.

Saturday, November 26, 2016

செவ்வணக்கம் !   அஞ்சலி !



     கியூபாவின் புரட்சியாளர், முன்னாள் அதிபர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ இன்று 26—11—2016 சனிக்கிழமை 90 வது வயதில் காலமானார்.

    கியூபா என்றவுடன் புரட்சி வீரர்களுக்கு நினைவில் எழும் உருவம் ஃபிடல் காஸ்ட்ரோ. சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை உயர்த்திப் பிடித்தவர்ஃபிடல் காஸ்ட்ரோ. 
அமெரிக்காவின் தெற்கு நுனியில் உள்ள ஃப்ளோரிடாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தீவு கியூபா. கியூபாவில் செகுவேராவுடன் இணைந்து புரட்சிக்குத் தலைமை தாங்கி, பாடிஸ்டா ராணுவ ஆட்சியை வீழ்த்தினார்.

     கியூபா அமெரிக்காவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாத குட்டி நாடு. இதன் தலைநகர் ஹவானா. இரண்டாவது பெரிய நகர் சாண்டியாகோ.1959 முதல் 1976 வரை அந்நாட்டின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை அதிபராகவும் இருந்தவர். (24-02—2008 ல் பதவி விலகும் வரை) 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தவர். அனைவருக்கும் கல்வியை இலவசமாக்கினார்.  தரமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தினார்,

  நீண்ட காலம் ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் என்ற பெருமைகுரியவர் ஃபிடல் காஸ்ட்ரோ. யாருக்கும் இல்லாத ஒரு பெருமை-- உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் ஃபிடல் காஸ்ட்ரோ .

  1926 ஆகஸ்ட் 13 அன்று பிறந்தவர். இளம் வயதிலேயே தடாலடிச் செயல்களைச் செய்தவர். 1945-ல் கியூபாவின் தலைநகர் ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்தார். கல்லூரிப் பருவத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவின் அபாரமான பேச்சுத் திறமை வெளிப்பட்டது.

  பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கம்யூனிசத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொண்ட பிடல் காஸ்ட்ரோ அதனால் ஈர்க்கப்பட்டார். கூடவே அரசியலில் நேரடியாகப் பங்கேற்கும் ஆர்வமும் வந்தது. செயற்கரிய செய்து முடித்தார்.அவரைக் கொல்ல பலமுறை அமெரிக்க சிஐஏ முயற்சித்தும் அவை அனைத்தையும் முறியடித்து அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.  இந்தியத் தலைவர்களுடன் நல் உறவு கொண்டிருந்தார்.  அணி சேரா நாடுகளின் மரியாதைக்குரிய தலைவர்.  மேற்கத்திய நாடுகள் விரிக்கும் கடன் வலையில் வளரும் நாடுகளின் முன்னேற்றம் தடுக்கப்படுவதைக் கண்டித்து அந்தக் கடனை வளரும் நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என அறைகூவல் விடுத்தார்.

  உலகின் எந்த மூலையில் நடக்கும் புரட்சிகர நடவடிக்கைகளையும் என்றென்றும் ஊக்கப்படுத்தும் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவு.
தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு
நம் செங்கொடி தாழ்த்தி

அஞ்சலி செலுத்துவோம்!

No comments:

Post a Comment