.

Friday, December 1, 2017

 மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நோக்கி 
   
BSNL நிறுவனத்தின் அனைத்து ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் அமைப்புகள் டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் வழங்கிவிட்டனர். இது நிலைமையை நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு. இந்தப் போராட்டத்தின் தேவையை, அதன் சாரமான முக்கியச் செய்தியை அனைத்து அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் எடுத்துச் சென்று போராட்டத்தை நூறு சதவீதம் வெற்றிகரமாக்க வேண்டும். அனைத்து மத்திய சங்கங்களின் நிர்வாகிகளைப் பங்குபெறச் செய்து திட்டமிட்ட மையங்களில் வேலைநிறுத்தத் தயாரிப்புக் கூட்டங்களைச் சிறப்பாக நடத்த வேண்டும். மாவட்டங்களிலும் அனைத்து மாநில நிர்வாகிகளை அழைத்து ஒருங்கிணைந்த தயாரிப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்.ஒவ்வொரு ஊழியரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதை உறுதி செய்ய கிளை மட்டங்களில் ஒருங்கிணைப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். முன்னதாகத் திட்டமிடப்பட்ட இயக்கங்களான மனித சங்கிலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூட்டாக மனு அளித்தலை சிறப்பாக நடத்தி முடித்திடல் வேண்டும்.
         இதற்கு மத்தியில் BSNL நிர்வாகம், நமது கோரிக்கைகளில் பரிவுமிக்க அணுகுமுறை காட்டிவருவது குறித்து செய்திகள் வருகின்றன. BSNL நிறுவனம் லாபம் ஈட்டும் திசைவழியில் முன்னேறிவருவதால், நிர்வாகம் தனது யோசனைகளை முன்வைத்து DOT–யிடம் ஊதிய மாற்றம் செய்திட அனுமதிக்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் ஒரு கேள்வி எழலாம், பிறகு ஏன் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்?
         உறுப்பினர்களின் இந்த நியாயமான கேள்விக்கு விடையளித்து நன்கு விளக்க வேண்டியது நமது கடமை. யதார்த்த நிலைமைகளை விரிவாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கோபத்தை வெளிப்படுத்த நமக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. நமது வேலைநிறுத்தம் ஊதிய மாற்றத்திற்காக மட்டுமல்ல. நமது நிறுவனத்தின் அடிப்படை ஆதாரமான செல் கோபுரச் சொத்துக்களைக் கபளீகரம் செய்ய நினைக்கும் அரசின் முடிவைக் கைவிட வற்புறுத்தியும்தான் வேலைநிறுத்தப் போராட்டம். தனி டவர் கார்பரேஷன் அமைப்பது என்பது எதிர்காலத்தில் தனியார் தொலைதொடர்பு கம்பெனிகளுக்குச் சேவைசெய்ய வைத்து கடைசியில் நமது பொதுச் சொத்தை அவை அரித்து கையகப்படுத்தும் நிலைக்குக் கொண்டுபோய்விடும்.
BSNL
டவர்களைப் பிடிங்கிக் கொள்வதென்ற அமைச்சரவையின் முடிவு நியாயமற்றது, ஜனநாயக விரோதமானது. கோபுரங்களை நிர்மாணித்து விரிவாக்கிய, செல்டவர் செல்வத்தின் உண்மையான பங்குதாரர்களான ஊழியர்களிடம் இது குறித்து ஆலோசிக்கவும் இல்லை, தகவல்கூட தெரிவிக்காமல் ஊழியர் சங்கங்கள் இருளில் வைக்கப்பட்டது எந்த வகையில் நியாயம்?
அடுத்த முக்கிய பிரச்சனை ஊதிய மாற்றம். அரசு 3-வது ஊதிய மாற்றக் குழுவை அமைத்தது, அதன் சிபார்சுகளை ஏற்று DPE வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது என்பது உண்மைதான். ஆனால் BSNL நிறுவனம் தனது அதிகாரிகளுக்கு அந்த ஊதிய மாற்றத்தை அமல்படுத்த முடியாத ஒரு கம்பெனியாக உள்ளது; ஏனெனில், வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் கட்டுப்பாடுகள் அவ்வளவு கடுமையானவை. அந்த கன்டிஷன்களின்படி நட்டத்தில் இயங்கும் எந்த நிறுவனமும் ஊதிய மாற்றம் செய்ய முடியாது.
ஊதிய மாற்றம் குறித்து BSNL மேனேஜ்மெண்ட் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயம் தனது ஊழியர்கள், அதிகாரிகள்பால் நல்லெண்ணமும், பரிவும்மிக்கவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை, அவற்றை நடைமுறைப்படுத்த அதற்குரிய அதிகாரம் இருந்து எடுக்கப்பட்டவை ஆகாது. DPE வழிகாட்டல்படி அதிகாரம் வழங்கப்படாத நல்ல நோக்கம் கவைக்குதவாதுதானே? மாண்புமிகு தகவல்தொடர்பு அமைச்சரும் கூட அமைச்சரவை முடிவை மீறி தன்னால் ஏதும் செய்யமுடியாது என்று கருதுவதாகச் சொல்லப்படுகிறது. NFTE சங்கம் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்காக ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகத் தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கும்படி கோரியது. அதற்கு நிர்வாகம் பேச்சுவார்த்தை துவக்க அத்தகைய வழிகாட்டுதல்கள் ஏதும் வரவில்லை என்று பதில் அளித்துள்ளது.
மேனேஜ்மெண்ட்டுடன் உடன்பாடு எற்பட்டால்தான் ஊழியர்கள் சம்பளமாற்றம் பெற முடியும். NFTE சங்கம் இரு தரப்பு பேச்சுவார்த்தை துவக்க வழிகாட்டல் வெளியிட DPE–க்கும் கோரிக்கை வைத்தது. அந்தக் கோரிக்கை தங்களது தீவிர பரிசீலனையில் உள்ளதாக DPE பதிலளித்துள்ளது. அப்படிப் பேச்சுவார்த்தை துவக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டாலும், அது நமக்குப் பயன்அளிக்க வேண்டுமென்றால், நட்டமடையும் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியமாற்றம் வழங்கலாம் என்ற வகையில் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கும் அம்சம் இடம்பெற வேண்டும்.
மேலே விவரிக்கப்பட்ட சூழலில், ஊதிய மாற்றத்திற்கான இன்றைய யதார்த்த நிலைமை சாதகமாக இல்லாதது மட்டுமல்ல, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன்களுக்கு எதிரிடையாகவே உள்ளது. நம் எதிரில் உள்ளது நாம் பயணிக்க வேண்டிய நெடிய கடுமையான போராட்டங்களுக்கான பாதை மட்டுமே! அது ஒன்று மட்டுமே நமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தை இணங்க வைக்க முடியும். ஒன்று, கடுமையான கட்டுப்பாட்டு வழிகாட்டுநெறிகளுக்கு திருத்தம் வெளியிட வேண்டும். (அல்லது) இரண்டு BSNL நிறுவனத்திற்கு மட்டும் ஒருமுறை விலக்களிக்க கடுமையாக வற்புறுத்த வேண்டும்.
மூடிய கதவுகள் திறக்கப்பட நமது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு மட்டத்திலும் அதிகாரிகள் ஊழியர்கள் அணி திரள்வோம்! நம் கோரிக்கைகளின் நியாயத்தை நிலைநாட்டிட, டிசம்பர் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஆகப்பெரிய வெற்றிக்காக ஒன்றுபட்டு உழைப்போம்! வெற்றி நமதே! 
NFTE தமிழ்மாநிலச்சங்கம்

No comments:

Post a Comment