TMTCLU சங்கம்
வெற்றிகரமான
விழுப்புரம்
கிளை மாநாடு
TMTCLU
மாநிலப்
பொருளாளரும், NFTE குடந்தை மாவட்டச் செயலாளருமான அருமைத் தோழர் விஜய் ஆரோக்கியராஜ் அவர்களின் அற்புதமான துவக்க உரை. விழுப்புரம் கொடியேற்றத்தில் காலை சலசலப்பையும் அந்தச் சலசலப்பை உண்டாக்க நினைத்த ’சிறியோர்க்கு ஞாபகம் செய்’ யும் வகையில் முழங்கிய சங்கநாதம் வருமாறு:
”AITUC அலுவலகத்தில் மாநாடு துவங்கும் முன் முதல் நிகழ்வாகத் தொலைபேசி அலுவலக வாயிலில் சங்கக் கொடியை உணர்வுபூர்வமாக ஏற்றினீர்கள். அதற்குத்தான் எத்தனை இடையூறுகளைத் தாண்ட வேண்டியிருந்தது? ஆனால் அவலமும் ஆச்சரியமும் என்னவென்றால், நமது துறையைச் சார்ந்த தோழர்களும் சங்கங்களும் தொலைபேசியக வாயிலில் நாம் கொடியேற்றக்கூடாது என நிர்வாகத்திடம் பிரச்சனை செய்ததுதான். நமது உரிமைக்காக, கொடியேற்ற, ஆர்ப்பாட்டம் நடத்த, எதிர்ப்பைப் பதிவு செய்ய நாம் அரசை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். பெருமுதலாளிகளின் கார்பரேட் நிறுவனங்களில் சங்கத்திற்கு அனுமதி கொடுப்பதில்லை, அவர்களும் அதற்காகப் போராடுகிறார்கள். அதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே விசித்திரம் தொழிலாளர்களே தொழிலாளர்களை எதிர்ப்பதுதான். ஆனாலும் நீங்கள் வெற்றிகரமாகக் கொடியேற்றி மாநாட்டைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒப்பந்த ஊழியர்களுக்காக TMTCLU சங்கம் தொடர்ச்சியாகப் பிரச்சனை எடுத்துப் போராடுகிறோம். முதலாவது நாம் NFTE பேரியக்கத்தோடு ஒன்றிணைந்து பயணிக்கிறோம். NFTE மாநில சங்கத்தோடு CGM யை சந்திக்கிறோம். பிரச்சனைகளுக்குக் கடிதம் கொடுத்து விவாதிக்கிறோம். பல முன்னேற்றங்களை மாற்றங்களைப் பெற்றுத் தந்திருக்கிறோம். அதுபோலத்தான் NFTE மாவட்டச் சங்கத்தோடு இணைந்து மாவட்டங்களில் பொதுமேலாளர்களைச் சந்தித்துப் பிரச்சனைகளைத் தீர்த்து வருகிறோம்.
கும்பகோணத்தில் எங்களுக்கு ALC ஆபீஸ் எங்கே இருக்கு? கிழக்கா, மேற்கா…-- தெரியாது. ஆனால் எங்கள் பகுதியில் பார்ட் டைம் ஊழியர் என்று எவரும் இல்லை. எல்லோரையும் முழு நேர ஊழியர்கள் ஆக்கிவிட்டோம். நிர்வாகத்தைப் பார்த்துப் பேசி பிரச்சனைகளைத் தீர்த்திருக்கிறோம். டெண்டர் மாறிய போதும் பழைய ஊழியர்கள்தான். புதிய ஊழியர்கள் இல்லை. இப்போதும் ஊழியர்களை வரைமுறைப்படுத்திய போது
அனைவரையும் பணியமர்த்தி இருக்கிறோம், உபரித் தொழிலாளி என்று எவரும் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. காரணம் எங்கள் பகுதியில் அமைப்பை உறுதியாகக் கட்டியிருக்கிறோம். அது மட்டுமல்ல, எங்களது கும்பகோணம் தஞ்சைக்கான பொதுமேலாளர் ஊழியர்கள் மீது அதிக அக்கறைக் கொண்டவர். விதிப்படி உழைப்பாளர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, என்னவெல்லாம் சலுகைகள் உண்டோ அத்தனையும் சட்டப்படி கிடைக்கச் செய்கிறார். அவருடைய நல்ல உள்ளத்திற்கு ஒரு உதாரணம் பாருங்கள்.
டவரிலிருந்து கீழே விழுந்து ஒரு ஒப்பந்தத் தொழிலாளிக்குக் கடுமையான பாதிப்பு. நாங்கள் நிதி உதவியாக 1 லட்சம் ரூபாய் திரட்டிக் கொடுத்தோம். அப்போது எங்கள் ஜிஎம் தன் பங்காக ரூபாய் ஐந்தாயிரம் கொடுத்தார். பணம் கொடுத்ததோடு மட்டுமல்ல, இத்தகைய விபத்துக்களின்போது அடிபட்டவருக்கு என்னவெல்லாம் விதிகளில் நிவாரணம் சொல்லப்பட்டிருக்கிறது
என்பதைத் திரட்டி மாநில நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தத் தோழருக்கு இஎஸ்ஐ மருத்துவ உதவி பெற்றுத் தந்திருக்கிறோம். முறையான பிஎஃப் பிடிக்கப்படுகிறது. இந்த விதிகளைப் பற்றியெல்லாம் நீங்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அதுபற்றிய விழிப்புணர்வு வேண்டும். உங்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை எது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இஎஸ்ஐ அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அங்கிருந்துதான் நீங்கள் அனுமதிக் கடிதம் பெற வேண்டும். விவரங்கள் தெரிந்திருப்பது மிகவும் பயனுடையது. உங்களுக்கு மட்டுமல்ல, உங்களால் மற்றவர்களுக்கும் அது பயன்படும்.
பணித் திறனுக்கேற்ற ஊதியம் ரீ—கேட்டகரைசேஷன் எங்கள் பகுதியில் நடைமுறைக்கு வந்து விட்டது. TMTCLU மாநில சங்கம் இதுபற்றி மாநில நிர்வாகத்திற்குக் கடிதம் கொடுத்து விவாதித்தது. கேரளமாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட
உத்தரவைச் சுட்டிக் காட்டி நமது மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த வற்புறுத்தினோம். ஏன் கேரள மாநில உத்தரவைச் சுட்டிக் காட்டினோம் என்றால் அது நமது டெல்லி கார்பரேட் அலுவலக அனுமதி பெறப்பட்ட உத்தரவு. ஆனால் சிலர் ALC சொல்லி நடந்ததாகக் கூறித் திரிவது மட்டுமல்ல, ALC கல்வெட்டும் வைக்கிறார்கள். அந்தக் கல்வெட்டு வீரர்களைக் கேட்கிறேன். இதே
ALC ஓராண்டிற்கு
முன்பும் உத்தரவு போட்டதே, அமலானதா? அது சரி, இப்போது ALC போட்டுதான் இது வந்தது என்றால் நான் கேட்கிறேன். ALC உத்தரவு பொதுதானே, பிறகு ஏன் பெரிய்ய தலைவர்கள் இருக்கும் சென்னை தொலைபேசியில் இன்னும் இது அமலாகவில்லை. காரணம் பொய் என்றைக்கும் நிலைக்காது.
அவர்களுடைய எரிச்சலுக்குக் காரணம், நமது TMTCLU சங்க அமைப்பு வலிமை பெற்று வருகிறது என்பதுதான். பல மாவட்டங்களில் சேலம், வேலூர், விருதுநகர், கோவை, தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி என்று நமது சங்கம் அமைப்பு ரீதியாக பலம் பெற்றுள்ளது. இங்கே உங்கள் மாவட்டத்தில் நீங்கள் போட்டிக்கு மத்தியில்—ஏன், ஒருவகையில் துரோகத்திற்கு மத்தியில்—நீங்கள் செயல்பட்டு வருகிறீர்கள். பல எதிர்ப்புகளுக்கிடையே கொடியேற்றி வெற்றிகரமாக மாநாடு நடத்துகிறீர்கள். பாராட்டுகள். ஆனால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம். கூலியை உயர்த்திப் பெற்றிருக்கிறோம். ஆனால் அது நாம் போராடிய சம வேலைக்குச் சம சம்பளம் அல்ல. அதைவிடக் குறைவுதான்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த சமவேலைக்குச் சமசம்பளம் பெறுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. அதைப் பெறுவதற்குத் தகுதி இருக்கிறது. நாம் தகுதியும் திறமையும் மிக்கவர்கள். கல்வித் தகுதி குறைவாக இருக்கலாம். ஆனால் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவது நமது உரிமை என்ற கோரிக்கையில் உங்களுக்கு முதலில் நம்பிக்கை இருக்க வேண்டும். நாம் நம்பிக்கை இழக்கக் காரணம் இல்லை. நமது அமைப்பு வலிமையாக இருக்கிறது. உங்கள் பகுதியில் அமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். எல்லாவற்றிலும்
அரசியல் உண்டு. சோப்பு சீப்பு விலையானாலும் சரி, அதற்கு வரியானாலும் சரி, எல்லாவற்றிலும் அரசியல் உண்டு. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைப்புரிந்து கொள்ளாமல் எங்கெங்கோ இருந்து திரிந்து விட்டு, யார் யாரையோ நம்பிவிட்டு கடைசியில் ”இங்கே” வருவார்கள். ஆனால் நீங்கள் இங்கே ஏஐடியூசி அலுவலகத்திலேயே உங்களது பயணத்தைத் துவங்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.
தேங்கிக்
கிடந்த சம்பளத்தை உடைத்து உயர் ஊதியம் பெற கோரிக்கை வைத்து மத்திய சங்கங்கள் போராடின. ஏஐடியூசி, சிஐடியு முதலிய மத்திய சங்கங்கள் 2015ம் ஆண்டும் 2016 ம் ஆண்டும் பொது வேலைநிறுத்தங்கள் நடத்தின. அதில் NFTE சங்கம் கலந்து கொண்டது TMTCLU சங்கமும் கலந்து கொண்டது. அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓரம் கட்டியவர்கள், காட்டிக் கொடுத்தவர்கள் இன்றைக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். அரசியல் போலவே சங்கத்திலும் நடைபெறுவதைக் காண்கிறோம். சுதந்திரப் போராட்ட அரசியலில் பங்கேற்காதவர்கள் இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கவில்லையா
அதுபோல, சங்கத்திலும் கூட அப்படி.
மஸ்தூர்கள்
அன்று உணர்வுடன் ஒன்று திரண்டு போராடினார்கள். ஜெகன் போன்ற தியாகத் தலைவர்கள் இருந்தார்கள். இன்றைக்கும் NFTE அதே உணர்வோடு செயல்படுகிறது. நாம் அமைப்பைப் பலப்படுத்தும் கடமையைச் செய்வோம். நமக்கு முன்னே அடையாள அட்டை பிரச்சனை இருக்கிறது. போனஸ் பிரச்சனை இருக்கிறது. போனஸ் பிரச்சனையில் இந்த முறை திருத்தப்பட்டச் சட்டத்தின்படி குறைந்த பட்ச போனஸ் ரூபாய் 7000.=
நிச்சயம் பெறுவோம். நமது கோரிக்கைகளில் வெற்றிபெற NFTE
பேரியக்கதின் வழிகாட்டுதலோடு போராடுவோம், நிச்சயம் வெற்றி பெறுவோம் எனக் கூறி புதிய கிளை நிர்வாகிகளுக்கும் மாநில சங்க வாழ்த்துக்களைக்கூறி பாராட்டுதல்களோடு நிறைவு செய்கிறேன்.”