.

Thursday, July 24, 2014

கடலூர் மண்ணின் மைந்தர் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்



தமிழகத்துக்கு இது ஒரு வித்தியாசமான விழா. ஜெயகாந்தனின் 80-வது பிறந்த நாள் விழா. எழுத்தாளர்களை அவர்கள் காலத்தில் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்திவிட்டு, காலம் கடந்த பின்பு உச்சுக்கொட்டும் வருத்தமூட்டும் மரபுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விழா. ஜெயகாந்தனை ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் கொண்டுசென்ற ‘விகடன்’, 50 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பை நூலாக வெளியிடுகிறது. அன்றைக்கு எந்த வடிவத்தில் வெளியாயினவோ, அதே அச்சு வடிவில், அப்போது வெளியான அதே ஓவியங்களுடன், அதே வடிவமைப்புடன் மீண்டும் வெளியாகின்றன, ஜெயகாந்தன் கதைகள்! இங்கிலாந்தில் வசிக்கும் ஜெயகாந்தனின் தீவிர வாசகர்களான டாக்டர் ராம்-வனிதா தம்பதி தொகுத்திருக்கும் இந்தப் புத்தகத்தை வெளியிடுபவர் விகடன் குழுமத் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன்.

தமிழ் இலக்கிய உலகுக்குக் கொண்டாட்டமான இந்த நிகழ்வில் ‘தி இந்து’வும் கைகோக்கிறது. இந்த நிகழ்வின் முக்கியமான கண்ணிகளான மூன்று பேரின் குரல்களையும் ‘தி இந்து’ இங்கே பதிவுசெய்கிறது.

“ஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக் கூடாது!” - ஜெயகாந்தன்

அப்பு வரவேற்கிறார். ஜெயகாந்தன் மனதுக்கு மிக நெருக்கமானவர். அவருடைய ஒரே மகன். “நீங்க வர்றீங்கன்னதும் அப்பா உற்சாகம் ஆயிட்டார். ஜோரா உட்கார்ந்திருக்கார்...” என்று வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார். உட்கார்ந்தவாறே கையை நீட்டுகிறார் ஜெயகாந்தன். அன்பையும் நம்பிக்கையையும் மனதில் விதைக்கிறது அவருடைய கைகுலுக்கல். “ம்...” என்று கனைத்துவிட்டு, மீசையை வருடியதும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தேன்.

• இந்த வயதில், இன்றைய சூழலில் ஜெயகாந்தனின் ஒருநாள் எப்படி இருக்கிறது?

நீங்கள் அந்த வயது, அந்தச் சூழல் என்று எதை நினைத்துக் கேட்கிறீர்களோ, அப்போது இருந்த மாதிரிதான் இந்த வயதில், இந்தச் சூழலிலும் ஒருநாள் இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம், அன்றைக்கு நான்கு மணிக்குப் பொழுது விடிந்தபோது, எனக்கும் நான்கு மணிக்கு விடிந்தது. இன்றைக்கு நான்கு மணிக்குப் பொழுது விடியும்போது, எனக்கு எட்டு மணிக்குத்தான் தெரிகிறது.

• கோடைக் காலத்தில் பகல்களையும், மழைக் காலத்தில் இரவுகளையும் நீண்டதாக உணர்கிறோம். அதுபோல, இளமையில் ஒருநாளை உணர்வதற்கும் முதுமையில் ஒரு நாளை உணர்வதற்கும் வேறுபாடு ஏதும் தெரிகிறதா?

இளமையில் ஒரு நாள் பொழுது என்பதைச் சின்னதாக உணர்ந்திருக்கிறேன். முதுமையில் அது இன்னமும் சின்னதாகத் தெரிகிறது.

• தமிழில் வேறு எந்தப் படைப்பாளிக்கும் கிடைக்காத சம கால மரியாதை - உங்கள் ஞானகுரு பாரதிக்கும் கூடக் கிடைக்காதது - உங்களுக்கு மட்டும் வாய்த் திருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று நினைக் கிறீர்கள்?

சாமானிய மக்களுடைய வாழ்க்கையை எழுதியதும், அந்த எழுத்தோடு ஒட்டி வாழ்ந்ததும் காரணம் என்று நினைக்கிறேன்.

• ஊடகங்கள் எல்லாக் காலங்களிலும் கொண் டாடிய, கொண்டாடும் ஒரே தமிழ் எழுத்தாளர் நீங்கள். ஊடகங்களோடு உறவாடுவதில் சூட்சமம் ஏதும் இருக்கிறதா?

என் எழுத்தினால் நின்றேன்; என் எழுத்தின் மீது நான் நிற்கிறேன். இதுதான் ஒரே சூட்சமம். யாரிடமும் நான் மண்டியிட்டுக் கைகூப்புவது கிடையாது.

• ஆரம்ப காலத்தில் சிறுபத்திரிகைகளே உங்கள் களம். சிறுபத்திரிகைகளில் தீவிரமான வாசிப்புத் தேடல் கொண்ட ஒரு சின்னக் கூட்டத்துக்கு எழுது வதற்கும் வெகுஜனப் பத்திரிகைகளில் பரந்துபட்ட வாசகர்களுக்கு எழுதுவதற்கும் என்ன வேறுபாடுகளை உணர்ந்தீர்கள்? இந்த மாற்றம் உங்கள் எழுத்துக்களில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

வெகுஜனப் பத்திரிகைகள்தான் என்னை மக்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தன என்றாலும், வெகுஜனப் பத்திரிகைகளிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தவை சிறுபத்திரிகைகள்தான். சிறுபத்திரிகைகளில் நான் எழுதிய எழுத்துகள் பிடித்திருந்ததால்தானே வெகுஜனப் பத்திரிகையாளர்கள் என்னைத் தங்களவன் ஆக்கிக்கொண்டார்கள்? என் எழுத்து என்றைக்கும் ஒரே எழுத்துதான். ஊடகங்கள் அதில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.

• ஆனால், பத்திரிகை ஆசிரியர்கள் திருத்தங்களை வலியுறுத்தும்போது ஏற்றுக்கொண்டிருப்பீர்கள் இல்லையா? அப்படியான திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் எழுத்துக்களில் மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் இல்லையா?

நான் மூர்க்கன் இல்லை. இது பரஸ்பரப் பகிர்தல். என்னிடமிருந்து அவர்களும் அவர்களிடமிருந்து நானும் கற்றுக்கொள்வது. நிச்சயமாக அந்தத் திருத்தங்கள் எழுத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஒருபோதும் எழுத்துக்கு விரோதமான திருத்தங்களுக்கு நான் செவிசாய்த்ததில்லை.

• ஊடகங்களுடனான உங்களுடைய உறவில் ஓர் எழுத்தாளருக்கும் பத்திரிகையாளருக்குமான உறவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எந்தப் பத்திரிகையை, எந்தப் பத்திரிகை ஆசிரியரை?

விகடனை. அதன் அன்றைய ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனை.

• உங்கள் ஆரம்ப கால எழுத்துக்கள் என்ன வடிவத்தில் இருந்தனவோ, அதே வடிவத்தில்தான் கடைசிக் கால எழுத்துக்களும் இருந்தன. நீங்கள் கொஞ்சம்கூட உங்கள் எழுத்து நடையை மாற்றிக் கொள்ளாததைப் புதிய மாற்றங்களுக்கு ஜெயகாந்தன் முகங்கொடுக்கத் தயாராகவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

ஜெயகாந்தனின் எழுத்துக்களை ஜெயகாந்தனே விமர்சிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இந்த விமர்சனமெல்லாம் மற்றவர்கள் வேலை. தங்களை விமர்சகர்கள் என்று கருதிக்கொள்பவர்கள் வேலை.

• இப்போது என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்கள், அதாவது தமிழில்?

படிக்கிற மாதிரி எதுவும் இல்லை... அதாவது தமிழில்.

• தமிழ் இலக்கியத்தில் 1990-க்குப் பிறகு ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. ஒரு புதிய படையே உள்ளே புகுந்தது. தமிழ் நவீன இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. ஆனால், நீங்கள் அதுபற்றியெல்லாம் மூச்சுவிடவே இல்லை. கிட்டத்தட்ட உங்கள் வயதில் மூன்றில் ஒரு பகுதி காலகட்டத்தில், உங்கள் மொழியில் புதிதாக எழுத வந்தவர்களைப் பற்றி ஒரு மூத்த படைப்பாளியான நீங்கள் எதுவும் பேசவில்லை. ஜெயகாந்தன், காலத்தின் வீட்டுக்குள் சென்று, எல்லாக் கதவுகளையும் பூட்டிக்கொண்டு, ஊரே இருண்டு கிடக்கிறது என்று சொல்கிறார் என்ற விமர்சனம் உங்கள் மீது உண்டு...

சரியில்லை.

• எது சரியில்லை, விமர்சனமா, ஜெயகாந்தன் காலத்தின் எல்லாக் கதவுகளையும் பூட்டிக்கொண்டதா?

ஜெயகாந்தன் பூட்டிக்கொண்டது சரியில்லை. ஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக் கூடாது.

• இன்றைக்கு உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார்? என்ன காரணம்?

இன்றைக்கும் எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் மௌனி. நான் மொழியை ஆர்ப்பாட்டமாகப் பயன்படுத்தினேன் என்றால், அவர் ரகசியமாகப் பயன்படுத்தியவர். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

• ஒருகாலத்தில் அரசியல் மேடைகளில் ஒலித்த எழுத்தாளர் குரல் உங்களுடையது. இன்னமும் உங்களிடம் அரசியல்வாதிகள் பேசுகிறார்களா? யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள்?

கலைஞர் பேசுவார். நல்லகண்ணு ஆஸ்பத்தியில் இருக்கும்போதுகூட நேரில் வந்து பார்த்துப் போனார்.

• இளமையில் மரணத்தைப் பார்ப்பதற்கும் முதுமையில் மரணத்தைப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா? ஆஸ்பத்திரியில் உயிர்ப் போராட்டத்தை எதிர்கொண்டபோது மரணத்தை எப்படிப் பார்த்தீர்கள்?

அந்த நினைப்பே வரவில்லை. ஏதோ ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறோம், மருத்து மாத்திரை கொடுக்கிறார்கள், உடம்பு சரியானதும் வீட்டுக்குப் போய்விடுவோம் என்று நினைத்தேன். அதேபோல, உடம்பு சரியானதும் வீட்டுக்கு வந்துவிட்டேன். மரணத்தின் மீது எந்தப் பயமும் இல்லை.

• என்ன கடமைகள் மீதி இருப்பதாக நினைக் கிறீர்கள்?

இந்தப் பிறப்புக்கு என் கடமைகளை முடித்து விட்டதாகவே நினைக்கிறேன்.

• உங்கள் வாசகர்களுக்குச் சொல்ல சிறப்புச் செய்தி உண்டா?

ஞானகுரு பாரதி அன்றைக்குச் சொன்னதுதான் என்றைக்கும் என் செய்தி: ஊருக்கு நல்லது சொல்ல வேண்டும், உண்மையைச் சொல்ல வேண்டும். ஒரே வேண்டுகோள்: தமிழையும் படியுங்கள், தமிழுக்கு நல்லது!

*****

“ஜெயகாந்தனிஸம் அப்படினே ஒண்ணு உருவாச்சு!”- எஸ்.பாலசுப்ரமணியன்

நீண்ட இடைவெளிக்குப் பின் பொதுவெளியில் முகம் காட்டுகிறார் விகடன் குழுமத் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன். விகடன் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய பின் அவர் வெளியே வருவது அருகிவிட்டது. இப்போதும்கூட அவர் வெளியே வருவதற்கு ஒரே ஒரு காரணம்தான்: ஜெயகாந்தன். வீட்டுக்குப் போனபோது இரு கைகளை நீட்டி வரவேற்கிறார். அதே கம்பீரம். அதே உற்சாகம். “சரோஜா... இவங்களோட எனக்கும் ஒரு அரை டம்ளர் காபி கொடும்மா, நான் இவங்களோட சேர்ந்து காபி குடிக்கணும்” என்கிறார். எவ்வளவோ பேட்டிகளைத் தரம் பார்த்துப் பிரசுரித்த கணவர் கொடுக்கும் பேட்டியை முதல்முறையாகப் பக்கத்தில் உட்கார்ந்து, ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.

• சிறுபத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த ஜெயகாந்தனை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

ஒருநாள் மணியன்தான் வந்து ‘இந்தக் கதையைப் படிச்சுப் பாருங்க’னு ஒரு கதையை வாசிக்கக் கொடுத்தார். கதையைப் படிச்சப்போ பிரமிப்பா இருந்தது. அதுவரைக்கும் படிச்ச மாதிரி இல்லை அந்த எழுத்து. ஒண்ணு சொல்லணும்னு முடிவு பண்ணிட்டா அதை அப்படியே தலையில ஆணி அடிச்சு சொன்னாப்ல இருந்துச்சு. ஆனா, பாலியல் வர்ணனைகளும் கொஞ்சம் இருந்துச்சு. ‘எழுத்து பிரமாதமா இருக்கு. ஆனா, இந்த மாதிரி வர்ணனைகள் நமக்கு சரிப்படாதே’ன்னேன். ‘நீங்க ஒருமுறை அவரைச் சந்தியுங்களேன்’னார் மணியன். ‘ஓ... சந்திக்கலாமே’ன்னேன். அப்படித்தான் விகடன் ஆபீஸுக்கு ஜெயகாந்தன் வந்தார். வரும்போதே ஒரு கதையைக் கையில் எடுத்துட்டு வந்தார். ‘விழுதுகள்’ன்னு நெனைக்கிறேன். என் கையில கொடுத்துட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தார். அவர் போன உடனே அந்தக் கதையைப் படிச்சா, அவ்ளோ பிரமாதமா இருக்கு!

அப்போ வாரம் ஒரு நல்ல கதையைத் தேர்வு பண்ணி அதுக்கு முத்திரை குடுக்குறது வழக்கம். அப்படி முத்திரைக் கதையா இருந்தா பரிசு ஐநூறு ரூபாய். அப்போ அது பெரிய காசு. அதாவது, எங்க கம்பெனி ஜெனரல் மேனேஜருக்கே எண்ணூறு ரூபாய்தான் சம்பளம். அந்த வார முத்திரையை ஜெயகாந்தன் கதைக்குக் கொடுத்தோம். கதை பிரசுரமானதும், ஜெயகாந்தன் வந்து என்னைப் பாத்தார். சன்மானத் தொகைபற்றி அவருக்கு ஆச்சரியம். ‘இந்தப் பணம் பெரிசு இல்ல. இப்படிப்பட்ட ஒரு கதைக்கு இதைக்கூட கொடுக்கலைன்னா நாங்க தப்பு பண்ணவா ஆயிருவோம்’னு சொன்னேன். ‘தொடர்ந்து விகடனுக்கு எழுதுங்கோ’ன்னும் சொன்னேன். இப்படித்தான் ஜெயகாந்தன் எங்களுக்கும் எங்க வாசகர்களுக்கும் அறிமுகம் ஆனார்.

• அதற்குப் பின் தொடர்ந்து முத்திரைக் கதைகளாக ஜெயகாந்தனின் கதைகள் வெளியாயின. அவர் எழுதிய எல்லாக் கதைகளும் நீங்கள் நிர்ணயித்த தரத்தில் இருந்தனவா அல்லது அவர் நிறைய கதைகளை அனுப்பி, அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை முத்திரைக் கதைகளாகப் பிரசுரித்தீர்களா?

அதாவது, தொடர்ந்து நீங்க கதை அனுப்புங்கன்னு சொன்னப்பவே ஜெயகாந்தன் ஒரு கோரிக்கை வெச்சார். ‘நான் எழுதுறேன். ஆனா, அது முத்திரைக் கதைக்கான தரத்தோட இருந்தா போடுங்க; இல்லாட்டித் திருப்பி அனுப்பிச்சிடுங்க. முத்திரைக் கதைக்கான காசை வேணும்னா கூடக்குறைச்சுக் கொடுங்க. ஆனா, அந்தத் தகுதி இல்லாத கதைகளைப் பிரசுரிக்க வேணாம்’னார். நான் சொன்னேன், ‘நீங்க ரொம்ப கஷ்டமான நிபந்தனையைப் போடுறீங்க. இருந்தாலும் பார்க்குறேன்’னு. ஆச்சரியம் என்னன்னா, அவர் அனுப்பின ஒவ்வொரு கதையும் முத்திரைக் கதைக்கான தகுதியோடதான் இருந்தது. ஒரு கதையைக்கூடத் திருப்பி அனுப்பத் தேவையே ஏற்படலை.

• பாலியல்ரீதியாக ஏமாற்றப்பட்ட மகளின் தலையில் அவளுடைய தாய் தண்ணீரைக் கொட்டி, ‘இது அக்கினி மாதிரி... நீ சுத்தமாயிட்ட’ என்று சொல்லி சுத்தமாக்கும் ‘அக்கினிப் பிரவேசம்’ கதையை 1966-லேயே துணிச்சலாக வெளியிட்டிருக்கிறீர்கள். எதிர்வினைகள் ஏதும் வரவில்லையா?

நல்லாக் கேட்டீங்க... பெரிய களேபரமே ஆகிப்போச்சு. ஆசிரியர் இலாகாவுக்குள்ளேயே எதிர்ப்பு. விகடன் இப்படி ஒரு கதையை எப்படிப் போடலாம்னு ஆசிரியர் குழுவிலேயே சிலர் கடுமையா எதிர்த்தாங்க. கடைசியா விஷயம் பாஸ் காதுக்குப் போயிட்டு (தந்தையார் எஸ்.எஸ். வாசன் பற்றி இப்படித்தான் குறிப்பிடுகிறார்). அப்போ அவர் விகடனை அதிகம் கவனிக்கலை. சினிமாவுல பிஸி. நிறைய பேர் அவர்கிட்ட பேசவும், என்னைக் கூப்பிட்டு, ‘என்னப்பா பாலு! அக்கினிப் பிரவேசம்னு ஒரு கதை போட்டிருக்கியாமே’ன்னார். ‘ஆமா சார், ஜெயகாந்தன்னு ஒருத்தரோட கதை’ன்னேன். ‘அதுக்கு முத்திரையெல்லாம் போட்டிருக்கியாமே?’ன்னார். ‘ஆமாம் சார்’ன்னேன். ‘அந்தக் கதையைப் போட்டதே தப்பு’ன்னு (கொத்தமங்கலம்) சுப்பு மாதிரியானவா சொல்றாளே’ன்னார்.

நான் அந்தக் கதை வந்த விகடனை பாஸ்கிட்டே குடுத்து, ‘நீங்க கதையைப் படிங்க. படிச்சுட்டு, நான் பண்ணினது தப்புதான்னு சொன்னா, வாசகர்கள் உட்பட அத்தனை பேர்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்குறேன்’னு சொல்லிட்டு வந்துட்டேன். மறுநாள் கூப்பிட்டார். போனேன். ‘ஏம்ப்பா, இந்தக் கதையையா நல்லால்லேன்னு சொன்னாங்க! ஒருமுறை அந்த ஜெயகாந்தனை வரச்சொல்லு. நான் பார்க்கணும்’னார்... இவ்வளவு கதை இருக்கு, அந்த ஒரு கதைக்குப் பின்னால...

• நீங்கள் ஆசிரியரான காலகட்டத்தில்தான் கொஞ்சம்கொஞ்சமாக விகடன் பிராமண பாஷையிலிருந்து விடுபட ஆரம்பித்தது. அதே போல், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றிய கட்டுரைகள் வெளியாக ஆரம்பித்தன. ஜெயகாந்தனின் எழுத்துக்களும் விகடனின் மாற்றத்துக்கு ஒரு காரணம் என்று சொல்லலாமா?

விகடனோட மாற்றம் ஒரு பெரிய காலகட்டத்துல நடந்தது. ஜெயகாந்தனோட எழுத்து விகடனை மாற்றினதுங்கிறது பெரிய வார்த்தை. ஆனா, கதையும், கதை சொல்லும் பாங்கும் எப்படி இருக்கணுங்கறதுல ஜெயகாந்தன் ஒரு புதுப் பாணியைத் தீர்மானிச்சார். சொல்லப்போனா, ஜெயகாந்தனிஸம்னே ஒண்ணு உருவாச்சு. பல எழுத்தாளர்கள் ஜெயகாந்தனை மனசுல வெச்சுக்கிட்டு எழுத ஆரம்பிச்சாங்க, ஆதர்சமாவோ போட்டியாவோ. அந்தத் தாக்கம் விகடன்லேயும் எதிரொலிச்சது.

• ஜெயகாந்தன் கறாரானவர்; தன்னுடைய கதைக்குத் தானே ராஜா என்று நினைப்பவர்; ஒரு வார்த்தையைத் திருத்தக்கூட அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படுவது உண்டு. அதேசமயம், ஒரு பத்திரிகையைப் பொறுத்தவரை அதன் ஆசிரியரே இறுதி முடிவை எடுப்பவர். ஒரு ஆசிரியர் - ஒரு எழுத்தாளர் இருவருக்குமான சுதந்திரத்தின் எல்லைகளை எப்படிக் கையாண்டீர்கள்?

கதை வேணுமா, வேணாமான்னு ஆசிரியர்தான் முடிவெடுக்குறார். அப்புறம் ஆசிரியர் கேட்குற திருத்தங்கள் அந்தப் படைப்பு மேல உள்ள அக்கறையில வர்றது. நான் ஜெயகாந்தனோட கறாரை ஒரு எழுத்தாளனோட கர்வமாப் பார்க்கல. ஒரு எழுத்தாளனோட தன்னம்பிக்கையாவும் துணிச்சலாவும் பார்த்தேன். ‘நீ யாரா வேண்ணா இரு. எனக்குத் தெரியும், என் கதையில இருக்கிற அழகு, அழுத்தம், ஆழம்’கிற சுய மதிப்பீட்டோட வெளிப்பாடா பார்த்தேன். அதேசமயம், ஜெயகாந்தன் நான் சொல்ற திருத்தங்களை ரொம்ப கவனமாக் கேட்பார். சரின்னு பட்டா ஏத்துக்குவார். நாம எதிர்பார்க்குற திருத்தங்களை நாமளே ஆச்சரியப்படுற வகையில அற்புதமா திருத்தி மறுநாள் அனுப்புவார்.

• எவ்வளவோ எழுத்தாளர்களைப் படித்திருக்கிறீர்கள், இன்னும் சொல்லப்போனால், நீங்களும் ஒரு எழுத்தாளர். எது ஜெயகாந்தனைத் தனித்துவப்படுத்துவதாக நினைக்கிறீர்கள்?

ஒருத்தரைச் சும்மா பார்த்தாலே, அவர் என்ன நினைக்கிறார்ன்னு இவர் சொல்லிடுவார். அந்த அளவுக்கு ஒரு அபாரமான பார்வை! நுட்பமான எழுத்து! கடவுளோட அனுக்கிரகம்னுதான் சொல்லணும்.

• ஜெயகாந்தன் மாதிரி ஒரு எழுத்தாளர் இப்படி ஓஹோவென ஆர்ப்பாட்டமாக எழும் காலகட்டத்தில், உங்களுக்குள் இருந்த எழுத்தாளர் ‘சேவற்கொடியோன்’ என்ன நினைத்தார்?

பத்திரிகை ஆசிரியனா எப்போ ஆனேனோ, அப்பவே ‘சேவற்கொடியோன்’ கதையை முடிச்சுட்டேனே? என்னைப் பொறுத்த அளவுல ஒரு பத்திரிகை ஆசிரியன் எழுதக் கூடாது. அவன் எழுதணும்னு நெனைச்சா, தன்னை மீறி ஒருத்தன் எழுதறதை அவனோட ஈகோ அனுமதிக்காது. தானே எழுதிச் சுகம் கண்டு, பத்திரிகையில வேறு நல்ல எழுத்தாளர்கள் யாரையும் வளர விடாம பண்ணிடுவாங்கறது என்னோட கருத்து. அதனால, ஜெயகாந்தனோட எழுச்சியை, பாலசுப்ரமணியன்கிற பத்திரிகை ஆசிரியன் ரொம்ப சந்தோஷமாப் பார்த்தான். தன்னோட சமகாலத்தைச் சேர்ந்த உயர்ந்த எழுத்தாளர் ஒருத்தருக்குச் சரியான இடத்தையும் கவுரவத்தையும் கொடுக்க முடிஞ்சுதேன்னு சந்தோஷப்பட்டான். அவங்கவங்களுக்குக் கொடுக்க வேண்டிய சரியான மரியாதையையும் கவுரவத்தையும் கொடுக்க முடிஞ்சதுதான் அவன் வாழ்க்கையோட சந்தோஷம், மன நிறைவு!

- சமஸ் தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

*****

எழுத்து அவர் ஜீவனமல்ல; ஜீவன்!- டாக்டர் என்.ராம்

ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தன்னுடைய ஞானத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர். ஜீவானந் தம், எஸ்.ஆர்.கே., பாலதண்டாயுதம் போன்ற பொதுவுடைமைத் தலைவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவர்கள் மூலம் மார்க்ஸையும் பாரதியையும் கற்றவர்.

இதனால், மனிதநேயம் என்பது அவருடன் இரண்டறக் கலந்த இயல்பாகிவிட்டது. எனவேதான், மக்கள் கவனத்தைப் பெரிதாகக் கவராத அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, அவர்களுடைய உணர்ச்சிகளை, வாழ்வின் மேன்மை - அவலம் அனைத்தையுமே தன் கதைகளின் பாடுபொருளாக்கிக் காட்டினார். மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகி வாழ்ந்தவர் என்ற காரணத்தால், அவருடைய பாத்திரங்கள் உயிர்த் துடிப்புடன் இலக்கிய வீதியில் உலா வருகிறார்கள்.

மனிதநேய ஆன்மிகம் “பாத்திரப் படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டிவிடுவதோ, அங்க வர்ணனை நடத்தி விடுவதோ அல்ல. மனம், அறிவு, சிந்தனை, குண இயல்பு, சூழ்நிலைகளின்போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து, அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும்” என்று அவரே விளக்கிக் காட்டியபடி சேரிவாழ் மக்களையும், நடைபாதைவாசிகளையும் இலக்கியப் பாத்திரங்களாக நடமாட விட்டார். ‘உன்னைப் போல் ஒருவன்' சிட்டியும், ‘யாருக்காக அழுதான்' சோசப்பும், ‘பிரளயம்’ அம்மாசிக் கிழவனும், ரிக்ஷாக்காரன் கபாலியும் மறக்கக் கூடிய பாத்திரங்களா? அதற்குக் காரணம் ‘வஞ்சிக்கப்பட்டவர்களிடமும் தண்டிக்கப்பட்டவர்களிடமும் சபிக்கப்பட்டவர்களிடமும் குடிகொண்டுள்ள மனித ஆத்மாவை' அவர் நாடிச் சென்றதே ஆகும். ஜெயகாந்தனுடைய ஆன்மிகம் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது.

“எவனொருவன் தனது வாழ்க்கைக்கு அப்பால் ஒரு லட்சியத்தைக் குறிவைத்து, மனிதநேய அடிப்படையில் மனுஷகுல வாழ்க்கையைப் பற்றிப் பொறுப்போடு சிந்தித்துச் செயலாற்றத் தனது சுயவாழ்க்கையைப் பணயம் வைத்து, லௌகிக லாபங்களை எல்லாம் மறுத்து அதன் பொருட்டு விளைகின்ற துன்பங்களைக் கூட எதிர்பார்த்து, அதனை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளுகிறானோ அவனே ஆன்மிகவாதி” என்பது அவர் தரும் விளக்கம். சிறுகதைச் சக்ரவர்த்திகள் ஏழை எளிய மக்களை மனமார நேசிக்கும் ஜெயகாந்தன் சொல்லுகிறார்: “நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்.

“45 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை மருத்துவக் கல்லூரியில் வரவேற்புரையில் ‘சிறுகதை மன்னர்' என்று யாரோ அவரைப் புகழ்ந்தபோது, அந்தப் புகழின் வெளிச்சத்தையும் ஏழை மக்களை நோக்கியே திருப்பி அந்த மேடையில் அவர் கேட்டார்: “என்னைச் சிறுகதை மன்னன் என்கிறீர்கள். உண்மை என்ன தெரியுமா? நான் சிறுகதைச் சக்ரவர்த்திகளையே சந்தித்துவிட்டு வந்தவன். யார் அந்தச் சக்ரவர்த்திகள்? கிராமப்புறங்களில், வயலோரங் களில், மரத்தடியில், நடைபாதை ஓரங்களில் கூடிப் பேசும் அவர்கள் சொல்லும் கதைகளில் இல்லாத உணர்ச்சியையா, நகைச்சுவையையா, வாழ்வின் ஆழத்தையா நான் சொல்லி விட்டேன்? ஆனால், அவர்களில் யாரையும் உங்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’

ஏதோ அவர்களிடம் கேட்டதை, அவர்களிடம் பார்த்ததை நான் உங்களுக்குத் தருகின்றேன் - எழுதத் தெரிந்த ஒரே காரணத்தால். ஆனால், சேரியிலுள்ள ஒரு கூலிக்காரன் தன் மனைவிக்கு ஆசையோடு வாங்கித்தரும் ஒரு முழப் பூவுக்கு ஈடாகுமா சக்ரவர்த்தி ஷாஜகான் கட்டிய தாஜ்மகால்?” அரங்கத்தில் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆயிற்று! அடித்தட்டு வாழ்க்கையின் கலைமனநோயாளிகளைப் படம்பிடித்துக் காட்டிய ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' மக்களைச் சிந்திக்க வைத்த தொடர். ‘பிறருக்குத் தெரியாத, தெரிந்துவிடுமோ என்று நாம் அஞ்சுகிற, தெரிந்துவிடக் கூடாது என்று நாம் காப்பாற்றி வைத்திருக்கிற, ஒருவேளை தெரிந்திருக்குமோ என்று எண்ணி அடிக்கடி தலையைச் சொறிந்துகொள்ளுகிற எத்தனை ஆயிரம் பைத்தியக்காரத்தனங்கள் நம் ஒவ்வொருவரிடமும் குடி கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட நாம், அந்தப் பைத்தியக்காரத்தனங்கள் வெளியே தெரிந்துவிட்டதென்ற ஒரே காரணத்தினால் அவர்களை விலக்கி வைத்ததுகூடச் சரி - என்றைக்குமே வேண்டாமென்று அவர்களைச் சபித்துவிட - என்ன உரிமை பெற்றிருக்கிறோம்?' என்ற சாட்டையடிக் கேள்வி மனசாட்சியை உலுப்பி மனநோயாளிகளை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது. ஏழை மக்களை வசதி படைத்தோர் ஏமாற்றுவதை ‘பிரளயம்' கதையில் எடுத்துக்காட்டி, இலவசங்களை நம்பி உழைப்பை மறந்துவிடும் சோம்பேறித்தனத்தைச் சாடுகிறார்.

சிற்பி கூறியதுபோல, ‘தலைமுறைகளைச் சிந்திக்கவும், சினக்கவும், சீர்திருத்தவும் வைத்தவை ஜெயகாந்தன் எழுத்துக்கள். பாரதிக்குப் பிறகு தமிழ்ச் சமுதாயத்தை ஆணிவேர் வரை அசைத்த ஆற்றலின் பிரவாகம் ஜெயகாந்தன்! ‘குட்டை மனங்கள் வளர்வதற்கும், குறுகிய இதயங்கள் விசாலப்படுவதற்கும் இலக்கியம் உதவி செய்ய வேண்டும்' என்று சொல்லி, அதன்படியே எழுதியும் காட்டியவர் ஜெயகாந்தன்.





நன்றி: தி ஹிந்து தமிழ் 

No comments:

Post a Comment