.

Saturday, June 29, 2024

பணி ஓய்வு பாராட்டு விழா  29 6 24

கடலூர் மாவட்டத்தில் இன்று மூன்று ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். 

தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக பணி ஓய்வு விழா நடைபெறுகின்ற மாவட்டம் நமது மாவட்டம். அந்த சிறப்பு சேர்க்கும் வகையில் இன்று நமது பொது மேலாளர் அவர்கள் தலைமையில் காலை சரியாக பதினோரு மணிக்கு கடலூர் தொலைபேசி நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது மேலாளர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கி தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

நிர்வாகத்தின் சார்பில் பங்குபெற்ற அனைவரையும் ,உதவி பொது மேலாளர் S&M திருமதி S. சசிகலா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

1. தோழர் E. கன்னியப்பன் TT செஞ்சி 
2. தோழர்  M.D.S.சுந்தர் சிங் டேவிட் ஜான்சன்  TT கடலூர் 
3. தோழர் T. கலியபெருமாள் . TT விருத்தாச்சலம்
 
தோழர் E கன்னியப்பன் அவர்கள் நேரடியாக குரூப் டி பதவியில் பணியில் சேர்ந்து இன்று டெலிகாம் மெக்கானிக்காக பணி ஓய்வு பெற்றார். தனது 35 ஆண்டு சேவை காலம் முழுவதும் திண்டிவனம்   மற்றும்  செஞ்சி பகுதியில்  மட்டுமே சிறப்பாக பணிபுரிந்து இன்று ஓய்வு பெறுகின்றார். 
தோழர் MDS சுந்தர் சிங் டேவிட் ஜான்சன் அவர்கள் மஸ்தூர் சேவை  உட்பட 35 ஆண்டுகால சேவையை கடலூர் பகுதியில் மட்டுமே சிறப்பாக செய்து இன்று பணி ஓய்வு பெற்றார். மிக அமைதியான நல்ல பண்பாளர். 

தோழர் T. கலியபெருமாள் தனது சேவை காலம் முழுவதும் விருதாச்சலம் பகுதியில் அனைத்து  பிரிவுகளிலும் பணி புரிந்துள்ளார். விருதாச்சலம் டெலிகிராஸ் பகுதி, வெளிப்புற பகுதி, சி எம் பகுதி, விற்பனை பகுதி, டிரான்ஸ்மிஷன் பகுதி மற்றும் நிறைவாக இன்ஃப்ரா பகுதியிலும் திறம்பட பணியாற்றுள்ளார். மஸ்தூர் காலம் முதல் இன்று வரை நமது தொழிற்சங்கத்தின் உறுதிமிக்க தோழனாக செயல்பட்டுள்ளார் அனைத்து தொழிற்சங்க இயக்கங்களையும்  முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
மூன்று தோழர்களும் விருப்ப ஓய்வுக்கு விருப்பம் கொடுக்காமல் உறுதியாக இருந்து வயது மூப்பின் அடிப்படையில்  இன்று ஓய்வு பெறுகின்றனர்.
மூவரும் தங்கள் குழந்தை செல்வங்களுக்கு மிக நல்ல முறையில் கல்வி செல்வத்தை கொடுத்துள்ளனர்.

மூவரும் மன நிறைவோடு மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதற்கு முக்கிய காரணமே அரசு பென்ஷன் பெறுவது தான்..அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் பங்கு பெற்று மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். 

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலாளர்  தோழர் D.குழந்தைநாதன் பங்கு பெற்று மூன்று தோழர்களின் சிறப்பு  இயல்புகளை  மிக நல்ல முறையில் எடுத்துரைத்தார் .மூவரும் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்வதில் மிகச் சிறந்து விளங்கினர். நமது நிறுவனம் கடுமையான சூழ்நிலையிலும் நல்ல முறையில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்த விழாவில் பங்கு பெற்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளுடன் , பணி ஓய்வு பெறுகின்ற  தோழர்களின் பணி ஓய் காலம் நல்லபடியாக அமைய மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை பதிவு செய்தார். 

நிர்வாகத்தின் சார்பில்  துணைப் பொது மேலாளர் CM உயர்திரு ஜெயகிருஷ்ணன் மற்றும் நிதி ஆலோசகர் திருமதி பியுல நியூட்ராலிட்டி மிக சுருக்கமான வாழ்த்துரை வழங்கினார்கள். 

 பொது மேலாளர் அவர்கள் தனது தலைமை உரையில் கடலூர் மாவட்ட பிஎஸ்என்எல் செயல்பாடுகள் பற்றியும், அடுத்த கட்ட வளர்ச்சி பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக மிக விரைவில் சிதம்பரம் ,திண்டிவனம் பகுதிக்கு 4 G சேவை மிக விரைவில் கிடைக்கும் என்று உறுதிப்பட கூறினார்.
FTTH speed பிரச்சினை தற்பொழுது தீர்க்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் இன்னும் வெளிப்புற பிரச்சினைகள் இருக்கின்றன. அதை மிக விரைவில் நல்லதொரு மாற்றம் வருவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத்திற்கு புதிய தலைமை பொது மேலாளர் அவர்கள் பணியில் சேர்ந்துள்ளார்கள். கர்நாடகா மற்றும் அந்தமான் பகுதியில் பணிபுரிந்தவர். அவர் நிறைய எதிர்பார்க்கின்றார். அதற்கு ஏற்றவாறு நமது செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். 

இன்று பணி ஓய்வு பெறுகின்ற மூன்று ஊழியர்களும்  மிகச் சிறப்பான பணியை செய்துள்ளார்கள் என்பதை  அவர்களது குறிப்புகள் நன்கு  உணர்த்துகின்றன. மூவரும் விருப்ப ஓய்வுக்கு செல்லாமல் பணி ஓய்வு பெறுவது என்பது மிகச் சிறந்தது.

மூவரும் தற்காலிக சேவையை கணக்கில் எடுத்துக் கொண்டால் 35 ஆண்டுகளுக்கு மேலாக நமது இலக்காவில் திறம்பட பணியாற்றுள்ளார்கள்..
தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்துள்ளார்கள்.சிறப்பான பணியை செய்வதற்கு மிகவும் உதவிட்ட அவரது குடும்பத்தாருக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மூவரின்  ஓய்வு காலம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

பணி ஓய்வு பெற்ற மூன்று  தோழர்களும் மிக சுருக்கமாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

JTO ஜென்ரல் அவர்கள் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ..

மாவட்ட நிர்வாகத்தால் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்.

Friday, June 28, 2024

பணி ஓய்வு பாராட்டு விழா💐

அருமை தோழர்களே! வணக்கம்.
30-6-2024 அன்று ஓய்வு பெறும் தோழர்,T.கலியபெருமாள்-TT அவர்களுக்கு  விருத்தாசலம் கிளையின் சார்பாக 28-6-2024 மாலை விருத்தாசலம்  தொலைபேசி நிலையத்தில் கிளைத்தலைவர் தோழர் முத்துவேல் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தோழர் கணேசன் மாவட்ட அமைப்புச்செயலர் அனைவரையும் வரவேற்று தோழர் கலியபெருமாளின், இலாக்கா மற்றும் , தொழிற்சங்கபணியின் செயல்பாட்டினை விரிவாக எடுத்துரைத்தார்.

தோழர் பகத்சிங் விழாவினை துவக்கிவைத்து,தோழர் கலியபெருமாள் NFTE இயக்கத்தின் விசுவாசமான உறுப்பினர்,திட்டக்குடி பென்னாடம் கிளையின் பொருளராக திறம்பட செயலாற்றியது,இலாக்கா பணியையும் சிறப்பாக செய்ததை நினைவு கூர்ந்தார்.

தோழர்கள்  செல்வராஜ் NFTE மாவட்ட,துணைத்தலைவர் ,AIBSNLPEWA விருத்தாசலம்பகுதி கிளைபொருளர்  கிருஷ்ணமூர்த்தி,  மோகன்ராஜ் , கிருபாகரன்-JTO ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தோழர் கலியபெருமாள் அவர்களுக்கு கிளையின் சார்பாக,சந்தனமாலை,சால்வை அனுவித்து,நினைவுபரிசினை கிளைச்செயலர் தோழர் விஸ்வநாதன்  கிளைஉறுப்பினர்களுடன் இணைந்து வழங்கினார்.

  மாவட்டச்செயலர் தோழர் குழந்தைநாதன் ,தோழர் கலியபெருமாள் அவர்களுக்கு கடலூர் மாவட்டசங்கத்தின் சார்பாக சால்வை,நினைவுபரிசினை வழங்கி,

சிறப்புரையாற்றினார்.தனது உரையில்,மாநில ,மாவட்ட JCM கூட்டங்களில் பங்கேற்று BSNL,மற்றும் ஊழியர்நலன் சார்ந்த பிரச்சனைகளில் NFTE சங்கம் கூடுதல் கவனம் செலுத்திய அனுபவங்களையும்,இயக்கத்தில் உறுதியாக இருந்திட்ட தோழருக்கு விருத்தாசலம் கிளை சிறப்பானமுறையில் பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்தமைக்கு மாவட்டசங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து,தோழரின் பணிஓய்வுகாலம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாநில உதவிச்செயலர் தோழர் சுந்தரமூர்த்தி,தோழர் கலியபெருமாளின் இலாக்கா மற்றும்இயக்க பணியினை பாராட்டி,குறைவான உறுப்பினர்களைக்கொண்டு நிறைவாக பணி ஓய்வு விழாவினை நடத்தி தோழரை கவுரப்படுத்தியதையும்,நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்குபின் உள்ள அரசியல் சூழல்,புதியதாக பொறுப்பேற்றுள்ள நமது துறையின் அமைச்சர் மரியாதைக்குரிய ஜோதிஆதித்தியா சிந்தியா இன்று டெல்லி நமது கார்பெரட் அலுவலகத்திற்கு வருகைபுரிந்தது ,தமிழகத்தில் 4G சேவை ஐந்து மாவட்டங்களில் துவங்கியது,விரைவில் ஊதிய மாற்றம் பெற்றிடும் சாதகமான சூழ்நிலை என நம்பிக்கையான செய்திகளோடு நிறைவுரையாற்றினார்.தோழமையின் அடையாளமாய் விருத்தாசலம் கிளையின் சார்பாக  பணியிலிருந்து ஓய்வுபெற்ற தோழர் சுந்தரமூர்த்திக்கு சால்வை அனுவித்து சிறப்பித்தனர்.தோழர் கலியபெருமாள் தனது ஏற்புரையில் இன்று வளமாக இருப்பதற்கு NFTE தான் காரணம்,இப்பகுதியில் இயக்கத்தில் உறுதியாக செயல்பட தோழர் பகத்சிங்கின் தன்னமில்லா செயல்பாடுதான் எனக்கூறி எனக்கு சிறப்பானமுறையில் பணி ஓய்வு விழாநடத்தி என்னை கெளரவப்படுத்திய கிளைக்கும்,வாழ்த்துரை வழங்கிய மாநில  மாவட்டச்சங்க ,,ஓய்வூதியர்சங்க நிர்வாகிகள்,மற்றும் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றிதெரிவித்தார்.

தோழர் முத்துராமன் கிளையின் அமைப்புச்செயலர்  விழா சிறப்பாக நடைபெற திட்டமிட்டு செயலாற்றிய தோழர்கள் விஸ்வநாதன்,கணேசன் செல்வராஜ் ,முத்துவேல்,வாழ்த்துரை வழங்கிய, பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் கிளையின் சார்பாக நன்றிகூறி விழாவினை நிறைவு செய்தார்.

தோழமையுடன்.... D.குழந்தைநாதன்,
NFTE-BSNL, 
மாவட்ட செயலாளர், கடலூர்.

Wednesday, June 19, 2024

இலக்கிய விழா 

கும்பகோணம் அச்சு வெல்லம் சார்பாக இன்று 19.6.24 மாலை கும்பகோணம் கிரீன் பார்க்  ஹோட்டலில் கலைஞர் நூற்றாண்டு   நிறைவு விழா மற்றும் அச்சு வெல்லம் கலை இலக்கிய துவக்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது. 

அச்சு வெல்லம் மின் இதழின் ஆசிரியர்  தோழமைக்குரிய தோழர் ,நமது இயக்கத்தின் குடந்தை மாவட்ட செயலாளர் தோழர் விஜய் ,அதன் நோக்கத்தை பற்றியும் இன்றைய விழாவின் முக்கியத்துவத்தை பற்றியும் ,கவிதை போட்டியில் பரிசு வென்றவரின் குறிப்புகளையும், விழாவில் பங்கு பெற்ற அனைத்து நல் உள்ளங்களையும் வரவேற்று உரையாற்றினார்.

தஞ்சை நமது தோழர் வல்லம் தாஜ்மஹால் துவக்க உரையாற்றினார். 
கவிஞர் எழுத்தாளர் ஆவணப்பட இயக்குனர் தோழர் ரவி சுப்பிரமணியம் மற்றும் கும்பகோணம் நகர துணை  மேயர் உயர்திரு தமிழழகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று கவிதை போட்டியில் வென்றவர்க்கும்  (முதல் மூன்று) மற்றும் ஆறுதல் பரிசு இருவருக்கும் அளித்து சிறப்பு செய்தனர்.

 முதல் பரிசு ரூபாய் 10 ஆயிரம் ,இரண்டாவது பரிசு ரூபாய் ஐந்தாயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் 2500 மற்றும் ஆறுதல் பரிசு ரூபாய் 500 அளித்து பரிசு வென்ற தோழர்களை கௌரவித்தனர்.

பரிசளித்து உரையாற்றிய துணை மேயர் மதிப்புக்குரிய திரு 
 சு. ப .தமிழழகன் அவர்கள் கலைஞரின் சிறப்பு இயல்புகளையும் அவருக்கும் கலைஞருக்கும்  உள்ள தொடர்புகளையும் மிகத் தெளிவாக நல்லதொரு தமிழில் எடுத்துரைத்தார். 

தோழர் விஜயின் தோழமையை பற்றியும், எப்பொழுதும் உற்சாகமாக இருக்கின்ற அவரது சிறப்பு அணுகுமுறை பற்றியும் மிகவும் அழகாக பதிவு செய்தார். 

அச்சு வெல்லம் தொடர்ந்து இயங்க வேண்டும். நல்லது ஒரு கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் .எப்பொழுதும் எனது ஆதரவு உண்டு என்று உறுதிபட அறிவித்து , கவிதை போட்டியில் பரிசு வென்ற தோழர்களை வாழ்த்தி உரையை நிறைவு செய்தார். 

பங்குபெற்ற பல தோழர்கள் மிகச் சுருக்கமாக வாழ்த்துரை வாங்கினார்கள் .மேலும் தோழர் விஜயின் துடிப்பு மிக்க செயல்பாட்டை பாராட்டி புத்தகங்களை பரிசளித்து  கௌரவித்தனர்.

மாநில சங்கத்தின் உதவி செயலாளரும், ஜெகன் கலை இலக்கிய பெருமன்றத்தின் பொறுப்பாளரும் ஆகிய தோழர் D. ரமேஷ் பங்கு பெற்று மிக சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.

 தேசிய செயலாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு சில கருத்துகளை மிக சுருக்கமாக பதிவு செய்தார்.  இந்த அரங்கம் என்பது எனக்கு புதியது. நான் கலைத்துறையில் அதிக அனுபவம் இல்லாதவன். தமிழக தொலைதொடர்பு ஊழியர் சங்கத்தின் சார்பாக நிகழ்வில் பங்குபெற்ற ,சிறப்பாக நடத்த முயற்சி எடுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தோழர் விஜய் எனது இயக்கத்தின் மாவட்ட செயலாளர் என்பதில் பெருமை கொள்கின்றேன்.

என்னை பொருத்தவரை தொழிற்சங்க  அரங்கில் போராடுவது கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா செய்வது கோரிக்கை முழக்கம் எழுப்புவது , இரு மொழிகளில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதுதான் எனக்குத் தெரிந்த கலைகள். 

 இந்த அரங்க நிகழ்வுகளை கண்டு ரசிக்க வேண்டும் என்று நான் பங்கெடுத்துக் கொண்டேன். ரசித்துக் கொண்டும் இருக்கின்றேன். 
கலைஞர் நூற்றாண்டு விழா என்பதினால் ஒரு சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.  நான் இங்கு நின்று எனது தாய் மொழியில் பேசுவது என்பது தான் சிறப்பான அம்சமாகும் .

இந்தியாவில் இரு மாநிலங்களை தவிர தாய்மொழியின் வளர்ச்சி என்பது மறைந்து அல்லது கரைந்து கொண்டு இருக்கின்றது. நூற்றாண்டுகளாக தாய்மொழிக்கு எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் நமது தாய்மொழி மட்டும் தான் தமிழ் மட்டும்தான் இருப்பதற்கு முக்கிய காரணமே , திராவிட ஆட்சிதான் குறிப்பாக கலைஞரை தான் அந்த பெருமைகள் சாரும்.

இந்தியாவில் ஒரு மாநில கட்சி முதன்முதலாக  ஆட்சியில் அமர்ந்தது தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.  இதற்கு முன்பாகவே கேரளாவில் ஆட்சியில் இடதுசாரிகள் அமர்ந்திருந்தாலும், அது அகில இந்திய கட்சியாக  ஆக செயல்பட்டு இருந்தது.

உலக அரசியல் வரலாற்றில்,
ஒரு கட்சியின் 50 ஆண்டுகால தொடர்ந்து தலைவராக செயல்பட்டது தோழர் கலைஞர் மட்டுமே.

96 ஆண்டு  காலம் வாழ்ந்து இந்தியாவில் தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றிய பெருமை தோழர் கலைஞரை சாரும்.
குறிப்பாக சென்னையில் இருந்து டெல்லி வரை புகைவண்டி மூலம் இரண்டாம் வகுப்பில் ஒரு முறை சென்று வந்தால் இந்தியாவின் நிலைமையை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

தேர்தல் வாக்குறுதிகள் பல கூறப்பட்டாலும் முழுமையாக நிறைவேறுவது கிடையாது. ஆனால் நான் பெருமையாக முக்கியமானதாக கருதுவது ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு  என்பதை ஆட்சி  பீடத்தில் அமர்ந்த உடனே  கையெழுத்து போட்டதுதான். (இன்றைக்கு வேண்டுமானால் இலவசமாக இருக்கலாம்)

 நான் சார்ந்திருக்கின்ற தொலை  தொடர்பு ஊழியர் சங்கம் சமூக மாற்றத்திற்காக கடுமையாக போராடி வெற்றி பெற்ற சங்கம். ஆசிரியர் போராட்டங்கள் வங்கி ஊழியர் போராட்டங்கள் போன்ற அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு தந்து முன்னிலை பாத்திரம் வகிக்கின்றது. 
கலைஞர் அவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்வதில் அவருக்கு நிகர் அவர் தான். அதன் வழியில் தான் இன்றைய  திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுகின்றது. அதனால்தான் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முழுமையான வெற்றி கிடைக்கப்பெற்றது. இந்தியா முழுவதும் இன்னும் ஒன்று பட்டு இருந்தால் இந்தியாவில் நிலைமை மாறி இருக்கும். 

இன்றைய அரசியல் சூழலில் நவீனக் கோயிலாக கருதப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் வென்ற 40 பேரும் ஒன்று சேர்ந்து அதற்கு எதிரான குரல் கொடுக்க வேண்டும் ,கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.

நான் தோழர் விஜய்  பணியை கண்டு பெருமை கொள்கின்றேன் .

அவருக்கு தொழிற்சங்க இயக்கத்தில் பொறுப்புகள் இருக்கின்றன .அந்த பொறுப்பையும் நல்லதொரு முறையில்  செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ,பரிசுகள் வென்ற அனைத்து கவிஞர்களையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன் நன்றி வணக்கம்.

நிறைவாக கவிஞர் ரவி சுப்பிரமணியன் அவர்கள் கவிதையை பிடிப்பது எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். முதல் மூன்று பரிசுபெற்ற கவிதைகளை அழகாக வாசித்து அந்தத் தோழர்களை வெகுவாக பாராட்டினார்.  நவீனக் கவிதைகள் இலக்கிய கவிதைகள் போன்றவற்றை மிக அழகாக மேற்கொள்ளுடன் பாடியும் எடுத்துரைத்தார். 
கும்பகோணம்  தோழர்களுக்கு மற்றும் அச்சு வெல்லம் நண்பர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து குறித்த நேரத்தில் உரையை நிறைவு செய்தார்.

: கும்பகோணம் தொலைத்தொடர்பு ஊழியர் இயக்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் முகுந்தன் வழக்கமான தோழமையுடன் என்னை அழைத்து கும்பகோணம் நகர எளிமையான நடைபாதை கடையில் தரமான சிற்றுண்டியை தோழமையுடன் வழங்கி 
சிறப்பு செய்தார்.

நல்ல மழை  பெய்த போதும் ,கவிதை மழை இடைவேளை  இல்லாமல் மிகச் சிறப்பாக சென்றது.

Saturday, June 8, 2024

தொழிற்சங்க ஆசான் தோழர் ஜெகன் 18 ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் மாவட்டச் செயலாளர் தோழர் D  குழந்தை நாதன் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

பங்குபெற்ற அனைவரும் தோழரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நமது தொழிற்சங்க மூத்த  தோழரும், ஓய்வு பெற்ற நல சங்கத்தின் AIBSNLPWA கடலூர் ஒருங்கிணைப்பாளர்  தோழர் E. விநாயகமூர்த்தி புகழஞ்சலி சிறப்புரையாற்றினார்.

அவர் தனது  புகழ் அஞ்சலி உரையில்  மூத்த தோழர் தமிழ்மணி, மற்றும் தொழிற்சங்க மூத்த தோழர் ஸ்ரீதர் அவையில் இருக்கின்ற பொழுது நான் தோழர் ஜெகனை பற்றி உரையாற்றுவது என்பது அவ்வளவு சால பொருத்தமாக இருக்குமா என்ற ஐயப்பாடு எனக்கு உண்டு. இருந்தாலும் கடலூர் மாவட்ட சங்கம் எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

 40 ஆண்டு காலமாக தொழிற்சங்கத்தில் பல்வேறு இயக்கங்களில் போராட்டங்களில் நேரடியாக பங்கு பெற்று இருக்கிறேன் .குறிப்பாக தோழர் ஜெகன் அவர்களுடன் சேர்ந்து போராடிருக்கின்றேன். அவர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களில் நேரடியாக பங்கு பெற்ற தோழன் என்ற முறையில் சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

தோழர் ஜகன் அவர்கள் நமது ஊரில் அதாவது கடலூரில் தான் தனது தொலைத்தொடர்பு வாழ்க்கையை  தொடங்கியவர்.

தொழிற்சங்க பணிகளில் மட்டும் அல்லாமல் சமூக சேவையிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். குறிப்பாக கடலூர்  வில்வ நகர் காலனி பகுதியில் குழந்தைகளின் வாழ்க்கையில் கல்வி சுகாதாரம் ஆகியவற்றில் அதிக அக்கறை கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் களத்தில் இறங்கி சிறந்த சேவை செய்தமைக்காக அன்றைய  தென்னார்க்காடு  மாவட்ட கலெக்டர் அவருடைய சேவையை பாராட்டி கௌரவித்தார்.

தொழிற்சங்கத்தில் தோழர் சிறிலை ஆசனாக ஏற்றுக் கொண்டு தொழிற்சங்கப் பணியை மேற்கொண்டார்.

 வாழ்க்கையில் இறுதி மூச்சு வரை இடதுசாரி கொள்கையை பின்பற்றியவர் பின்பற்றியது மட்டும் இல்லாமல் நடைமுறையில் கடைபிடித்தவர். தமிழகத் தொலைதொடர்பு ஊழியர்களுக்கு இடதுசாரி சிந்தனையை ஊற்றியவர்.
அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றியவர்.

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற மனநிறைவு கொள்கின்றேன்.
அவர் உடல் நலம் குன்றிய பொழுது சென்னையில் அவரது இல்லத்தில்  சந்தித்த பொழுது மிகவும் கவலை கொண்டேன். 
அவரது இறுதி நிகழ்ச்சியில் கடலூர் தோழர்களுடன் சென்னையில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியது இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை. 

கடலூர் மாவட்ட சங்கம் அன்றைய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் மறைந்த உடன் புகழ் அஞ்சலி கூட்டம் கடலூர் மாவட்ட சங்கத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நமது அரசியல் ஆசான் தோழர் DG, FNTO சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் கனக  சொருபன்  மற்றும் நமது சங்கத்தின் தலைவர்கள் பங்கு பெற்று சிறப்பான அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு களப்பணி ஆற்றியவன் என்ற முறையில் மிக மன நிறைவு கொள்கின்றேன்.

மிகப்பெரிய தலைவரின் நினைவேந்தல் கூட்டத்தில் என்னை சிறப்புரையாற்ற வாய்ப்பு தந்த தலைமைக்கு நன்றி கூறி புகழ் அஞ்சலி உரையை நிறைவு செய்தார்.

மேனாள் மாநில செயலாளர் தோழர் தமிழ்மணி மிக சுருக்கமாக புகழஞ்சலி உரையாற்றினார். தோழர் ஜெகனுடன் நீண்ட காலம்  நெருங்கி பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றவன். அவரைப் போன்ற உனதமான தலைவரை பார்ப்பது என்பது இயலாத காரியம். 

 தோழர் விநாயகமூர்த்தி  சிறப்பான உரை தந்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

நிறைவாக தேசிய செயலாளர் ஸ்ரீதர் தோழர் ஜெகனுக்கும் கடலூர் மாவட்டத்திற்கும் உள்ள உறவுகளை மிக தெளிவாக எடுத்துரைத்தார். அவருடன் நெருங்கி பிரச்சனைகளை  விவாதிக்க கூடிய அளவிற்கு உறவு இருந்ததை எடுத்துரைத்தார். 
இந்தியா முழுவதும் தோழர்களின் நம்பிக்கை பெற்ற தலைவராக இருந்தார் .
தோழர் குப்தாவிற்கு நல்ல ஆலோசகராக செயல்பட்டவர். தமிழக தொழிற்சங்க போராட்டங்களில் கோரிக்கை முழக்கங்களை எவ்வாறு எழுப்ப வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவர். 
தாய் மொழியான தமிழ் மொழியில் ஒலிக்கரை கொண்டு வந்தவர்.
கேடர் சீரமைப்பை ஊழியர்களுக்கு சாதமாக மாற்றிய பெருமை தோழர் ஜெகனையே சாரும்.

 இன்றைக்கு நிறைவான பென்ஷன் பெறுகிறோம் என்றால்  தோழர் ஜெகனின் பங்கு மிக முக்கியமானது. பென்ஷன் விதியில் 37 க்கு பதிலாக 37 A விதியை மாற்றியது மிகப்பெரிய சாதனையாகும். 
A என்பது  COMBINED SERVICE. இந்த விதி வரவில்லை என்றால் 1990 க்கு பிறகு DOT ல் பணியை சேர்ந்த எவருக்கும் பென்ஷன் கிடைக்க வாய்ப்பு என்பது இல்லை. 

அகில இந்திய மாநாட்டில் பங்கு பெறுகின்ற பொழுது மாநாடு நிகழ்வுகளை தொகுத்து மறுநாள் தமிழில் வழங்குவார்.

கடைசியாக தோழர், நமது தோழர் K.V பாலச்சந்தர் அவர்களின் பணி நியமனம் சம்பந்தமான கடிதத்தை டெல்லியில் இருந்து எழுதியதை இன்று வரை அவரது நினைவாக வைத்துள்ளேன்.
தோழர்  விநாயகர் மூர்த்தி அவர்கள் மிக அழகான குறிப்புடன் உரையாற்றியதை மிகவும் பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார். 

நிறைவாக தோழர் நீலகண்டன் நன்றி உரையுடன் தோழர் ஜெகனின் சில குறிப்புகளை பதிவிட்டார்.
 தோழர் விநாயகமூர்த்தி உரையை கேட்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.
பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை பதிவு செய்தார். 

கூட்டம் காலை சரியாக 9 மணிக்கு துவங்கி 10 மணிக்கு நிறைவு பெற்றது.