இந்த தேசத்தின் சொத்து-ப. ஜீவானந்தம்
மகாத்மா காந்தியால் ‘இந்த தேசத்தின் சொத்து’ என்று பாராட்டப்பட்டவரும் பொதுவுடமைக் கொள்கைக்காகப் பாடுபட்டவருமான
ப. ஜீவானந்தம் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில்
பிறந்தார் (1907). அந்த கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து என்ற பெயரை பெற்றோர்
இட்டனர். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். ஒன்பதாவது
படிக்கும் சமயத்தில் இவர் எழுதிய முதல் கவிதையே காந்தியையும் கதரையும் பற்றியது.
பத்தாம் வகுப்பு படித்த சமயத்தில் ‘சுகுணராஜன்
அல்லது சுதந்திரவீரன்’ என்ற நாவலை எழுதினார். அடுத்து ‘ஞானபாஸ்கரன்’
என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து, நடித்தார்.
காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார்.
அந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது
தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து
கதராடை அணியத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மகனின்
போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன்
கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் இந்த இளைஞர்.
அப்போது 17 வயதுதான்.
1932-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையில்
இவரது சிந்தனைப்போக்கு மாறியது. கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார்.
அந்தசமயத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை சகித்துக்கொள்ள முடியவில்லை. சீறி
எழுந்தார்.
அனல் கக்கும் இவரது பேச்சு இளைஞர்களை
எழுச்சியடைய வைத்தன. சிறையிலிருந்தபோது பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன்
நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக இவரைக் கைது செய்து கை,
கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி
சிறையில் அடைத்தனர் போலீஸார்.
இவரது 40 ஆண்டுகால
பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டு கள் சிறையில் கழிந்தது. நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு
சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களும் ஊர்
ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சிபெறச் செய்தன.
மார்க்சிய கருத்துகளை தமிழில் கூற பல புதிய
பதங்களை உருவாக்கினார். 1940களின் இறுதியிலும் 50களிலும் ஜீவா எழுதிய ‘சோஷலிச சரித்திரம்’ மற்றும் ‘சோஷலிச தத்துவம்’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து ஏராளமான சோவியத் நூல்கள் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டன.
‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சென்னை
வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1952 முதல் 1957
வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1959-ல் ‘தாமரை’
என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.
1961-ல் ‘கலை
இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம், போராட்டம்,
சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத்
திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். ‘புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்’
உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும்
வகையில் நாகர் கோவிலில் பொதுடைமை வீரர் ப. ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது.
புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல்
இளைய தலை முறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப. ஜீவானந்தம், 1963-ம் ஆண்டு தமது 55-ம் வயதில் மறைந்தார்.
நன்றி - தி இந்து தமிழ்
No comments:
Post a Comment