப்படங்களும்
இடம் பெற்று வண்ணமயமான இருக்கைகளோடு சனிக்கிழமை மாலை 2020 ஜனவரி 25 திறந்தவெளி அரங்கம்
சிறப்புற அமைக்கப்பட்டது.
மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (திண்டிவனம்
நீங்கலாக) தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஓய்வு பெறும் தோழர்கள் குடும்பத்தினருடன்
வந்திருந்தது போற்றுதலுக்கும் நம் பாராட்டுதல்களுக்கும் உரியது.
மாவட்டத் தலைவர் G.கணேசன் தலைமையேற்க, மாவட்டப் பொருளாளர் A.S.குருபிரசாத் வரவேற்புரையாற்றினார். மாநிலத் தலைவரும், அகில இந்தியச் செயலருமாகிய தோழர் P.காமராஜ் துவக்க உரையாற்றினார். அன்றைய நிலையில் விஆர்எஸ் குறித்து வந்த உத்தரவுகள் மற்றும் நமது மத்திய சங்கம் எடுத்த முன்முயற்சிகளை விளக்கி, என்றைக்கும் நமது சங்கம் பணி ஓய்வில் செல்லும் தோழர்களின் நலனையும் பாதுகாத்து நிற்கும் என்று கூறி மாவட்டத் தோழர்களோடு தனக்குள்ள அனுபவங்களையும் கூறி வாழ்த்தினார்.
அடுத்து நமது தலைவர்
தோழர் T.ரகுநாதன் நெகிழ்ச்சி உரையாற்றினார். தழுதழுத்த அவரது உரையில், ”நம் மாவட்ட
மாநாடுகளைவிடச் சிறப்பாக உள்ளது, நம் வீடுகளிலிருந்தும் வந்துள்ளீர்கள். உங்களை எல்லாம்
சேர்த்துப் பார்த்து எவ்வளவு ஆண்டுகளாயிற்று.
கடலூர் ஜிஎம் அலுவலகத்தின் முன் சாலை பிரிப்பு தடுப்புச் சுவர் தற்போது கட்டப்பட்டுள்ளது.
அந்தக் காலத்தில் இதனைக் கட்ட வேண்டும் என நாம் சாலை மறியல் செய்துள்ளோம். அதற்குக்
காரணம் தோழர் தண்டபாணியின் மகள் சாலை விபத்தில் பலியானது. நான் பணியில் சேர்ந்த போது
நம்பர் ப்ளீஸ் எக்ஸ்ஜேஞ். சங்கக் கொடிமரம் ஸ்தாபிக்க விஸ்வநாத சிங், சீனுவாசன் மஸ்தூர்
சவுக்கு மரத்தைச் சுமந்து வந்தது. பின்னர் அதனை எடுத்து விட்டு இரும்புக் கம்பம் நாட்ட
நினைத்த போது குருவுடைய அப்பா சுந்தரமூர்த்தி மாவட்டச் செயலர். கம்பம் நட போலீஸ் அனுமதி
இல்லை என்ற போது, நடுவதைத் தடுத்தால் ஸ்டிரைக் வரும் என்று முழங்கியது… இன்றைக்கு இவ்வளவு
பெரிய டிஜிடல் பேனர். அப்போது தட்டிகளைப் பேப்பரில் ஒட்டி வண்ணங்களைக் குழைத்து எழுதுவார்கள்.
இன்றைக்கு நாம் நல்ல நிலையில் இருப்பதற்கும்,
நாம் உண்ணும் ஒவ்வொரு வேளை உணவிற்கும் சங்கத்திற்குக் கடமைப் பட்டவர்கள். வேலூர் சென்ன
கேசவன், நெய்வேலி சர்தார் கான் போன்றோர் இன்று JTOவாகவும், SDEயாகவும் பணி நிறைவு பெற்றிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம் இளமை முழுவதையும் சிறையில் கழித்தவர். நம் நாட்டின்
மூன்று அறிவாளிகள் அம்பேத்கார், நேரு, ராகுல சாங்கிருத்தியான். நாட்டிற்கும் நாம் ஏதாவது
செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். அப்படி நாம் செய்ய முன்வந்தால் நிச்சயம்
நம் வீட்டுப் பெண்களும் உடன் இருப்பார்கள்.
உங்களை எல்லாம் மீண்டும் இப்படிச் சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி”
அடுத்து தோழர் எஸ்.தமிழ்மணி தமது உரையில் குப்தா கொண்டு வந்த பதவி உயர்வுத்
திட்டம், பத்து ஆண்டுகள் சேவை செய்தாலே பென்ஷன் என்ற மாறுதல், பிரேக் மஸ்தூர் பிரச்சனையில்
ஒருநாள் வேலை செய்தாலே ஓராண்டாக தொடர்ச்சியாகக் கருதச் செய்து பணி நிரந்தரம். ஒரு நாளில்
என்ன பெரிய வித்தியாசம் என்று புறக்கணிக்காது, 2000 அக்டோபர் முதல் தேதிக்கு பதிலாக
30-09-2000ல் பணி நியமனம் பெற்றுத் தந்து பென்ஷனை உறுதிப்படுத்தியது என குப்தாவின்
பல சாதனைகளை விளக்கினார்.
TMTCLU
மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஆர்.செல்வம் இந்திரா காந்தி ஆட்சியில் ஆளெடுப்புத் தடைச்சட்டத்தை
உடைத்து 1 லட்சம் மஸ்தூர்கள் நிரந்தரம் செய்யப்பட்டதை
நினைவு கூர்ந்தார்.மாநிலத் துணைச் செயலாளர் P. சுந்தரமூர்த்தி பேசும்போது
மாவட்டச் செயலராக தோழர் D.குழந்தைநாதன் நடத்தும் பாராட்டு விழாவைப் பெரிதும் புகழ்ந்துரைத்து,
விஆர்எஸ்-க்குப் பிறகும் மாநிலச் சங்கம் தோழர்களின் பின் உறுதியாக நிற்கும் என்று உறுதி
கூறினார்.
இந்த பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்த கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர்
D.குழந்தைநாதன் பெருமிதத்தோடு பேசினார். ”விஆர்எஸ் சுனாமியாக வந்துள்ளது. ஆனால் சுனாமிக்குப்
பிறகும் எழுந்து நிற்போம். இந்தச் சாதனைகளுக்கெல்லாம் காரணம் குப்தா. அவர் வழியில்
நமது மாநிலச் சங்கம் ஒரு தோழர் கூட TSM பணிக்காலம் சேர்க்கப்படாமல் ஓய்வூதிய நிர்ணயம்
செய்யப்பட மாட்டார்கள் என உறுதிகூறி அவ்வாறே சாதித்தும் காட்டியது. அவர்களுக்கு நன்றி.
மேலும் ஓய்வூதிய மனுக்களைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய உதவிய கடலூர் நந்தகுமார், எம்.எஸ்.குமார்,
பண்ருட்டி ஜி.ரங்கராஜு, சிதம்பரம் தோழர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் நன்றி. இனியும்
தோழர்கள் மகிழ்ச்சியாகவே ஓய்வு பெறுவார்கள். மாவட்டச் சங்கம் பணியில் உடன் நிற்கும்”
என்று உறுதி கூறினார்.
”இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது இந்த இயக்கத்திற்காக நீங்கள் என்னவெல்லாம்
செய்திருக்கிறீர்கள் என்பதை 10,20 நாட்கள் கூட சொல்லிக் கொண்டே இருக்கலாம். காணற்கரிய
பெருங் கூட்டம். அரசியல், சாதி மதவாதிகளின் கூட்டமல்ல, தங்களுக்காகவன்றி செயல் ஆற்றிய
கூட்டம். உங்களிடம் எவ்வளவு வேலைகள் வாங்கி இருப்போம். அங்கே ஆர்பாட்டம், பேரணி, தர்ணா,
கூட்டம். ஆனால் சோர்வடையால் அர்ப்பணிப்போடு இயங்கிய உங்களுக்கு நன்றி. இப்படி எல்லாம்
வந்தீர்களே, கடைசி நாளும் வரனுமா? யார் கேட்கவில்லை. வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட
மரபில் சிரில், ஜெகன் எனத் தொடங்கி இன்று தோழர் குழந்தைநாதன் வரை வந்து இருக்கிறது.
இனியும் அப்படித்தான் இருக்கும். பூதத்தாழ்வார் தொழிலாளிகளைப் பாராட்டுகிறார், உழுவார்
உலகத்தார்க்கு ஆணி என்று வள்ளுவரும், பிரம்மதேவன் கலை என்று பாரதியும் பாடினார்கள்.
ஆனால் திரட்டப்பட்ட தொழிலாளர்களை ஒழிக்க நினைக்கிறது அரசு. யார் யாராக இருந்தாலும்
தொழிலாளி அம்சம் அப்படியேதான் இருக்கும். மார்க்ஸ்தான் வர்க்கமென்று எடுத்துரைத்தார்.
ரகு காலத்தில் பாதுகாப்பாக இருந்தது போல, P.ஜெயராமன் காலம் போல வடிவத்தில் தொழிலாளர்
அமைப்பு இல்லாதிருக்கலாம். ஆனால் தனித்தனியாக
அன்றி கூட்டமாக, வர்க்கமாக இயங்கும் தொழிலாளர்களின் மகிமைப் புகழ் அப்படியே இருக்கும்.”
அடுத்து நீரோட்டமாக மாவட்டச் சங்கத் தோழர்களை ஒருங்கிணைத்து இயக்கும்
முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா
ஸ்ரீதர் பேசும்போது, ”வரும்போது எவ்வளவோ சமூகத் தடங்கல்கள்.
ஆனால் அந்தச் சமூகத்தையே நமக்குக் காட்டிய சங்கம் நமது NFTE. அரசியல் தலைவரின் ஆங்கில
உரையை மொழிபெயர்த்ததற்காக நமது தலைவர் ஜெகன் தண்டனை பெற்றார். இந்தச் சங்கம் மற்ற சங்கங்கள்
போல இல்லை. 2004 சரிபார்ப்புத் தேர்தலில் நாம் செய்த தவறு, 2014 பொதுத் தேர்தலில் செய்தது
போல. ஆனாலும் 243 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நமது நிறுவனம் மட்டுமே அரசு பென்ஷனை
உறுதி செய்துள்ளது. அதிகாரிகள் அல்லாத ஊழியர் சங்கங்களை மட்டுமே திரட்டிப் போராடி பென்ஷனைப்
பாதுகாத்தவர் தோழர் குப்தா. பலர் கிடைக்காது என்றபோதும் பெற்று சாதித்தவர். ப்ரோ ரேட்டா
பென்ஷனை குப்தா நிராகரித்தார்.
நமது கடலூர் மாவட்டச் சங்கம் பணமில்லாத போதும் ஜனவரி 31ல் பணி ஓய்வு
பாராட்டுவிழா நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. நிச்சயம் உங்களுக்குச்
சேரவேண்டிய பலன்கள் வந்து சேரும். அதற்கு இந்த இயக்கமும் நிறுவனமும் முக்கியம். நீங்கள்
ஒவ்வொருவரும் அதன் தூதுவர்கள் ஆக வேண்டும். நமதருகே ஒரு தொழிலாளி எட்டு மாத காலமாக
ஊதியமின்றி இருக்கிறான் என்பது பற்றிய அக்கறையும் வேண்டும்.”
ஓய்வு பெற்ற தோழர்கள் கடலூர் ராஜு, இளங்கோவன், விநாயகமூர்த்தி, பண்ருட்டி
ரங்கராஜூ, விழுப்புரம் நடராஜன், செஞ்சி ஜெயராமன், கள்ளக்குறிச்சி மணி, ராஜேந்திரன்,
செல்லமுத்து ஆகியோர் ஏற்புரையாற்றினர். நன்றியுரை தோழர் சகாயசெல்வன் வழங்கினார்.
பணி ஓய்வு பெறும் தோழர்களுக்குக் கைத்தறி ஆடை அணிவித்ததுடன், என்றென்றும்
அவர்கள் நினைவில் நிற்கும் வகையில் ஓர் நினைவுப் பரிசையும் வழங்க எண்ணியது. எந்த நிலையிலும்
நாம் வணங்கும் தெய்வமாக இருப்பவர்கள் அல்லவா தோழர் குப்தாவும் ஜெகனும். அவர்கள் நம்
வாழ்வின் மூச்சும் பேச்சும் ஜீவனுமாக நம்முள் ஒன்று கலந்தவர்களாயிற்றே. அவர்கள் இருவரின்
திருவுருவத்தை ஒரு ஷீல்டாக மாவட்டச் சங்கத்தின் சார்பில் அளித்தோம். அதில் பொறிக்கப்பட்ட வாசகம் நம் இதயத்தில் எழுதியது
அல்லவா!
“எங்கள் மூச்சும் பேச்சும் …
எங்கள் வாழ்வும் வளமும் …
வாழி எம்மான்!”
வந்திருந்தோர் அனைவருக்கும்
இரவு உணவு வழங்கி மகிழ்ந்தோம். விழா சிறக்க அல்லும் பகலும் உழைத்த அனைவருக்கும் நன்றி.
கடமையாக ஏற்று விழாவில் கலந்து கொண்ட ஓய்வு பெறும் தோழர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு
நன்றி. தோழர்களோடு இணைந்து பணியாற்றியது நம் நினைவில் நீங்காது இருப்பது போல இவ்விழாவும்
அவர்தம் நினைவில் நிற்கும் என நம்புகிறோம்.
இனி நம் கடமை பெரிது! BSNL நிறுவனம் சிறக்க கூடுதல் உற்சாகத்தோடு உழைப்போம்!
வாழ்த்துகளுடன்,
தோழமையுள்ள,
D குழந்தைநாதன் மாவட்டச் செயலாளர்
No comments:
Post a Comment